Advertisement

அத்தியாயம் – 10

‘ஸ்டேஷனுக்குப் போகலாம்..இன்ஸ்பெக்டர் அங்கே தான் இருப்பான்.’ என்று காசியப்பன் சொல்லிக் கொண்டிருந்ததைக் கேட்டபடி பின்கட்டிலிருந்து வந்த செந்தில் நாதனின் மனைவி மதி, காமராஜின் மனைவி ப்ரியா, பாண்டியனின் தங்கை வேணி மூவரும் அதிர்ச்சியாகினர். கூடத்தில் ஓர் ஓரமாக நின்றிருந்த மீனாட்சி, ஜோதி அருகில் போய் நின்று கொண்டனர். அதுவரை அறை வாசலில் நின்றிருந்த சினேகாவும் அவளுடைய அம்மா அருகே போய் நின்று கொண்டாள்.

‘போலீஸ்’ என்ற ஒரு வார்த்தையை பொறியாகப் பயன்படுத்தி, அவர் விரும்பியதைச் சாதித்துக் கொள்ளத் திட்டமிட்டிருந்த காசியப்பன் அறிந்திருக்கவில்லை, பல வருடங்கள் கழித்து, அதே வார்த்தை தான் அவரை அதே பொறியில் சிக்க வைக்கப் போகிறதென்று. மோசடிக்காரர்களுக்கு உறவு, சொந்தம் என்று ஒன்றும் கிடையாது. பணத்திற்காக எந்த எல்லைக்கும் போகக் கூடியவர்களென்ற விழிப்புணர்வு அவர் மூலம் தான் அந்தக் குடும்பத்திற்குக் கிடைக்கப் போகிறதென்று அந்த குடும்பத்தினருக்கு அப்போது தெரியவில்லை.

தில்லியில் காசியப்பன் போன்ற களவானிகளிடமிருந்து தன்னையும் தனது குடும்பத்தையும் பாதுகாத்து கொண்ட பாண்டியன் சொந்த ஊரில் ஏமாந்து போனதற்கு காரணம் ’நம்ம சொந்தம்’ என்ற அடிப்படை எண்ணம் தான். பல வருடங்களாக வெளியூரில் வேலை பார்த்து வருபவர்களில் பெரும்பாலோர்க்கு அவர்களின் கடைசி காலத்தை சொந்த ஊரில், வீட்டில் கழிக்க வேண்டுமென்ற கனவு இருக்கும். பாண்டியன் அதற்கு விதிவிலக்கல்ல. அதனால் தான் சினேகாவின் பள்ளிப்படிப்பு முடிந்ததும் சொந்த ஊருக்கு செல்ல முடிவெடுத்திருந்தார். அவரது போறாத காலமா இல்லை ஜோதியின் தலையெழுத்த தெரியவில்லை சொந்த வீடுடன் சொந்த தொழிலும் ஜோடி சேர்ந்து கொண்டது. அவரது விதி முடிந்ததால் பிரச்சனையிலிருந்து பாண்டியன் தப்பித்துக் கொள்ள, ஜோதி வசமாக மாட்டிக் கொண்டார். 

தில்லியில், உடன் வேலை செய்த சிலரால் அவ்வப்போது பாண்டியனுக்கு சிறு சிறு சங்கடங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அவர் நேர்மையானவர் என்பதால் அந்தச் சங்கடங்களை வேறு விஷயங்களோடு கோத்து அதைச் பெரிய பிரச்சனையாக யாராலும் மாற்ற முடியவில்லை. சில சமயங்களில், சூழ்நிலைகள் அவர் கையை மீறிச் சென்ற போது உயர் அதிகாரிகள் சிலரின் உதவியோடு அந்தச் சூழ்நிலையிலிருந்து வெளியே வந்திருக்கிறார் பாண்டியன். அப்போது, அவருக்கு உதவி செய்த அதிகாரிகள்,’பாண்டியன், கொஞ்சம் இணக்கமா போங்க.’ என்று அறிவுரை அளித்திருக்கின்றனர். அப்படி இருக்க அவரால் முடியவே முடியாதென்று பாண்டியனுக்குத் தெரியும். அதனால் தான் அவருக்கு நண்பர்கள் வட்டமென்று ஒன்று அமையவேயில்லை. பெரிய சிக்கல் எதிலும் மாட்டிக் கொள்ளாமல் பாண்டியன் தப்பித்தது தெய்வத்தின் அருள் தான்.

