கொஞ்சும் காதல் சாரல் -7

அத்தியாயம் -7

ஒரு வார காலமாக ஜீவநந்தன், மிதுன்யா இருவருக்குள்ளும் கார சாரமான பேச்சு வார்த்தையாகவே செல்கிறது. மாலில் சண்டை நடந்த மறுநாளே நடன நிகழ்ச்சியில் பங்கேற்க பெயரை பதிவு செய்து விட்டான் அவன். 

தான் இவ்வளவு சொல்லியும் குறைந்த பட்சம் தன் சம்மதம் கூட கேட்காமல் எப்படி பெயர் கொடுத்தான் என அவளுக்கு கோவம். 

பெயர் கொடுக்க அன்றுதான் கடைசி நாள், உன்னிடம் சொல்லி சண்டை வந்து பிரச்சனையோடு போய்  பதிவு செய்ய விருப்பமில்லை, எப்படியும் கலந்து கொள்வதென முடிவு செய்து விட்டேன், ஆகவே பெயர் கொடுத்து விட்டேன் என்றான் அவன். 

பின்னாளில் இது நம் கல்யாணத்துக்கு பிரச்சனையாக மாறும், ஏன் கேட்க மறுக்கிறாய் என அவளும் பையன் நல்லவனா, பெண்ணை நன்றாக வைத்துக்கொள்வேனா என்பதைத்தான் உன் வீட்டில் பார்க்க வேண்டும் இப்படியெல்லாம் பிடித்ததை செய்யக் கூடாது என கட்டுப்பாடுகள் விதிப்பது முறையல்ல என அவனும் பேசி பேசி அவர்களுக்குள்  மனப் பூசல். 

ஆடிஷனில் கலந்து கொண்டு தேர்வாகியும் விட்டான். அதை இவளுக்கு செய்தியாக அனுப்பி வைத்தான். அவளிடமிருந்து பதிலே இல்லை. கைப்பேசியில் அழைத்துப் பேசினால்  ஒரு நிமிடத்துக்கு மேலே பேச்சை வளர்க்காமல் தவிக்க விட்டாள். நடன நிகழ்ச்சியில் தேர்வான மகிழ்ச்சியே இல்லை இவனிடம். 

நேரில் சந்தித்து அவளுக்கு புரிய வைத்து சமாதானம் செய்யலாம் என அவன் நினைத்தால், இப்போது நிறைய வேலைகள் இருப்பதாக சொல்லி வெளியில் வரவே மறுத்தாள்.

வாசுகியின் உதவியை நாடினான். “இப்போ நல்ல வெயில், ஈவ்னிங் பார்க்கலாம்” என்றாள் வாசுகி.

“ரொம்ப மண்டை காஞ்சு போயிருக்கேன் வாசு, ஈவ்னிங் வரையெல்லாம் தாங்காது, ப்ளீஸ்” என கெஞ்சி அவளை ஒத்துக் கொள்ள செய்தான். 

ஜீவா கேட்டுக் கொண்ட படியே மிதுன்யாவை  அழைத்துக் கொண்டு அவன் சொன்ன உணவகத்துக்கு வந்தாள் வாசுகி. அங்கே ஜீவாவை கண்டதுமே தோழியை திட்டி விட்டு அங்கிருந்து வெளியேறப் பார்த்தாள் மிது. 

“தாராளமா போடி, இவர் இல்லாம உன்னால சந்தோஷமா இருக்க முடியும்னு உனக்கு தோணினா போயிட்டே இரு, ஈஸியா கோவ படலாம், பேசி பிராப்லம் சரி பண்றது அத விட ஈஸி, என்ன செய்யலாம்னு முடிவு பண்ணிட்டு போ” கோவமாக சொன்னாள் வாசுகி. 

சற்றே நிதானித்த மிதுன்யா ஓரமாக இருந்த உணவு மேசையில் அமர்ந்து கொண்டாள். 

வாசுகிக்கு நன்றி சொன்னான் ஜீவா. 

