Advertisement

அத்தியாயம் – 11

கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்த இருவரும் கடந்த காலத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்க, அலுவலகத்தில் இருந்த சினேகாவை,’சினேஹ் கம் ஹியர்’என்று யாரோ அழைக்க, நிகழ்விற்கு திரும்பிய சினேகா,“அம்மா, இருக்கீங்களா?” என்று ஜோதியிடம் கேட்டாள்.

“ம்ம்” என்று அவர் ஆமோதிக்க,

“பழசை நினைச்சு டயம் வேஸ்ட் செய்யாதீங்க.” என்று அம்மாவைக் கண்டித்தவள்,”அம்மா, எனக்கு வேலை இருக்கு..இப்போ நான் போகணும்..நீங்க மதி மாமிகிட்டே பேசுங்க..மாண்ட்டி உடம்புக்கு சுகமில்லாம இருந்ததை சொல்லுங்க..புரிஞ்சுப்பாங்க.” என்றாள்.

“அவகிட்டே தான் பேசணும்..வேற யாரும் என்கிட்டே சரியாப் பேசறதில்லையே.” என்று வருத்தப்பட்டார் ஜோதி.

எப்படிப் பேசுவார்கள்? ஐந்து வருடங்களில் சினேகாவின் படிப்பு, கல்யாணம் இரண்டையும் முடித்து விட்டு காசியப்பனின் கடனையும் அடைத்து விடுவதாக சொன்ன ஜோதி, மகனின் கல்யாணத்தை முடித்து பேரன் எடுத்து விட்ட பின்னும் மகளின் கல்யாணமும் கடன் பாக்கியும் அப்படியே தான் இருக்கிறது. திட்டம் அவருடையதாக இருந்தாலும் அதைத் தனியாக நிறைவேற்ற அவரிடம் மனோபலம் இருக்கவில்லை. ஒரே மகன் மனோகரைத் கை கழுவ துணிவு இருக்கவில்லை. 

அம்மாவின் மனவருத்தத்தை உணர்ந்து,“அம்மா, இப்போ வேணாம்..இராத்திரி நான் வந்த பிறகு மதி மாமிகிட்டே பேசுங்க..நானும் பேசறேன்..ஓகே?” என்று கேட்டாள் சினேகா.

அதற்கு பதில் அளிக்காமல்,”வேற சைட்லே பதிச்சு வைக்கலாமா டீ? இங்கே எதுவும் ஒத்து வர மாட்டேங்குதே.” என்றார் ஜோதி.

அதைக் கேட்டு எரிச்சலடைந்த சினேகா,”நான் என்ன கேட்டேன்? நீங்க என்ன பேசிட்டு இருக்கீங்க? நம்ம பிரச்சனைக்கு என்னோட கல்யாணம் பதில் கிடையாதுன்னு உங்களுக்கு எப்போ புரியப் போகுதோ..ச்சே.” என்று அதை வெளிப்படுத்தியவுடன்,

“அப்படி நினைக்கலை டீ..ஆனா அதை நல்லபடியா முடிச்சிட்டேன்னா மனோகரோடவே இருந்துப்பேன்..தனியா இருக்கற செலவெல்லாம் மிச்சமாகுமில்லே..கடனை மொத்தமா அடைச்சிடலாமில்லே.” என்று அவரது நியாயத்தை எடுத்துரைக்க, அதைக் கேட்க சினேகா தயாராக இல்லை. 

“அம்மா, உங்களை மாத்தவே முடியாது.” என்று சொல்லி விட்டு அழைப்பைத் துண்டித்து விட்டாள்.

