அதுக்கப்புறம் என்ன ஆச்சு தெரியுமா? உங்க அப்பா எனக்கு போன் பண்ணாரு.நம்ம வீட்டுக்கு வந்து செக்யூரிட்டி கிட்ட என்ன நடந்துச்சுன்னு விசாரிச்சுருக்காரு. உன்னைத் தேடி சுத்துனாரு. அதுக்கப்புறம் நான் அவரோட போன் அட்டென்ட் பண்ணேன். நீ அவர பேசின எல்லாத்தையும் சொன்னாரு. நீ கிடைக்கலன்னா, என்ன கொன்றுவேன்னு மிரட்டுறாரு. உங்க அப்பாவுக்கு இப்பதான் பொண்ணு பாசம் புரியுது போல. என் பொண்டாட்டிய பாத்துக்க எனக்கு தெரியும் உங்க வேலைய பாருங்க ன்னு சொல்லிட்டு போன் கட் பண்ணிட்டேன்.
எந்த ரெண்டாவது தாலிய குழலி கழுத்துல கட்டிருவேன்னு நீ பயந்தியோ அந்த தாலி இப்போ உன் கழுத்துல.பேசு ஐஸ், உனக்கு என்ன பிரச்சனை? எதனால உனக்கு இந்த சந்தேகம் என்ற நோய் வந்துச்சு” நிதானமாக அவன் கேட்க அவ்வளவுதான். மடை திறந்த வெல்லமாக அவளது சந்தேகம், ஏக்கங்கள் அனைத்தும் வெளியே வந்து விட்டது. ஆதிக்கு புரிந்தது. ஏக்கங்கள் நிறைந்த பெண்ணாய்,அவள் எதிர்பார்ப்பு அவனிடம் பொய்யாகி விட்டது.
எதிர்பார்ப்பு பொய்யாகும் இடத்தில், சந்தேகம் தாராளமாக இடம் பிடித்து விட்டது.
“ஐஸ் நீ நினைக்கிற மாதிரி லவ் பண்ண எனக்கு தெரியாது. லவ்னா என்ன? இந்த வார்த்தை யார் கண்டுபிடிச்சா? காதல் அன்பு பாசம் நேசம் இதெல்லாம் ஒரு வார்த்தை. கழுத்துல நான் கட்டியிருக்கிற தாலி கூட என்ன பொறுத்த வரைக்கும் ஒரு நகை மட்டும் தான். எனக்கு தெரியும் என் ஐஸ் என் மனசுல எங்க இருக்கானு.
நீ என் உயிரு. நீ தான் என் உலகம். இப்படி எல்லாம் லூசுத்தனமா எனக்கு சொல்ல தெரியாது. பின்னால இருந்து கட்டி பிடிக்கிறது, திடீர் திடீர்னு பரிசு கொடுக்கிறது, இதெல்லாம் எனக்கு பழக்கமே இல்லை.
எனக்கு மூடு வந்தா ஒன்ன செய்யணும். ரொமான்ஸ் பண்ணனும்னா ரொமான்ஸ் பண்ணனும். கட்டி பிடிக்கனும்னா கட்டி பிடிக்கனும். முத்தம் கொடுக்கணும்னா முத்தம் கொடுக்கணும். அதெல்லாம் விட்டுட்டு இதெல்லாம் எதுக்கு தேவையில்லாத வேலை. நான் கொடுத்தா தான் பரிசா அதும் சர்ப்ரைஸா. ஏன் உன்ன கையோட கூட்டிட்டு போய் வாங்கி கொடுத்தா அது பரிசு இல்லையா?
ஐ லவ் யூ இந்த மூணு வார்த்தைல தான் உன் உடம்புல உயிர புடிச்சு வச்சிருக்கியா? நான் இவ்வளவு சொல்லியும் உனக்கு நம்பிக்கை வரல தானே? உன்னை நம்ப வைக்க நான் என்ன சொல்லணும்?” அவளது முகத்தை இரு கைகளிலும் தாங்கிக் கொண்டு
“ஐஸ் உன் முகத்துல இருக்கிற முகப்பரு எந்த அளவுக்கு உண்மையோ அந்த அளவுக்கு உண்மை நான் உன் மேல வச்சிருக்கற காதல். உன் பெண்மைக்கு சொந்தக்காரன் நான்றது எந்த அளவுக்கு உண்மையோ அந்த அளவுக்கு உண்மை நான் உன் மேல வச்சிருக்கற காதல். ஒவ்வொரு மாசமும் பிரியேட்ஸ்ல நீ அனுபவிக்கிற வலி எவ்வளவு உண்மையோ அந்த அளவுக்கு உண்மை நான் உன் மேல வச்சிருக்கற காதல். என்னால இவ்வளவுதான் சொல்ல முடியும்.. நம்புனா நம்பு நம்பலனா போ” அவளை விட்டுத் தள்ளி அவன் எழுந்து நிற்க, ஒரு முழு நிமிடம் அவனது வார்த்தைகளை தன்னுள் அசை போட்டவள் அவனைப் பாய்ந்து அணைத்துக் கொண்டாள்.