“அந்த கார்னர் டேபிள்ல நான் உட்கார்ந்துக்கிறேன், இவளை இங்க அழைச்சிட்டு வர்றதுக்குள்ள எனர்ஜி எல்லாம் வத்தி போச்சு, என் வயித்த நான் கவனிக்கிறேன், பில்…”

வாசுகி சொல்லிக் கொண்டிருக்கும் போதே, “நான் பே பண்ணிடுறேன் வாசு, நீ மெதுவா பொறுமையா சாப்பிடு” என்றான்.

“வெஜ் ஓட்டலுக்கு வந்திட்டு என்னத்த ரசிச்சு பொறுமையா சாப்பிடறதோ?” புலம்பிக் கொண்டே சென்றாள் வாசுகி. 

மிதுன்யாவின் எதிரே ஜீவா அமர, அவனை பார்க்க மறுத்தாள் அவள். சர்வர் வரவும் இரண்டு மீல்ஸ் ஆர்டர் செய்தான். உடனே உணவு பரிமாறப்பட்டது. சாப்பாட்டில் கை வைக்காமல் இருந்தாள் மிது. 

“உங்கப்பா விவசாயம் பார்க்கிறது அரிசி மில் வச்சிக்கிறது இதெல்லாம் எனக்கு பிடிக்கலைன்னு சொன்னா விட்ருவாரா?” எடுத்தவுடன் அவளை கோவப்படுத்தினான். 

“விவசாயம் இல்லைனா ஒரு பிடி சோறு உங்களால மட்டுமில்லை யாராலேயும் சாப்பிட முடியாது” என சூடாக சொன்னாள். 

“ஏஏ மிது, விவசாயம் பத்தி குறைச்சு சொல்லல நான், முதல்ல சாப்பிடு” என்றான். 

இருவரும் சாப்பிட ஆரம்பித்தனர், ஆனால் சரியாக சாப்பிட முடியவில்லை. 

 “பிடிச்சதை செய்யும் போது மத்தவங்க என்ன சொல்வாங்கன்னு யாரும் யோசிக்க மாட்டாங்கன்னுதான் சொன்னேன். எல்லாரும் நம்ம இஷ்ட படி வேலை செய்யணும்னா நியாயமா சொல்லு?” என்றான். 

“ஊர்ல உலகத்துல உள்ளவன் எல்லாரோட வேலையும் இப்படித்தான் இருக்கணும்னு சொல்ல என் வீட்ல உள்ளவங்க ஒன்னும் விவரம் இல்லாதவங்க இல்லை. அவங்க வீட்டு பொண்ண கட்டி கொடுக்கும் போது மாப்ள என்ன செய்யணும் செய்யக் கூடாதுன்னு அவங்களுக்கு எதிர்பார்ப்புகள் இருக்கும்”

“அரேஞ்டு மேரேஜ்லதான் அவங்க இப்படிலாம் எதிர்பார்க்க முடியும். லவ் மேரேஜ்ல இது எப்படி செல்லும், அவங்க எக்ஸ்பெக்டேஷன்ஸ்க்கு ஏத்த மாதிரி பையனை நீ லவ் பண்ணினா ஓகே, இல்லைனா என்ன செய்ய முடியும் மிது?”

“இந்த காதல் கன்றாவி ஒன்னும் அப்படி பார்த்து வர்றது இல்லையே!” கோவமாக சொன்னாள். 

“ம்ம்ம்… கரெக்ட், உனக்கு புரிஞ்சா சரி. லவ்ல ரூல்ஸ் கிடையாது மிது, யாரு, என்ன, சரி வருமான்னு பார்த்து வந்தா அது லவ் கிடையாது. கமிட் ஆனதுக்கப்புறம் இப்படி இருக்கணும் அப்படி இருக்காதன்னு கண்ட்ரோல் பண்ணினா நீ சொன்ன அந்த கன்றாவி லவ் காணாம போயிடும்” 

“இங்க யாரும் யாரையும் கண்ட்ரோல் பண்ணல. என்னை கல்யாணம் பண்ணனும்னா நீங்க செய்ய போற வேலை சிக்கலை ஏற்படுத்தும்னுதான் சொல்றேன்”

“அப்படி சிக்கல் வந்தா நான் சரி பண்ணிக்கிறேன்”

 ஆயாசமாக அவனை பார்த்தவள், “ஜீவா… எனக்கே நீங்க இப்படி டான்ஸை ஒரு வேலையா பார்க்க போறது பிடிக்கல” என்றாள். 

