மதி அப்படியிருக்க காரணம் ரவி மீண்டு வருவான் என மிகவும் ஆழமாக உறுதியாக நம்புகிறாள் என்பதுதான்.

சீனுவுக்கும் மதிக்கும் இடையில் நல்ல இயல்பான பேச்சுக்களும் இருந்தன. ஒவ்வொரு முறையும் மருத்துவர் ரவுண்ட்ஸ் முடித்து விட்டு வரும் போது அவர் சொல்லப்போகும் வார்த்தைக்காக அவள் காத்து நிற்கும் காட்சியே அவரது மனதை உருக்கி விடும்.

ஒரு வார விடுப்பு முடிந்த பின்னரும் அங்கிருந்தே வேலை பார்க்க அனுமதி பெற்றுக் கொண்டாளே தவிர்த்து, ரவியை விட்டுச் செல்லவில்லை அவள்.

எந்தவொரு தைரியசாலியையும் கடினமான நோய் தகர்த்து விடும். ரவியும் அதற்கு விதி விலக்கல்ல.

தான் இல்லாது போனால் தன் குடும்பத்துக்கு பெரும் இழப்பல்லவா? அதிலும் அம்மாவை நினைக்கும் போதே அவனது மனம் நடுக்கம் கொண்டுதான் அடங்குகிறது. காலம் கடக்க கடக்க தங்கை அவளது மண வாழ்வில் ஒன்றி விடுவாள், அவளை பார்த்து பெற்றோர் ஆறுதல் அடையக் கூடும், தங்கை பெற்றோரை கவனித்துக் கொள்வாள். ஆனால் மதியின் நிலைமை?

எவ்வளவு தூரம் அவளை அவன் இழுத்து வந்து விட்டான் என்று தெரியுமே, என்னை மறந்து விட்டு வாழ முடியுமா அவளால்? அவளுக்கு நல்ல வாழ்க்கை அமையவிருந்த போது தடுத்தது நான்தானே? அவளை நன்றாக வாழ வைக்க வேண்டும் என நினைத்து இப்போது நட்டாற்றில் தவிக்க விட்டு செல்ல போகிறேனா?

இப்படியெல்லாம் யோசித்து யோசித்து மண்டை வெடித்தது அவனுக்கு.

தவறாக ஏதாவது நிகழ்ந்து போனால் மதிக்கு நல்ல வாழ்க்கை அமைத்து தர வேண்டியது உங்களின் பொறுப்பு என அப்பாவிடம் சொல்லியிருக்கிறான். அதை அவர் மனைவியிடம் சொல்லி வருத்த பட்ட போது கேட்டு விட்டாள் மதி.

தினம் ரவியை பார்த்து விடுவாள் மதி. அன்று பார்க்க சென்றவள் அவனது கண்களில் அதீதமான நிராசை குடி கொண்டிருப்பதை கண்டு கொண்டாள்.

“நம்ம எண்ணங்களுக்கு சக்தி இருக்கு மாமா, நம்ம பேசுற, நினைக்கிற ஒவ்வொரு சொல்லுக்கும் வலிமை இருக்கு. இப்ப உங்களுக்கு நடக்கிறது நிரந்தரம் இல்லை, உடம்பு சரியாகணும்னா முதல்ல மனசு நல்லாருக்கணும். என்னை விட்டு போயிடுவேன்னு நினச்சு அந்த நடக்க போகாத நிகழ்வுக்கு வலிமை கொடுக்காதீங்க மாமா” என்றாள்.

மூச்சை நன்றாக உள் இழுத்து வெளியேற்றினான் ரவி.

“நாம சூப்பரா வாழப் போறோம், இந்த கஷ்டத்தை கடக்க இன்னும் கொஞ்ச தூரம் டிராவல் பண்ணினா போதும் மாமா, ஃபைட் பண்றத மட்டும் விட்ராதீங்க” என அவள் சொல்லும் போது, இருவரின் கண்களிலிருந்துமே உருண்டு வந்தன கண்ணீர் துளிகள்.