“ஐஸ்” என்றபடி திரும்பி நின்று அவளது முகத்தை மீண்டும் கைகளில் தாங்கினான்.. அழுதாள், அவளது அழுகையை பார்க்கும் போது அவனுக்கு அழுகை வரவில்லை. ஆனால் இருதயம் முழுவதும் பயங்கர வலி. குழலி அவனை விட்டு சென்ற போது இருந்த வலியை காட்டிலும் கணுக்கால் நகத்தில் ஆரம்பித்து உச்சந்தலை முடி வரை அந்த வலி நொடியில் பரவியது.
இந்த வலியை அனுபவிப்பதற்கு பதிலாக செத்து விடலாம் என்று கூட நினைத்தான். ஐஸ்வர்ய நந்தினியின் கண்ணீருக்கு இவ்வளவு வலிமை இருக்கிறதா? அவள் கண்களை சொல்லியது அடுத்த அவள் சொல்லப் போகும் வார்த்தைகளை.
” வேணா ஐஸ். நீ இப்ப சாரி கேட்க போற. சாரி சின்ன விஷயம் இல்ல அது ஒரு பெரிய விஷயம். அத கேட்கிற அளவுக்கு நீ எந்த தப்பும் பண்ணல. இது எல்லாத்துக்கும் காரணம் என்ன தெரியுமா? உனக்கே தெரியாம நீ என்ன லவ் பண்ண ஆரம்பிச்சுட்ட.. அதனாலதான் உனக்குள்ள பொசசிவ்னஸ் வந்துச்சு. உன் இடத்துக்கு குழலி வந்துருவானு பயம் வந்துச்சு. பெத்த அப்பா கிட்டயே, தாலி பிடுங்கிட்டு உன்ன வெளியே துரத்தின புருஷன, விட்டுக் கொடுக்காம பேச வச்சது.
எல்லாமே எனக்காக தானே? வாய தொறந்து பேசினா மட்டும் தான் லவ்வுன்னு இல்ல. புரிதல் தான் உண்மையான காதல். உன்ன பாக்குற வரைக்கும் சாகணும்னு நினைச்சேன். வாழவே பிடிக்கல. உன்ன பார்த்த அப்றம் உன் கூட வாழ்ந்துட்டு சாகணும்னு நினைக்கிறேன்.இப்பதான் டான்ஸ் ஸ்கூல் ஸ்டார்ட் பண்ணி இருக்க. வெளி உலகத்தையே பாக்க ஆரம்பிச்சிருக்க. இந்த நேரத்துல செக்ஸ் பண்ணி, உன் வயித்துல ஒரு பிள்ளையை கொடுத்து, உனக்கு முளைக்கிற றெக்கை நானே வெட்டற மாதிரி ஆயிரும்.
உன்னோட விங்ஸ் இப்ப பறக்க ஆரம்பிச்சிருக்கு. சுதந்திரமா இரு. யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. நானே இல்லனாலும் நீ தைரியமா இருக்கணும். இப்ப எல்லாமே ஓகே ஆயிடுச்சா”
கண்களின் வழியும் கண்ணீரை அவன் துடைத்து விட, “என்னோட விங்ஸ் பறக்குறதுக்கு நம்ம ஃபேமிலி தடையா இருக்காது. நீங்க சொல்லலனா என்ன, நான் சொல்றேன்,
ஐ லவ் யூ ப்ரோம் தே பாட்டம் ஒப் ஐஸ்வர்ய நந்தினி”ஸ் ஹார்ட்..I LOVE YOU FROM THE BOTTOM OF AISWARYA NANTHINI’S HEART..”
சொல்லி விட்டாள் இறுதியாக அவளது காதலை. வழக்கம்போல அதனை மிக இயல்பாய் ஏற்றுக்கொண்டு” சரி போனது போச்சு. இப்பதான் புதுசா கல்யாணம் ஆயிருக்கு.செகேண்ட் ஃபர்ஸ்ட் நைட் செலபிரேட் பண்ணலாமா” முகப்பருக்கள் நிறைந்த அவளின் முகம், சிவந்து நின்றது அவனின் வார்த்தைகளில்.
ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு..
ஆதித்த கரிகாலன், ஐஸ்வர்ய நந்தினியின் செல்ல மகனுக்கு பெயர் சூட்டும் விழா. அமுதனோடு ஈஸ்வரன், மற்றும் சில நெருங்கிய சொந்தங்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். நர்மதாவுக்கு வேலை ஓயவில்லை. சமையலை சரி பார்ப்பதும் அவ்வப்போது அழும் பேரனை தூக்கி கொஞ்சுவதுமாக அவரது நேரம் ரெக்கை கட்டி பறந்தது.
வெளியே வந்தவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தான் கார்த்திகேயன். அவனது கைபேசி விடாமல் அழைத்துக் கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் கடுப்பாகி யார் என்று பார்க்க, வேண்டுமென்றே அந்த காலை கட் செய்தான். அன்று குழலி செய்த குழப்படியால், ஐஸ்வர்ய நந்தினி வாழ்வில் நடக்க இருந்த மிகப்பெரிய பிரச்சனையைக் கண்டு கார்த்தி ஒரேடியாக குழலியை வேண்டாம் என்று ஒதுக்கி விட்டான்.