Advertisement

அத்தியாயம் – 4_1

ஸ்ட்டூல் மேல் ஏறி, கீழே குனிந்து என்று கடையில் வேலை செய்யும் நேரிடுவதால், இது போல் வாடிக்கையாளர்களோடு பேசி, பழக வேண்டிய சூழ்நிலை ஏற்படுவதால், அண்ணனின் வீட்டில் இருக்கும் அவளுடைய உடைக்கு மாறிக் கொள்வது வழக்கம். அதற்காகவே அவளின் உடைகளில் சிலவற்றை இந்த வீட்டில் நிரந்தரமாக வைத்திருக்கிறார் அவளுடைய அம்மா. ஜாகிங்கில் கடைக்கு வந்தாலும் ஜாகிங் ஷார்ட்ஸில் வியாபாரம் செய்ய வர மாட்டாள். டிராக் பேண்டிற்கு மாறிய பின் தான் கடைக்குள் நுழைவாள். 

இன்று அண்ணனின் வீட்டிற்கு வர தாமதமாகியிருந்தாலும் மீண்டுமொருமுறை குளித்து விட்டு, வேறு உடைக்கு மாறியப் பின் தான் கடைக்கு வர வேண்டுமென்று அவள் எண்ணியிருக்க, கடைக்கு நேர் எதிரே ஷர்மா அங்கிளை சந்தித்தவள்,’எங்கே இந்தப் பக்கம்? கடைக்கா?’ என்று அவரை விசாரிக்க,’பாஸ் ஃபெமிலியை அழைச்சிட்டு வந்தேன்.. கடைலே தான் இருக்காங்க..அவங்களுக்கு ஹிந்தி தெரியாது..மத்ராஸி’ என்று அவர் சொல்ல, இன்று ஷிக்காவின் மூட் சரியில்லை என்பதால், மற்ற விவரங்களைக் கேட்டுக் கொள்ளாமல், சென்னையை சேர்ந்த வாடிக்கையாளரை அவளிடமிருந்து காப்பாற்ற வேக வேகமாக அந்தப் புறத்திலிருந்து இந்தப் புறத்திற்கு ஓடி வந்து விட்டாள்.

அவள் யுகித்தது போலவே, சற்றுமுன்,’இன்னைக்கும் தண்ணி உள்ளே போன போல..காக்கா மாதிரி இருக்க..பார்க்க முடியலை’ என்று ஷிக்கா அவளது எரிச்சலைக் கொட்ட,’அப்போ என்னைப் பார்க்காத’ என்று இவளும் அதற்கு சரியான பதிலடி கொடுத்திருந்தாள்.

நேற்றிரவிலிருந்து மந்தீப்பின் உடல் நிலை சரியில்லை. ஷிக்காவிற்கு ஓய்வு தேவைப்பட்டதால் ‘மதியம் போல் வந்து விடு.’ என்ற இவளுக்கு கட்டளையிட்டிருந்தாள். அந்தக் கட்டளையை இவளால் நிறைவேற்ற முடியவில்லை. மதியம் போல் தான் அவளுடைய வேலை ஆரம்பமானது. இரண்டு மணி நேரம் கூட வேலை பார்க்கவில்லை அதற்குள் அனைவரும் நீச்சல் குளத்தை நோக்கிச் செல்ல, இவளும் அவர்களோடு சேர்ந்து கொண்டாள். 

நீச்சல் குளத்தினுள் புகுந்து விட்டால் நேரம் போவது இவளுக்குத் தெரியாது. வழக்கம் போல் உடலின் புத்துணர்ச்சியை  வைத்து போதுமென்று முடிவு செய்து இவள் வெளியே வந்த பிறகு தான் ஷிக்கா சொன்னது நினைவிற்கு வந்தது. மாடியில் இருந்த பாத் ரூமிற்குச் செல்ல வரிசை இருக்க, வெட்ட வெளியில் இருந்த ஷவரின் கீழே இரண்டு நிமிடங்கள் நின்று விட்டு, அனைத்தையும் அள்ளிப் போட்டு கொண்டு, வேறொரு கம்பெனியில் வேலை பார்க்கும் நபரிடம் லிஃப்ட் கேட்டு இங்கே வந்து சேர்வதற்குள் மிகவும் தாமதமாகி விட்டது.