“உனக்காக எனக்கு விருப்பம் இல்லாத வேலைய பார்த்தா உனக்கு ஓகேவா?” 

“இப்படி கேட்டா என்ன பதில் சொல்ல நான்? கார்ப்பரேட்ஸ்ல வேலை செய்ய பிடிக்கலைனா வேற வேலை பாருங்க, டீச்சிங் சைட் ட்ரை பண்ணுங்க”

“டிச்சிங் பிடிக்கும்னு சொல்லியிருக்கேனா உங்கிட்ட? அதுக்கான பொறுமைலாம் என்கிட்ட சுத்தமா கிடையாது”

“நீங்க எவ்ளோ நல்லா டீச் பண்ணுவீங்கன்னு எனக்கு நல்லா தெரியும்”

“நான் சொல்லிக் கொடுக்கணும்னா என் எதிர்த்தாப்ல என் மிது குட்டி இருக்கணும். அன்ஃபார்ச்சுனேட்லி  அதுக்கு வாய்ப்பு இல்லையே” சின்ன சிரிப்புடன் சொன்னான். 

அவள் கடுப்பாக பார்க்க, “உனக்கு சொல்லி கொடுத்தேன்னா அது வேற மிது, ஐ டி டீச்சிங் இதெல்லாம் சுத்தமா செட் ஆகாது எனக்கு” என்றான். 

“அப்போ ஏதாவது பிஸினஸ் பண்ணுங்க ஜீவா. பொட்டிக் கடை வச்சா கூட பரவாயில்லை, அட வேலைக்கே போகாதீங்க, அத கூட சமாளிச்சிடுவேன்.  கண்டிப்பா சினி ஃபீல்ட்க்குத்தான் போவேன்னு நீங்க முடிவு பண்ணினா… நமக்குத்தான் கஷ்டம்ங்க”

“எப்டி எப்டி வேலையில்லாத வெட்டி பயலுக்கு கூட உன் வீட்ல பொண்ணு கொடுப்பாங்க, டான்ஸ் ஆடினா தர மாட்டாங்களா? நீ மாத்த வேண்டியது என்னை இல்லை, உன் வீட்டு ஆளுங்களோட மைண்ட் செட்டை”

“ஆர்க்யூ பண்ணலாம்னா எப்படி வேணா பேசலாம்.  எனக்கு படிக்க நிறைய இருக்கு, நான் கிளம்பறேன்” பாதி சாப்பாட்டிலேயே எழுந்தாள். 

இதுதான் சமாதானம் செய்யும் லட்சணமா என தன்னைத் தானே கடிந்து கொண்டவன், “ஸாரி ஸாரி, நான் கூல் ஆகிட்டேன், ப்ளீஸ் நீயும் கூல் ஆகு” என்றான். 

அவள் உட்காராமலேயே இருக்க, “எப்படியும் போக விட மாட்டேன் மிது, இங்க ஏதும் ஸீன் ஆக வேணாம்னா உட்கார்” என்றான். 

“மிரட்டுறீங்களா ஜீவா?” 

“வம்பு பண்ணாம உட்காரு மிது, நமக்குள்ள நடக்கிறது நல்லாவே இல்லை, ரொம்ப டிஸ்டர்ப் ஆகுறேன் நான். ப்ளீஸ் மா” என அவன் கெஞ்சவும் மீண்டும் அமர்ந்தாள். 

“என்னை நம்புறியா இல்லியா மிது?” என அவன் கேட்க, அவள் பதில் சொல்லவில்லை. 

“நிமிந்து என்னை பாரு, எம்மேல நம்பிக்கை இல்லையா உனக்கு? ஏதாவது தப்பு பண்ணிடுவேன்னு பயப்படுறியா?”

“அப்படிலாம் நான் நினைக்கல,  என் தாத்தா அப்பயி அப்பாம்மா யாருமே சினிமா சம்பந்த பட்ட ஒருத்தருக்கு பொண்ணு தர்றத விரும்ப மாட்டாங்க. அவங்க சம்மதம் இல்லாம யாரையும் கல்யாணம் செஞ்சுக்கிற தைரியமெல்லாம் எனக்கு இல்ல” 

“ஏது ஓடிப் போய் கல்யாணம் பண்ணிக்கிற ஐடியாலாம் இருக்கா உன்கிட்ட?” 

