சிந்தை நிறை தண்மதியே -16

அத்தியாயம் -16

அறைக்கு மாற்றப் பட்ட பின் இரண்டு வாரங்கள் மருத்துவமனையில் இருந்தான் ரவி. பின்னர் வீட்டிலிருந்த படியே பிசியோதெரபி சிகிச்சையை தொடர வேண்டும் என்ற அறிவுறுத்தலோடு டிஸ்சார்ஜ் செய்யப் பட்டு விட்டான்.

ரவியால் அடுத்தவரின் உதவியோடு நிற்க முடிகிறது, வாக்கர் பிடித்துக்கொண்டு நடக்க கைகள் வலுவின்றி இருக்க, யாராவது பிடித்துக்கொண்டால் சில அடிகள் எடுத்து வைக்கிறான். மற்றபடி சக்கர நாற்காலி பயன்படுத்தும் நிலைதான்.

வீடு வந்தடைந்த பேரனுடன் தண்மதியும் வந்திருப்பதை கண்டதுமே முகத்தை தூக்கினார் சொர்ணம் பாட்டி. ஆனால் ஏதும் திட்டி பேசவில்லை.

 தனது அறைக்கு வரவுமே ரவியின் உள்ளம் இதமாக உணர்ந்தது. ஏற்கனவே வீடு முழுவதையும் துடைத்து சுத்தமாகத்தான் வைத்திருந்தாள் ரிதி. இப்போது ரவியின் அறையை அவனுக்கு ஏற்றபடி மதியும் ரிதியும் சேர்ந்து சில மாற்றங்கள் செய்தனர்.

பூர்ணிமா சமைக்க ஆரம்பித்து விட்டார். சீனுவின் கடையை வேலையாட்கள்தான் கவனிக்கின்றனர், அவர் கடைக்கு நேரில் சென்றே ஒன்றரை மாதத்துக்கும் மேலாகி விட்டது, ஆகவே ஒருமுறை போய் பார்த்து வருவதாக சொல்லி சென்றார்.

மாலையில் பாரதியும் ஜோதியும் குடும்பத்துடன் வந்தனர். இப்படி படுக்கையில் இருந்த படி அனைவரையும் பார்க்கவே மிகுந்த சங்கட பட்டான் ரவி, ஆகவே வந்தவர்களை அறைக்குள் போக வேண்டாம் நாசூக்காக சொல்லி விட்டார் பூர்ணிமா. அவர்களும் புரிந்து கொண்டு ஒத்துழைப்பு கொடுத்தனர்.

மாலை ஆறு மணியாகியும் மதி புறப்படாமல் அங்குதான் இருந்தாள். அவளை தனியாக அழைத்துச் சென்ற கணேசன், “உனக்கு அவரை விட்டுட்டு போறது வருத்தமா இருக்கலாம்டா, அதுக்காக இங்கேயேவும் இருக்க முடியாது. வீக் எண்ட் வீக் எண்ட் வந்து பார்த்திட்டு போ, இப்ப கிளம்புறியா, கேப் புக் பண்ணட்டுமா?” என தண்மையாக கேட்டார்.

மருத்துவமனையில் அவன் இருந்த சமயத்தில் அவளும் அங்கிருத்தபடியே வேலையையும் செய்து கொண்டு ரவியையும் கவனித்துக் கொண்டாள். இங்கே அப்படி தங்க முடியாதே.

சித்தப்பா சொல்வதில் உள்ள நிதர்சனம் புரிந்து, “கொஞ்ச நேரம் சித்தப்பா, மாமாவை டின்னர் சாப்பிட வச்சிட்டு கிளம்பிடுறேன்” என்றாள்.

மறுக்க நினைத்தவர் அவளின் கெஞ்சலான முகத்தை கண்டு விட்டு சரியென சொல்லி விட்டார்.

ரவி – மதி காதல் விஷயம் பாரதி மூலமாக ஜோதிக்கும் தெரிய வந்திருந்தது. ரவியை மாப்பிள்ளை ஆக்கிக் கொள்ள வேண்டுமென்பது ஜோதியின் கணவரது யோசனை.  வயது அதிகம், இரத்த உறவு என்றெல்லாம் எண்ணி ஜோதிக்கு இதில் அவ்வளவாக ஈடுபாடு கிடையாது.  ரவியை பிடித்திருக்கிறது, மாமாவைத்தான் மணப்பேன் என ரேஷ்மி பிடிவாதம் செய்ததால்தான் அவர் பெரிதாக மறுப்பு சொல்லவில்லை.