அவரின் பிடிவாதக் குணத்திற்கும் நீக்குப்போக்காக நடக்க வேண்டிய ரியல் எஸ்டேட் தொழிலுக்கும் ஒத்து போவது கடினமென்று பாண்டியனுக்குத் தெரிந்திருந்தாலும் அந்தத் தொழிலில் கிடைத்த லாபம் அவரை ஈர்த்து விட்டது. பல்லாயிரக் கணக்கான மைல்களுக்கு அப்பால், பாதையில்லாத, போக்குவரத்து வசதியில்லாத, முக்கியமாக பிராணவாயு இல்லாத நிலவின் நிலத்தை, பூமியில், நிலையில்லாத வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பவர்களிடம்,’நீங்க அங்கே போக முடியலைன்னாலும் வருங்காலத்திலே உங்க சந்ததி போக வாய்ப்பிருக்கு..ரொம்ப சீப்..ஒரு ஏக்கர் வாங்கிப் போடுங்க.’ என்று ஆசை காட்டி,  மானிட வர்க்கம் முழுமைக்கும் சொந்தமான சந்திரனைத் தனது என்று சொந்தம் கொண்டாடி, உரிமை சாசனம் செய்து கொடுத்து, லாபம் ஈட்ட மார்கெட் இருக்கும் போது, மாவட்ட தலைமையகம், இரயிலடி, பேருந்து நிலையம், கல்லூரி, பள்ளிக்கூடம், மருத்துவமனை, பஜார் என்று அனைத்தும் சில கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் அவரது சொந்த ஊரில் ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் ஈடுபட்டால் நஷ்டம் வர வாய்ப்பேயில்லை என்று கணக்கு போட்டு தான் அந்த வியாபாரத்தை தேர்ந்தெடுத்திருந்தார் பாண்டியன். 

சொந்த வியாபாரத்தில் அவர் வழி வரப் போகும் வரப்பு தகராறுகள், பட்டா, சிட்டா சிக்கல்கள், வில்லங்கமான வில்லங்கங்களை தீர்க்க அவர் பக்கத்தில் ஒரு பெரிய ஆள் பெயருக்காவது இருப்பது அத்தியாவசியம் என்று உணர்ந்ததால் தான் காசியப்பனை அணுகினார் பாண்டியன். 

‘உறவுக்காரர், அண்ணன் முறை, சுற்று வட்டாரத்திலே பெரிய தலை, அவர் நம்ம பக்கத்திலே இருந்தா வேற தலை எதுவும் பக்கம் வராது, தொந்தரவு கொடுக்காது.’ என்று எண்ணித் தான் அவரது திட்டங்களை காசியப்பனிடம் பகிர்ந்து கொண்டார். ஒருவேளை பாண்டியன் உயிரோடு இருந்திருந்தால், சொந்த ஊரில் செட்டிலாகி இருந்தால், சொந்த வியாபாரத்தை தொடங்கியிருந்தால் காசியப்பனின் உண்மை சொரூபம் அவருக்குத் தெரிய வந்திருக்கும். அப்போது அவரது சுயரூபத்தைக் காட்டி காசியப்பன்னைக் கண்டிப்பாக கம்பி எண்ண வைத்திருப்பார் பாண்டியன். 

மலையாக இருந்தாலும் மோதிப் பார்க்கும் பாண்டியனின் தில், மனவுரம், துணிவு, முட்டாள்தனம் அந்தக் குடும்பத்தின் ஆண்களுக்கு இல்லாததால் காசியப்பனின் பணத்தைத் திருப்பி கொடுப்பதை தவிர வேறு வழியில்லை என்ற முடிவிற்கு வந்திருந்தனர்.