“இல்லைனு சொன்னேன்” அழுத்தமாக சொன்னாள். 

“வீட்ல ஒத்துக்கலைனா என்ன செய்யலாம்னு யோசிச்சு வச்சிருக்க?”

“அப்படி யோசிக்க கூட எனக்கு பிடிக்கல ஜீவா, மனசார ஒருத்தனை நினைச்சிட்டு வேறொரு வாழ்க்கை வாழற கஷ்டத்தையெல்லாம் என்னால டாலரேட் செய்ய முடியாது. பெத்து வளர்த்தவங்களையும் கஷ்ட படுத்தக் கூடாது, அவங்க பிளெஸ்ஸிங்ஸோட  மனசுக்கு பிடிச்சவனோட வாழணும்னு நினைக்கிற சாதாரண பொண்ணு நான்” கண்களும் குரலும் கலங்க சொன்னாள். 

தன் இடது கையால் அவளது இடது கையை பிடித்துக் கொண்டான்.  அவளும் தண்ணீர் குடித்து நிதானத்திற்கு வந்தாள். 

“கவலைய விடு, உன் வீட்ல உள்ளவங்களை சம்மதிக்க வைக்க வேண்டியது என் பொறுப்பு. உனக்காக ஐ டி கம்பெனில வேலைக்கு போனா அத வச்சே நாளைக்கு உன்கிட்ட சண்டை போடுவேன். கல்யாணம் பண்ணிக்கிறதா பெருசு, காலம் முழுக்க நாம சந்தோஷமா வாழணும் மிது” என்றான். 

சரி என ஒத்துக் கொள்ளாமலும் மறுப்பாக ஏதும் சொல்லாமலும் இருந்தாள்.

“ஒரு வேளை இந்த ஃபீல்டுல என்னால ஷைன் பண்ண முடியலைன்னா விட்டிடுறேன் மிது. ட்ரை பண்ணக்கூடாதுன்னு ஸ்டார்டிங்லேயே முட்டுக்கட்டை போடாத” என்றான். 

அவளின் அமைதியையே சம்மதமாக எடுத்துக் கொண்டான். அடுத்து இருவராலுமே இலகுவாக பேசிக் கொள்ள முடியவில்லை. 

ஏற்பட்ட விரிசலை ஏதோ பசை போட்டு ஒட்டிக் கொண்டு கிளம்பினார்கள். அந்த பசை வேலைக்காகுமா என்பதுதான் தெரியவில்லை. 

செல்லும் வழியில், மிதுவின் முகம் தெளிவில்லாமல் இருப்பதை கண்ட வாசுகி இன்னும் உங்களுக்குள் சரியாகவில்லையா என விசாரித்தாள். 

தங்கள் பிரச்சனை பற்றி சொன்னாள். காதலில் இப்படியெல்லாம் ‘கட்டாயம்’ இருக்க கூடாது எனதான் வாசுகியும் சொன்னாள். 

“என் நிலைமைல இருந்து பார்த்தாதான் வாசு உன்னால என் கவலைய புரிஞ்சுக்க முடியும், விடு” என்றாள் மிது. 

“ஓகே நான் இது பத்தி பேசல, நீ நார்மலா இரு. இப்பதான் நீ தேர்ட் இயர், உன் அக்காக்கே இன்னும் மேரேஜ் ஆகல, நிறைய டைம் இருக்கு, என்ன வேணா நடக்கலாம், நாளைய பத்தி யோசிச்சு இன்னிக்கே வருத்த படாத” என வாசுகி சொல்ல, அவளுக்காக தலையாட்டிக் கொண்டாள். 

ஒரு அளவுக்கு மேல் ஜீவாவை வற்புறுத்துவதை விட்டு விட்டாள் மிது. மனதில் மட்டும் இது எங்கு போய் முடியுமோ என்ற பயம் நீடித்துக் கொண்டேதான் இருந்தது. 