மதி பற்றி தெரியவும் வீட்டில் இதைப் பற்றி பேசி, மகளுக்கு புரிய வைக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கிறார் ஜோதி.

பாரதியும் ஜோதியும் சற்று நேரம் சித்தியிடம் பேசியிருந்து விட்டு அம்மாவின் வீட்டுக்கு சென்று விட்டனர். கணேசன் மட்டும் மகனுடன் இங்குதான் இருந்தார்.

பூர்ணிமாவுக்கு சமையலில் உதவி, பின் ரவிக்கும் சாப்பாடு கொடுத்தாள் மதி.

“ஹாஸ்பிடல்ல இருந்தப்பவே கல்யாணம் பத்தி கேட்டேன், நீங்க எதுவுமே சொல்லலை மாமா” என நயமாக கேட்டாள் மதி.

“அதை இன்னும் விடலையா நீ? நான் நல்லானதும் கல்யாணம் பண்ணிக்கிறேன், அதுவரை அந்த பேச்சை எடுக்காத, திரும்ப திரும்ப கல்யாணம்னு பேசினா தயவுசெஞ்சு கிளம்பி போயிடு” என்றான் ரவி.

முகத்தை சின்னதாக்கிக் கொண்டவள் பின் அந்தப் பேச்சை எடுக்கவில்லை. சமாதானமாக ஒரு வார்த்தை பேசினாலும் திரும்ப ஆரம்பித்து விடுவாள் என நினைத்து அவனும் பேசாமல் சாப்பிட மட்டும் செய்தான்.

விசாகனை அவனது அம்மாவிடம் விட்டு வரும் படி ரிதியிடம் கொடுத்தார் கணேசன். அந்த வீட்டுக்கு சென்று விட்டு வந்த ரிதி அம்மாவிடம் போய் ஏதோ சொல்லி அழுதாள்.

காலி பாத்திரங்களை எடுத்துக் கொண்டு வந்த மதி எதேச்சையாக அவள் சொன்னதை கேட்டு அதிர்ச்சியடைந்தாள்.

“நல்ல வேலை திருமண பேச்சை பாட்டி பேசினதோடு போச்சு, நானா ஏதும் வார்த்தை விடல, இனி ரவிக்கு கல்யாணம்லாம் கஷ்டம்தான், முன்னாடியே நான் பேசியிருந்தா ரேஷ்மியை கொடுங்கன்னு உரிமையா கேட்ருப்பாங்க, நான் மாட்டேன்னு சொல்லி சங்கடமா போயிருந்திருக்கும். இப்ப அப்படி ஆகல, பொழச்சேன் நான்” என சொல்லியிருக்கிறார் ஜோதியின் கணவர். ரிதியை காணவும் பேச்சை மாற்றி விட்டாராம், அவளும் இதை காதில் வாங்காதது போல வந்து விட்டாளாம்.

மதியை கண்ட பூர்ணிமா, “பாரு மதி, எப்படிலாம் பேசிக்கிறாங்க, அவரை நான் பொண்ணு கேட்டேனாமா?” என ஆதங்கமாக கேட்டார்.

“இதெல்லாம் மாமாக்கு தெரிய வேணாம் அண்ணி” என ரிதியிடம் சொன்னாள் மதி.

“சொல்லல அண்ணி, ஆனா ரொம்ப கஷ்டம் ஆகிடுச்சு. இப்படித்தான் ஸ்ரீதர் அம்மா கூட ‘உன் அண்ணா பேர்ல ஏதும் பிராப்பர்ட்டி இருந்தா இப்பவே எல்லாத்தையும் சரி பண்ணி வச்சிடுங்க, எதாவதுன்னா பின்னாடி கஷ்டம்’னு என்கிட்ட சொன்னாங்க. நான் நல்லா திட்டி விட்டுட்டேன், எல்லாருக்கும் என் அண்ணா எப்படி தெரியறார்னு நினைக்கும் போது அழுகையா வருது” என சொல்லி தேம்பினாள்.

‘இதென்ன புதுக்கதை?’ என தளர்ந்து போனவராக பார்த்தார் பூர்ணிமா.

ரவி மருத்துவமனையில் இருந்த சமயத்தில் இப்படி பேசியிருக்கிறார் போலும், அதை அவள் ஸ்ரீதரிடம் சொல்லி அவர்களுக்குள்ளும் சண்டையாம். அவனது பேச்சு இவளுக்கு பிடிக்கவில்லையாம், இவள் மிகவும் மோசமாக அவனை திட்டி விட்டாளாம், அன்றிலிருந்து அவன் இவளிடம் பேசுவதே இல்லையாம்.

