Advertisement

அத்தியாயம் – 09

ஜோதி அவரது சிந்தனையில் தொலைந்து இருக்க, வீட்டினுள்ளேயிருந்து வந்த ஷிக்கா, சிறிது நேரத்திற்கு முன் கௌண்டர் மீது வைத்த துணி மூட்டையைக் காட்டி,”ஆன்ட்டி இதை ப்ரெஸ் போடணும்.” என்று சொல்லி விட்டு சுவரில் சாய்ந்தபடி அவளது கைப்பேசியில் டைப் செய்ய ஆரம்பித்தாள்.

கேஷ் கௌண்டரிலிருந்து எழுந்து கொண்ட ஜோதி, துணிப் பொதியைத் திறந்து பார்க்க ஆறு சல்வார் செட்டுகள் இருந்தன. அதை அப்படியே வைத்து விட்டு வீட்டினுள்ளே சென்று சில நிமிடங்கள் கழித்து திரும்பியவரின் கைகளில் பானிபட் பருத்திப் போர்வை (panipat bedsheet), இஸ்திரிபெட்டி இருந்தது. கேஷ் இடத்தில் அமர்ந்திருந்த ஷிக்கா ரசீத் புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தாள். கௌண்டர் மீது போர்வைய விரித்து, இஸ்திரிபெட்டியைப் பிளக்கில் பொருத்தி விட்டு சல்வார், கமீஸ் இரண்டையும் தனித் தனியாக பிரித்து வைத்தார் ஜோதி. மாமியார், மருமகள் இருவரும் வெகு கவனமாக ஒருவரையொருவர் தவிர்த்துக் கொண்டிருந்தனர். 

சில நொடிகள் கழித்து சிகப்பு நிற லைட் ஒளிர, மிக கவனமாக துணியைப் ப்ரெஸ் செய்ய ஆரம்பித்தார் ஜோதி. இரண்டு கமீஸை அயன் செய்து முடித்திருந்த போது ஷிக்காவின் கைப்பேசி ஒலி எழுப்பியது.

அவளுடைய வீட்டினராக தான் இருப்பார்கள், மந்தீப் பற்றி இருக்குமென்று எண்ணியபடி அவரது வேலையை ஜோதி தொடர, அழைப்பை ஏற்று, அந்தப் புறத்திலிருந்து வந்த கேள்விக்கு,”கடைலே இருக்கேன்..அவங்க இங்கே தான் இருக்காங்க” என்று பதில் கொடுத்தவள், எழுந்து வந்து கைப்பேசியை ஜோதியிடம் நீட்டி,

“ஆன்ட்டி, சினேஹ்..உங்ககிட்டே பேசணுமாம்.” என்றாள்.

அயன் பாக்ஸை அமர்த்தி விட்டு,’எதுக்கு இவ  ஷிக்கா ஃபோனுக்கு கால் செய்திருக்கா?’ என்று யோசித்தபடி அழைப்பை ஏற்றார் ஜோதி.

“சொல்லு டீ” என்று அவர் சொன்னவுடன்,

“அம்மா, செல்வம் மாமா எனக்கு ஃபோன் செய்திருந்தாங்க.” என்றாள் சினேகா.

“அண்ணன் உனக்கு ஃபோன் செய்தாரா? எப்போ?” என்று கேட்டார் ஜோதி.

“உங்க ஃபோனுக்கு என்ன ஆச்சு? ஒரு மணி நேரமா உங்களுக்கு முயற்சி செய்திட்டு நீங்க எடுக்கலைன்னவுடனே எனக்கு ஃபோன் செய்தாங்க…அவர்கிட்டே பேசிட்டு நானும் கால் செய்தேன்..நீங்க எடுக்கலை.” என்றாள் சினேகா.

“அது ஃபோன் சைலண்ட்டிலே இருக்கும்.. மதியம் வரை மந்தீப் இங்கே தான் இருந்தான்..ஆபிஸ் போகற வழிலே மனோகர் தான் ஷிக்கா வீட்லே கொண்டு போய் விட்டான்..அவன் தூக்கம் கெட்டுப் போயிடும்னு சைலெண்ட்லே போட்டு வைச்சிருந்தேன்..அதை எடுத்து விட மறந்திட்டேன் போல.” என்று பேசியபடி வீட்டினுள் சென்றார் ஜோதி.

