Advertisement

அத்தியாயம் – 06

அடுத்த சில நிமிடங்களில் அவனது உரையாடலை முடித்துக் கொண்டு கடைக்கு வந்த ஷண்முகம் உடைகளுக்கான பில் பணத்தைக் கட்டினான். மந்தீப்பை நாற்காலியில் உட்கார வைத்து விட்டு, சிரித்த முகத்துடன் பணத்தை வாங்கிக் கொண்டு கவரை விஜயாவின் கையில் கொடுத்து அவர்களை வழி அனுப்பி வைத்தாள் ஷிக்கா. அம்மா, மகன் இருவரும் பிரதானச் சாலையை அடைந்த போது அவர்கள் அருகில் தோன்றிய ஷர்மா,

“அனிஷுக்கு ஃபோன் செய்திட்டேன்..வந்திட்டிருக்கான்.” என்று ஷண்முகத்திடம் தெரிவித்தார்.

“நீங்க எப்படி வந்தீங்க?” என்று அவரை விசாரித்தான்.

“வண்டிலே தான்.” என்றார்.

“சரி..எங்களோட வந்திடுங்க..உங்களை இறக்கி விட்டிட்டு நாங்க போகறோம்.” என்றான்.

“இல்லை..இல்லை..நீங்க எதிர் திசைலே போகணும்..நான் போய்க்கறேன்..” என்று மறுத்தார் ஷர்மா.

அவர் சொல்வது போல் இந்த நேரத்தில் அவரை இறக்கி விடச் சென்றால் டிராஃபிக்கில் மாட்டிக் கொள்வர்கள் என்பதால் “அப்போ நீங்க கிளம்புங்க.” என்றான் ஷண்முகம்.

“இல்லை ஸர்..அனிஷ் வந்திடட்டும்..” என்று ஷர்மா சொல்ல,

“கிளம்புங்க ஷர்மா.” என்று அவன் கட்டளையிட,

அந்தக் கட்டளைக்கு அடிபணிந்து ஷண்முகத்திடம் விடைபெற்றுக் கொண்டு சென்று விட்டார் ஷர்மா. 

சில நிமிடங்கள் கழித்து அவர்கள் இருக்குமிடம் வண்டி வந்து நிற்க, கதவைத் திறக்கும் முன்னரே, வண்டியினுள் எட்டிப் பார்த்த விஜயா,”சாமி, என் கைப்பே இங்கே தான் இருக்கு..மன்னிச்சிடு ப்பா..இனிமேல் கவனமா இருப்பேன்.” என்றார்.

கைப்பையை வண்டியில் வைத்து விட்டு வந்ததை உணராமல் இருந்த அம்மா மீது இப்போதும் லேசாக கோவம் வந்தாலும் அவர் மன்னிப்பு கேட்டதும் அவர் மீது அன்பு பெருகியது மகனிற்கு. இதுவரை இப்படி ஒரு சூழ்நிலையைச் சந்தித்திராதவர். தனியாக வெளியே சென்று  பழக்கமில்லாதவர் இன்று அவனில்லாமல் துணிக் கடைக்கு சென்றதே பெரிய விஷயமென்பதால் அமைதியாக இருந்தான். சென்னையில் வெளி வேலைகளைச் செய்ய ஆள்கள் இருந்தனர். அப்படியே எங்கேயாவது வெளியே செல்ல வேண்டுமானால் செல்ல குடும்பமாக தான் செல்வார்கள். 

பெரியம்மா வீட்டில் அம்மா இருந்தால் அக்காக்கள் ஜெயந்தி, வசந்தி, தங்கை சிந்து மூன்று பேரும் அம்மாவை வெளியே அழைத்துச் செல்வது வழக்கம்.. அவனுக்கு தெரிந்த வரை பெரியம்மா கூட தனியாக எங்கேயும் சென்றிருக்க மாட்டார். பெரியப்பாவோடு தான் செல்வார். 

அவனுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து இப்போது தான் முதல்முறையாக பெரியம்மாவின் வீடு மூடிக் கிடக்கிறது. தினமும் குறந்தபட்சம் அரை டஜன் ஆள்களுக்கு சமையல் செய்து பழக்கப்பட்டிருந்த அம்மாவை, பண்டிகை நாள்களில் ஒரு டஜன் குடும்பத்தினரோடு வெளியே சென்று பழக்கப்பட்டிருந்த அம்மாவைத் தில்லிக்கு அழைத்து வந்து, பாஷை தெரியாத ஊரில், தனியாக இருக்க பழகிக் கொள்ள வேண்டும், தனியாகக் கடைக்குச் செல்ல வேண்டுமென்ற அவனது எதிர்பார்ப்பு நியாயமில்லை என்று புரிந்தாலும், யாரையும் சார்ந்து இல்லாமல் இருக்க அவருக்குக் கற்றுக் கொடுக்க வேண்டுமென்ற ஆசை, எண்ணம் அவனுள் உதித்திருந்தது. 

