Advertisement

அத்தியாயம் – 7-1

இப்போது அவை அனைத்தும் நினைவுக்கு வர, வீட்டிலேயே தையல் கடை திறந்து விட்டார் ஜோதி. அதைத் தவிர சின்ன குழந்தைகளுக்கு ஸுவட்டர் பின்னுவது, பெட்ஷீட்டில் பூ வேலை செய்து கொடுப்பது என்று சம்பாதிக்க ஆரம்பித்தர் . விடுமுறை நாள்களிலும் தவறாமல் நீச்சல் குளத்திற்கு சென்று கொண்டிருந்த மகளை இழுத்துப் பிடித்து, சின்ன சின்ன தையல் வேலைகள், நூல் வேலைகளைக் கற்றுக் கொடுத்து,’கட்டினவன் கை விட்டாலும் கை வேலை என்னைக்கு கை விடாது டீ..எவன்கிட்டேயும் கை ஏந்த வேணாம்..கை சரியா இருக்கற வரை கைலே காசு வரும் டீ.’ என்று சுயமாக இருப்பது அவசியமானது என்று மகளின் மனத்தில் பதிய வைத்தார்.

விஷம் போல் ஏறிக் கொண்டிருந்த விலைவாசியில் ஜோதியின் வருமானம் சுவடே இல்லாமல் கரைந்து போனது. மனோகருக்கு கேம்பஸில் வேலை கிடைத்து விட்டால் அவனுக்காக செய்யும் உதிரிச் செலவுகள் காணாமல் போய் விடும் அதே சமயம் அவனுடைய சம்பளம் அவர்களுக்கு உதவியாக இருக்குமென்று கணவர், மனைவி இருவரும் கணக்கு போட்டு வைத்திருக்க, கேம்பஸில் மனோகருக்கு வேலை கிடைக்கவில்லை. இந்தத் திருப்பத்தை மனோகர் கூட எதிர்பார்க்கவில்லை. அவனுடைய எதிர்காலக் கனவு அதில் அடங்கியிருந்ததால் அவன் அடைந்த ஏமாற்றத்தை அவனுடைய பெற்றோர் அறியவில்லை. 

அவனது கனவு நிறைவேற எப்படியாவது ஒரு வேலையில் சேர்ந்து விடவேண்டுமென்று வேலை வேட்டையில் மும்முரமாக இறங்கினான் மனோகர். ஓர் இடத்தில் வேலையில் சேர சில லட்சங்கள் டெப்பாஸிட் தொகையாக தேவைப்பட, பாண்டியனிடம் பணம் வேண்டுமென மனோகர் கேட்க, தர முடியாதென்று மறுத்து விட்டார் பாண்டியன். ‘படிக்க வைக்க வேண்டியது தான் என் கடமை..அதுக்காக என் வேலையை விட்டேன்..ரிடையர்மெண்ட் பணத்திலே லட்சம் லட்சமா செலவழிச்சு உன்னைப் படிக்க வைச்சேன்..உன் படிப்புக்கு ஏத்த வேலையைத் தேடிக்க வேண்டியது உன்னோட வேலை..உன் சாமர்த்தியம்..

முதல் முதலா எனக்கு கிடைச்ச அரசாங்க வேலை கோர்ட் கேஸ்லே மாட்டிக்கிட்ட போது  நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா? வேலை கிடைச்சிடுங்கற தைரியத்திலே உங்கம்மாவை பரிசம் போட்டு வந்தேன்..அந்த வேலை எனக்கு கிடைக்கற மாதிரி இல்லைன்னவுடனே அவ வீட்லே அவளுக்கு எத்தனை மாப்பிள்ளை பார்த்தாங்க தெரியுமா? அவளை நான் விட்டுக் கொடுத்தேனா? இல்லை அவங்க வீட்லே சொன்ன மாதிரி தனியார் கம்பெனிலே வேலைக்கு போனேனா.. அரசாங்க வேலைக்கு தான் போவேன்னு ஒத்தைக் கால்லே நின்னேன்..எத்தனை பரீட்சை எழுதினேன் தெரியுமா? அந்த நேரத்திலே எல்லோரும் என்னை கேலி செய்தாங்க..யாருமே எனக்கு உதவி செய்யலை..நானா முயற்சி செய்து ஓர் அரசாங்க வேலையைத் தேடிக்கிட்டேனில்லே…அதுவும் மத்திய அரசு வேலை..நீயும் எல்லாப் பரீட்சையும் எழுது..நல்ல வேலை தேடிக்க..என்கிட்டேயிருந்து எதையும் எதிர்பார்க்காத..சினேகாவைப் படிக்க வைக்கணும்..அவ பன்னிரண்டாவது முடிச்சதும் ஊரோட போயிடப் போறேன்.” என்று அவரது முடிவைக் மனோகருக்குத் தெரியப்படுத்துவது போல் மொத்த குடும்பத்தினர்க்கும் தெரியப்படுத்தினார் பாண்டியன்.

