Advertisement

அத்தியாயம் – 5

அப்போது,“நல்லவேளை நீ வந்திட்ட சாமி, எதை எடுக்கறதுன்னு எனக்கு ஒரே குழப்பமா இருக்கு..இதெல்லாம்..” என்று விஜயா சொல்ல, உடனே தரம் வாரியாக, விலை வாரியாக துணிகளைப் பிரித்து, அதன் சிறப்பை வாசித்தாள் அந்த இளம் பெண்.

அதைக் கேட்ட பின் விஜயாவைப் போல ஷண்முகமும் குழப்பத்தில் இருக்க,”சின்ன டிசைன்ஸ் உங்களுக்கு நல்லா இருக்கும் ஆன்ட்டி..இந்தக் கலர் பாருங்க.’ என்று சிகப்பு, நீல நிறத்தில் சில செட்டுகளை தனியாக எடுத்து வைத்தாள்.

சிகப்பு நிறத்தைப் பார்த்தவுடன்,”எனக்கு சிகப்பு, நீலமெல்லாம் வேணாம் கண்ணு.” என்றார் விஜயா.

அவரது பிடித்தமின்மை எதனால் என்று புரிந்து கொண்டவள்,”சிகப்பா இருக்கறவங்க தான் சிகப்பு உடுத்தணும்னு இல்லை ஆன்ட்டி.. என்னை மாதிரி உங்களை மாதிரி இருக்கறவங்களும் சிகப்பு உடுத்தலாம்..நீங்க ஒரு விதமான கறுப்பு நான் இன்னொரு விதமான கறுப்பு..அது போல சிகப்புலேயும் நிறைய விதம் இருக்கு..உங்களுக்கு ஸுட் ஆகற மாதிரி தான் எடுத்துப் போட்டிருக்கேன்.” என்று சொன்னவள், ஒரு சிகப்பு துணியை கையில் எடுத்து,

“உங்க நிறத்துக்கு இதைப் போட்டுக்கிட்டா நல்லா இருக்கும்..ஆனா எனக்கு நல்லா இருக்காது.” என்று சொல்லியவள் அவரது கையைப் பற்றி, மணிக்கட்டில் தெரிந்த ரத்த நாளங்களின் (vein) நிறத்தை ஊற்று பார்த்து,”நீங்க வார்ம் அண்டர்டோன் (warm undertone)..உங்களுக்கு செங்கல் கலர், செர்ரி ரெட் பொருத்தமா இருக்கும்..துணியை உங்க மேலே வைச்சுப் பாருங்க..நான் சொல்றது சரின்னு புரியும்.” என்று விஜயாவிடம் அந்தத் துணியைக் கொடுக்க, அதை வாங்கிக் கொள்ள அவர் தயங்க,”இருங்க நான் அந்த சைட் வரேன்.” என்று கௌண்டரை விட்டு வெளியே வந்தாள்.

அடுத்து வந்த நிமிடங்களில் சிகப்பு, நீலம், பிரௌன், பிங்க் நிறங்களில் பல விதமான ஷேட்களில், நல்ல டிசைனகளில் விஜயாவிற்குப் பொருத்தமான சல்வார் செட்டை அவர் மீது வைத்துப் பார்த்து, அவருக்குத் திருப்தியாக இருந்தவற்றைத் தனியாக எடுத்து வைத்தாள். எத்தனை என்று கணக்கு வைத்துக் கொண்டிருந்த விஜயா, எண்ணிக்கை ஆறைத் தொட்டவுடன்,

“எதுக்கு சாமி இவ்வளவு? இரண்டு போதும்.” என்றார்.

அதற்கு, ”ஷ்ஷ்” என்று அவரை அடக்கியவன், அவனுடைய அம்மா அருகே நின்றிருந்தவளிடம்,”இன்னும் இருக்கா? என்று கேட்க, 

“இல்லை ஸர்..அவ்வளவு தான்.” என்றாள்

“எல்லாத்தையும் பில் செய்யுங்க.” என்றான்.