இந்த முயற்சியை சில வருடங்களுக்கு முன்னர், அதாவது தில்லிக்கு வரும் முன்னர் எடுக்க அவனுக்கு ஆசை இருந்தாலும் அவனுடைய அம்மாவிற்கு விருப்பம் இருக்கவில்லை. இப்போது கூட அவனோடு இருப்பதை விட மாமாவின் வீட்டில், அவருடைய பெரிய மகன், மருமகளோடு இருக்கத் தான் அவர் விரும்பினார். ஏதோ ஒரு பலவீனமான நொடியில் தில்லிக்கு அழைத்துச் செல்லும்படி அவர் சொன்னதை பலமாக அவன் பிடித்துக் கொள்வான் என்று அவன் குடும்பத்தினரும் கூட எதிர்பார்க்கவில்லை. 

அவரது கைப்பேசியை உயிர்ப்பித்த விஜயா,“சாமி, வசந்தி நிறைய முறை அழைச்சிருக்கு..உனக்கும் ஃபோன் போட்டிருக்காளா?” என்று ஷண்முகத்தின் சிந்தனையைக் கலைத்தார்.

“இல்லை ம்மா..இப்போ தானே ஆபிஸ் விஷயமா ஃபோன் பேசிட்டிருந்தேன்.” என்று சொன்னவன், ஷர்ட் பேக்கெட்டில் இருந்த கைப்பேசியை எடுத்துப் பார்க்க, வசந்தி அக்காவிடமிருந்து எந்த அழைப்புமில்லை.

“இத்தனை முறை கூப்பிட்டிருக்கு பிள்ளை..என்னென்னு தெரியலையே.” என்று விஜயா கவலைப்பட,

“நீங்க கூப்பிட்டு பேசுங்க ம்மா.” என்றான் ஷண்முகம்.

“அப்படி உடனே செய்ய முடியாது சாமி..அவ புருஷன் ஒரு மாதிரி..சில சமயம் வாய் வலிக்க சிரிச்சு பேசுவார்..சில சமயம் வாய்க்கு வலிக்கும்னு பேசாம இருப்பார்னு அக்கா சொல்லும்.” என்றார்.

இந்த விவரம் ஷண்முகத்திற்கு தெரியவில்லை. யாரும் அவனிடம் சொல்லவில்லை. வசந்தி அக்காவின் திருமணத்திற்கு பின் அவளது  வீட்டிற்கு ஒரேயொருமுறை தான் சென்றிருக்கிறான் அதுவும் கிட்டதட்ட ஒன்பது வருடங்களுக்கு முன். ஜெயந்தி அக்காவின் வீட்டிற்கு இரண்டு, மூன்று முறை சென்றிருக்கிறான். ஜெயந்தி அக்காவின் மகன் சித்து பிறந்த போது ஒருமுறை. அவனுக்கு மொட்டை போட்ட போது இவன் தான் மாமா ஸ்தானத்தில் செய்முறைகளைச் செய்தான். வசந்தி அக்காவிற்கு குழந்தை இல்லை. இப்போது அவர்களின் தங்கை, பெரியம்மா வீட்டின் கடைக்குட்டி சிந்து கருவுற்றிருந்தாள். 

“நீங்க அக்காகிட்டே தானே பேசப் போறீங்க..அவருக்கு என்ன வந்திச்சு?” என்று கேட்டான் ஷண்முகம்.

“அவளைப் ஃப்ரீயா பேச விட மாட்டார் சாமி..அப்போ தான் ஏதாவது வேலையைச் சொல்லி தொந்தரவு கொடுப்பார்…அதனால் தான் பிள்ளையை நம்ம வீட்டுக்கு வரச் சொல்லிடுவோம்..ஒரு பாட்டம் எல்லாத்தையும் கொட்டும்..சில சமயம் அக்காவும் மனசு கஷ்டத்திலே,’நீ வாங்கிட்டு வந்த வரம் அப்படின்னு’ அவளை ஏதாவது சொல்லிடுவாங்க..இன்னைக்கு கூட கிருஷணர்கிட்டே அவளுக்காக தான் வேண்டிக்கிட்டேன் சாமி..ஜெயந்திக்கும் சிந்துக்கும் கொடுத்தது போல அவளுக்கும் ஒரு புள்ளையைக் கொடுன்னு..அந்தப் பிள்ளை வந்து தான் அவளுக்கு சந்தோஷத்தைக் கொடுக்கணும்..எனக்கு நீ கொடுத்தது போல சாமி.” என்றார் விஜயா. 