ஒரு விதத்தில் மனோகருக்கு அந்த முடிவு பிடித்திருந்தது. அவனது எதிர்காலம் தில்லியில் தான் என்பதால்  தீவிரமாக வேலை தேட ஆரம்பித்தான். ஆரம்பத்திலேயே நல்ல வேலை எதுவும் கிடைக்காது என்ற அறிவு வர, கிடைத்த வேலையில் சேர்ந்தான். முதல் மாதச் சம்பளத்தில் தங்கையை அட்டா மார்கெட் (atta market, noida) அழைத்து சென்றான். அங்கே தான் ஷிக்காவை முதன் முதலாக சந்தித்தாள் சினேகா. அவளுடைய கஸினோடு வந்திருந்தாள் ஷிக்கா. சினேகாவைப் பார்த்து சின்னதாக புன்னகைத்ததோடு வேலை முடிந்தது போல் நடந்து கொண்டாள். அடுத்த வந்த நிமிடங்களில், மனோகரின் முதல் சம்பளத்தில், உரிமையாக, அவளுக்குப் பிடித்ததையெல்லாம் வாங்கிக் கொண்டவள் அவளுடைய கஸினுக்கும் வாங்கிக் கொடுத்தாள். 

ஷிக்கா எதை வாங்கினாள்? என்ன விலை என்று எந்த விவரத்தையும் மனத்தில் பதித்துக் கொள்ளும் நிலையில் சினேகா இல்லை. அண்ணனுக்கு கர்ல்ஃபிரண்டு இருக்கிறாள் அதுவும் பஞ்சாபி என்று உணர்ந்த போது அத்தனை கோவம் வந்தது அவளுக்கு. ‘உன்னை நினைச்சுக் கவலையா இருக்கு..’ என்று தினமும் ஆரம்பிக்கும் அம்மா,’கையில்லாத சட்டை, குட்டைப் பாவாடை, முக்கால் பேண்ட், நீச்சல் டிரெஸ்ஸுன்னு இங்கே இருக்கற பிள்ளைங்க போல பலதை பழகிக்கிட்டாலும் என்னைக்கும் நீ அவங்களாக முடியாது..அவங்களோட உன்னாலே ஒத்துப் போக முடியாது.’ என்று ஒரே மந்திரத்தை ஜபித்து அவள் மனத்திற்கு கடிவாளம் போட்ட அம்மா மீது ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. வீட்டிலிருந்து கிளம்பிய போது இருந்த உற்சாகம், சந்தோஷம் காணாமல் போனது. எனவே வீட்டிற்குத் திரும்புகையில் சினேகாவின் முகம் உர்ரென்று இருந்தது. 

அதைக் கவனிக்காமல், ஷிக்காவும் அவனும் எங்கே, எப்போது சந்தித்துக் கொண்டார்கள், எப்படிக் காதலைப் பரிமாறிக் கொண்டார்களென்ற விவரங்களை மனோகர் பகிர்ந்து கொள்ள முயல,’இதெல்லாம் அவளை எனக்கு அறிமுகப்படுத்தி வைக்கறத்துக்கு முன்னாடி என்கிட்டே சொல்லியிருக்கணும்..உன்னோட லைஃப்..உன்னோட இஷ்டம்..எனக்கு இண்ட்ரஸ்ட் இல்லை.’ என்று பதில் அளித்து அவளது மன முதிர்ச்சியை வெளியிட்டவள்,’எனக்கு எத்தனை அட்வைஸ் செய்தாங்க ..மனோகருக்கு ஒரு வார்த்தை செய்தாங்களா? இந்த விஷயம் தெரிய வரும் போது என்ன நடக்குதுன்னு பார்க்கறேன்.’ என்று சின்ன பிள்ளை போல் பழித் தீர்த்துக் கொள்ள நினைத்தவள், ஷிக்காவை பற்றி அம்மாவிடம் வாயைத் திறக்கக் கூடாதென்று முடிவு செய்தாள். 

தங்கையின் மனத்தில் இருப்பது தெரியாமல்,”சினேஹ், நீ ஊருக்குப் போகறத்துக்கு முன்னாடி உன்னை ஷிக்காக்கு அறிமுகப்படுத்தி, உன்னை அவளோட பிரண்டாக்க நினைச்சேன்…அவ கஸின் வந்ததாலே உனக்கு டைம் கிடைக்கலை..இன்னொரு நாள் அவளைத் தனியா வரச் சொல்றேன்..பேசிப் பார்..உனக்குப் பிடிக்கும்.” என்று சொன்னவன், அவனது தொனியை மாற்றிக் கொண்டு,”அம்மா, அப்பாக்கு இப்போ இந்த விஷயம் தெரிய வேணாம்.” என்று தங்கையிடம் கோரிக்கை வைத்தான்.