சீக்கிரமாக வர வேண்டுமென்று ஷிக்கா சொல்லியிருந்தது மனத்தில் இருந்தாலும் நீச்சல் குளத்தில் கால் வைத்ததும் அது பின்னுக்கு போய் விட்டது. சாதாரண நீச்சல் குளமாக இருந்திருந்தால் ஒரு நாள் தானே போனால் போகிறதென்று புறப்பட்டு வந்திருப்பாள். வீட்டின் இரண்டாவது மாடியில், வானத்தைப் பார்த்தபடி பெரும்பான்மையான இடத்தை ஆக்கிரமித்திருந்த அந்த ‘infinity pool’ வந்த முதல் நாளே அவளது மனத்தையும் ஆக்கிரமித்துக் கொண்டது. 

தில்லியிருந்து மீரட் போகும் வழியில் இருந்தது அந்தப் பண்ணை வீடு. வீட்டை சுற்றி பச்சைப்பசேலென்று செடி, கொடிகள் கண்களுக்குக் குளுமை அளிக்க, வீட்டினுள்ளே இருந்த செண்ட்ரல் ஏஸி உடலிற்கு குளிச்சியை அளித்தது. அங்கே தான் கடந்த மூன்று வாரங்களாக எழுத்தாளர்களுடனான நேரடி சந்திப்பு நடந்து கொண்டிருக்கிறது. அவர்கள் பதிப்பகத்தையும் சேர்த்து நான்கு பதிப்பங்கள் ஒரு மாதத்திற்கு அந்த வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தனர். உணவு பொருள்கள் அவரவர் தேவைக்கேற்ப வெளியிலிருந்து வரவழைக்கப்பட்டன. வெளியூரிலிருந்து வந்தவர்கள் அங்கேயே தங்கியிருக்க அவர்களோடு உள்ளூரைச் சேர்ந்த சிலரும் தங்கிக் கொண்டனர். அவள் உள்ளூர் தானென்றாலும் தினமும் வீடு திரும்பி விடவேண்டுமென்ற கண்டிஷனில் தான் அவளுக்கு அனுமதி அளித்திருந்தார் அவளுடைய அம்மா. அவளும் தினமும் காலையில் சென்று மாலையில் திரும்பி இரவில் அந்த நீச்சல் குளத்தைப் பற்றி வாய் ஓயாமல் பேசி அவரை கடுப்பேற்றிக் கொண்டிருந்தாள்.

இது போன்ற நீச்சல் குளங்கள் அவள் வழி வருவது அரிதிலும் அரிது. பள்ளியில் படித்துக் கொண்டிருந்த சமயத்தில் சில்லா காம்ப்ளெக்ஸ் இல்லை யமுனா காம்ப்ளெக்ஸ் நீச்சல் குளத்திற்கு அழைத்துச் செல்வார் அவளுடைய அப்பா. அப்பா போன பின் நீச்சலும் போய் விட்டது. கல்லூரியில் சேர்ந்த பின் அது பொழுது போக்கில் சேர்ந்து விட்டது. படிப்பு முடிந்த பின் ஸீஸன் சமயத்தில் சில நாள்களுக்கு  மட்டும் மெம்பர்ஷிப் எடுத்து நீச்சல் குளத்தை உபயோகிப்பாள். கடந்த ஒரு வருடமாக அதற்கும் நேரம் கிடைக்கவில்லை. கிடைக்கும் நேரத்தில் பார்க்கில் இல்லை ரோட்டில் ஜாக் செய்து அவளது உடற்பயிற்சியை முடித்துக் கொள்கிறாள். கடுமையான வெய்யில், குளிர் இருக்கும் போது அதுவும் கிடையாது. வீட்டினுள்ளே சில ஃப்ளோர் பயிற்சிகள், வெயிட் டிரெய்னிங்கோடு அவளது உடல் பயிற்சி முடிந்து விடும். 