அன்று காலையில் படையல் வைத்து, சாமியாக நினைத்து வணங்கிய பாண்டியனை இப்போது மனத்தினுள் வசை பாடிக் கொண்டிருந்தனர் ஜோதியின் சகோதரர்கள். பாண்டியனின் பிள்ளைகள் தான் அவருக்கு சாதகமாக யோசிக்கக் கூடியவர்கள். ‘போலீஸ்’ என்ற சொல் அவர்களைப் பீதிக்கு உள்ளாக்கியிருந்ததால் அடுத்து என்ன என்ற அச்சத்தில் அமைதியாக இருந்தனர். காசியப்பனின் கூற்றை ஆராய அவர்களுக்குத் தோன்றவில்லை. அவர் பொய் சொல்லியிருக்கக் கூடுமென்று துளி கூட பெரியவர்களுக்குச் சந்தேகம் வரவில்லை.

காசியப்பன் பேசி முடித்தபின் அடுத்த சில நொடிகளுக்கு அனைவரும் அமைதியாக இருந்தனர்.  

தொண்டையைச் செருமி சரி செய்து கொண்டு,“அவ்வளவு பணத்தை நீங்க சொல்ற மாதிரி நாளைக்கோ இல்லை அடுத்த நாளைக்கோ கண்டிப்பா கொடுக்க முடியாது..நாளைக்கு ஜோதி தில்லிக்குப் போயே ஆகணும்.” என்று தங்கையின் சார்பாக பேசினார் செல்வக்குமார். 

“துபாய்லே ஆள் இருக்கும் போது இங்கே இருக்கற தில்லிலேயும் ஆள் இருக்கும்னு உங்களுக்குப் புரிஞ்சிருக்கும்னு நினைச்சேன்..எனக்குச் சேர வேண்டியதை கொடுக்காம யாரும் எங்கேயும் போக முடியாது..பணம் கைக்கு வந்தாகணும்..அது வரை உங்க தங்கச்சி இங்கே இருந்தாகணும்.” என்றார் காசியப்பன்.

“அது எப்படிங்க முடியும்? பையன் வேலைக்குப் போகணும்..பிள்ளைக்கு ஸ்கூல் இருக்கு.” என்று இந்தமுறை தங்கைக்காக செந்தில் நாதன் பேச,

“அப்போ நான் வெட்டியா இருக்கேன்னு சொல்றேயா?” என்று ஒருமையில் காசியப்பன் எகிற, அதைப் பார்த்து, பயத்தில், வீட்டுப் பெண்கள் ஒருத்தரோடு ஒருத்தர் நெருங்கி நின்று கொண்டனர்.

அனைவருக்கும் பயத்தைக் காட்டிய திருப்தியில்,”எல்லோருக்கும் வேலை இருக்கு..அண்ணன், தம்பி இரண்டு பேரும் உங்க பொழைப்பைப் பார்க்க போகணுமில்லே அதான் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் இதை முடிச்சுக்கலாம்னு சொன்னேன்.” என்று இந்தமுறை காசியப்பன் தன்மையாகப் பேசினாலும் போலீஸை மறுபடியும் இழுத்தவுடன், ஜோதியிடமிருந்து அவரது கரத்தை விடுவித்துக் கொண்டு, வாயில் அருகே நின்றிருந்த கணவரிடம் சென்ற மீனாட்சி, குசுகுசுவென்று அவரிடம் ஏதோ சொல்ல, தலையசைவில் செல்வம் மறுப்பு தெரிவிக்க, வந்த கோபத்தை மறைத்துக் கொண்டு, ஒரு முடிவுடன் காசியப்பன் புறம் திரும்பி,

“பெரிய பிரச்சனைக்கு எப்படி உடனே முடிவு எடுக்க முடியும் அண்ணே..அதுவும் இது பண விஷயம்..கொஞ்ச அவகாசம் கொடுங்க..ஜோதி தில்லிக்கு போனாலும் நாம இங்கே தானே இருப்போம்..நாளை பின்னே ஒருத்தர் மூஞ்சியை ஒருத்தர் பார்த்துக்கணுமே.” என்று வீட்டு ஆண்கள் சொல்லத் தயங்கியதை தயக்கமில்லாமல் சொல்லி விட்டார் முத்துமீனாட்சி.

அது காசியப்பனனை நிதானத்திற்கு அழைத்து வந்தது. ‘ரொம்ப ப்ரேஷர் கொடுத்தோம்னா எதுவுமே கிடைக்காம போயிடப் போகுது.’ என்று புத்தியில் உரைக்க, மீனாட்சி எடுத்து வந்த தண்ணீரைக் குடித்து விட்டு,

“சரி தங்கச்சி..உனக்காக இரண்டு நாள் டயம் கொடுக்கறேன்..யோசனை செய்து ஒரு நல்ல முடிவுக்கு வாங்க.” என்று கெடு கொடுத்து விட்டு வெளியேறினார்.

