நிச்சயம் முடிந்து மண்டபத்தை காலி செய்து கொண்டிருந்தனர். ஜெயபாரதிக்கு ஒற்றைத் தலைவலி படுத்த ஆரம்பித்திருக்க, குழந்தையை கவனிக்க முடியாமல் அவளுக்கு அழுகையே வந்து விட்டது.
“இன்னிக்கு ரொம்ப நை நையினு இருக்கான், நைட் தூங்க விட மாட்டான்” என பாரதி புலம்ப, தான் பார்த்துக் கொள்வதாக சொன்னார் கணேசன்.
சோர்வாக தெரிந்த சித்தப்பாவை பார்க்க தண்மதிக்கும் பாவமாகவே இருந்தது. காலம் கடந்து என்பதால் குழந்தை வளர்ப்பதில் இருவருமே சிரம படுகின்றனர்தான். இன்று மட்டுமாவது தான் உதவலாம் என்றாலும் அந்த வீட்டுக்கு செல்வதா என தயங்கி வாயே திறக்கவில்லை தண்மதி.
தண்மதியை பத்திரமாக விடுதி அனுப்பி வைக்கும் பொறுப்பை ரவியிடம் கொடுத்து விட்டு குழந்தைக்காக கை நீட்டினார் கணேசன்.
“நீங்க சித்திய பாருங்க சித்தப்பா, இவனை மாமாகிட்டயே கொடுத்து விடுறேன்” என அவள் சொல்லவும், சரிதான் என அவரும் மனைவியை அழைத்துக் கொண்டு புறப்பட்டு விட்டார்.
ரேஷ்மியின் அப்பா அவரது குடும்பத்தை வரச் சொல்லி விட்டு காரை எடுக்க சென்று விட்டார். நாளைய தினம் விடுமுறை என்பதால் கோசலையின் வீட்டுக்குத்தான் செல்கின்றனர், விசாகனை தன்னுடன் அழைத்து செல்வதாக சொன்னார் பாரதியின் அக்கா ஜோதி.
மதியின் தோளில் படுத்திருந்த குட்டிப் பையன் பெரியம்மாவிடம் செல்ல மறுத்தான், வேறு யார் அழைத்தும் முகத் திருப்பல்தான்.
“என்னம்மா இது, இன்னிக்கு இவ்ளோ பண்றான் இவன்?” என்ற ரேஷ்மி, வலுக்கட்டாயமாக குழந்தையை வாங்க முயன்றாள். பெருங்குரல் எடுத்து அழ ஆரம்பித்து விட்டான் குழந்தை. அப்போதும் விடவில்லை ரேஷ்மி.
“விடுங்க ரொம்ப அழறான்” என பதறிய படி மதி சொன்னதையோ, விடு என தன் அம்மா சொன்னதையோ காதில் வாங்கவே இல்லை ரேஷ்மி.
சற்று தள்ளி ஏதோ வேலையாக இருந்த ரவி வந்து விட்டான்.
“என்ன ரேஷ்மி இது, அவகிட்ட இருக்கட்டும் விடு, அக்காவும் பக்கத்துல இல்லாம ரொம்ப அழுதா எப்படி ஹேண்டில் பண்றது? விடுன்னு சொல்றேன்ல” என அதட்டல் போட்டதோடு நில்லாமல், ரேஷ்மியின் கையையும் குழந்தையிடமிருந்து பிரித்து அவளை தள்ளி நிறுத்தினான் ரவி.
ரேஷ்மி முகத்தை சுருக்கிக் கொள்ள, அவளின் தலையில் செல்லமாக கொட்டியவன், “உனக்கும் விசாகனுக்கும் ஒரே அளவுலதான் மூளை வளர்ச்சி இருக்கு, போ, நாளைக்கு விளையாடலாம் தம்பியோட” என்றான்.
“அப்படிலாம் சொல்லாதீங்க மாமா, இந்த இயரோட எனக்கு படிப்பு முடியுது” என்றாள் ரேஷ்மி.
“ஆமாம்டா, ஆனா தின்ன தட்ட கழுவி வைக்க கூட வளையாது உடம்பு”என மகளைப் பற்றி ஜோதி குறை படிக்க, நான் பெரிய பெண்தான் என ரோஷமாக சொன்னாள் ரேஷ்மி.
“ம்… பெரியவதான் நீயி, நாளைக்கே கல்யாணத்துக்கு மாப்ள பார்க்க சொல்றேன் உன் அப்பாவை” என்றார் ஜோதி.
ரவியின் கையை பற்றிக் கொண்ட ரேஷ்மி, “அது ஏன் கஷ்டபட்டு தேடிக்கிட்டு, அதான் மாமா இருக்காங்களே?” என்றாள்.
“நீ மணிக்கணக்கா ஷாப்பிங் செய்றதையும் மொபைல் பார்க்கிறதையும் கண்டுக்காம இருப்பேன்னு இப்படி திட்டமா? மாமா தலையிலேயே மொளகா அரைக்க நினைக்கலாமா? வேணாம்டா, நான் பாவம் என்னை விட்ரு” என சிரிப்புடன் சொன்னான் ரவி.
“எப்ப இவளை பத்தி குறை சொன்னாலும் பாவம் சின்ன புள்ளன்னு சப்போர்ட் பண்ணுவீல? பேச்சை பார்த்துக்க” என்ற ஜோதி, “ஏன் லேட்டுனு திட்ட போறார்” என புலம்பிக் கொண்டே வெளியில் சென்று விட்டார்.
