Advertisement

அத்தியாயம் – 12

ஜோதியால் மகன், மகள் இருவரையும்  விட்டுக் கொடுக்க முடியாதென்று அவருடைய மகன், மகள் இருவருக்கும் புரியவேயில்லை. ’அவன் கல்யாணம் செய்துக்கட்டும்…என்ன வேணும்னாலும் செய்துக்கட்டும்..நான் இல்லையா உங்களுக்கு..நான் உங்களைப் பார்த்துக்க மாட்டேனா..நீங்க இப்படி அழுது உடம்பைக் கெடுத்துக்காதீங்க..அவனைப் பற்றி இனி யோசிக்காதீங்க.’ என்று மனோகரின் காதல் விஷயம் தெரிய வந்ததிலிருந்து அழுது கரைந்து கொண்டிருந்த அம்மாவிற்கு பலமுறை தைரியம் கொடுத்திருக்கிறாள் சினேகா. ஆனால் ஜோதிக்கு அந்த ஆறுதல் வார்த்தைகள் போதவே இல்லை.

மனோகரால் உருக்குலைந்து கொண்டிருந்த அம்மாவை மீட்டெடுக்க அவள் எடுத்த முயற்சிகள் பயனளிக்காததால்,’சரி..அழுது அழுது உடம்புக்கு எதையாவது வரவழைச்சு என்னை அனாதை ஆக்கிட்டுப் போயிடுங்க.’ என்று சினேகா அதிர்ச்சி வைத்தியம் அளிக்க,  கலங்கி போயிருந்த ஜோதி தெளிந்து, உடல், மனது இரண்டையும் ஸ்திரப்படுத்திக் கொண்டார். 

மகளின் அந்தக் கூற்றைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டவர்,’அதுக்கு தான் முதல்லே உனக்கு ஒரு கல்யாணத்தை செய்து வைச்சிட்டு அப்புறம் மனோகர் இஷ்டப்படி அவனுக்கு செய்து வைக்கலாம்னு நினைக்கறேன்.’ என்று மகளின் எதிர்காலத்தைப் பற்றிய கவலையில் யோசிக்காமல் யோசனை அளிக்க,’மனோகர் தான் கல்யாணத்துக்கு அவசரப்படறான்..நானில்லை..அவனுக்கு பிடிச்ச பெண்ணை அவன் கல்யாணம் செய்துக்கற மாதிரி தானே நானும் எனக்குப் பிடிச்சவனைக் கல்யாணம் செய்துக்கணும்..அவனுக்காக திடீர்னு நீங்க கை காட்டற ஆளை நான் கல்யாணம் செய்துக்க முடியாது.’ என்று திட்டவட்டமாக மறுத்து விட்டாள் சினேகா.

வேறு வழியில்லாமல் ஷிக்காவுடன் திருமணத்தை நடத்தி வைத்து மனோகரின் விருப்பத்தை நிறைவேற்றி வைத்தார் ஜோதி. பாண்டியனின் குடும்பத்திலிருந்து யாருமே திருமணத்திற்கு வரவில்லை. ‘என்னாலே இதை ஏத்துக்கவே முடியாது அண்ணி..நம்ம சொந்தபந்தம் கேட்டா எனக்கும் உங்களுக்கும் சம்மந்தமில்லைன்னு சொல்லிடப் போறேன்..நல்லவேளை அண்ணன் உயிரோடு இல்லை அப்படி இருந்திருந்தா அவரே உயிரை விட்டிருப்பார்.’ என்று ஜோதியை வார்த்தையால் காயப்படுத்தி விட்டு உறவை முறித்துக் கொண்டு விட்டார் காமராஜ்.

ஜோதியின் பிறந்த வீட்டினர்க்கும் பெரும் ஏமாற்றம், வருத்தம், மனக்கசப்பு இருந்தாலும் அவரை மொத்தமாக விட்டுக் கொடுக்காமல், கோவிலில் நடந்த திருமணத்தில் கலந்து கொள்ள மூத்தவர் செல்வக்குமார் மட்டும் தனியாக வந்தார். தாய்மாமன்கள் சார்பாக ஐம்பதாயிரம் ரூபாய் அன்பளிப்பாக அளித்தார். திருமணத்தன்றே அண்ணன் கையில் இரண்டரை லட்சத்திற்கான காசோலையைக் கொடுத்து, அவர்களின் உதவிக்கு நன்றி உரைத்து விட்டு அதிலிருந்து ஐம்பதாயிரத்தைக் காசியப்பனுக்கு கொடுத்து விடும்படி சொன்னார். அதன் பின், ‘ஏன் கடன் தொகையை அடைக்கலை? எப்போ அடைக்கப் போற?’ என்று சகோதரர்களும் காரணம் கேட்கவில்லை.’ நீ கொடுத்தா நாங்க போய்க் கொடுத்திடறோம்’  என்று ஒதுங்கிப் போய் விட்டனர். 