‘மாத்தவே முடியாது’ என்று மகள் சொன்னதை தான் மனோகர், ஷிக்காவின் காதல், கல்யாணத்தைப் பற்றி அவருடைய சகோதரர்களுக்கு தெரிவித்த போது அவர்களும் சொன்னார்கள்.’நீ இப்படியே இரு ஜோதி..முதல்லே உன்னோட புருஷன், இப்போ உன்னோட பையன்..அவர் சொன்னதுக்கு தலையாட்டிட்டு இருந்த..இப்போ இவன் சொன்னதுக்கு தலையாட்டிட்டு இருக்க..உன்னை மாத்தவே முடியாது.’ என்று செந்தில் சொல்ல, ‘அதுவும் அந்தப் பொண்ணு வடநாட்டுக்காரின்னு சொல்ற..அவன் விருப்பப்படி என்ன வேணும்னாலு செய்துக்கட்டும்..உனக்கு அவன் மட்டுமில்லை ஒரு மகளும் இருக்கறா..அவளுக்காக நீ யோசிக்க மாட்டேயா? நீயும் சினேகாவும் இங்கே வந்திடுங்க..நம்ம சைட்லே நல்ல பையானாப் பார்த்து மனோகர் கல்யாணத்துக்கு முன்னாடி சினேகாவுக்கு முடிச்சிடலாம்..அவனுக்கு ஆனப் பிறகு இவளுக்கு எத்தனை தேடினாலும் நல்ல குடும்பம் அமையாது..விநாயகம் மாமாகிட்டே சினேகாவுக்கு நல்ல இடமாப் பார்க்கச் சொல்லிடறேன்.’ என்றார் செல்வம்.

செந்திலின் மாமனார், மதியழகியின் அப்பா தான் விநாயகம். மதி அவரின் ஒரே மகள். மகளின் புகுந்த வீட்டில் பெரியவர்கள் யாரும் இல்லாததால் செல்வம், செந்தில் இருவருக்கும் ஆலோசனை, பண உதவி என்று அவரால் முடிந்ததை செய்து அவர்களின் குடும்பத்தில், வியாபாரத்தில் ஓர் அங்கமாக செயல்பட்டு வந்தார் விநாயகம். இந்தப் பழக்கம் இன்று, நேற்று ஆரம்பித்ததில்லை. மதியழகி அந்த வீட்டின் இளைய மருமகளான தினத்திலிருந்து  துவங்கிய வழக்கம். அந்த பழக்கத்தில் தான் காசியப்பனிடம் பாண்டியன் வாங்கிய கடனைப் பற்றி சொல்லி, எழுபதாயிரம் ரூபாயை கைம்மாத்தாக மாமனாரிடம் கேட்டார் செந்தில். சகோதரர்கள் இருவரிடமும் அந்த நேரத்தில் இரண்டு லட்சம் ரூபாய் ரொக்கம் இருக்கவில்லை. கடன் தொகையில் சிறிதளவாவது திருப்பிக் கொடுத்தால் தான் ஜோதி தில்லிக்குத் திரும்ப முடியாதென்பதால், அண்ணன், தம்பி இருவரும் ஆளுக்கு ஒரு லட்சம், மொத்தமாக இரண்டு லட்சம் கொடுத்து தங்கைக்கு உதவ முடிவு செய்திருந்தனர். 

செல்வத்திடம் ஐம்பதாயிரம் தான் இருந்தது. மீதிக்கு என்ன செய்வதென்று அவர் யோசனை செய்த போது, மீனாட்சி அவரது நகையைக் கழட்டிக் கொடுத்து விட்டார். மீனாட்சியின் பிறந்த வீடு மதியின் பிறந்த வீடு போல் வசதி தான். உதவி என்று போய் நின்றால் கண்டிப்பாக உதவி செய்வார்கள் தான். ஆனால் அதிலொரு சிக்கல் இருந்தது. மதி ஒரே மகளாகிப் போனதால் பிறந்த வீட்டின் முழு ஆதரவு அவருக்கு மட்டும் தான். மீனாட்சியுடன் பிறந்தவர்கள் மூன்று பேர், இரண்டு சகோதரிகள் ஒரு சகோதரன். ஒரு பெண்ணிற்கு செய்தால்  அதே போல் மற்ற இருவருக்கும் செய்ய வேண்டுமென்பதால் பிறந்த வீட்டில் உதவி கேட்பது மீனாட்சிக்கு பிடிக்காது. அவருடைய சகோதரன் தான் வீட்டிலேயே இளையவன் என்றாலும் பெற்றவர்களின் சார்பாக மூத்த சகோதரிகளுக்கு மாறி மாறி சீர் செய்து கொண்டிருப்பவனின் தோளில் மேலும் சுமையை ஏற்ற மீனாட்சி விரும்பவில்லை. அதே சமயம் அவரின் மகள் வனிதாவின் திருமணத்திற்கு ஏழெட்டு வருடமாகும் என்பதால் தயக்கமில்லாம  நகையைக் கழட்டி கணவனிடம் கொடுத்து விட்டார்.