“ஓகே ஸர்.” என்று புன்னகையோடு அவனுக்கு பதில் அளித்தவள், தேர்ந்தெடுத்த துணிகளோடு பில் போடும் இடத்திற்கு நகர்ந்தாள்.

அவளது கைப்பேசியை மேஜை மீது வைத்து விட்டு, பில் புத்தக்கத்தை திறந்து,”உங்க பெயர், ஃபோன் நம்பர் சொல்லுங்க ஆன்ட்டி.” என்று அவள் சொல்ல,

அதைக் கேட்டு பதற்றத்துடன் கௌண்டர் மீதிருந்த துணிகளை விலக்கி,”சாமி, ஃபோனைக் காணும்..எங்கே வைச்சேன்?” என்று ஷண்முகத்திடம் கேட்டார்.

“இங்கே தான் எங்கேயாவது இருக்கும் ம்மா..டென்ஷன் ஆகாதீங்க.” என்று அவரைச் சமாதானம் செய்தான் ஷண்முகம்.

உடனே பில் போடுவதை நிறுத்தி விட்டு துணிகள் குமிந்து கிடந்த கௌண்டருக்கு வந்து, அனைத்து உடைகளையும் உதறி கீழே போட்டு விஜயாவின் கைப்பேசியைத் அந்தப் பெண் தேட,

“அம்மா, கைலே வைச்சிருந்தீங்களா இல்லை உங்க கைப்பைலே வைச்சிருந்தீங்களா?” என்று விசாரித்தான் ஷண்முகம்.

“வீட்லேர்ந்து கிளம்பும் போது கைலே தான் வைச்சிருந்தேன் சாமி..கோவிலுக்கு போன போது கைப்பைலே போட்டுக்கிட்டேன்” என்று பதில் கொடுத்தவர்,”சாமி, கடைக்கு நடந்து தான் போகணும்னு ஷர்மா சொன்னது புரியாம பார்த்திட்டு இருந்தேன்னா அப்புறம் வண்டியைக் காட்டி ‘நோ..நோ’ நு சொன்னாரா அதிலே கொஞ்சம் கவனம் சிதறி போய் கைப்பையை வண்டிலேயே விட்டிட்டேன்னு நினைக்கறேன்.” என்று பாவமாகச் சொன்னார் விஜயா.

சுறுசுறுவென்று கோபம் வர, அது முகத்தில் தெரியும் முன், சாந்தமான முகத்தை அணிந்து கொண்ட ஷண்முகம்,“அப்போ வண்டிலே தான் இருக்கும் ம்மா.” என்றான்.

“ஆமாம் ஆன்ட்டி..இங்கே பூரா தேடிப் பார்த்திட்டேன்..நீங்க வண்டிலே தான் விட்டிருக்கணும்.” என்று சொன்னவள்,”ஸர், எதுக்கும் ஆன்ட்டி நம்பருக்கு ஒரு கால் செய்யுங்க.” என்றாள்.

‘இது ஏன் நமக்கு தோணலை?’ என்று எண்ணியபடி விஜயாவின் கைப்பேசிக்கு அழைப்பு விடுத்தான் ஷண்முகம். அழைப்பு சென்றது. கடையினுள் அழைப்பொலி கேட்கவில்லை.

“இங்கே இல்லை ம்மா..கார்லே தான் இருக்கு ம்மா.” என்றான்.

 உடனே பில் கௌண்டருக்கு சென்று பில் புத்தகத்தை திறந்து.”உங்களோட பெயர், ஃபோன் நம்பரைச் சொல்லுங்க ஆன்ட்டி.” என்றாள்.

பெரிய தப்பு செய்த மன நிலையில் இருந்த விஜயா,”சாமி, சட்டுன்னு ஃபோன் நம்பர் நியாபகம் வர மாட்டேங்குதே.” என்றார்.

