Advertisement

அத்தியாயம் – 4

ஆடவனை பார்த்து பாவையின் பார்வையில் அதிர்ச்சி.‘எப்படி இவங்க உள்ளே வந்தது  நமக்குத் தெரியாமப் போச்சு.’ என்று யோசனையானாள். தில்லியில் பிறந்து வளர்ந்திருந்ததால், அதுவும் அப்பாவின் மறைவிற்குப் பின், அம்மாவின் தினசரி போதனையில் அவளது எச்சரிக்கை உணர்வுகள் எப்போதும் படு அலர்ட்டாக இருக்கும். எப்படி அது ஏமாற்றப்பட்டது என்ற கேள்வி வர, எதிரில் இருந்தவனை தலை முதல் பாதம் வரை நிதானமாக நோட்டம் விட்டாள்.  அவனது உயரமும் உடலமைப்பும் கொஞ்சம் மிரள வைத்தது. தலைமுடியை படிய வாரியிருந்த விதம், முறுக்கிய மீசை இரண்டும் அவனது தென் இந்தியப் பூர்வீகத்தை வெளிப்படுத்தியது. அதைத் தவிர அந்த முகத்திலிருந்து வேறு எதையும் கண்டு பிடிக்க முடியவில்லை. அவனது கண்கள் அவளின் கண்களோடு நித்சலனமாக இயல்பு போல் கலக்க, அந்த இயல்பு அவளது மனத்தை உறுத்தியது. 

திடீரென்று அவரருகில் உதிருந்த மகனைப் பார்த்து, அதிர்ச்சியில், நெஞ்சில் கையை வைத்தபடி, பதற்றமான குரலில்,”சாமி, என்ன இப்படிச் சத்தமில்லாம பக்கத்திலே வந்து நிக்கறீங்க..அம்மா பயந்திட்டேன்.” என்றார் விஜயா. 

அதற்கு ஷண்முகத்திடமிருந்து பதில் வரவில்லை. பாவையின் கண்களிலும் அதிர்ச்சியைப் பார்த்திருந்ததால் அவளிடமிருந்து பார்வையைத் திருப்பி தீவிரமாகத் துணிகளைப் பார்ப்பது போல் பாவனை செய்தான்.

விஜயா சொன்னதைக் கேட்டு,’இவங்க இந்த ஆன்ட்டியோடு மகனா? ஷர்மா அங்கிள் ஃபெமிலின்னு சொன்னதை வைச்சு ஆன்ட்டியோட ஹஸ்பண்ட் தான் அவரோட பாஸ்ஸுன்னு நினைச்சேன்.’ என்று மனத்தில் நினைத்தபடி அமைதியாக அவனை ஆராய்ந்தாள்.

எப்படி இவங்க முகத்திலே கண்ணுலே எதுவுமே தெரியவே இல்லை? என்று யோசித்தபடி முகத்திலிருந்து கீழே பயணம் செய்தாள். நீல நிறத்தில் கட்டம் போட்டிருந்த முழுக்கை சட்டை, கறுப்பு நிற பேண்ட் என்று வெய்யில் காலத்தில் அடர் நிறத்தில் உடுத்தியிருந்தான். வலதுக் கை பேண்ட்டின் பக்கவாட்டுப் பேக்கெட்டில் நுழைந்திருக்க, கௌண்டர் மீதிருந்த துணியை வருடிக் கொண்டிருந்தது அவனது இடதுக் கை. அந்தச் செயல் அவளை ஏதோ செய்ய, அந்த உணர்வை புறம் தள்ளி விட்டு அவளது ஆராய்ச்சியைத் தொடர்ந்தாள். 

அவனது இடதுக் கை மணிக்கட்டில், கறுப்பு நிற டயலில், தங்க நிறத்தில் மூன்று சப்டயலைக் (subdial) கொண்ட க்ரோனோகிராஃப் (chronograph) கைக்கடிகாரத்தைப் பார்த்தவுடன் அவளது புருவங்கள் லேசாக உயர்ந்தன. அவளுடையது இரண்டு சப்டயல்களைக் கொண்டது. மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையே நடந்த ஜுனியர்களுக்கான நீச்சல் போட்டியில் அவள் இரண்டாம் இடத்தில் வந்த போது அவளுடைய அப்பா அளித்த பரிசு. சிறிது நேரத்திற்கு முன், சுவரோரத்தில் அவள் வைத்த பையினுள் இருக்கிறது அந்தக் கைக்கடிகாரம். ஈரத் தலையைச் சரியாக துவட்ட கூட நேரமில்லாமல் அவசர அவசரமாகப் புறப்பட்டு வந்திருந்ததால் பேக்கில் பத்திரப்படுத்தியிருந்த கைக்கடிகாரத்தை அணிய அவகாசம் கிடைக்கவில்லை.  