“கைம்மாத்தெல்லாம் எதுக்கு? பத்து லட்சம் தானே நான் கொடுக்கறேன்..ஒரு வாரம் டைம் கேளுங்க….எப்போ முடியுமோ அப்போ உங்க தங்கை திருப்பிக் கொடுத்தா போதும்..நம்ம குடும்பதானே.” என்றார் வி நாயகம்.

சகோதரர்கள் இருவருக்கும் அந்தத் தீர்வு சரியானது என்று தோன்றியதால் விநாயகம் மாமாவின் உதவியை ஏற்றுக் கொள்ள விரும்புவதாக ஜோதியிடம் சொல்ல,’கூடவே கூடாது.’ என்று ஒரேயடியாக மறுத்து விட்டார். இதுவரை பிறந்த வீட்டினரோடு ஒட்டி உறவாடியதில்லை, சகோதரியாக சகோதரர்களுக்கோ இல்லை அத்தையாக அவர்களின் பிள்ளைகளுக்கோ ஓர் உதவி செய்ததில்லை, ஒரு பைசா கொடுத்ததில்லை. இன்று அவருக்காக பத்து லட்சத்தை கொடுக்கத் தயாராக இருந்த மதியின் அப்பா மீது பெரும் மரியாதை ஏற்பட்டது. அவரிடமிருந்து பணம் பெற்றுக் கொள்வது மிகவும் சுயநலமான செயலாகத் தெரிந்ததால் தான் மறுப்பு தெரிவித்து விட்டார் ஜோதி. அதன்பின் விநாயகமும் வற்புறுத்தவில்லை. மாப்பிள்ளை செந்தில் கேட்ட தொகையைக் கொடுத்து விட்டு, இரண்டு லட்சத்தைக் காசியப்பன் கையில் தான் கொடுக்க வேண்டும், அப்படிக் கொடுக்கும் போது தெரிந்தவர் யாரையாவது சாட்சியாக வைத்துக் கொள்ள வேண்டுமென்று ஆலோசனை அளித்தார். அதற்கு,

“அவர் வரப் போகறதில்லை மாமா…அவரோட ஆள் தான் நம்ம வீட்டுக்கு வந்து வாங்கிட்டு போவாருன்னு சொல்லியிருக்கார்.” என்றார் செந்தில்.

“அது தான் கூடாதுன்னு சொல்றேன்..பணத்தை வாங்கிட்டுப் போறவன் அவரோட ஆள், அவருக்கு வேண்டியவன், தெரிஞ்சவன்..அவனைப் பற்றி நமக்கு எதுவும் தெரியாது..இந்த மாதிரி விஷயத்திலே எல்லாம் ஆரம்பத்திலேயே இப்படித் தான் கொடுப்போம்னு கண்டிஷனா சொல்லிடணும்…இந்தப் பணப் பட்டுவாடா அஞ்சு வருஷம் நீடிக்கப் போகுது..அமௌண்ட் என் கைக்கு வரலைன்னு காசியப்பன் சொன்னா இல்லை அந்த ஆள்கிட்டே கொடுத்திட்டோம்னு நம்மளாலே எப்படி நிரூபிக்க முடியும்..ஒண்ணு ஸ்டாம்ப் பேப்பர்லே பத்து லட்சத்தை அஞ்சு வருஷத்திலே திருப்பிக் கொடுக்கறதா எழுதி வாங்கிட்டு கொடுங்க..அந்த ஏற்பாடு வேணாம்னு சொன்னா, ரொக்கமா யார் கைலேயும் கொடுக்காம அவரோட வங்கிக் கணக்குக்கு அனுப்பி விட்டிடுங்க.” என்று கரெக்ட்டான அறிவுரை அளித்து காசியப்பனைச் சரியாக கார்னர் செய்தார் விநாயகம்.