“நான் சொல்றேன்.” என்று விஜயாவின் பெயர், கைப்பேசி இலக்கை ஷண்முகம் சொல்ல அந்தப் பெண் அதைக் குறித்துக் கொண்டாள்.

பில் தொகையைக் கூட்டி போடும் முன்,”ஆன்ட்டி, இங்கே தான் தைக்கணும்னு சொன்னீங்க..அந்த அமௌண்ட்டையும் இதிலேயே போடட்டுமா? ஓகே தானே.” என்று கேட்டாள்.

விஜயா பதில் அளிக்கும் முன்,”இதுக்கு முன்னே அவங்க சல்வார் போட்டதில்லை..கம்ஃபர்டபிளா தைச்சுக் கொடுக்கணும்..சல்வார்லே பேக்கெட் வைச்சு தைக்க முடியுமா? என்று கேட்டான் ஷண்முகம்.

தலை குனிந்தபடி எழுதிக் கொண்டிருந்தவள்,“என்னோட அண்ணி ஷிக்கா டிசைனர்..எப்படி வேணுமோ அப்படித் தைச்சுக் கொடுப்பா.” என்று பதில் அளித்தவள், தலையை உயர்த்தாமல், 

“சல்வார் பேகெட்லே ஃபோன் போட்டுக்கிட்டு வாக்கிங் போகலாம்..ஃபோனுக்குன்னு தனியா ஒரு பை எடுத்திட்டுப் போக வேண்டியதில்லை..அந்தப் பை கைலே இருக்குதா, இருக்குதான்னு அடிக்கடி செக் செய்துக்க வேண்டி வராது.” என்றாள். அதற்கு,

“எக்ஸாக்ட்லி.” என்று அவளின் கூற்றை ஆமோதித்தான் ஷண்முகம்.

தலையை உயர்த்தி அவனை நேராகப் பார்த்து,”உடைங்கறது அவங்க அவங்க சௌகர்யம், விருப்பத்தைப் பொறுத்து..உங்களுக்காக அவங்க மாறணும்னு நீங்க எதிர்பார்க்கறது, கட்டாயப்படுத்தறது தப்பு..சல்வார்லே பேக்கெட் வைக்கறது நல்ல ஐடியா தான்..புடவை உடுத்தும் போது கழுத்துலே மாட்டிக்கற மாதிரி ஸ்லிங்க் பேக் வாங்கிக் கொடுக்கறது அதை விட நல்ல ஐடியா..நான் சொல்றது சரி தானே ஆன்ட்டி?” என்று விஜயாவைப் பார்த்து கண் சிமிட்டினாள்.

சல்வார் தான் உடுத்த வேண்டும் அது தான் வசதியாக இருக்கும் என்று ஜபித்துக் கொண்டிருந்த மகனிற்கு ஒத்து ஊதாமல் புடவை உடுத்தும் போது அதே போல் சௌகர்யமாக இருக்க என்ன செய்யலாமென்று ஐடியா கொடுத்தவள் மீது பிரமிப்பும் பிரியமும் ஏற்பட்டது விஜயாவிற்கு. ,”சரியா சொன்ன கண்ணு.” என்று அதை அவர் வெளிப்படுத்தினார்.

அவர்களின் சினேக பாவத்தைப் பார்த்து ஆச்சரியமானது ஷண்முகத்திற்கு. அதிகமாக வெளியே போகாத அம்மா, அடுத்த வீட்டுக்காரங்களோடு பேசாத அம்மா, இந்த பொண்ணுகிட்டே இப்படிப் பேசறாங்க.” என்று அவரை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

‘எதுக்கு நீ இப்போ எல்லை மீறிப் பேசிட்டு இருக்க? சரிங்க..ஐநூறு ரூபாய்லே ஒரு ஸ்லிங்க் பேக்லே விஷயத்தை முடிச்சுக்கறேன்..இந்தத் துணியெல்லாம் நீங்கேளே வைச்சுக்கோங்கண்ணு சொன்னா என்ன செய்வ?’ என்ற கேள்வி வர, பில் தொகையை வேகமாக கூட்டி முடித்து,”இப்போ துப்பட்டாவை மட்டும் பேக் செய்து தரேன்.” என்று சொன்னவள் அதனோடு சேர்த்து,”ஆன்ட்டி, இந்த சல்வாரெல்லாம் உங்களுக்கும் சூப்பரா இருக்கும்.” என்று வியாபாரத்தை உறுதி செய்தாள்.