பொதுவாக காலத்தின் பகுப்பை புரிந்தவர்கள், அதன் உன்னதத்தை உணர்ந்தவர்கள், அதை வீணாக்கக் கூடாதென்ற கொள்கை கொண்டவர்கள் தான் இதுபோன்ற கைக்கடிகாரத்தை உபயோகிப்பார்கள். ‘அரசு வேலைலே இருக்கறவங்களுக்கு எதுக்கு இந்தக் கைக்கடிகாரம்..சில ஆபிஸ்லே வருஷக் கணக்கா ஃபைல் மூவ் ஆகாமக் கிடக்குது..இவங்க தான் எல்லாத்தையும் ஓட்டற மாதிரி இந்தக் கைக்கடிகாரத்தைக் கட்டிட்டு இருக்காங்க..ஒருவேளை தூக்கத்தை டிராக் செய்யறதுக்கு இருக்குமோ? ஆளைப் பார்த்தா அப்படித் தெரியலையே..ஒருவேளை ஸ்போர்ட்ஸ் கோட்டாலே அதிகாரி ஆகியிருப்பாரோ..அதான் சின்ன வயசிலே பெரிய பதவியோ’ என்று மனத்தினுள் ஷண்முகத்தின் பின்னணியை அலசியவளின் பார்வை அவனது பாதங்களைத் தொட்டது.

அவனது பாதங்களில் ப்ரூக்ஸ் ஃபார்மல் ஷுஸ்ஸைப் பார்த்ததும் அவளுள் சின்னதாக ஒரு சந்தோஷக் கீற்று. இளநிலை பட்டப்படிப்பின் இரண்டாவது வருடத்தில் ப்ரூக்ஸ் பொருள்களுக்கு நான்கு வரிகளில் விளம்பரம் எழுதியிருந்தாள். உலகின் முதல் ரெடிமெட் உடை தயாரிப்பாளர்கள் ப்ரூக்ஸ் பிரதர்ஸ்.  ஃபார்மல் உடை தயாரிப்பில் முன்னணியில் இருப்பவர்கள். ப்ரூக்ஸ் ஸ்போர்ட்ஸ் பிராண்டில் ஆண், பெண் இருபாலினருக்கு வாக்கிங், ரன்னிங், மரத்தான், ரேசிங் என்று  ஒவ்வொரு உடற்பயிற்சிக்கு ஏற்றார் போல் விதவிதமான காலணிகள் இருக்கின்றன. அவர்களின் தனிச் சிறப்பை வெளிப்படுத்த,

Woods or roads,

Work or Workouts,

For quality and looks,

Its only brooks !

என்று அவள் எழுதிய வரிகள் இப்போது நினைவுக்கு வர, ‘காப்பி எடிட்டர் (copy editor, usually works in publishing field) வேலைக்குப் போகாம காப்பி ரைட்டர் (copy writer, works in advertising field) வேலைக்குப் போயிருக்கலாம். நாலு வரி எழுதி டிஜிட்டல் மார்கெட்டிங்கிலே நாலு மடங்கு சம்பாதிச்சிருக்கலாம். இப்படி பப்ளிஷிங்க்லே மாட்டிக்கிட்டு அடுத்தவங்க பக்கம் பக்கமா எழுதினதைப் படிச்சு, அதைத் திருத்தி எழுதியே நம்ம காலம் போயிடும் போல இருக்கே..எப்போ நான் எழுத ஆரம்பிச்சு, எப்போ அதை பப்ளிஷ் செய்யறது?’ என்று அவளது எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனையில் மூழ்கிப் போக இருந்தவள் சட்டென்று அவளை மீட்டுக் கொண்டு மீண்டுமொருமுறை அவனை முழுதாக அளந்தாள். 

‘கொளுத்தற வெய்யில்லே காத்து வந்து போக இடமில்லாம முழுக்கை சட்டை, ஷுலே சௌகர்யமா இருக்காங்க..நாம என்னடான்னா குளத்திலே குளிச்சிட்டு வந்தும் காத்தாட டிரெஸ் போட்டிருக்கோம்,’நிறைய வெய்யிலைப் பார்த்திருக்காங்களோ? இந்த சின்ன வயசுலே அங்கிள் பாஸ்ஸா எப்படி ஆனாங்க? மனோகர் வயசு இருக்குமா இவங்களுக்கு?’ என்று அடுத்தடுத்து ஷண்முகத்தை பற்றி பல கேள்விகள் எழ, அதெல்லாம் தெரிஞ்சு நீ என்ன செய்யப் போறா? என்று அவளே அவளைக் கடிந்து கொள்ள,‘கடை உள்ளே ஆள் வந்தது தெரியாம இருந்திருக்க..அதைப் பற்றி யோசி.’ என்று வழி மாறிப் போன எண்ணங்களை இழுத்து பிடித்து அவளது வழிக்கு அழைத்து வந்தாள்.