“மெஸேஜ் வேற போட்டேன்..அதுக்கும் பதிலில்லை..ஷிக்காக்கு ஃபோன் செய்து ஒருமுறை கடைக்குப் போய் பாருன்னு சொல்லாம்னு நினைச்சு ஃபோன் செய்தா கடைலே தான் இருக்கேன்னு சொல்றா.” என்றாள் சினேகா.

“ஆமாம், இப்போ தான் கொஞ்ச நேரம் முன்னாடி வந்தா..அவ அண்ணன் கொண்டு வந்து விட்டான்..கஸ்டமர் டெலிவரி இருக்குது போல..தைச்சு எடுத்திட்டு வந்திருக்கா..அதை அயன் செய்திட்டு இருந்தேன்.” என்றார் ஜோதி

“மாண்ட்டியும் வந்திருக்கானா? எதுக்கு அவனை அலைய வைக்கறா?” என்று கேட்டாள் சினேகா.

“அவனை அழைச்சிட்டு வரலை..துணி மூட்டையை கௌண்டர்லே வைச்சிட்டு அப்படியே உள்ளே போய் சாப்டிட்டு வந்து அமைதியா உட்கார்ந்திருக்கா..மூஞ்சி ஒரு மாதிரி இருக்கு..இத்தனை நெரம் லன்ச் சாப்பிடாம இருந்திருக்கா..அவங்க அம்மாக்கு போறாது..சோம்பேறி..மாண்ட்டி பிறந்த போது சரியாவே கவ..” என்று ஜோதி ஆரம்பித்தவுடன்,

“ஜோதிம்மா உங்களுக்கு எதுக்கு இந்த வேலை? ஷிக்காவோட அம்மா எப்படி இருந்தா உங்களுக்கு என்ன வந்திச்சு..ஷிக்கா சரியான அம்மாவா இருந்தா போதும்….இல்லைன்னா வாழ்க்கை முழுக்க நான் அவனுக்கு அத்தைம்மா நீங்க பாட்டிம்மா.” என்றாள் சினேகா.

அதற்கு,“அவளை நான் ஏதாவது சொன்னா மனோகருக்கு கஷ்டமா இருக்கு.” என்றார் ஜோதி.

“அவன் உங்க மகன் மட்டுமில்லை..ஷிக்காவோட புருஷன்..மாண்ட்டியோட அப்பா..அவனை சின்ன பையன் மாதிரி நடத்தாதீங்க.” என்றாள் சினேகா.

அதற்கு பதில் சொல்லாமல்,”என்ன விஷயம்? அண்ணன் எதுக்கு ஃபோன் செய்திருக்காங்க?” என்று கேட்டார் ஜோதி.

“எதுக்கு செய்வாங்க? எப்போ பணத்தைக் கொடுக்கப் போறீங்கண்ணு கேட்க தான்.” என்றாள் சினேகா.

“இப்போ தானே டீ அம்பதாயிரம் கொடுத்தோம்.” என்றார் ஜோதி.

“அது கொடுத்து இரண்டு வருஷமாகிடுச்சு..மாண்ட்டி பிறந்த போது கொடுத்தோம்.” என்றாள் சினேகா.

அதைக் கேட்டு நிஜமாகவே இரண்டு வருடங்களாகி விட்டதாயென்று மலைப்பாக இருந்தது ஜோதிக்கு. 

“மாமா வீட்டுக்கு அந்த ஆள் வந்தானாம்..பத்து லட்சத்தை தீர்க்க பத்து வருஷம் எடுத்துப்பீங்களா நான் என்ன பேங்கா நடத்திட்டு இருக்கேன்? வங்கிலே கூட மாசா மாசம் தவணை கட்டியாகணும்..அஞ்சு வருஷத்திலே மொத்தத்தையும் திருப்பறதா ஒத்துக்கிட்டீங்க..இப்போ ஏழு வருஷத்திலே அஞ்சு தான் என் கைக்கு வந்திருக்கு..மீதியை மொத்தமா கொடுக்கலைன்னா அவ்வளவு தான்னு கத்திட்டு போயிருக்கான்.” என்றாள் சினேகா.

