பட படக்கும் இதயமும் இமைகளுமாக அவனை பார்த்தாள். அவளின் தோளை சுற்றி கை போட்டுக் கொண்டவன், “இப்ப நாம நிக்கிற இந்த இடத்துக்கு நேர் கீழதான் நம்ம ரூம்” என்றான்.
“ஆறு மாசம் இருக்கா?” எனக் கேட்டவளின் நெற்றி முட்டியவன், “நெக்ஸ்ட் வீக் எண்ட் வெளில போலாம், எப்பலாம் டைம் கிடைக்குதோ அப்பலாம் சேர்ந்து இருக்கலாம்” என்றான்.
முன்பும் வெளியில் அழைத்து சென்றிருக்கிறான், ஏதாவது கடைக்கு, கோயிலுக்கு இப்படித்தான் இருக்கும். இப்போது இவன் சொல்லும் தொனியே வித்தியாசமாக இருந்தது.
“ஹையோ நான் வரலை, சித்தப்பாக்கு தெரிஞ்சா அவ்ளோதான்” என்றாள்.
“கல்யாணம் பண்ணிக்கிட்டப்புறம் உன் சித்தப்பா என்ன சொல்வாராம்? வேடிக்கை பார்க்க வேண்டியதுதான். சாக்கு போக்கு சொல்லாம வர்ற” என்றான்.
“அத அப்ப பார்க்கலாம்” என அவள் மழுப்பலாக சொல்லவும் முறைத்தான்.
“வர்றேன் போதுமா?” என அவள் சொல்லவும் இயல்பாகி அவளை தன் தோளில் சாய்த்துக் கொண்டான்.
அவளும் ரவியின் கை வளைவில் தன் கை நுழைத்து அவனது கையை பற்றிக் கொண்டாள்.
சற்று நேரம் சென்றதும், “நிறைய வேலை பார்த்திருப்பீங்க, டயர்டா இருக்கும், கிளம்புங்க மாமா” என சின்னக் குரலில் சொன்னாள்.
“எது, இப்படி உன் கூட இருக்கிறத மிஸ் பண்ணிட்டு போய் தூங்கவா?” என்றவன் அங்கேயே அமர்ந்து அவளையும் தன்னருகில் அமர்த்திக் கொண்டான்.
விரும்பிய காலம் தொட்டு முதன் முதலாக கிட்டிய இந்த ஏகாந்தத்தில் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தனர். அப்படியே அவளின் மடியில் தலை வைத்து படுத்து விட்டான். அவளும் தடை சொல்லவில்லை.
மதியின் தோளுக்கு முன் கிடந்த அவளின் நீண்ட அடர்ந்த பின்னலை கையில் சுற்றினான், பின்னலில் உறவாடிக் கொண்டிருந்த வாடிப் போயிருந்த மலர் சரத்தை வருடினான், அவளது கரங்களின் வளையல்களை முன்னும் பின்னுமாக தள்ளி தள்ளி விட்டான், காதணிகளை ஊஞ்சலாக போய் வரச் செய்தான், இப்படியாக அவனது விளையாட்டு நீண்டு கொண்டே சென்றது.
எப்போதுமே அவனது சிகை மீது அவளுக்கு குறையாத ஈர்ப்பு உண்டு, இப்போதும் அவளது பார்வை சிகையின் மீதுதான், அவனது தலைக்கு அருகில் கையை எடுத்து செல்வதும் பின் விலக்கி விடுவதுமாக இருந்தாள்.
கவனித்தவன் அவளது கையை பிடித்து தன் சிகையில் வைத்து விட்டு, “இந்த ஆளு மொத்தமும் உனக்குத்தான், யார் தடை போட்டா உனக்கு?” என்றான்.
அவனது சிகையை விரல்களால் தொட்டு, தடவி, கலைத்து என தனது நெடுநாள் ஆசையை தீர்த்துக் கொண்டவள், “இவ்ளோ சாஃப்ட் மாமாக்கு எப்படி இப்படி அடங்காத தலைமுடின்னு நினைச்சிருக்கேன்” என்றாள்.
“ம்ஹூம்! வேற என்னல்லாம் நினைச்சியாம்?” அவளது விரல் நகங்களில் ஏதோ தீவிரமான ஆராய்ச்சி செய்து கொண்டே கேட்டான்.
அவள் பேசப் பேச தனக்கு இணையாக அவளும் தன்னை ரசிக்கிறாள் என்பதை தெரிந்து கொண்டான். கண்களை மூடியபடி அவன் சிரித்திருக்க, அவனது இரண்டு பக்க இதழ் ஓரங்களை மென்மையாக கிள்ளியவள், “இந்த சிரிப்புக்கே என்னை சாசனம் எழுதி கொடுத்திடுவேன்” என்றாள்.
“நீ என்ன எழுதி தர்றது? இவ மாட்டேன்னு சொன்னா அப்படியே விட்ருவோமா என்ன?”
இப்படி அர்த்தமே இல்லாமல் பேசிக் கொண்டிருந்தனர்.
நேரம் வேகமாக கடந்திருக்க, உறங்கலாம் என இருவருமே ஒரு மனதாக முடிவு செய்து எழுந்து கொண்டனர்.
அவளை அறைக்கு போக சொன்னவன் அங்கேயே நின்றான். கதவு வரை சென்றவள், அவனையும் கீழே போக சொல்லி சைகை செய்தாள்.
தன் கழுத்தின் பின்பக்கத்தை தடவிக் கொண்டே அங்கிருந்து போக திரும்பியவன் சட்டென அவள் பக்கமாக திரும்பினான். என்னவென அவள் பார்த்திருக்க, விரைவாக அவளை தன்னிடம் இழுத்துக் கொண்டவன் வேகமாக அவளுக்கு முதல் இதழ் முத்தம் வைத்தான்.