இது எப்போதும் அவனுடைய அம்மாவின் உடன்பிறப்புக்கள் சொல்வது தான். அவன் தான் அவனுடைய அம்மாவின் ஒரே சந்தோஷமென்று. இன்று அவனுடைய அம்மாவே அதை நேரடியாக அவனிடம் சொல்கிறார். அதற்கு எந்த எதிர்வினையும் ஆற்றாமல் அமைதியாக அமர்ந்திருந்தவன் அவனது கைப்பேசியை எடுத்து வசந்தி அக்காவின் கணவன் வெங்கடேஷிற்கு அழைப்பு விடுத்தான். 

அது தெரியாமல் வசந்தியைப் பற்றிய கவலையில்,”சாமி, அக்கா ஏதாவது சொல்லியிருக்குமா? அவளுக்கு ஃபோன் போட்டு விசாரிக்கட்டுமா?” என்று வினவ,

“வெங்கடேஷ் மாமாக்கு வீடியோ கால் போட்டிருக்கேன்..ரிங்க் போகுது..அவர்கிட்டேயே கேளுங்க.” என்று ஷண்முகம் சொல்ல, அதைக் கேட்டு அதிர்ச்சியானவர்,”சாமி, நான் மாப்பிள்ளைகிட்டே நேரடியா பேசினதேயில்லை.” என்றார்.

“நான் பேசறேன்.” என்று அவன் பதில் அளிக்க,

”வேணாம் சாமி..கட் பண்ணுங்க..இதையெல்லாம் இப்படிச் செய்யக் கூடாது.” என்று விஜயா சொல்ல, 

“நீங்க தானே ம்மா வசந்தி அக்காவைப் பற்றி கவலைப்பட்டீங்க..அதான் ஃபோன் போட்டேன்.” என்று சொல்லி விட்டு விஜயா சொன்னபடி அழைப்பைத் துண்டித்தான் ஷண்முகம்.

“ஆமாம் சாமி..கவலை தான்..அக்கா வேற இங்கே இல்லை..வசந்தி எதுக்கு ஃபோன் செய்தான்னு யோசனை செய்ததை வாய் விட்டுச் சொல்லிட்டேன்..நல்லவேளை அவர் உன்னோட அழைப்பை எடுக்கலை..எடுத்திருந்தா எங்கே போய் முடிஞ்சிருக்குமோ.” என்று விஜயா ஆசுவாசமடைந்த நொடி வசந்தியின் கணவன் வெங்கடேஷிடமிருந்து அழைப்பு வர, 

“அம்மா, வெங்கடேஷ் மாமா” என்று விஜயாவிடம் சொல்லி விட்டு, சிரித்த முகத்துடன்,”மாமா, எப்படி இருக்கீங்க? மேட்ச் பார்த்திட்டு இருக்கீங்க போல.” என்று அடிக்கடி பேசுவது போல் சகஜமாக உரையாடிய மகனை ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தார் விஜயா.

“ஆமாம் மாப்பிள்ளை..நீ எப்படி இருக்க? சின்னத்தை எப்படி இருக்காங்க? வீடெல்லாம் சௌகர்யமா இருக்குதா? அவங்கிட்டேயிருந்து ஒரு தகவலும் வரலை..பிஸியா?” என்று வெங்கடேஷ் விசாரிக்க,

“நான் நல்லா இருக்கேன்..அம்மாவும் நல்லா இருக்காங்க..மூணாவது மாடிலே வீடு கிடைச்சிருக்கு…வீடு செட் செய்யற வேலைலே கொஞ்சம் பிஸியா இருந்தாங்க..அம்மாக்கு இங்கே கஷ்டமா தான் இருக்கு..நீங்கெல்லாம் இல்லையில்லே அதான்.” என்று சொல்லி சிரித்தவன், அதே தொனியில்,”அக்காகிட்டே கொடுங்க..அம்மா பேசணும்னு சொன்னாங்க…அதான் ஃபோன் செய்தேன்.” என்றான். 