கிட்டதட்ட ஏழு வருடங்களுக்கு முன்பு, அவருடைய அண்ணன் வீட்டு வரவேற்பறையில் அமர்ந்திருந்த காசியப்பன் இப்போது ஜோதியின் கண் முன் தோன்ற, அவரது ’தில்லிலே எனக்கு ஆள் இருக்கு’ என்று சொன்னது காதில் ஒலிக்க, ஜோதியின் உடல் இப்போதும் அச்சத்தில் நடுங்கியது. 

சில நொடிகள் கழித்து, தன்னை மீட்டுக் கொண்டு,“மொத்தமாவா கேட்கறாங்க?” என்று மெல்லியக் குரலில் கேட்டார் ஜோதி.

“ம்ம்..மொத்தத்தையும் அன்னைக்கே கறந்திருக்கணும்..அப்படிச் செய்யாம நம்ம மேலே நம்பிக்கை வைச்சு தில்லிக்கு அனுப்பி வைச்சது தப்புன்னு சொல்றானாம்.” என்றாள் சினேகா.

“இப்போ அவ்வளவு பணத்துக்கு எங்கே போகறது? கொஞ்சம் போல கொடுக்க கூட ஒண்ணுமில்லையே.. கைலே இருந்ததை மாண்ட்டியோட ஆஸ்பத்திரி செலவுக்கு கொடுத்திட்டோமே.” என்றார் ஜோதி.

சினேகாவிற்குமே அதே யோசனை தான். எத்தனை யோசனை செய்தும் தீர்வு கிடைக்கவில்லை. சின்ன மாமா சொன்னது காதில் ஒலித்துக் கொண்டிருக்க,“செந்தில் மாமாகிட்டே பேசுங்க..ரொம்ப டென்ஷனா இருக்கார்..’உங்கப்பா இருந்த போதும் பிரச்சனை இறந்த பிறகும் பிரச்சனை தான்.’ நு கத்தறார்.” என்று சொன்ன போது அவளது குரல் தழுதழுத்தது.  அவளுடைய அப்பாவை அப்படிப் பேசியது அவளைக் காயப்படுத்தியிருந்தது.

அவளது நீச்சல் திறமையை வெளி கொணர அவள் அப்பா செய்த தியாகங்கள், முயற்சிகள் கணக்கிலடங்காதவை. எத்தனையோ நாள்கள் நீச்சல் குளம் திறக்கும் முன்னர் விடியற்காலை ஐந்து மணிக்கு அவர்கள் இருவரும் கேட்டில் ஆஜராகி இருக்கிறார்கள். அதே போல் விடுமுறை நாள்களில் காலை, மாலை இரண்டு வேளையும் அவளை நீச்சல் பயிற்சிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். தோல்வியில் அவள் துவுண்டு போகும் சமயங்களில்,’என்ன பாப்பா இதுக்கு போய் மூஞ்சியைத் தூக்கி வைச்சுக்கலாமா? இன்னைக்கு நீங்க எத்தனை பர்பெக்ட்டா போர்ட்லேர்ந்து டைவ் செய்தீங்க தெரியுமா? வீட்டுக்குப் போற வழிலே ஐஸ்க்ரீம் பார்லருக்கு அழைச்சிட்டு போலாம்னு நினைச்சேன்.’ என்று அவளது மனநிலையை மாற்ற அவர் செய்த சிறு சிறு முயற்சிகள் ஏராளம்.  

மாவட்ட அளவில் அவள் வெற்றி பெற்ற போது, வெற்றிப் பதக்கம் கிடைக்கும் முன் பேக்கெட்டிலிருந்து அவர் எடுத்துக் கொடுத்த கைக்கடிகாரத்தை நினைத்து இப்போதும் அவள் கண்கள் லேசாக கலங்கின. அவளை விட அவளது திறமை மீது அவருக்கு பெரிய நம்பிக்கை இருந்தது. போட்டியின் முடிவைப் பற்றி கவலைப்படாமல் அவளது முயற்சியைப் பாராட்ட பரிசுப் பொருளுடன் போட்டி இடத்திற்கு வந்த அப்பாவை நினைக்கும் போதெல்லாம் அன்பில் நிறைந்து போய் அவளது மனது பாரமாகிவிடும். 