ஜோதியின் திருமணத்திற்கு பின் தான் செல்வக்குமாருக்கு முத்துமீனாட்சியுடன் திருமணம் நடந்தது. செந்தில் நாதன், மதியழகியின் திருமணம் காமராஜ், ப்ரியா திருமணத்திற்க்குப் பின்னர் தான் நடந்ததேறியது. பாண்டியனை விட வயதில் பெரியவர் செல்வக்குமார். காமராஜை விட வயதில் பெரியவர் செந்தில்.  செல்வம், செந்திலின் பிள்ளைகள் மனோகர், சினேகாவை விட வயதில் சிறியவர்கள். அண்ணன், தம்பிக்கு இடையே சச்சரவு வந்தாலும் மீனாட்சி, மதி இருவரும் ஒருவரையொருவர் அனுசரித்து போவதால் தான் அவர்களின் வாழ்க்கை நிம்மதியாக சென்று கொண்டிருந்தது. 

இரண்டு குடும்பத்தினர்க்கு இடையே இருந்த நல்லுறவை கடந்த சில நாள்களாக கண்கூட பார்த்துக் கொண்டிருந்த காமராஜ் இன்று காசியப்பன் மூலம் அதற்கு  மூடுவிழா வந்து விட்டது என்று நினைத்தார்.  அதற்குக் காரணம் காசியப்பன் சென்ற பின் செல்வக்குமாருக்கும் செந்தில் நாதனுக்கும் இடையே நடந்த வாக்குவாதம் தான். 

இந்தப் பிரச்சனையை தீர்க்க அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்று அறிந்து கொள்ள காமராஜும் கமலக்கண்ணனும் ஆவலாக காத்திருக்க, அதை உணர்ந்த மீனாட்சி, வயதில் சிறியவராக இருந்தாலும் வீட்டிற்குப் பெரியவராக,

‘இன்னும் இரண்டு நாள் அவகாசம் இருக்க..ஜோதியும் இங்கே தான் இருக்கப் போறா..மெதுவாப் பேசிக்கலாம்.” என்று அந்த உரையாடலுக்கு அதாவது அண்ணன், தம்பி வாக்குவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து,”அண்ணி, உங்க வீட்டு ஆளுங்களுக்கு வேண்டியதை செய்து கொடுத்து அனுப்பி வைங்க..எனக்கு அசதியா இருக்கு நான் கொஞ்சம் படுத்துக்கறேன்.” என்று சொல்லி விட்டு அறையினுள் சென்றவர் தான் அதன் பின் வெளியே வரவேயில்லை. கஷ்டத்தில் கை கொடுக்காத உறவுகளுக்கு அந்த மரியாதை போதுமென்ற முடிவிற்கு வந்திருந்தார் அவர்.  

தில்லிக்கு செல்லயிருந்தவர்கள் செல்ல போவதில்லை. முடியவில்லை. சென்னைக்கு செல்ல வேண்டியவர்கள் இரவு வரை கூட காத்திருக்காமல் மாலையிலேயே கிளம்பிச் சென்று விட்டார்கள். பத்து லட்சம் அவர்களைத் துரத்தி அடித்து விட்டது. ஜோதியின் சகோதரர்களால் அப்படித் தள்ளி இருக்க முடியவில்லை. தங்கையை நிராதரவாக விட முடியவில்லை. ஜோதியும் அவரின் பிள்ளைகளும் அவர்கள் அறையில் முடங்கி இருந்த போது அண்ணன், தம்பி இருவரும் அவர்களின் மனைவிமார்களோடு கலந்தாலோசித்து ஒரு முடிவிற்கு வந்தனர்.

