Advertisement

அத்தியாயம் – 6-1

அதன் முடிவில், “டேய், இதெல்லாம் சித்திக்கு தானா? எனக்குக் கிடையாதா?” என்று வசந்தி கேட்க,

“அம்மா இங்கே வந்திருக்காங்க அவங்களை அழைச்சிட்டுப் போய் வாங்கிக் கொடுத்தேன்..நீயும் இங்கே வா..உன்னையும் அழைச்சிட்டுப் போய் வாங்கிக் கொடுக்கறேன்.” என்றான் ஷண்முகம்.

அதற்கு,”அதெல்லாம் நடக்காது டா..மாமா வர மாட்டார்.” என்றாள் வசந்தி.

“ஃபோனை அவர்கிட்டே கொடு..நான் கூப்பிட்டா வர மாட்டேன்னு சொல்லிடுவாரா?” என்று கேட்க,

“நிஜமா தான் சொல்றியா டா..அவர்கிட்டே ஃபோனை கொடுக்கவா?” என்று சந்தேகமாகக் கேட்டாள் வசந்தி.

“நிஜம் தான் க்கா..இப்போவே உனக்கும் மாமாக்கும் டிக்கெட் போட்டு அனுப்பறேன்..அப்புறம் எப்படி வரமா இருப்பார்னு பாக்கறேன்.” என்று சவால் விட்டான் ஷண்முகம்.

“சாமி, இப்படி அடாவடியாப் பேசக் கூடாது..நல்லபடியா பேசணும்..அக்காவை அழைச்சிட்டு ஒருமுறை என் வீட்டுக்கு வந்து போங்க மாமான்னு சொல்லணும்.” என்றார் விஜயா.

‘என் வீடா நம்ம வீடில்லையா?’ என்று கேட்க நினைத்தவன் அந்தக் கேள்வியைக் கேட்கவில்லை. சில வாரங்கள், மாதங்களில் நிகழக் கூடிய மாற்றமில்லை அது என்பதால் விஜயா சொன்னபடி பவ்யமாக வெங்கடேஷை அவன் வீட்டிற்கு அழைத்து விட்டு அழைப்பைத் துண்டித்தவனிடம்,

“சாமி, அப்படியே ஜெயந்தி வீட்டுக்காரருக்கு ஃபோனை போட்டு அவரையும் வீட்டுக்குக் கூப்பிடு.” என்று கட்டளையிட்டார் விஜயா.

“இப்போவே எதுக்கு ம்மா? அவ பிள்ளை ஸ்கூல் போகறான்..அவனுக்கு லீவ் இருக்கும் போது தான் அவளாலே வர முடியும்..முதல்லே வசந்தி அக்கா வந்து போகட்டும் அப்புறமா ஜெயந்தியைக் கூப்பிடலாம்.” என்றான் குடும்ப அரசியலைப் பற்றி அறிவு, அனுபவம் இல்லாத ஷண்முகம். 

“சாமி, இந்த விஷயமெல்லாம் உங்களுக்குப் புரியாது..சொன்னதை செய்யுங்க.” என்று விஜயா கட்டளையிட, ஷண்முகம் காதில் போட்டுக் கொள்ளவில்லை. வீடு போய் சேருவதற்குள் ஜெயந்தியே அழைத்து விடுவாளென்பதால் அதற்கு மேல் மகனிடம் தர்க்கம் செய்யவில்லை விஜயா. 

வீடு வந்து சேர்ந்ததும் சினேகா முதலில் சென்றது குளியலறைக்கு தான்.  கைப்பை, பையை திவான் மீது விட்டெறிந்து விட்டு பாத்ரூமிற்குள் நுழைந்து கொண்டாள். வீட்டுக் கதவைத் திறந்த ஜோதிக்கு மகளைப் பார்த்ததுமே நீச்சல் குளத்திற்குச் சென்றிருக்கிறாள் என்று புரிந்து விட்டது. பாத்ரூம் வாயிலில் நின்று கொண்டு,

“எதுக்கு இன்னைக்கும் தண்ணிகுள்ளே போன? பிள்ளைக்கு உடம்பு சரியில்லைன்னு தெரியுமில்லே…ஏற்கனவே அவ கஷ்டப்பட்டிடு இருக்கான்னு உன் அண்ணன் கத்திட்டு இருக்கான்..இன்னைக்கு நீ செய்த வேலைக்கு என்ன செய்யப் போறோனோ?” என்று கத்தினார்.