மாண்ட்டி பிறந்த போது ஐம்பதாயிரத்தை அண்ணன் செல்வக்குமாரின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைத்தார் ஜோதி. அது தான் கடைசி. அதற்கு பின் இப்போது வரை ஒன்றுமேயில்லை. அப்பாவின் கடனை அடைக்க உதவி செய்ய வேண்டிய மகனின் நிதி நிலை அம்மா, தங்கையிடம் உதவி கேட்கும் பரிதாப நிலையில் இருந்தது. அவனுக்காக ஒதுக்கி வைத்திருந்த பங்கு பணத்தை முழுவதுமாக செலவழித்து விட்டு இப்போது, அவசரம், எமெர்ஜன்சி சூழ் நிலைகளில் ஜோதி, சினேகாவிடம் காசுக்காக கை நீட்டிக் கொண்டிருந்தான் மனோகர். அவனுக்கே அந்தச் செயல் இழிவாக தெரிந்தாலும் அதைத் தவிர்க்க வழி தெரிந்தாலும் அதைச் செயல்படுத்த அவனிடம் துணிவு இருக்கவில்லை. காதல் மனைவியின் அத்தனை செயல்களையும் மன்னித்து அவள் இழுத்து விடும் வெட்டிச் செலவுகளை சமாளித்து அவளைச் சந்தோஷமாக வைத்துக் கொண்டு கணவனின் கடமையைச் சரியாக செய்து வந்தான்.

மனோகரின் கல்யாணம் வரவேற்பு நிகழ்ச்சி சில லட்சங்களை விழுங்கியிருக்க அதை விட அதிக லட்சங்களை விழுங்கி இருந்தது மனோகர், ஷிக்காவின் ஐரோப்பா தேனிலவு. அந்தத் தேனில் மருமகனுக்காக தாய்மாமன்கள் கொடுத்த அரை லட்சமும் கலந்து மேலும் இனிப்பைக் கூட்டியிருந்தது. கல்யாணத்தில் ரொக்கமாக கிடைத்த அன்பளிப்பு அனைத்தும் ஷிக்காவின் கைக்கு தான் சென்றது. அது அத்தனையும் எப்படிச் செலவழிந்தது என்று அவளுக்கு கூட தெரியமா என்று தெரியவில்லை.

ஷிக்காவின் நாட்டம், விருப்பம், ஆசையைப் பார்க்கும் போதெல்லாம் அவளுக்கும் பாண்டியனின் மகன் மனோகருக்கும் எப்படி ஒத்துப் போகிறதென்ற கேள்விக்கு ‘காதல்’ என்று ஒரு வார்த்தை தான் ஜோதிக்கு விடையாக கிடைக்கிறது. அந்த ஒன்றினால் தான் அவர்கள் இருவருக்கும் இடையே ஏற்படும் சின்ன சின்ன சச்சரவுகள், வாக்குவாதங்கள், சண்டைகள் பெரிதாகாமல் பொசுங்கிப் போகின்றன. அதனோடு மனோகர் எடுக்கும் அடுக்கடுக்கான முயற்சிகளையும் சேர்த்துக் கொள்ள தான் வேண்டும். 

திருமணத்தின் போதே அவனுக்குச் சேர வேண்டிய பங்கில் ஒரு பாதியை எடுத்து, ஷிக்கா விரும்பியபடி திருமண வரவேற்பு நிகழ்ச்சியை அதாவது அவளது ஆடை அலங்காரத்தில், டி ஜெ, புஃபே, கிஃப்ட் என்று ஆடம்பரமாக நடத்தியிருந்தான் மனோகர். அதன் கணக்கு வழக்கை யாரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை. ஜோதியும் எவ்வளவு செலவாயிற்று என்று மகனிடம் கணக்கு கேட்கவில்லை. அவனுக்கு உரிமையானதை அவன் செலவழித்தான் என்று ஒதுங்கிக் கொண்டு விட்டார். மாண்ட்டி பிறந்த சில மாதங்களில் அவனுக்குச் சேர வேண்டிய மீதியைக் கேட்ட போது, பொறுக்க முடியாமல்,

“ஏற்கனவே வட்டி பணம் குறைச்சலா தான் கிடைக்குது..இப்போ எல்லாத்தையும் கேட்டீனா எங்கேயிருந்து காசியப்பன் கடனை அடைக்கறது..உன் கல்யாணம் போது தான் மாமா இரண்டு பேருக்கும் அவங்களோட பணத்தைத் திருப்பிக் கொடுத்தோம்..அந்த வருஷம் அம்பதாயிரம் தான் கடன்லே அடைச்சோம்..அப்புறம் எதுவுமே கொடுக்கலை..இதுவரை நாலரை லட்சம் தான் அடைச்சிருக்கோம் டா..யாரும் எதுவும் கேட்கலைன்னு நாமளும் சும்மா இருக்க முடியுமா?” என்று கேட்க,