ஒன்றும் சொல்லாமல் பின்பக்க வாசலில் அமர்ந்து கொண்டு விட்டார் பூர்ணிமா. ரிதிக்கு ஆறுதலாக ஏதோ சொன்னாள் மதி.

“இப்ப என் கல்யாணம், ஸ்ரீதர், அவர் அப்பாம்மான்னு எந்த டென்சனும் நான் எடுக்கிறது இல்லண்ணி. அண்ணா நடக்க ஆரம்பிச்சிட்டா அது போதும் எனக்கு” என தேறிக் கொண்டவளாக சொன்னாள் ரிதி.

பூர்ணிமாவை பார்ப்பதற்காக மதி போக, அதற்குள் ‘கிளம்பவில்லையா?’ எனக் கேட்டு ஹாலில் இருந்த படியே குரல் கொடுத்தார் கணேசன். பூர்ணிமா அவராகவே எழுந்து வந்தவர், “நீ சாப்பிட்டு கிளம்புமா, நடக்கிறது நடக்கட்டும்” என்றார்.

மதிக்கு பசியே இல்லை. அதிலும் இப்போது ரிதி சொன்ன விஷயங்களை கேட்ட பிறகு சாப்பிட முடியும் போலவே தோன்றவில்லை. ஆகவே உணவை பேக் செய்து எடுத்துக் கொண்டாள்.

சித்தப்பாவை கேப் புக் செய்ய சொல்லி விட்டு ரவியிடம் சொல்லிக் கொள்வதற்காக சென்றாள்.

ரவிக்கு வீட்டினர் பார்த்து பார்த்து செய்தாலும் அவனது தடுமாற்றங்களை கண்டு மிரண்டு போகின்றனர், தங்களின் தவிப்பை வெளிப்படையாக காண்பித்து விடுகின்றனர். ரிதியை பற்றி கேட்கவே வேண்டாம், அவளை மீறி அழுதே விடுகிறாள். அது ரவியை பாதிக்கிறது. மதி கவனித்துக் கொள்ளும் போது அப்படியான சிக்கல் அவனுக்கில்லை.

அவன் ஒத்துழைக்க மறுத்தாலும் கெஞ்சல் கொஞ்சல் எல்லாம் கிடையாது, மிரட்டவே செய்வாள்.  அது அவனது இயலாமையை அவனுக்கு உணர்த்தாமலிருக்க,  மதிதான் அவனுக்கு ஒத்து போகிறாள்.

ஆகவே அவள் போகிறாள் என்றதுமே சட்டென அவனது முகம் சுணங்கியது, ஆனால் போய்தானே ஆக வேண்டும்? என தெளிந்து கொண்டான்.

அவனது கன்னத்தில் கை வைத்து, “நாளைக்கு முடிஞ்சா வர்றேன், இல்லைனா நாளான்னிக்கு கண்டிப்பா வருவேன்” என்றாள்.

“அலையாத, லீவ் இருக்க அன்னிக்கு வந்தா போதும்” என சொல்லித்தான் விடை கொடுத்தான்.

ஆனால் அவளுக்கு மனது கேட்கவில்லை, அடுத்த நாளும் மாலை போல வந்து இரவு உணவுக்கு பின் விடுதிக்கு புறப்பட்டு சென்றாள். அப்படித்தான் தொடர்ந்து வந்த மூன்று நாட்களும் வெறும் இரண்டு மணி நேரம் மட்டும் இங்கு இருப்பதற்காக சோர்வையும் பொருட்படுத்தாமல் அலைந்து கொண்டிருந்தாள். யார் சொல்லியும் கேட்பதாக இல்லை.

வார விடுமுறை வந்து விட, அன்று காலையே ரவியை காண வந்து விட்டாள் மதி.

ரவி அவளை மிகவும் எதிர் பார்த்துக் கொண்டிருந்தான். வந்த உடனே அவனுக்கு உடம்பு சுடுவதை அறிந்து கொண்டு விட்டாள். இரவில் சீனுதான் அவனுடன் தங்குகிறார். இடையில் ஒருமுறை அலாரம் வைத்து மகனுக்கு ஏதும் தேவையா என பார்த்து கவனிக்கிறார்.

அப்பாவை சிரம படுத்தக் கூடாது என அவனும் அவரை எழுப்பி ஏதும் சொல்லியிருக்கவில்லை. காலையில் மகனை கவனித்தவருக்கு ஏதோ சிந்தனையில் இந்த உடல் சூடு கருத்தில் பதியவில்லை.