வலிமையற்ற தன் கரத்தால் பிரயத்தனப் பட்டு அவளது கையை பற்றிக் கொண்டான். மொத்த ஒளியையும் அவனுக்கு பாய்ச்சி விட்டுத்தான் வந்தாள். அவனது மனமெங்கும் அந்த வெளிச்சம் பரவியது. தன்னிடமிருந்து நழுவிச் செல்லத் தயாராகும் ஆவியை இழுத்து கெட்டியாக பிடித்துக்கொண்டான் ரவி.

தினம் தினம் இரண்டு வேளை அவனை காண வருகிறாள் மதி, வாழும் ஆசையை அவனது நெஞ்சு முழுக்க நிறைத்து விட்டுத்தான் செல்கிறாள்.

ரவியின் சிகிச்சைக்கு பெரும் தொகை செலவானது, ஆனால் அதைப் பற்றியெல்லாம் சீனு கவலை படவே இல்லை. கையில் கடைசி ரூபாய் இதுதான் எனும் நிலை வந்தால் கூட மகனுக்காக செலவழிக்க தயாராக இருந்தார்.

ஒரு மாத ஐ சி யூ வாசத்திற்கு பின் அறைக்கு மாற்றப் பட்டான் ரவி. நோய் தாக்குவது நின்று விட்டது, ஆனால் ஏற்கனவே ஏற்பட்டிருந்த விளைவுகள் சீராகவில்லை. தன்னிச்சையாக அவனால் நடக்க முடியவில்லை, கைகளிலும் திறன் குறைந்துதான் இருந்தது.

இனி பிசியோதெரபி மூலமாகத்தான் இதை சரி செய்ய வேண்டும், எப்போது சரியாகும் என்றெல்லாம் சொல்ல இயலாது. மாதக் கணக்கில் வருடக் கணக்கில் என எந்த கணக்கும் இல்லை. முழுதும் சரியாகாமல் குறிப்பிட்ட அளவு சேதம் நிரந்தரமாக கூட இருந்து விடும்.

ரவியையும் அவனது உறவுகளையும் முழுதாக நிம்மதியடைய விடாமல் இப்படித்தான் மருத்துவர் விளக்கினார்.

இந்தளவு மீண்டானே என நினைத்து தேற்றிக் கொண்டனர். மகனை விட்டு அகலாமல் அவனுடனே அமர்ந்திருந்தார் பூர்ணிமா. அனைவருமே இளைத்து போய் விட்டார்கள் என்பது கண் கூடாக அவனுக்கு தெரிந்தது.

அவனது அடிப்படை தேவைகளுக்கு கூட மற்றவரின் உதவி தேவைப் படுவது கண்டு பூர்ணிமாவின் உள்ளம் வெதும்பியது. அழுகையை அடக்க முடியாமல் வெளியில் வந்து விட்டார். அவரை அணைத்துக் கொண்ட மதி, “கொஞ்ச நாள் முன்னாடி இருந்த நிலையை நினைச்சி பாருங்கத்தை, அப்படி இதுவும் மாறும்” என ஆறுதல் சொல்லி தேற்றினாள்.

இரவில் சீனு மகனுடன் இருக்க, பெண்கள் இருவரும் முன்னர் அவர்கள் எடுத்திருந்த அறையில் இருந்து கொண்டனர்.

காலையில் மகனை கவனித்து தேவையானது சிலது எடுத்து வர வீட்டுக்கு சென்றார் பூர்ணிமா, வரும் போது மகளுடன் வருவார். சீனுவும் அடுத்து வரும் நாட்களுக்கான கட்டணத் தொகை செலுத்த சென்றிருந்தார்.

ரவியுடன் மதி மட்டும்தான் இருந்தாள். அவன் அமைதியாக இருந்தான்.

“என்ன யோசனை, சீக்கிரம் நல்லா எழுந்து நடமாடுவீங்க மாமா” என்றாள்.

“ம்ம்… ஒரு வேளை இப்படியே இருந்திட்டேன்னா ?” எனக் கேட்டான்.