அவளுக்கு தெரிந்த அப்பா மிகவும் நேர்மையானவர். அவளது அந்த வெற்றிக்கு பின் அவர்களை பல பயிற்சி நிறுவனங்கள் அவரை அணுகிய போது.”பாப்பா, உன்னை பெரிய இடத்திலே பயிற்சிக்கு அனுப்ப அப்பாக்கும் ஆசை தான்..அதுக்கு நிறைய செலவாகும்..அப்பாவாலே அது முடியாது கண்ணு.” என்று அவரது இயலாமையை வெளிப்படையாக அவளிடம் சொல்ல,”நீச்சல் எனக்கு ரொம்ப பிடிக்கும் ப்பா..போட்டிக்கு போகலைன்னாலும் ஸீஸன் டயம்லே தினமும் என்னை பூல்க்கு அழைச்சிட்டு வர முடியுமா?” என்று அவள் கேட்க, “கண்டிப்பா அழைச்சிட்டு வரேன்.” என்று வாக்கு கொடுத்தவர் கடைசிவரை அதைக் காப்பாற்றினார்.

ஊர் சுற்றுவது, வம்பு பேசுவது, சிகரெட் பிடிப்பது, குடிப்பது என்று எந்த கெட்ட பழக்கமும் பாண்டியனுக்குக் கிடையாது. அவரது சம்பாதியத்தை குடும்பத்திற்கு தான் செலவழித்தார். அது அவரின் குடும்பத்தினரைத் தவிர வேறு யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லாததால், சித்தப்பா, மாமா அனைவரும் காசியப்பன் சொன்னதை. மறுத்துப் பேச முடியாமல் மௌனமாக இருக்க, அவனின் படிப்பிற்காக வங்கியில் கடன் வாங்க விரும்பாத அப்பா, எப்படி வியாபாரத்திற்காக இந்த மனிதரிடம் பணம் வாங்கியிருப்பார் என்று மனோகருக்குப் பலமான சந்தேகம் ஏற்பட,“எங்கப்பா எதுவும் வாங்கியிருக்க மாட்டார்.” என்று திடமாகச் சொன்னான் மனோகர்.

அதற்கு காசியப்பன் பதிலளிக்கும் முன்,”பெரியவங்க பேசிட்டு இருக்கோமில்லே..பேசாம இரு மனோகர்.” என்று மருமகனைக் கண்டித்தார் செல்வக்குமார்.

அதற்கு மேல் மனோகர் வாயைத் திறக்க வாய்ப்பளிக்காமல்,“நாளைக்கு காலைலே பத்து மணிக்கு நான் கொடுத்த பத்து வந்து சேரணும்.” என்றார் காசியப்பன்.

அதுவரை அமைதியாக இருந்த கமலக்கண்ணன்,“பத்தா?” என்று கேட்க,

“ரியல் எஸ்டெட் பிஸ்னஸ்ன்னா சும்மாவா..க்ளையண்ட்டைச் சந்திக்க, அக்ரிமெண்ட் கையொப்பம் போட, ரொக்கம் கை மாற ஓர் இடம் வேணாமா? சொந்த இடமா இருந்தா நல்லா இருக்கும்னு நினைச்சிருக்கான்.. ‘மெயின் ஏரியாலே ஓர் இடம் பார்த்திருக்கேன் அண்ணே..பத்து லட்சம் செலவாகும்..ஊருக்குப் போய் என் பொண்டாட்டி பெயர்லே இருக்கறதை எடுத்திட்டு வர்றத்துக்குள்ளே அந்த இடம் கை நழுவிப் போயிடும்..காசியண்ணே கொஞ்சம் உதவி செய்யுங்கண்ணு’ கேட்டான்..நானும் கொடுத்தேன்.” என்றார் காசியப்பன்.