விநாயகம் மாமாவின் ஆலோசனை நியாயமாகப் பட்டதால் அதை காசியப்பனிடம் கொண்டு சென்றனர் சகோதரர்கள்.

அதைக் கேட்டு கிலியான காசியப்பன், ஸ்டாம்ப் பேப்பர், வங்கி பற்றிய ஆலோசனைகள் காதில் விழாதது போல், சாட்சி வேண்டுமென்று சொன்னதற்கு,“நமக்குள்ளே எதுக்கு இன்னொரு ஆள்? என்னை நம்பலையா? வாங்கிட்டு இல்லைன்னு சொல்லுவேனா?” என்று வாய் கூசாமல் கேட்டார் கொடுக்காமலேயே கொடுத்து விட்டேன் என்று பொய் சொன்ன கேடி.

“அஞ்சு வருஷத்துக்கு ஒத்துக்கிட்டிருக்கீங்க..கொஞ்சம் கொஞ்சமா தான் கொடுப்போம்..ஜோதி எங்களுக்கு அனுப்பி வைக்கும்..நாங்க உங்க ஆளுக்குக் கொடுப்போம்..அவர் உங்களுக்குக் கொடுப்பார்..நடுவுலே ஏதாவது தவறாகிடுச்சுன்னா..அதான் மாமா சொன்ன போது சாட்சி வைச்சுக்கறது  சரின்னு பட்டிச்சு..இப்போ நீங்க சொல்றதும் சரின்னு படுது. நமக்குள்ளே எதுக்கு வெளி ஆள் விநாயகம் மாமாவையே அழைச்சிட்டு வரேன்.” என்றார் செந்தில்.

அதற்கு மேல் அந்த யோசனைக்கு மறுப்பு தெரிவித்தால் அவர் மேல் சந்தேகம் வரக் கூடுமென்பதால். பின் நாள்களில் பிரச்சனை ஏதாவது வந்தால் அண்ணன், தம்பி இருவரையும் எளிதாக மிரட்டிவிடலாமென்று மனக்கணக்கு போட்டு, ஐந்து வருடம் வரை விநாயகம் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என்று தப்புக்கணக்குப் போட்டு,”பெரியவர் சொல்றதிலே நியாமிருக்கு.”என்று அந்த ஏற்பாட்டிற்கு ஒப்புக் கொண்டார் காசியப்பன்.

விநாயகம் முன்னிலையில் இரண்டு லட்சத்தைப் பெற்றுக் கொண்டு பாண்டியன் குடும்பத்தினரைத் தில்லிக்கு அனுப்பி வைத்தார் காசியப்பன்.

கணவரின் காரியங்களை முடித்து விட்டு தில்லிக்குத் திரும்பிய ஜோதிக்கு சின்ன சின்ன விஷயங்கள் கூட பெரிதாக தெரிந்தன. சில சமயங்களில் அவை பெரிய பிரச்சனைகளாகிப் போயின. அதற்கு மகன், மகள் இருவருமே காரணமாகிப் போயினர். மனோகரின் நடவடிக்கைகள் சிலது ஜோதிக்குப் பிடிக்கவில்லை. தென் இந்தியாவில் வேலை தேடிக் கொள்ளும்படி அவர் சொன்னதை அவன் காதில் போட்டுக் கொள்ளவேயில்லை. ‘எனக்கு சௌத் செட்டாகாது..நான் இங்கே தான் இருக்கப் போறேன்..இந்த சைட் தான் வேலை தேடிக்கிட்டு இருக்கேன்.’ என்று அவனது மனத்தில் இருந்ததைப் பகிர்ந்து கொண்டு ஊரோடு போக இருந்த ஜோதியின் திட்டத்தில் மண்ணை அள்ளிப் போட்டான் மனோகர். 