அவனது அதிரடியான செயலில் திக்கு முக்காடிப் போனவள் அவனை அணைத்து பிடித்துக்கொண்டாள்.
சில சர்க்கரை நிமிடங்களுக்கு பின் தன்னிடமிருந்து அவள் முகத்தை சற்றே பிரித்தெடுத்தவன் குறுநகையுடன் அவளை அளவிட்டான். இமைகளை திறக்காமல் லேசாக வேகப் பட்டிருந்த மூச்சுகளோடு இருந்தாள் அவள்.
அவளது இடையில் கை கொடுத்து அவளது முகத்தை மார்பில் பொருத்திக் கொண்டான். அவள் ஆசுவாசம் ஆனதும், “கோவமா?” எனக் கேட்டான்.
அவனை நிமிர்ந்து பார்த்தவள், “எதுக்கு மாமா?” எனக் கேட்டாள்.
அவன் சிரிக்க, அவளும் கண்களால் சிரித்தாள்.
முதல் முறை ஒரு வேகத்தில் முத்தமிட்டிருந்தவன் இப்போது நிதானமாக இதழ் கவி எழுதி, ஆயிரமாயிரம் வெட்கப் பூக்களை அவளிடம் மலரச் செய்தான்.
அவனது செயலில் அவளிடம் மறுப்பு, தடை, பயம் என எதுவுமில்லை, இறுதியில் அவளின் நெற்றியில் முத்தமிட்டு விலக்கி நிறுத்தினான்.
அவளது ஒரு கன்னத்தை தாங்கி கட்டை விரல் கொண்டு வருடி வீட்டுக்கொண்டே, “தூக்கம் வருதோ இல்லையோ சும்மா கண்ண மூடிக்கிட்டு படு. காலைல லேட்டா எழுந்தா போதும்” என்றான்.
விடை பெற போகிறான் என்பது உணர்ந்து அவனை அணைத்துக் கொண்டு நின்றாள். அரை நிமிடத்திற்கு பின் அவளாக விலகும் வரை அவனும் காத்து நின்றான்.
மதியின் கைப் பிடித்து அழைத்துச் சென்று அறைக்குள் விட்டவன், அவளை கண்களில் நிறைத்துக் கொண்டு கீழே இறங்கினான்.
காலையில் நேரமாகவே எழுந்து விட்ட மதி, தான் விடுதிக்கு செல்வதாக ரவிக்கு செய்தி அனுப்பி வைத்தாள். உடனே அழைத்து விட்டவன், “லீவ்தானே இரு, வீட்டு சாப்பாடு சாப்பிட்டு ஈவ்னிங் போலாம்” என்றான்.
“கைல எதுவுமே கொண்டு வரலை மாமா, சொன்னா புரிஞ்சுக்கோங்க, சித்தியோட அக்கா வீட்ல இன்னும் வேற யாரோலாம் இருக்காங்க, என்னை எப்படியோ பார்ப்பாங்க, நான் போறேன்”
“சொந்தக்காரங்கலாம் விடிய காலையே போயிட்டாங்க. நம்ம வீட்டாளுங்க மட்டும்தான் இருக்காங்க, ஜோதிக்கா பாரதிக்கா மாதிரி கிடையாது, கூல் டைப். இந்த வீட்டு பொண்ணு ஆக போறவ இப்படிலாம் காரணம் சொல்லக்கூடாது. அம்மாவும் இருக்க சொன்னாங்க” என அவன் சொல்லியும் தயங்கினாள்.
“ரிதி ஒரு பீரோ நிறைய ட்ரெஸ் வச்சிருக்கா, தருவா”
“ப்ச்… உங்களுக்கு சொன்னா புரியாது”
“சொல்லாமலே புரியாதுன்னா?” என அவன் கேட்க, “புரியாதுதான், ட்ரெஸ் மட்டும் போதுமா? போங்க நீங்க” என கோவமாக சொன்னாள்.
“அப்படியே படுத்திரு, எட்டு மணிக்கு மேலதான் ஜவுளிக்கடையெல்லாம் தொறப்பாங்க, மெசேஜ் அனுப்பு, வேணுங்கிறத வாங்கிட்டு வர்றேன்” என இலகுவாக சொன்னான்.
அவள் கைப்பேசியால் தலையில் தட்டிக் கொள்ள, “ஹையோ ரொம்பத்தான், என்கிட்ட என்ன வெட்கம்? காஷுவலா இரு” என சொல்லி வைத்து விட்டான்.
பாட்டியின் மறைவுக்கு பின் மதிக்கு விடுதி வாசம்தான், கல்லூரி விடுமுறை என்றாலும் விடுதி இருந்தால் அங்கேயே இருந்து கொள்வாள். விடுதியும் மூடப் படும் போது வேறு வழியின்றி சித்தப்பாவின் வீட்டுக்கு செல்வாள். பாரதி அவளை கவனிப்பதில் குறை வைப்பதில்லை என்றாலும் ஒதுக்கம் காட்டுவாள், மதியால் அங்கு இயல்பாக இருக்க முடிவதில்லை.
கடந்த வருடம் தீபாவளி சமயத்தில் பாரதி பிரசவமாகி பிறந்த வீட்டிலிருந்தாள், அண்ணன் மகளுக்காக வாடகை வீட்டிலேயே இருப்பது எனதான் கணேசன் முடிவு செய்திருந்தார். தன்னை வைத்து அவர்களுக்குள் பிரச்சனை வந்து விடக்கூடாது என நினைத்த மதிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.