அண்ணன், தம்பி சண்டை இருவரும் சில சமயங்களில் சண்டை போட்டுக் கொண்டு முகம் பார்க்கமால் இருந்தாலும் வெவ்வேறு குடும்பத்திலிருந்து வந்திருந்த அக்கா, தங்கை இருவரும் சிரித்துப் பேசிக் கொள்வார்கள், குழந்தைகளை அழைத்துக் கொண்டு வெளியே செல்வார்கள், அவர்கள் உறவில் கசப்பு படர்ந்து விடாமல் பார்த்துக் கொள்வார்கள்.  நல்லது, கெட்டது, சந்தோஷம், துக்கம், சிரிப்பு, அழுகை என்று அனைத்தையும் இரண்டாக பங்கு போட்டுப் பழகி இருந்தவர்கள் அந்த வழக்கத்தின் படி, ஜோதியின் சார்பாக, உடனடியாக ஆளுக்கு ஒரு லட்சம் என்று காசியப்பனிடம் இரண்டு லட்சத்தைக் கொடுத்து விட்டு மீதியைக் கொடுக்க கால அவகாசம் கேட்கலாமென்ற முடிவிற்கு வந்திருந்தனர். அதை ஜோதிக்குத் தெரியப்படுத்த இரவு உணவை முடித்துக் கொண்டு பிள்ளைகள் உறங்கும் வரை காத்திருக்க வேண்டியதாயிற்று.

அன்றிரவு, வீட்டுப் பிள்ளைகள் உறங்கச் சென்ற பின் மற்றவர்கள் கூடத்தில் கூடினர். 

“பெரிய மாமா, நாளைக்கு நாங்க கண்டிப்பா கிளம்பணும்..இரண்டு நாள் கழிச்சு எனக்கு பரீட்சை இருக்கு..ஆப்ஸெண்ட் ஆக முடியாது.” என்று உரையாடலை ஆரம்பித்தாள் சினேகா.

“இந்தப் பிரச்சனைக்கு ஒரு முடிவு எடுக்காம எப்படி நீங்க வீட்டுக்குப் போக முடியும்?” என்று கேட்டார் செல்வம்.

சினேகாவிடம் அதற்கு பதில் இல்லை.”பெரிய மாமா, விஷயம் போலீஸ்க்கு போகாமப் பார்த்துக்கணும்..போயிடுச்சுன்னா என் எதிர்காலம் அவ்வளவு தான்.” என்றான் மனோகர்.

அதற்கு, ஏற்கனவே குடும்பமாக ஒரு முடிவு எடுத்திருந்தாலும்,“மொத்தப் பணத்தையும் கொடுத்திட்டா அவன் ஏன் போலீஸுக்குப் போகப் போறான்?” என்றார் செந்தில் நாதன்.

“செந்தில், திரும்ப திரும்ப அதையே பேசாதே..ஜோதியாலே எப்படி மொத்தத்தையும் தூக்கிக் கொடுக்க முடியும்? சினேகாவைப் படிக்க வைக்கணும்..கட்டிக் கொடுக்கணும்..அவ இங்கேயே வந்த பிறகு அவ இருக்க ஓர் இடம் வேணாமா..எத்தனை செலவு இருக்குது.” என்று தங்கைக்காக தம்பியிடம் சண்டை போட்டார் செல்வம்.

“எப்படி இவ்வளவு செலவு இருக்கும் போது வியாபாரத்திலே போட அவர்கிட்டே பணம் இருந்திருக்கு.” என்று கேட்டார் செந்தில்.

“அதைப் பற்றி இப்போ பேசி ஒண்ணும் ஆகப் போகறதில்லை..மிளகு அளவு விஷயம் கூட போதும்..அவர்கிட்டே போனாப் பெரிசா பத்திக்கும்..யார் என்ன சொன்னாலும் செய்தாலும் அந்தத் தீயை அணைக்கவே முடியாது..தானா அணைஞ்சா தான் உண்டுன்னு தெரியுமில்லே.” என்று தம்பியிடம் கோபப்பட்டார் செல்வம்.

மறைந்து போன கணவரின் குணத்தைப் பற்றி அண்ணன் சொன்னது உண்மை என்பதால் வாயைத் திறக்காமல் மௌனமாக அமர்ந்திருந்தார் ஜோதி.

“இப்படி சும்மா உட்கார்ந்திருந்தா எப்படி ஜோதி..உன் மனசிலே என்ன இருக்குண்ணு நீ சொன்னா தானே தெரியும்.” என்று தங்கையின் மனசில் இருப்பதை தெரிந்து கொள்ள நேரடியாக கேட்டார் செந்தில்.