மனோகரின் திட்டத்தைக் கேட்டு ஜோதியின் இரத்தக் கொதிப்பு எக்குத்தப்பானது. அவரது குமுறலை அப்படியே சகோதரர்களிடம் பகிர்ந்து கொள்ள,’அவன் எங்கே வேணும்னாலும் வேலை தேடிக்கட்டும்..வெளிநாட்டுக்கு கூட போகட்டும்..நீயும் சினேகாவும் இங்கே வந்திடுங்க.’ என்று ஆலோசனை அளித்தனர். அது சரியான யோசனையாக பட்டதால்,‘நீ இங்கேயே இரு இல்லை வெளி நாட்டுக்கு போ அது உன்னோட முடிவு…நானும் சினேகாவும் ஊரோட போயிடறோம்.’ என்று அவரது முடிவை வெளியிட்ட ஜோதியின் மனதோரத்தில், மகன் அவனது முடிவை மாற்றிக் கொண்டு விடுவானென்று சிறிதளவு நம்பிக்கை சிறகடித்துக் கொண்டிருந்தது. 

ஜோதியின் முடிவிற்கான எதிர்வினை தெரியும் முன்,’பெங்களூர், சென்னை சிட்டி கூட செட்டாகதுன்னு மனோ சொன்னா உடனே தலையாட்டி ‘எங்கே வேணும்னாலும் இருந்துக்கோன்னு’ சொல்றீங்க.. எனக்கு மட்டும் உங்க சொந்த ஊர் எப்படி செட்டாகும்? நான் வர மாட்டேன்..அப்படியே வந்தாலும் ஊர்லே உங்களோட இருக்க மாட்டேன்..என்னை சென்னைலே ஹாஸ்ட்லே சேர்த்து விடுங்க..மனோ இங்கே..நான் சென்னைலே..நீங்க ஊர்லேர்ன்னு மூணு பேரும் மூணு இடத்திலே தனிக் குடித்தனம் நடத்துவோம்.” என்று ஜோதியோடு சண்டை போட்டாள் சினேகா.

வேறு வழியில்லாமல், மகன், மகள் இருவரின் விருப்பத்திற்கு அடிபணிந்தார் ஜோதி. தில்லியில் ஒரு பிரபலமான கல்லூரியில் ஆங்கில இலக்கியம் ஆனர்ஸ் பட்டப்படிப்பில் சேர்ந்து கொண்டாள் சினேகா. வட மாநிலங்களில் அவனது படிப்பிற்கும் அனுபவத்திற்கும் ஏற்ற வேலைக்கான தேடல் வேட்டையில் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்தான் மனோகர். ஜோதியின் அந்த முடிவில் சகோதரரகள் இருவருக்கும் மனத்தாங்கல் ஏற்பட அதை போக்க ஜோதிக்கு வழி தெரியவில்லை. அடுத்து நடந்த நிகழ்வுகளில் அந்த வருத்தமானது பெரிதாகிப் போனது.

கணவரின் முதல் நினைவு நாளைக் கொண்டாட ஊருக்குச் செல்ல ஜோதி திட்டமிட, மகன், மகள் இருவரும் முடியாதென்று மறுத்து விட்டனர். புது வேலையில் சேர்ந்திருந்ததால் ஒரு வாரம் போல் விடுமுறை கிடைக்காதென்று தெரிவித்து விட்டான் மனோகர். சினேகாவிற்கு செமஸ்டர் பரீட்சை நெருங்கிக் கொண்டிருந்தாலும், அப்பாவிற்காக ஊருக்கு செல்ல அவளைத் தயார் செய்து கொண்டாள். ஆனால் அவளுடைய அப்பாவின் குடும்பத்தினரைச் சந்திக்கப் பிடிக்கவில்லை. அப்படியே சந்திக்க நேர்ந்தால் சித்தப்பா, சித்தி, அத்தை, மாமா என்று அனைவரையும் வைத்து வாங்கி விடுவோமென்று பயம் ஏற்பட, அதைக் காரணமாக ஜோதியிடம் சொல்ல,’எனக்கும் மட்டும் அவங்களைப் பிடிக்குதா? கடன்னு ஓர் ஆள் வந்து நின்னதும் அப்படியே ஓடிப் போனவங்க..இதுவரை ஒரு தடவை ஃபோன் செய்து என்ன? ஏது? ந்னு ஒரு வார்த்தை விசாரிக்கலை..தினமும் ஃபோன்லே குட் மார்னிங், குட நைட் போட்டிட்டு இருக்காங்க..அவங்களை நினைச்சா எனக்கும் தான் ஆத்திரம் வருது..ஆனா அவங்க இல்லாமச் சடங்கு செய்ய முடியாது..உன் அத்தை வரலைன்னா கூட பரவாயில்லை..உன் சித்தப்பா கண்டிப்பா வரணும்..என்னோட அண்ணன், தம்பி கூட அவசியமில்லை.’ என்று சொல்ல, மாமாக்கள் இருவரையும் கலந்தாலோசிக்காமல் தில்லியில் அனைத்தையும் நடத்த முடிவு எடுத்தான் மனோகர்.