“அதுக்கு தான் வழி பண்ணிட்டு இருக்கேன் ம்மா..ஷிக்காவுக்கு பொட்டீக் வைச்சுக் கொடுக்கலாம்னு நினைக்கறேன்.” என்று மனோகர் அவனது திட்டத்தை வெளியிட, பொட்டீக் மூலம் எப்படி அவரின் கடன் அடையுமென்று குழம்பிப் போன ஜோதி. அதை நேரடியாக கேட்காமல்,

“கைக்குழந்தையை வைச்சிட்டு அவளாலே எப்படிக் கடையைப் பார்த்துக்க முடியும்?” என்று வினவ,

“அவங்க அம்மா வீட்டுப் பக்கம் தான் இடம் பார்த்திருக்கேன்…குருவாயூரப்பன் கோவில் பக்கத்திலே..கிரௌண்ட் ஃப்ளோர்..முன்னாடி கடை பின்னாடி வீடு..அவங்களும் உதவி செய்யறேன்னு சொல்லியிருக்காங்க..உங்களுக்கும் பக்கம் தான்…பகல் வேளைலே நீங்க தனியா வந்து போகலாம்..மெயின் ரோட்லே தான் இருக்கு..நீங்க வர முடியாத போது மாண்ட்டியை நானே கொண்டு வந்து விடலாம் மிஞ்சி போனா அங்கேயிருந்து இங்கே வர பதினைஞ்சு நிமிஷமாகும்..ஷிக்கா வீட்டுக்கும் நம்ம வீட்டுக்கும் நடுவுலே இருக்கு இந்த இடம். ” என்றான்.

“வீட்லே கடையை வைச்சுக்கறதுக்கு பர்மிஷன் வேணுமே..நல்லா விசாரிச்சேயா டா?” என்று ஜோதி கேட்க,

“அவங்க உறவுக்காரங்க வீடு தான் ம்மா அது..முன்னாடி அவங்களோட செராக்ஸ் கடை அங்கே இருந்தது..அதனாலே அனுமதிலே எந்தப் பிரச்சனையும் வராது..அதைக் கொஞ்சம் ரீ மாடல் செய்யணும்..அதுக்கு செலவாகும்..குவார்ட்டர்ஸை விட இந்த இடம் ரொம்ப சின்னது..குவாட்டர்ஸ் சாமானை இங்கே கொண்டு வர முடியாது..அதை வித்திட்டுப் புதுசா தான் வாங்கணும்.” என்றான்.

சினேகா மூன்றாவது வருடத்தில் படித்துக் கொண்டிருந்த போது மனோகருக்கு பட்பட்கஞ்சில் இருந்த பால் பண்ணையில் குவாட்டர்ஸ் வசதியுடன் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்திருந்தது. சினேகாவின் படிப்பு முடிந்ததும் வாடகை வீட்டைக் காலி செய்து கொண்டு மனோகரின் குவாட்டர்ஸுக்கு செல்லத் திட்டமிட்டிருந்தார் ஜோதி. அந்தத் திட்டத்தில் தான் ஷிக்கா, காதல், கல்யாணம் என்று அடுத்தடுத்து அணுக்குண்டைத் தூக்கிப் போட்டான் மனோகர். 

“என்ன டா சொல்ற? பஞ்சாபி பொண்ணா?” என்று ஜோதி நெஞ்சைப் பிடித்துக் கொள்ள, 

அம்மாவின் கையைப் பிடித்து அவரை நாற்காலியில் உட்கார்த்தி ஒரு கிளாஸ் நீரை குடிக்க வைத்த சினேகா,”ரொம்ப வருஷமா காதலிக்கறான்..நீங்க எங்களை விட்டு போனாலும் கூட அவளை விட மாட்டான் உங்க மகன்..அத்தனை லவ்..உங்களைச் சீக்கிரமா சமாதானம் செய்துக்கறது தான் நமக்கு நல்லது.” என்றாள்,

அதைக் கேட்டபடி அமைதியாக நின்றிருந்த மகனிடம்,”அவ சொல்றது நிஜமா டா?” என்று ஜோதி கேட்க,

‘ஆமாம்’ என்று அவன் தலையசைக்க,

“வாயைத் திறந்து சொல்லு டா.” என்று ஜோதி கத்தியவுடன்,

“ஆமாம் ம்மா..உங்ககிட்டே சொல்றத்துக்கு சரியான சந்தர்ப்பம் கிடைக்கலைங்கறதை விட எனக்கு நல்ல வேலை கிடைக்கலை..அது கிடைச்சிருந்தா எப்போவோ அவளைக் கல்யாணம் செய்திருப்பேன்..அவ வீட்லே அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சு ரொம்ப நாளாகிடுச்சு..இப்போவரை எப்படியோ சமாளிச்சுக்கிட்டு வந்தா..இனி அது தேவையில்லை..எனக்கு நல்ல வேலை கிடைச்சு எங்களுக்கு நல்ல வேளை பிறந்திடுச்சு.” என்றான்.

Advertisement