“மாண்ட்டி எங்கே என்கிட்டே இருக்கான்? அம்மா தான் வேணும்னு அழறான்.” உள்ளேயிருந்து பதில் அளித்தாள் சினேகா.

“இரண்டு வயசு பிள்ளை வேற எப்படி இருக்கும்? அம்மாவைத் தான் தேடும்.” என்றார் ஜோதி.

“நீங்க எதுக்கு அவளுக்கு ஃபோன் போட்டீங்க? எனக்கு அவளுக்குன்னு மாத்தி மாத்தி நீங்க கூப்பிட்டவுடனேயே நான் கிளம்பிடுவேன்னு அவளுக்கு புரிஞ்சிடுச்சு…கோவம் வந்திடுச்சு..இராத்திரிக்கு சாப்பாடு செய்து வைப்பேன்னு எதிர்பார்த்திருக்கா.” என்றாள் சினேகா.

“ஏழரை மணி டீ..அதுக்கு மேலே சமைச்சு வைக்கணும்னு எதிர்பார்க்கறாளா? நானெல்லாம் பாஷை தெரியாத ஊர்லே வெய்யிலேயும் குளிர்லேயும் உங்க இரண்டு பேரையும் வளர்க்கலை..டாக்டர் வீட்டுக்கு அழைச்சிட்டுப் போகக்கூட உங்கப்பாக்கு நேரமிருக்காது..இன்னைக்கு இந்த மனோ ஃபோன் செய்யட்டும்..இருக்கு அவனுக்கு..தங்கச்சியைப் பொறுப்பா வீட்டுக்குக் கொண்டு வந்து விடாம தனியா அனுப்பி விட்டிருக்கான்.” என்று மகன் மீது கோபம் கொண்டார் ஜோதி.

“நல்லவேளை நான் கிளம்பற வரை அவன் வீட்டுக்கு வரலை ம்மா..அவன் வந்திருந்தா கண்டிப்பா எதையாவது செய்து வைச்சிட்டுப் போன்னு கழுத்திலே கத்தி வைச்சிருப்பான்.. உன்னைக் கொண்டு விடறேன்னு தாஜா செய்திருப்பான்…அதான் ஓடி வந்திட்டேன்..அங்கே குளிக்க கூட எனக்கு நேரம் கிடைக்கலை..புதுசா ஒரு தமிழ் கஸ்டமர்..அவங்களோடவே நேரம் போயிருச்சு.” என்று மூஞ்சியில் சோப்பைத் தேய்த்துக் கொண்டு பதிலளிக்க, ஜோதிக்கு புரியவில்லை.

“என்ன சொல்ற?” என்று அவர் சத்தமாகக் கேட்க,

“குளிச்சிட்டு வந்து சொல்றேன்.” என்று பதில் அளித்தாள் சினேகா. ஆனால் அதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. குளியலறையிலிருந்து  வெளியே வந்தவளிடம் அவளுடைய கைப்பேசியைத் திணித்தார் ஜோதி. அவள் பேசுவதற்கு அவகாசம் கொடுக்காமல்,”மாண்ட்டியோட ஷிக்காக்கு சரியா இருக்குதுன்னு தெரியுமில்லே..சமைச்சு வைச்சிட்டுப் போக முடியாதா உன்னாலே? உன்னைத் தனியா அனுப்பிட்டேன் அம்மா கத்தறாங்க..மதியம் ஷிஃப்ட்லே போனவன் எத்தனை மணிக்கு வருவான்னு உனக்கு தெரியாதா?” என்று அவன் பங்குக்கு கத்தித் தீர்க்க, இறுதியில்,

”டேய் உன் பொண்டாட்டிகிட்டே சொல்லி வை..அடுத்தமுறை இந்த மாதிரி உன்கிட்டே பத்த வைச்சான்னா இட்லி, தோசை பந்தாகிடும்னு.” என்ற சினேகாவின் கத்தலில் அடங்கிப் போனவன் அழைப்பைத் துண்டித்தான்.