அவளது எண்ணப் போக்கை சரியாக கணித்திருந்தவன்,’இவ உஷார் தான்’ என்று எண்ணியபடி இமைக்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கண்டுபிடித்து விட்டான் எனபதில் சங்கடமாக உணர்ந்தவள் பில் புத்தகத்தினுள் தலையைப் புதைத்துக் கொண்டாள்.

கண்ணுக்குத் தெரியாமல், காதிற்குப் போகாமல், காற்று வழியே இருவருக்குமிடையே நடந்து கொண்டிருந்த கருத்துப் பரிமாற்றம் விஜயாவின் கவனத்தில் வரவில்லை.“நான் போட்டிட்டு வந்து உனக்கு காட்டறேன் கண்ணு..அப்போ இந்தப் பாராட்டை சொல்லு.” என்று சந்தோஷமாக பதிலளித்தார்.

“கொஞ்சம் வெயிட் பண்ணுங்க ஆன்ட்டி..அளவெடுக்க ஷிக்காவை அழைச்சிட்டு வரேன்.” என்று பில் கௌண்டரின் மறுகோடிக்கு சென்று அந்த வழியாக வெளியே போய் அங்கே இருந்த கதவைத் திறந்து வீட்டினுள் சென்றாள்.

சில நொடிகள் கழித்து அதே கதவின் வழியாக வெளியே வந்த ஷிக்கா, பெரிய வியாபாரம் கொடுத்திருந்த விஜயாவைப் பார்த்து பெரிதாக புன்னகைத்தாள். அதற்கு மிக லேசாகப் புன்னகைத்து வைத்தார் விஜயா.  ஷண்முகத்திடம்,”ஹலோ ஸர்..நான் ஷிக்கா..இது என்னோட பொட்டிக்” என்று அவளை அறிமுகம் செய்து கொள்ள, தலையசைவில் அதை ஏற்றுக் கொண்டவன்,”அவங்க இப்போ தான் ஃபர்ஸ் டைம் சல்வார் போடப் போறாங்க.” என்று தகவல் கொடுத்தான். 

“தெரியும்..அளவெடுத்து தான் தைக்கப் போறேன்..போட்டுப் பார்க்கட்டும் ஏதாவது சேஞ்சஸ் இருந்தா கொண்டு வாங்க செய்து கொடுக்கறேன்.” என்று பதில் அளித்து விட்டு, அலமாரியிலிருந்து அளவு டேப், நோட் புத்தகத்துடன் விஜயா அவருகே வந்தவள், நிதானமாக, அவரை அளவெடுக்கும் வேலையை ஆரம்பித்தாள். 

சில நிமிடங்கள் கழித்து. கதவருகே இடுப்பில் குழந்தையோடு நின்றிருந்தவள், மெல்லியக் குரலில் ஹிந்தியில் ஏதோ பேசியபடி ஷிக்காவைக் காட்டி அழுது கொண்டிருந்த குழந்தையைச் சமாதானம் செய்து கொண்டிருந்தாள். 

அவனது சிணுங்களை நிறுத்தி விட்டு அவளது தோளில் சாய்ந்தபடி விஜயா, ஷண்முகத்தைத் தீவிரமாகப் பார்த்தான் சின்னவன். அப்போது கேஷ் கௌண்டரில் இருந்த கைப்பேசி மிக மெலிதாக ஒலி எழுப்ப, அதனருகே ஷண்முகவேல் நின்றிருக்க, ஓசை கேட்ட நொடி அவளைக் கேள்வியாய் பார்க்க, அவளுடைய கைப்பேசி தான் ஒலி எழுப்புகிறது என்று உணர்ந்தவள், தமிழில்,”என்னோடது தான்.” என்றாள்.