“என்னோட பிரண்ட்ஸை நான் தான் செலக்ட் செய்வேன்..வேற யாரும் செலக்ட் செய்ய முடியாது..உன் காதல் விஷயத்தை நீ தான் வீட்லே சொல்லணும்..நான் ஏன் சொல்லப் போறேன்?” என்று கேட்டு விட்டு அந்த விஷயத்திலிருந்து அவளை தள்ளி நிறுத்திக் கொண்டாள் சினேகா.

ஷிக்காவையும் சினேகாவையும் நண்பர்களாக்க மனோகர் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்ததால், சினேகாவைக் கன்வின்ஸ் செய்து அவளது உதவியோடு அவனது காதலை அம்மாவிற்குத் தெரியப்படுத்தி, கொஞ்சம் கொஞ்சமாக அவரது மனத்தை மாற்றி, நல்ல வேலையில் சேர்ந்த பிறகு, இரண்டு மூன்று வருடங்கள் நன்றாக சம்பாதித்த பின் குடும்பத்தினரின் சம்மதத்தோடு ஷிக்காவைத் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்தான். அதில் முதல் கட்டமே கொஞ்சம் எக்குதப்பாகிப் போக, அப்புறம் பார்த்துக் கொள்ளலாமென்று அவனது காதல் விஷயத்தைப் பற்றி அதற்கு பின் சினேகாவிடம் வாயைத் திறக்கவில்லை.

இதற்கிடையே சொந்த ஊரில் செட்டிலாக முடிவு எடுத்திருந்த பாண்டியன் இரண்டு மூன்று முறை அது விஷயமாக ஊருக்குச் சென்று வந்தார். சினேகா பனிரெண்டாவது வகுப்பில் இருந்ததால் அவருடன் ஜோதி போகவில்லை. அவனது வருங்காலம் தில்லியில் தான் என்பதால் அவன் அப்பாவோடு ஊருக்குச் செல்ல மனோகருக்கு விருப்பமிருக்கவில்லை. சொந்த உபயோகத்திற்கு வீடு பார்க்கப் போன கணவனின் மனத்தை கலைத்து, ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் முதலீடு செய்ய சிலர் முயற்சி செய்தது அவருடைய அண்ணன் சொல்லும் வரை ஜோதிக்குத் தெரியவில்லை. ஊரிலிருந்து திரும்பிய கணவரிடம் விவரம் கேட்ட போது,

‘நீ தானே நான் சும்மா இருக்கேன்னு சொல்லிட்டு இருந்தே..அதான் பிஸ்னஸ்மேன் ஆகலாம்னு முடிவெடுத்திருக்கேன்..வீட்டு மனைலே பணம் போடப் போறேன்..இப்போ அது தான் பிச்சுக்கிட்டு போற ஒரே வியாபாரம்..லட்சக் கணக்கிலே போட்டா கோடிக் கணக்கிலே சம்பாதிக்கலாம்..ஒரு வீடென்ன ஒன்பது வீடு வாங்கலாம்..பல கோடிக்கு அதிபதி ஆகலாம்..அதிலே முதலீடு செய்ய என் பெயர்லே இருக்கற பணம் மட்டும் போதாது..உன் பெயர்லே இருக்கறதையும் என் பெயருக்கு மாத்திக் கொடுத்திடு.” என்றார்.

ஜோதிக்கு கை, கால் விழுந்து போன நிலை தான். மகனிற்கு விஷயத்தைத் தெரியப்படுத்த, அப்பாவிற்கும் மகனிற்கும் பெரிய சண்டையானது. இறுதியில்,

’சம்பாதிக்க ஆர்மபிச்சதிலிருந்து வீட்டு செலவுக்குன்னு பணம் கொடுத்தேயா? உன் சம்பளப் பணத்தை நீ என்ன செய்யறேன்னு நான் கேட்டேனா? என் பணத்தைப் பற்றி நீ எப்படிக் கேட்கலாம்?’ என்று கேட்டு மகனின் வாயை அடைத்தார் பாண்டியன்.

‘காலம் போன காலத்திலே இந்த மனுஷன் இப்படியொரு வேலையைச் செய்யப் போறாரே..என்ன செய்யப் போறேன்? எப்படி இதை தடுத்து நிறுத்தப் போறேன்? வயசு வந்த பொண்ணைக் எப்படிக் கரையேத்த போறேன்?’ என்று ஜோதி மருகிக் கொண்டிருந்த போது மாரடைப்பில் பாண்டியன் நிரந்தரமாக அவர்களை விட்டு செல்ல, ஜோதியின் கவலைகளுக்குத் தற்காலிகத் தீர்வு கிடைத்தது.

*************

Chennai la Paris Corner, T nagar ranganathan street, Mumbai la crawford market, Delhi la Sarojini nagar market, Lajpat nagar market, Kolkata la burra bazar nnu middle class-ai market culture தான் mall culture kku  முன்னாடி ஆதிக்கம் செய்திட்டு இருந்தது. இப்போவும் இந்த மார்க்கெட்டெல்லாம் இருக்கு ஆனா ஜனங்க போறாங்களான்னு தெரியலை.

Advertisement