சில நொடிகள் கழித்து திரையில் தெரிந்த வசந்தி,”இங்கே ஒரே சத்தமா இருக்கு டா ஷண்முகம்..என் ரூமுக்கு போறேன்.” என்று சொல்லி விட்டு கைப்பேசியோடு அவளது அறைக்குச் சென்று அவள் கதவைச் சாத்தியவுடன்,

“உன்கிட்டேயிருந்து அத்தனை ஃபோன் காலைப் பார்த்து அம்மா பயந்து போயிட்டாங்க க்கா.” என்றான் ஷண்முகம்.

அதற்கு பதில் சொல்லாமல் மௌனமாக கைப்பேசி திரையைப் பார்த்துக் கொண்டிருந்த வசந்தியை யோசனையோடு பார்த்தான் ஷண்முகம். 

அவனிடமிருந்து  கைப்பேசியை வாங்கிய விஜயா,”என்ன ஆச்சு கண்ணு?” என்று விசாரிக்க, வசந்தியின் கண்கள் குளமாகின.

அதைப் பார்த்து பதற்றமடைந்த விஜயா,”என்ன ம்மா? என்ன ஆச்சு? அக்கா ஏதாச்சும் சொன்னாளா?” என்று விசாரிக்க,

“எதையாச்சும் சொல்றத்துக்கு என்கிட்டே யார் பேசினாங்க? வெளி நாட்டுக்குப் போனதிலிருந்து வசந்தின்னு ஒருத்தி இருக்கேங்கறதையே உங்கக்கா மறந்திட்டாங்க..நீங்க மட்டும் என்ன செய்தீங்க? நம்ம நாட்டிலேயே இருந்திட்டு  பேசினீங்களா என்கிட்டே? நானே தானே உங்களுக்கு ஃபோன் செய்தேன்..ஒரு தடவை கூட நீங்க என் அழைப்பை ஏற்கலை.” என்று விஜயாவைக் கோபித்துக் கொண்டாள் வசந்தி.

“ஐயோ கண்ணு..ஃபோனை கார்லே விட்டிட்டு கடைக்குப் போயிட்டேன்..அதான் உன் அழைப்பை எடுக்க முடியலை..எனக்கு நேரம் கிடைச்சாலும் நினைச்ச போது உன்கிட்டே பேச முடியாதே கண்ணு அதான் உனக்கு ஃபோன் செய்யலை..அக்காவும் என்கிட்டே பேசலை கண்ணு..ஜெயந்திக்கு என் மேலே கோவம்..’எதுக்கு நீங்க தில்லி போகணும் என் வீட்லே வந்து இருங்கண்ணு’ சண்டை போட்டா..உனக்கு எல்லாம் தெரியும் தானே கண்ணு..’நான் வரலை டா..இங்கேயே இருந்தக்கறேன்’ நு சாமிகிட்டே சொன்னேன்..அவன் கோவிச்சுக்கிட்டான்..’நீங்க வந்து தான் ஆகணும்..வீடெல்லாம் பார்த்திட்டேன்..சாமானெல்லாம் வாங்கிப் போட்டிட்டேன்னு’ சொல்லிட்டான்..

‘வீடு பார்த்து வைச்சது நல்லது தான் சாமி..சிந்து பிரசவம் முடிஞ்சு அக்கா வந்ததும் நாங்கெல்லாம் சேர்ந்து வரோம்னு’ சொன்னேன்..எங்கே என் பேச்சைக் கேட்டான்..அவன் என் பேச்சை கேட்கறதேயில்லை கண்ணு..சின்ன டிஃபன் பாக்ஸ்லே ஆபிஸுக்கு டிபன் கொடுங்கண்ணு சொல்றான்..நம்ம சித்து கூட அதை விட பெரிய டிபன் பாக்ஸ் எடுத்திட்டு போறான்..இப்போ என்னைக் கடைக்கு கூட்டிட்டு போய் சுடிதார் வாங்கிக் கொடுத்திருக்கான்..அதைத் தான் போட்டுக்கணும்னு பிடிவாதம் பிடிக்கறான்.” என்று விஜயா அவரது தில்லி வாழ்க்கையைப் பற்றி பகிர்ந்து கொள்ள, அடுத்து வந்த நிமிடங்கள் சுடிதாரில் விஜயா எப்படி இருப்பார் என்ற ஆனந்தமான சர்ச்சையில் சென்றது. 

Advertisement