அவள் முறைக்க, “பிராக்டிகலா பேசலாம் மதி, நான் இப்போ செமி பாரலைஸ்டு” என்றான்.

“இது மாறும்”

“ஆகலைனா?”

“வாழணும்னு நம்பிக்கை இருந்தா எந்த நிலையிலும் வாழலாம் மாமா”

“ம்ம்… உன் வாழ்க்கையையும் கெடுத்துகிட்டா?”

“இப்படிலாம் நீங்க பேசுவீங்கன்னு நான் எதிர் பார்த்தேன், அதனால ஷாக்கிங்கா ஒன்னும் இல்லை”

“நாலு வருஷ பழக்கத்துக்காக உன் மிச்ச வாழ்க்கை முழுசையும் நாசமாக்க முடியாது மதி”

“கரெக்ட்தான் மாமா. உங்க இடத்துல நான் இருந்திருந்தா என்ன முடிவு பண்ணியிருப்பீங்க?”

“அதையே நானும் கேட்கிறேன் மதி”

“நானும் உங்களை போல அறிவா பேசுறதா நினைச்சு  இப்படித்தான் முட்டாள்தனமா சொல்லியிருப்பேன். உடனே சரின்னு ஒத்துப்பீங்களா? என் அனுமதி கூட இல்லாம தாலி கட்டியிருக்க மாட்டீங்க? இந்த கல்யாண விஷயம் கூட பொம்பளைக்கு சாதகமா இல்லை பாருங்க. நான் எதை கட்டி அப்படி உங்களை எனக்கு புருஷனா ஆக்கிக்க முடியும் சொல்லுங்க?” என அவள் கேட்க, முகத்தை திருப்பிக் கொண்டான்.

“ஒரு பொண்ணுக்கு எல்லாம் பார்த்து பார்த்து ஜாம் ஜாம்னு கல்யாணம் பண்ணி வச்சா கூட அடுத்த நாள் அவ புருஷன் ஆக்ஸிடெண்ட் ஆகி இறந்து போனது எல்லாம் கேள்வி பட்டதில்லையா நீங்க? அதெல்லாம் நம்ம கைல இல்லை. அடுத்த நிமிஷம் நிரந்தரம் இல்லாத இந்த மனுஷ வாழ்க்கைல இவ்ளோ பெரிய நோய்லேருந்து தப்பிச்சு வந்திருக்கீங்க? எதுக்காகன்னு நினைக்கிறீங்க?” என சற்றே கோவமாக கேட்டாள்.

பதிலுக்காக மெதுவாக அவள் பக்கமாக திரும்பினான்.

“எனக்காக… எனக்காக மாமா. இன்னொரு முறை இப்படி பேசினீங்கன்னா…” என்றவள் ஒரு விரலை காண்பித்து மிரட்டலாக பார்த்தாள்.

“அடி வாங்குற அளவுக்கு உடம்பு தெம்பாகட்டும், எல்லாம் கணக்குல வச்சிக்கிறேன்” என்றாள்.

அவளை தன்னிடம் வரச் சொல்லி தலையசைத்தான். “வர மாட்டேன் போங்க…” என சொல்லிக் கொண்டே, நடந்து சென்று அவனது தலைமாட்டில் அமர்ந்து கொண்டாள்.

“ஸாரி” என குரல் கமறச் சொன்னான்.

அவனது சிகையை மென்மையாக வருடி விட்டவள் குனிந்து அவனது நெற்றியில் முத்தமிட்டாள். மூடியிருந்த அவனது விழிகளின் ஓரம் ஈரம் கசிந்தது. அவனது விழியீரத்தை ஒற்றியெடுத்தவள் அவனது கன்னத்தோடு கன்னம் பதித்துக் கொண்டாள்.

“தள்ளி போடாம சீக்கிரமே நாம கல்யாணம் பண்ணிக்கலாமா மாமா?” என தன் காதோரம் அவளின் குரல் கிசு கிசுக்க, திடுக்கிட்டுப் போனான் அவன்.