மனோகரின் அந்த முடிவு செல்வம், செந்தில் மனத்தில் மனோகர் அவர்களை ஒதுக்கி விட்டதாக ஓர் எண்ணத்தை ஏற்படுத்தி விட்டது. அப்படி எதுவுமில்லை என்று ஜோதி எடுத்துச் சொல்லியும் அவர்கள் சமாதானம் ஆகவில்லை. காமராஜ் தம்பதியை சென்னையிலிருந்து வரவழைத்து ஹரித்வாரில் காரியங்களை செய்து முடித்தார் ஜோதி.  அந்த வருடம் ஒரு லட்சமும் அடுத்த வருடம் இன்னொரு லட்சமும் அண்ணன்கள் மூலமாக காசியப்பனுக்கு அனுப்பி வைத்து பத்து லட்சத்தில் நான்கு லட்சங்கள் கொடுத்திருந்தார் ஜோதி. சினேகாவின் பட்டப்படிப்பு முடிய இருந்த வருடம், மனோகரின் கல்யாணம், அவருக்கும் சினேகாவுக்கும் தனியாக வீடு பார்த்து, அடவான்ஸ் கொடுப்பது என்று எக்கச்சக்க செலவுகள் செய்ததால் காசியப்பனுக்கு ஐம்பதாயிரம் தான் ஜோதியால் கொடுக்க முடிந்தது.. 

நான்கு வருடங்களாக சகோதரர்கள் கொடுத்த பணத்தை அவர்களுக்குத் திருப்பிக் கொடுக்க முயன்று, கொடுக்க முடியாமல் போனதில் உறக்கத்தை இழந்திருந்தார் ஜோதி. சினேகாவிற்கு திருமணம் நிச்சயம் செய்த பிறகு எப்படியாவது சகோதரர்களுக்கு கொடுக்க வேண்டியதைக் கொடுத்து விட்டு அப்படியே காசியப்பனின் பாக்கியை அடைத்து விட முடிவு எடுத்திருந்தார் ஜோதி. இத்தனை நிகழ்வுகளுக்கு இடையே கடனை அடைக்க ஜோதி எடுத்துக் கொண்டிருந்த முயற்சிகள் தெரியுமென்பதால் சகோதரர்களும் அவர்களின் மனைவிமார்களும் ஜோதியை ஒரு வார்த்தை தப்பாக பேசவில்லை. ஏன் கொடுக்கவில்லை என்று கேட்கவேயில்லை. 

இப்படியொரு சூழ் நிலையில், சினேகாவிற்குத் திருமணம் நிச்சயம் செய்யும் முன் மனோகர் அவனது திருமணத்தை முடித்து வைக்கும்படி ஜோதிக்கு நெருக்கடி கொடுத்து அதைச் சாதித்தும் கொண்டு விட்டான். அதிலிருந்து சகோதரர்கள் இருவரும் ஜோதியின் விஷயத்தில், குடும்ப விவகாரங்களில் தலையிடுவதேயில்லை.

Advertisement