அண்ணன், தங்கையின் சண்டையைக் கேட்டு ஜோதிக்கு அச்சம் ஏற்பட்டது. என்ன இருந்தாலும் அவன் ஒருவன் தானே அவர்களுக்கு இருக்கிறான் என்பதால்,“என்ன டீ அவன்கிட்டேயே அடாவடியா பேசற?” என்று மகளைக் கடிந்து கொண்டார்.

அப்பாவின் மறைவிற்கு பின், மனோகரின் காதல் திருமணம், தனிக்குடித்தனம் என்று குடும்பத்தின் பெரிய நிகழ்வுகளைத் தனியாக சந்தித்திருந்ததால் குடும்ப அரசியலில் அன்பு, அடாவடி, அதிகாரம் அனைத்திற்கும் இடமிருக்கிறது என்ற அறிவு, அனுபவம் வந்திருந்தது சினேகாவிற்கு. எனவே, 

”இப்போ அவன்கிட்டே அடங்கிப் போனா தினமும் இராத்திரி டிஃபன் செய்து வைச்சிட்டுப் போன்னு ஆர்டர் போடுவான்..அடுத்த வாரத்திலிருந்து பழையபடி ஆபிஸ் போகணும்..பெண்டிங் வேலையை முடிக்கணும்..நான் திரும்பி வர எப்படியும் ஏழு மணி ஆகிடும்..என்னாலே கடைக்கு கூட நேரம் ஒதுக்க முடியாது..சொல்லிட்டு செய்யலைன்னா அதுக்கும் ஒரு சண்டை போடுவான்..

நம்ம சௌகர்யத்தைக் கேட்க மாட்டான் பார்க்க மாட்டான் உங்க பிள்ளை..நாம தான் பார்த்துக்கணும்..ஒரு ஞாயிற்றுக் கிழமை காலைலே போய் இட்லி குருமாலே ஆரம்பிச்சு இராத்திரி பராண்ட்டா வரை செய்து கொடுங்க..நான் நாள் முழுக்க கடையைப் பார்த்துக்கறேன்..இப்போ பேசினதெல்லாம் அவனுக்கு மறந்திடும் திரும்ப கணக்கெல்லாம் சரியாகிடும்..அவனுக்கு கல்யாணம் ஆனதிலிருந்து இதுதானே நடந்திட்டு இருக்கு.” என்று சினேகா நடப்பை சொல்ல அதை மறுத்துப் பேச முடியாமல் அமைதியாகிப் போனார் ஜோதி.

அவனருகே அமைதியாக அமர்ந்திருந்த அம்மாவையும் கைப்பேசி திரையில் தெரிந்த ஜெயந்தி அக்காவையும் மாறி மாறிப் பார்த்தான் ஷண்முகம்.“என்ன டா என்னை உன் வீட்டுக்குக் கூப்பிட மாட்டேயா? வசந்தியை தான் கூப்பிடுவேயா?” என்று மீண்டும் ஜெயந்தி வினவ, அதற்கு,

“அப்படியெல்லாம் இல்லை கண்ணு..வெங்கடேஷ் மாப்பிள்ளையோடு பேசிட்டு இருந்தான்..அப்படியே ஒருமுறை தில்லிக்கு வாங்கண்ணு கூப்பிட்டான்..அவ்வளவுதான்” என்று ஜெயந்தியைச் சமாதானம் செய்தார் விஜயா.