மனத்திற்குப் பிடித்த வேலை தான் என்றாலும் வேலை நேரம் முழுவதும் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது அவளுக்குப் பிடிக்காத ஒன்று. எனவே தான் அவளுக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஜாகிங், ஸுவிம்மிங் என்று உடல் பயிற்சியில் ஈடுபடுத்திக் கொள்வாள். அது அளிக்கும் புத்துணர்ச்சி வேறு எதிலும் அவளுக்குக் கிட்டாது. உடலும் மனமும் புத்துணர்வோடு இருக்கும் போது கடையினுள்ளே வந்தவனை எப்படி அவள் உணரவில்லை என்ற கேள்விக்கு இப்போதும் அவளுக்குக் கிடைக்கவில்லை. 

‘நம்ம வாய் தொடர்ந்து பேசிட்டு இருந்தாலும் நம்ம காது ஏன் அதனோட வேலையைச் செய்யலை? காதிலே ஃபேஷனா இயர் ஃபோனை மாட்டிக்கிட்டு திரியறதுனாலே அம்மா சொல்றது போல காதும்  ஃபேஷன் பொருளாகிடுச்சா?’என்று சுய சிந்தனையில் இறங்கியவள், நாசுக்காக, நெற்றியில் புரண்ட கூந்தல் இழைகளை வலது காதுக்கு பின்னால் தள்ளி விட்டு, விரல்களால் அந்தக் காதை லேசாக வருடிக் கொடுத்தாள்.

அதுவரை துணியைப் பார்த்துக் கொண்டிருந்தவன் அந்த நொடி அவனது பார்வையைப் பாவையின் புறம் திருப்பினான். அவளின் அந்தச் செய்கை அவனுள் வித்தியாசமான உணர்வை ஏற்படுத்த, அது வெளிப்படாமல் இருக்க, லாவகமாக, அவனுள் புதைந்திருந்த பல முகங்களில் ஒன்றை வரித்து கொண்டு அவன் மனம் உணர்ந்ததை அழகாக மறைத்துக் கொண்டான். உள்ளம் நினைப்பதை மறைக்கும் திறன், கடினமான  சூழ்நிலைகளில் கவனம் சிதையாமல், பிறரின் கவனத்தை கவராமல் செயல்படும் புத்திக் கூர்மை, பொருந்தாத இடத்தில் பொருந்திப் போகும் வல்லமை, பாஷை தெரியாத இடத்தில் பாந்தமாக கலந்து போகும் திறமை, இவை அனைத்தும் ஷண்முகவேலின் சிறப்புத் தன்மை. பலவிதமான பயிற்சிகள் மூலம் அதை மெருகேற்றியிருந்தது இப்போது அவன் பணி புரியும் இலாகா.  

அவளெதிரே சாதாரணமான முகப் பாவத்தோடு நின்றிருந்தவன் அவளைப் பற்றி ஒரளவிற்குச் சரியக கணித்து விட்டான் என்று அவளுக்குத் தெரியவில்லை. ஷண்முகத்தை பார்த்து, உதடு பிரியாமல் லேசாக அவள் புன்னகைக்க, அவனும் அவளைப் போல, அதே அளவில், மில்லிமீட்டர் கூட பிசகாமல் அவளுடைய புன்னகையைப் பிரதிபலித்தான்.

*****************

Chronograph watch

A chronograph watch is a wristwatch with a stopwatch feature that allows you to measure time intervals and perform calculations like speed. It also offers additional subdials for measuring minutes and seconds.

Infinity Pool 

An infinity pool, also called infinity edge pool, zero edge pool, overflow pool or spillover pool, is a reflecting pool or swimming pool where the water flows over one or more edges, producing a visual effect of water with no boundary. Such pools are often designed so that the edge appears to merge with a larger body of water such as the ocean, or with the sky, and may overlook locations such as natural landscapes and cityscapes. They are often seen at hotels, resorts, estates, and in other luxurious places.

Source – Internet

Advertisement