ஜோதி என்ன சொல்லப் போகிறாரென்று அனைவரும் காத்திருக்க, சில நொடிகள் கழித்து,”அவர் விட்டிட்டுப் போன பணத்திலிருந்து பத்து லட்சத்தை எடுத்து கொடுத்திட்டா சொந்த வீடு, சினேகா கல்யாணம் இரண்டுத்தையும் எப்படிச் சமாளிப்பேன்னு யோசனையா இருக்கு..பணத்தைத் திருப்பி கொடுக்க அஞ்சு வருஷம் டயம் கேளுங்க அண்ணே..அதுக்குள்ளே மனோகருக்கு ஒரு நல்ல வேலை கிடைச்சிடுசுன்னா சேமிப்பு தொகை கூடிப் போகும் சீக்கிரமாவே அடைச்சிடுவேன்.” என்றார் ஜோதி.

“அஞ்சு வருஷமா?” என்று அயர்ந்து போனார் செல்வம்.

உடனே,“சொந்த வீடு கூட வேணாம் அண்ணே..பிள்ளையைக் கல்யாணம் செய்து கொடுக்கணுமில்லே..அவ பட்டப்படிப்பு முடிக்க மூணு வருஷமாகிடும்..அப்புறம் மாப்பிள்ளை பார்த்து அப்படி இப்படின்னு ஓர் இரண்டு வருஷம்..அதுக்கு தான் அஞ்சு வருஷம் அவகாசம் கேட்கறேன்..இருப்புலேர்ந்து எடுத்துக் கொடுத்தா அதிலிருந்து கிடைக்கற வட்டி கம்மியாகிடும்..பென்ஷனும் பாதி தானே வரும்..ஆத்திர அவசரத்துக்கு நான் எங்கே போகறது அண்ணே..எனக்கே ஏதாவது ஆயிடுச்சுன்னா பணமில்லாம ..” என்றவரின் பேச்சை இடையிட்டு,

“அண்ணி அந்த மாதிரி எதுவும் நடக்காது..வீணா மனசைப் போடு குழப்பிக்காதீங்க..நாங்கெல்லாம் இருக்கோமில்லே.” என்று தைரியம் கொடுத்தார் மீனாட்சி.

அதுவரை மௌனமாக இருந்த செந்திலின் மனைவி மதியழகி,”அண்ணி சொல்றபடி அஞ்சு வருஷம் அவகாசம் கேட்டுப் பாருங்க..இப்போதைக்கு இரண்டு லட்சம் அண்ணி சார்பா நாம கொடுத்திடுவோம்..நமக்கு அதை அவங்க மெதுவா திருப்பிக் கொடுக்கட்டும்.. மீதி எட்டு லட்சத்தை வருஷா வருஷம் கொஞ்சம் கொஞ்சமா அண்ணி அடைக்கட்டும்.” என்று ஆலோசனை அளித்தார்.

பணம் வேண்டாமென்று ஜோதி மறுப்பு தெரிவித்தாலும் அதை அவரின் சகோதரர்கள் ஏற்கவில்லை அவர்களின் மனைவிமார்களும் ஏற்கவில்லை. இறுதியில் ஒரு சின்ன திருத்தத்தோடு நிபந்தனையோடு காசியப்பனின் கைக்கு காசு போய் சேர்ந்தது.

***************

இங்கே போல சந்திரன்லே வளிமண்டலம் இல்லை அதனாலே சுவாசிக்க பிராணவாயு கிடையாது. இங்கே போல அங்கேயும் பாறை, மணல்ன்னு இருக்கு அதிலே ஆக்ஸைட் ஃபார்ம்லே ஆக்ஸிஜன் இருக்கு. தண்ணீரும் ஐஸ் ஃபார்ம்லே இருக்குன்னு கண்டுபிடிச்சிருக்காங்க. இப்போதைக்கு எதுவுமே வேலைக்கு ஆகாது. அந்த மாதிரி ஓர் இடத்திலே, அதாவது நிலவுலே, நிலம் வாங்கிப் போடற விஷயம் நடந்திட்டு தான் இருக்கு. ‘Lunar registry’ பற்றி கூகிலைக் கேளுங்க நம்ம மனுஷங்களோட நம்பிக்கையின் ஆழமும் அவங்க ஆசையின் அளவும் புரியும்.

Advertisement