“பத்து லட்சமா” என்று முதல்முறையாக வாயைத் திறந்தார் அவருடைய அண்ணியின் கையை இறுகப் பற்றியபடி நின்றிருந்த ஜோதி.

பாண்டியனின் சொந்த ஊரில் பத்து லட்சம் பெருமானத்திற்கு இடம் ஏதாவது இருக்கிறதா என்று ஜோதியின் சகோதரர்கள் இருவரும் மண்டையை உடைத்துக் கொண்டிருந்த போது,”இடம் ஏழு லட்சம் தான்..அதை ஆபிஸா மாத்த, ஏஸி கேபின், கம்ப்யூட்டர்னு பக்காவா பிளான் போட்டிருந்தான்..என் ஆபிஸ் நல்லா இருந்தா தான் நிலம் வாங்க வர்றவங்களுக்கு என் மேலே நம்பிக்கை வரும்னு சொன்னான்.” என்று காசியப்பன் சொன்ன அனைத்துமே சத்தியம் தான். 

அதாவது பாண்டியன் அவரது திட்டத்தை காசியப்பனிடம் பகிர்ந்து கொண்டது என்னவோ உண்மை தான். ஆனால் அதற்காக அவரிடம் கைம்மாத்து வாங்கினார் என்று சொன்னது முழுவதும் பொய். ‘அந்த இடத்தை உடனே முடிக்க தான் தில்லிக்குப் போறேன்ண்ணே..என் மேலே இருக்கறதிலே கடையும் வீடும் வாங்கலாம்னு இருக்கேன்..ஜோதி பெயர்லே போட்டு வைச்சிருக்கற பணம் வியாபாரத்திற்கு.’ என்று தன்னிடமிருந்த பணத்தைப் பற்றிய விவரத்தை பாண்டியன் வெளியிட, காசியப்பன் மனத்தில் அது விபரீதமான எண்ணத்தை விதைத்தது.

என்னுடைய சொந்தக்காரன் எனக்கு உதவி செய்வார் என்று அவரைத் தேடி வந்திருந்தவரிடம் எத்தனை கறக்க முடியும்? எப்படி? என்று யோசித்த காசியப்பன், பாண்டியனின் பிரசித்தமான பிடிவாதக் குணத்தை அவருக்குச் சாதகமாக்கிக் கொள்ள,’நில வியாபாரமெல்லாம் ரிஸ்க் பாண்டியா..உனக்கு எதுக்கு இந்த வேலை..தெரிஞ்சவங்ககிட்டே சொல்லி வைக்கறேன்..கணக்கு எழுதற வேலை ஏதாவது வந்தா சொல்றேன்.’ என்றார்.

அவர் எதிர்பார்த்தது போல்,“இல்லை அண்ணன் நான் முடிவு செய்திட்டேன்..அரசாங்கத்துக்கு வேலை பார்த்த பிறகு வேற எவனுக்கு வேலை பார்க்கறதா இல்லை..சொந்தமா ஆபிஸ் திறக்கப் போறேன்..நீங்க தான் திறப்பு விழாவுக்கு வந்து நல்லபடியா நடத்திக் கொடுக்கணும்.’ என்று அவரது முடிவைத் தெரியப்படுத்தி அந்த வட்டாரத்தில் பல தொழில்களில் பங்குதாரராக இருக்கிறார் என்று நினைத்து காசியப்பனிற்கு அழைப்பு விடுத்த பாண்டியனுக்குத் தெரியவில்லை காசியப்பனின் முக்கியமான தொழில் வன்பறியென்று (extortion) 

“அவனோட அந்த முடிவுலே பிடிவாதமா இருந்தான்..நானும் நம்ம ஆள் தானேன்னு கொடுத்தேன்.” பாண்டியனோடு நடந்த உரையாடலைக் காசியப்பன் பகிர்ந்து கொண்டவுடன் அதில் தெரிந்த மெய்யை ஜோதியால் மறுக்க முடியவில்லை. பாண்டியனின் பிடிவாதக் குணம் ஊரறிந்த ஒன்று என்பதால் ஜோதியின் சகோதரர்கள் மனத்தில் தோன்றியிருந்த கொஞ்ச நஞ்ச சந்தேகமும் மறைந்து போனது. எப்படி நாளைக்கே பணத்தைத் திருப்பிக் கொடுப்பதென்று அவர்களுக்கு கவலை வர, 

“நாளைக்கு எப்படி மொத்த பணத்தையும் தர முடியும்?” என்று நேரடியாக கேட்டு விட்டார் செந்தில் நாதன்.