கௌண்டர் வழியாக குழந்தையுடன் அவள் வர முடியாது, இந்தப் புறமும் மூன்று பேர் நின்று கொண்டிருந்ததால், என்ன செய்வதென்று யோசித்தவன், அங்கேயிருந்து நகர்ந்து,”அம்மா, நான் வெளியே வெயிட் செய்யறேன்..அளவு எடுத்து முடிஞ்சதும் வரேன்.” என்று கடையிலிருந்து வெளியேறினான்.

அவசர அவசரமாக மந்தீப்பைத் தூக்கிக் கொண்டு ஷிக்கா, விஜயா இருவரையும் கடந்து கேஷ் கௌண்டர் சென்றவள், கைப்பேசியை எடுத்து உயிர்ப்பிக்கும் முன் அழைப்பு முடிந்து போனது. அடுத்த நொடியே வீட்டினுள்ளே இருந்த ஷிக்காவின் கைப்பேசி ஒலி எழுப்ப, விஜயாவை அளவெடுத்தபடி கோபத்துடன் ஏதோ  சொன்னாள் ஷிக்கா. அதுவரை இருந்த இலகுவான சூழ்நிலை நொடியில் மறைய, பெரிய குரலில் அழுதபடி தூக்கிக் கொள்ளும்படி ஷிக்காவை நோக்கி குழந்தை கை நீட்ட, அளவு டேப்பை கௌண்டர் மீது வைத்து விட்டு குழந்தையை வாங்கிக் கொண்டாள் ஷிக்கா. 

“இரண்டு நிமிஷத்திலே முடிஞ்சிடும் ஆன்ட்டி.” என்று சொல்லி, கௌண்டர் மீதிருந்த டேப்பை கையில் எடுத்தவள், கடகடவென்று விஜயாவை அளவெடுத்து, நோட்டுப் புத்தகத்தில் குறிக்க ஆரம்பித்தாள்.

நாத்தனாருக்கும் மதனிக்கும் இடையே பூசல் என்று புரிந்து கொண்ட விஜயா சங்கடமாக உணர்ந்தார். குழந்தையைச் சமாதானம் செய்தபடி எப்படி அளவெடுக்க வேண்டுமென்று அவளுடைய நாத்தனாருக்கு கட்டளையிட்டுக் கொண்டிருந்தாள் ஷிக்கா. வாயைத் திறக்காமல் வேலையைச் செய்து முடித்து,

“டிரெஸ் ரெடியானதும் உங்களுக்கு ஃபோன் செய்வோம் ஆன் ட்டி..கலெக்ட் பண்ண வரும் போது தையல் கூலி கொடுத்தா போதும்..இப்போ டிரெஸ்ஸுக்கு மட்டும் பணம் கொடுங்க.” என்றவளிடம், 

உடனே,”என் பையனை அழைச்சிட்டு வரேன்.” என்று சொல்லி விட்டு பார்வையை வெளிப்புறம் விஜயா திருப்ப, கடையின் வாசல் காலியாக இருக்க,”வெளியே இருக்கேன்னு சொன்னான்..எங்கே போனான்னு தெரியலையே கண்ணு.” என்று விஜயா கவலைப்பட,”நீங்க கடைலே இருங்க..நான் போய்ப் பார்க்கறேன்.” என்று அவரைக் கடந்து, கதவைத் திறந்து வெளியே சென்றாள்.

கடையின் பக்கவாட்டில், சிறிது தொலைவில், கடைக்குப் பின்புறத்தைக் காட்டியபடி கைப்பேசியில் உரையாடிக் கொண்டிருந்த ஷண்முகத்தை,”ஸர், ஸர்” என்று அழைத்தாள்.