அவர்கள் கடையாக இருந்தாலும் கஸ்டமர்கள் அனைவரும் கண்ணியமானவர்கள் என்று சொல்ல முடியாதே. அதுவும் பெண்களோடு வரும் சில பேரின் பார்வையைச் சகித்துக் கொள்ளவே முடியாது. அது போன்ற களவானிகளைக் கையாள சில விதிகள் வைத்திருக்கிறார்கள். அந்த நேரத்தில் அவளுடைய அண்ணன் வீட்டில் இருந்தால் அவன் தான் அத்தகைய வாடிக்கையாளர்களை கையாள்வான். அவனில்லை என்றால் பெண்கள் மூவரும் ஒருவருக்கொருவர் துணையாக இருப்பார்கள். ஷிக்கா மட்டும் தனியாக இருக்கும் நேரத்தில் அது போல் யாராவது வந்து விட்டால் அவளது வீட்டினர்க்கு அழைத்து விடுவாள். 

ஷிக்காவின் வீட்டினர் இரண்டு செக்டர்கள் தாண்டி வசித்து வருகிறார்கள். மயூர் விஹாரிலிருந்து லக்ஷ்மி நகர் வரை அவளுடைய உறவினர்கள் கொட்டிக் கிடக்கிறார்கள். இந்த வீடு கூட அவளுடைய உறவினர் ஒருவருக்குச் சொந்தமானது. இதே இடத்தில் செராக்ஸ் கடை ஒன்றை நடத்தி வந்தனர். இப்போது காசியாபாத்தில் கோட்டி (independent house) வாங்கி குடி போய் அங்கே கடை போட்டு விட்டனர். ஷிக்கா அவளது பொட்டிக்கிற்காக இடம் தேடிக் கொண்டிருப்பது தெரிய வந்தவுடன் அவளைத் தேடி வந்து இந்த இடத்தை அவர்கள் வாடகைக்கு கொடுக்க, நல்ல ஏரியாவாக இருந்தாலும் ஷிக்காவிற்கு இந்த இடம் பிடிக்கவில்லை. 

கடை சிறியது அதை விட சிறியது கடைக்குப் பின்னால் இருந்த வீடு. சிறிதாக ஆரம்பித்து பெரிதாக வளர வேண்டுமென்ற எண்ணம் அவளுக்கில்லை. பெரிதாக ஆரம்பித்து பெரியாள் என்று காட்ட வேண்டுமென்ற எண்ணம் தான் இருந்தது. எனவே இந்த இடம் வேண்டாமென்று மறுக்க நினைத்தவளை அவளது குடும்பம் விடவில்லை. அவளது காதலை ஏற்றுக் கொண்டதிலிருந்து அவளது வாழ்க்கையை அவர்கள் தான் கன்ட்ரோல் செய்து வருகிறார்கள். அவர்களின் அந்த எண்ணத்திற்கு ஏற்றார் போல் இந்தப் பக்கம் பெரியவர்கள் அதாவது ஆண்கள் யாருமில்லாததால் அவர்கள் சொல்வது தான் சட்டமென்றானது. அவளுக்குப் பிடிக்காத இடத்தில் கடை, வீட்டை அமைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத்  தள்ளப்பட்டாள் ஷிக்கா.

பொதுவாக வியாபார நேரத்தில் நேர்த்தியான உடையில் இருப்பது தான் வழக்கம். ஷிக்காவும் அவளும் சல்வார் கமீஸ், ஜீன்ஸ், குர்த்தி, ஸ்கர்ட் என்று நவீன உடைகள் அனைத்தையும் அணிவார்கள். அவளுடைய அம்மாவை பொறுத்த வரை புடவை மட்டும் தான் கண்ணியமான உடை. இவ்வளவு வருடங்கள் தில்லியில் வாழ்ந்திருந்தாலும் ஏனோ அவரால் அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளவே முடியவில்லை. இப்போது அவள் அணிந்திருக்கும் உடை கண்ணியத்திற்கு கீழ் வரவே வராது. அதற்குக் காரணம் அதன் வடிவமைப்பு தான். ‘இதை போட்டிட்டு வெளியே போகாதேன்னு சொன்னா கேட்க மாட்டேங்கற.’ என்று பலமுறை அவளோடு சண்டை போட்டிருக்கிறார். அதற்கு,’நீங்க சொல்ற மாதிரி எல்லாத்தையும் மூடிகிட்டு வெயில்லே வெளியே போனா வெந்து போயிடுவேன்..குளிர் காலத்திலே செய்யறதை வெய்யில் காலத்திலே செய்ய முடியாது.’ என்று பதில் கொடுத்து அவரது வாயை அடைத்து விடுவாள். 

Advertisement