வீட்டிற்குள் நுழைந்ததுமே ஷண்முகத்தை அழைத்து விட்டாள் ஜெயந்தி. வசந்தியை மட்டும் அவன் வீட்டிற்கு அழைத்திருந்ததை கேள்விப்பட்டு பயங்கரக் கடுப்பில் இருந்தாள். ஏற்கனவே சித்தி மீது கோபமாக இருந்ததால்,

“நான் உங்ககிட்டே பேச விரும்பலை சித்தி..’உங்களுக்கு தில்லியெல்லாம் ஒத்து வராது….தம்பியும் அடிக்கடி வெளியூர் போயிடுவான்..என் வீட்டுக்கு வந்திடுங்கண்ணு’ நான் உங்களைக் கூப்பிட்ட மாதிரி அவ கூப்பிட்டாளா? ஆனா அவளைத் தான் தம்பி அவன் வீட்டுக்குக் கூப்பிட்டிருக்கான்..அது கூட பிரச்சனை இல்லை.” என்று. சொன்னதைக் கேட்டு அதற்கு தானே அழைத்திருக்கிறாளென்று மனத்தில் தோன்றியதை வெளியிடாமல் அக்காவின் பேச்சைக் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தான் ஷண்முகம்.

“அவ சொல்றத்துக்கு முன்னாடி நீங்க தானே சித்தி எனக்கு விஷயத்தைச் சொல்லியிருக்கணும்..உங்க எல்லோருக்கும் எப்போதும் அவ தான் பாவம்..நான் பாவமில்லையா சித்தி?” என்று கொதிப்பில் ஆரம்பித்து அழுகையில் முடித்தாள் ஜெயந்தி. 

ஜெயந்தி அக்கா அழுவதை குழப்பத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான் ஷண்முகம். ‘வசந்திக்கும் அவளுக்கும் இடையே உறவு சரியில்லை’ என்று அவனுக்கு ஐடியா இருக்கவில்லை. வீட்டு நடப்புக்களில்  அவன் ஆர்வம் காட்டியதில்லை. பெரியம்மா, மாமா இருவரின் வீட்டு உள் விவகாரங்களை அம்மாவும் பகிர்ந்து கொண்டதில்லை.‘வசந்தி அக்காக்கு குழந்தை இல்லை, மாமாவோட குணமும் சரியில்லைன்னு கொஞ்சம் எக்ஸ்ட்ராவா செய்யறது பேசறது ஏன் தப்பா தெரியுது’ என்று அவனுக்குப் புரியவில்லை. அந்தப் பாதையில் அவள் செல்வது சரியில்லை என்று தோன்ற,

“இப்போ தானே க்கா வீடு எடுத்திருக்கேன்..அம்மாவும் வந்து கொஞ்ச நாள் தானே ஆகியிருக்கு..இனி தான் நீங்க எல்லோரும் வரணும்..வசந்தி அக்கா இங்கே வர்றதைப் பற்றி நீ எதுக்கு யோசிக்கற..நீ உன்னைப் பற்றி யோசி..நீ, மாமா, சித்து மூணு பேரும் தசரா லீவ் இல்லை கிறிஸ்மஸ் லீவுக்கு வாங்க..கஷ்மீர் கூட அழைச்சிட்டு போறேன்.” என்று சகோதரனாக ஷண்முகம் பேச, ஜெயந்தியின் முகம் சந்தோஷத்தில் விகசித்தது. 

“சித்தி, என் தம்பி உனக்கு சுடிதாரெல்லாம் வாங்கிக் கொடுத்திருக்கானாம்..வசந்தி சொன்னா..எனக்கெல்லாம் வாங்கித் தரமாட்டானா” என்று மீண்டும் வசந்தியை வைத்து உரையாடல் தொடர, அவனுக்கு புரியாதென்று அம்மா சொன்னது இப்போது மகனுக்குப் புரிய, பரிதாப முகத்துடன் அவரை அவன் நோக்க, பார்வையாலேயே ‘நான் பார்த்துக்கறேன்’ என்று ஷண்முகவேலிற்கு தைரியம் அளித்தார் விஜயலக்ஷ்மி.

Advertisement