தலையைத் திருப்பி அழைப்பு வந்த திசையை நோக்கியவன், இரண்டு நிமிஷம் என்று செய்கை செய்து விட்டு மீண்டும் உரையாடலைத் தொடர்ந்தான்.

கடையினுள் வந்தவள்,“ஃபோன் பேசிட்டு இருக்காங்க ஆன்ட்டி..வரேன்னு செய்கை செய்தாங்க.” என்றாள்.

ஐந்து நிமிடங்கள் கழிந்த பின்னும் ஷண்முகம் வரவில்லை. அந்த அவகாசத்தில் துப்பட்டாக்களைக் கவரில்  பேக் செய்து வைத்து அதன் மீது ரசீதையும் வைத்தாள். அப்போது அவளது கைப்பேசி ஒலிக்க, அழைப்பை ஏற்று,

மென்மையானக் குரலில்,“கிளம்பிட்டிருக்கேன் ம்மா..ஃபோன் எடுக்கலைன்னா வேலையா இருக்கேன்னு புரிஞ்சுக்க மாட்டீங்களா? எதுக்கு உடனே அவளுக்கு ஃபோன் போடறீங்க?” என்று கேட்டு விட்டு அழைப்பைத் துண்டித்தாள். 

அவளது பையையும் கைப்பையை எடுத்துக் கொண்டு, குழந்தையைக் கொஞ்சி விட்டு, ஷிக்காவிடம் விடைபெற்றுக் கொண்டு, விஜயாவிடம்,”லேட்டாகிடுச்சு ஆன்ட்டி..அம்மா கவலைப்படறாங்க..நான் கிளம்பறேன்.” என்று சொல்லிக் கொண்டு வேகமாக வெளியேற இருந்தவளிடம்,

“உன் பெயர் என்ன ம்மா?” என்று விசாரித்தார் விஜயா.

“சினேகலதா.” என்று பதில் கொடுத்த நொடி அங்கேயிருந்து பறந்து சென்று விட்டாள்.

‘தன்மையா நடந்துக்கறா, அன்பா பேசறா..பெயருக்கு ஏத்த குணம் இந்தப் பொண்ணுக்கு.’ என்று எண்ணிய விஜயா அறிந்திருக்கவில்லை கல்யாண வயது கடந்து விட்டதென்று எண்ணிக் கொண்டிருக்கும் அவருடைய மகன் வேலனைக் கவர்ந்து, காதலில் கட்டிப் போடப் போகும் வள்ளி அவள்தானென்று. கடையிலிருந்து வேகமாக வெளியேறி, சாலையில் கடந்து போன ஃபட்ஃபட்டியை (phatphati, it is a kind of share auto) கை நீட்டி நிறுத்தி ஏறிக் கொண்டவளைப் பார்த்தபடி அவனது கைப்பேசி உரையாடலைத் தொடர்ந்தவனுக்கு தெரியவில்லை சினேகலதாவாக அவனுடைய அம்மாவிற்கு அறிமுகமானவள் தான் அவனின் பிரேமலதாயென்று.

**************************

வள்ளி – Climber, creeper; கொடி.

லதா – a creeper, கொடி

சினேகலதா – நேசக் கொடி, creeper of affection

பிரேமலதா – காதல் கொடி, creeper of love

*********************

Skin tone is the surface skin colour. Skin’s undertone is the tone beneath the surface of the skin

Perfect looks கிடைக்க skin’s undertone, அதாவது warm, cool, neutral nnu அதோட நிறத்தை வைச்சு தான் make up, jewellery, dress எல்லாம் டிசைட் செய்யணும். So இரண்டு நபர்கள் ஒரே நிறமா இருந்தாலும் ஒரே நிறத்திலே டிரெஸ் போட்டாலும் அது ஒரே மாதிரி பொருந்திப் போக வாய்ப்பில்லை.

Advertisement