ஏற்கனவே கேள்விகள் அனைத்தையும் யோசித்து அதற்கான பதிலையும் தயாராக வைத்திருந்ததால், “ஜோதி பெயர்லே போட்டிருந்த பணத்தை எடுக்க தானே  தில்லிக்கு போனான் பாண்டியன்..அந்தப் பணத்திலிருந்து எனக்கு கொடுங்க” என்று தீர்வு கொடுத்தார் காசியப்பன்.

ஏற்கனவே ஜோதியோடு அவரின் எதிர்காலத்தைப் பற்றி பேசியிருந்ததால்,”அதை இன்னும் எடுக்கலைங்க..எல்லாம் வைப்பு நிதிலே போட்டிருக்கு..மூணு வருஷம் ஆகணும்..நடுவுலே உடைச்சிட்டா வட்டி போயிடும்..பாண்டியன் பெயர்லே இருக்கறதை எடுக்க நாளாகும்..இனி ஜோதிக்கு ஃபேமிலி பென்ஷன் தான் கிடைக்கும்..அதிலே தான் அவ காலத்தை ஓட்டணும்..பிள்ளை இப்போ தான் பிளஸ் டூ..” என்று காரணங்களை அடுக்கிக் கொண்டு போன செல்வக்குமாரை இடைமறித்து,

“சரி.” என்று சொன்னவர், மனோகரின் புறம் கையை நீட்டி,”நீ என்னோட வா.” என்றார் அதிகாரமாக.

“அவன் சின்ன பையன்..அவனை எதுக்குங்க இழுக்கறீங்க?” என்று செந்தில்நாதன் கேட்க,

“அவன் அப்பன் தானே கை நீட்டி காசை வாங்கினான்.” என்று கோபமாகப் பேசியபடி வேகமாக எழுந்து வேஷ்டியை மடித்துக் கட்டினார் காசியப்பன்.

அந்தச் செய்கை அவர் எதிர்பார்த்த இஃபெக்ட்டை, பயத்தை அனைவரிடத்திலும் கொண்டு வர,’எப்போ கை நீட்டி வாங்கினார்? யார் சாட்சி? கையொப்பம் போட்டுக் கொடுத்தாரா?’ என்று அடுத்து கேட்க வேண்டிய கேள்விகளை யாருமே கேட்கவில்லை.

அப்போது,”அண்ணே, உட்காருங்க..உட்காருங்க..பொறுமையா பேசி முடிக்கலாம்..அண்ணிக்கு இனி அவன் மட்டும் தானே.” என்று காசியப்பனை சமாதானம் செய்வது போல் பேசிய காமராஜ் இனி எல்லாம் மனோகர் தான் அண்ணன் குடும்பத்திற்கு நானில்லை என்று மறைமுகமாக அனைவருக்கும் தெரிவித்தார். 

“அதான் அவனை என்னோட வரச் சொன்னேன்..நேரே ஸ்டேஷனுக்குப் போகலாம்..இந்த நேரம் இன்ஸ்பெக்டர் அங்கே தான் இருப்பான்..இந்த பஞ்சாயத்தை அங்கே முடிச்சுக்கலாம்.” என்றார்.

அதைக் கேட்டு மனோகருக்கு பீதியானது. ஷிக்கா அவனது கண் முன்னே தோன்ற அதோடு போலீஸ் கேஸ்ஸில் சிக்கிக் கொண்டால், அரசாங்க வேலை கிடைக்கவே கிடைக்காது, நல்ல வேலை எதுவும் அவன் வழி வராது என்று புரிந்து போக, இந்தப் பிரச்சனையை எப்படிச் சுமூகமாக முடிப்பது என்று யோசிக்கலானான்.

Advertisement