ரேஷ்மியின் பேச்சை தண்மதியும் மற்றவர்களை போலவே விளையாட்டு பேச்சு என்றே நினைத்துக்கொண்டாள்.
“மாமா வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க ரேஷ்மி, கிளம்பு” என சொல்லி ரேஷ்மியையும் அனுப்பி வைத்தான் ரவி.
வீட்டினரையும் கணேசனின் பிள்ளைகளையும் தன் அப்பாவுடன் அனுப்பி விட்டு, தண்மதியை தான் கொண்டு போய் விட்டு விடலாம் என எண்ணியிருந்தான் ரவி.
ஆனால் இன்னும் உறங்கியிராத விசாகன் தண்மதியிடமிருந்து வர மறுத்து நல்ல அடம். வருங்கால மருமகளுக்கு என பழங்களும் இனிப்புகளும் பையில் போட்டு எடுத்துக் கொண்டு வந்த பூர்ணிமா, “பேசாம நீயும் வீட்டுக்கு வந்திடேன் மா, நாளைக்கு லீவ்தானே?” என்றார்.
வரவில்லை என மறுத்தாள்தான் தண்மதி. ஆனால் சீனுவும் கூட வற்புறுத்தி அழைத்தார். மாற்று ஆடை பற்றிய கவலை வேண்டாம், என்னுடையது புதியது தருகிறேன் என நவ்ரிதி சொல்ல, தயக்கமாக ரவியை ஏறிட்டாள் அவள். அவனும் பார்வையாலேயே வா என சொல்லி விட்டான்.
வழியிலேயே தான் அங்கு வருவதை சித்தப்பாவுக்கு தெரிவித்து விட்டாள். அவருக்கு இதில் விருப்பமில்லை, சொர்ணம் பாட்டி ஏதாவது சொல்லி சங்கடம் நேருமோ என்ற கவலை. ஆனால் பாதி தூரம் வந்து விட்டவளை வராதே என எப்படி சொல்ல முடியும்?
நானும் இங்குதானே இருக்கிறேன், என்னை மீறி யார் என்ன சொல்ல முடியும் என நினைத்து விட்டு விட்டார்.
பாரதி ஒரு அறையில், அவளது அக்கா குடும்பம் இன்னொரு அறையில், சில நெருங்கிய சொந்தங்கள் ஹாலில் என கோசலையின் வீடு நிறைந்திருந்தது. ஆகவே ரவியின் வீட்டு மாடியிலிருந்த அறை தண்மதிக்கு என ஒதுக்கப் பட்டது.
காரில் பயணித்த போதே விசாகன் உறங்கியிருக்க, அவனை கணேசன் வாங்கிக் கொண்டு மதிக்கு துணையாக ஷஷ்டியை அனுப்பி வைத்தார்.
பெரும்பாலோனார் அசதியில் படுத்த உடன் உறங்கி விட்டனர். தண்மதி இங்கு இருக்கிறாள் என்ற பரவசத்தில் ரவிக்கும் புது இடம் என்பதால் மதிக்கும் உறக்கம் அண்டியிருக்கவில்லை.
தூங்கிட்டியா என அவன் அனுப்பிய செய்தியை உடனே பார்த்து விட்டாள். அவள் விழித்திருக்கிறாள் என்பது தெரியவும் தாமதிக்காமல் மாடிக்கு ஏற ஆரம்பித்து விட்டான் ரவி.
அறையில் ஷஷ்டி உறங்கிப் போயிருக்க, வெளியில்தான் நின்றிருந்தாள் மதி.
உள் பனியன், மடித்துக் கட்டிய வேஷ்டி என வந்தவனை கண்டு திகைத்தாள் அவள். கட்டியிருந்த புடவையை இன்னும் மாற்றியிருக்காதவளிடம், “ஏன் மதி, ரிதி ட்ரெஸ் கொடுத்தாதானே?” என விசாரித்தான் அவன்.
அறைக்கு வந்ததும் ஷஷ்டியை ஆடை மாற்ற வைத்து படுக்க வைத்து விட்டாள் மதி. தனக்கு மாற்று ஆடை வந்து சேராததால் கட்டியிருந்த புடவையை தளர்த்தி விட்டுக் கொண்டு படுத்துக் கொண்டாள். பேசிக் கொண்டேயிருந்த ஷஷ்டி, அக்காவை கண் மூடவே விட்டிருக்கவில்லை.
தாமதமாகத்தான் ஆடை கொடுத்து விட்டு சென்றாள் ரிதி. ஷஷ்டி உறங்கியதும் ஆடை மாற்ற எண்ணி அப்படியே இருந்து விட்டாள் மதி.
“உன் தங்கச்சி முன்னாடி ட்ரெஸ் மாத்த கூட கூச்சமா?” என கிண்டலாக கேட்டான்.
லேசாக இதழ் விரித்தவள், “ம்ம்…” என்றாள்.
சரிதான் என்பது போல பார்த்தவன், “இன்னுமா தூங்கல அவள்?” எனக் கேட்டான்.
“அவ தூங்கிட்டா, எனக்குத்தான் புது இடம் என்னவோ போல இருக்கவும் சும்மா வெளில வந்தேன், நீங்க என்ன இந்த நேரம் இங்க?”
“நடு ராத்திரில வயசுப் பையன் தூக்கத்தை விட்டுட்டு வர்றானா என்னவா இருக்கும்?” என அவனும் கேள்வி கேட்டான்.
அவள் அவனை கண்டிப்போடு பார்க்க, “என்ன செய்ய போறாங்க உன்னை?” எனக் கேட்டுக் கொண்டே அவளின் பக்கத்தில் நெருக்கமாக வந்து நின்றான்.