நாட்கள் வேகமாக ஓடிச் சென்றன, இருவரும் பேசிக் கொள்கிறார்கள், ஆனால் முன் இருந்த ஏதோ ஒன்று குறைந்து போனது. 

தன்னை விட வேறொன்று அவனுக்கு முக்கியம் என அவளுள்ளும் தன் விருப்பம் அவளுக்கு ஏன் பிடிக்காமல் போனது என இவனுள்ளும் அதிருப்தியும் மன வருத்தமுமாக படிந்து போனது. 

நடன நிகழ்ச்சியில் பங்கேற்க போவதற்கு முன் அதைப் பற்றி ஜீவா சொல்ல ஆரம்பிக்க, கேட்பதில் ஈடுபாடு காட்டவில்லை மிது. பின் அவனும் அது சம்பந்தமாக அவளிடம் ஏதும் சொல்வதில்லை. 

நன்றாக இருக்கிறாயா, சாப்பிட்டாயா என கேட்டுக் கொள்வதும் படிப்பில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதை தெளிவு படுத்திக் கொள்வதாக மட்டுமே இருந்தாள் அவள். 

தன் நடன ஆர்வம் குறித்து அவளிடம் தான் சொல்ல வேண்டியதை சொல்லி விட்டேன், இனி தானாகத்தான் அவள் தெளிய வேண்டும் என அவனும் விட்டு விட்டான். 

நிகழ்ச்சிக்கான விளம்பரம் டிவியில் வரத் தொடங்கியதும் வாசுகிதான்  மிதுவிடம் சொன்னாள். வாரம் தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் நிகழ்ச்சி ஒளி பரப்பப் பட இருந்தது. 

முதலில் ஒளி பரப்ப பட்ட நிகழ்ச்சியில் ஒவ்வொருவரும் தனியாக ஆட வேண்டும், அவர்களின் திறமையை வைத்து அவர்களுக்கு ஜோடியாக யார் ஆடுவார்கள் என நடுவர்களே தீர்மானிப்பார்கள். 

ஜீவா நன்றாக ஆடினான், அறிமுக ஆட்டத்திலேயே நடுவர்களை கவர்ந்து விட்டான். நிறைய பாராட்டுக்களை பெற்றான், அவனுக்கு ஜோடியாக கேரளாவை சேர்ந்த ஷாலினி என்ற பெண்ணை தேர்வு செய்திருந்தனர், அந்த பெண்ணும் நன்றாக ஆடியிருந்தாள். 

இருவரும் கை குலுக்கி மகிழ்ச்சியாக சிரித்தனர். அருகருகே நின்றிருந்தனர், நிகழ்ச்சியின் தொகுப்பாளர்கள் அவர்களை கிண்டலாக ஏதோ பேசினார்கள், அதற்கும் அவர்கள் சிரித்தனர். மிதுவால் ரசிக்க முடியவில்லை. 

லாவண்யாவும் இந்த நிகழ்ச்சியை பார்த்தாள். ஜீவா ஆடும் போதே வீட்டினரை அழைத்து, “வாசுகியோட அத்தை பையன் ஜீவா ஆடுறான்” என ஆச்சர்யமாக சொன்னாள். 

வாசுகியின் சொந்தக்கார பையன் தங்கள் வீட்டிற்கு வந்ததை வினோதினி அறிவார், கல்யாண மண்டபத்தில் ஒரு சில நொடிகளே ஜீவாவை அவர் பார்த்திருக்க, இப்போது தொலைக்காட்சி வாயிலாக யாரென அவரால் அடையாளம் காண முடியவில்லை. அப்படியா என்பதோடு நிறுத்திக் கொண்டார். 

அந்த வீட்டு ஆண்களும் இது போன்ற நிகழ்ச்சிகளை பார்ப்பதில்லை என்பதால் ஏதோ ஒரு விஷயம் என கடந்து விட்டனர். மங்கம்மா பாட்டிக்குத்தான்  ஜீவாவை மிகவும் பிடிக்குமே, ஆகவே பெரிய பேத்தியோடு அமர்ந்து நிகழ்ச்சி முழுவதையும் பார்த்தார். 

தன் தங்கைக்கு அழைத்த லாவண்யா, “ஜீவா டான்ஸ்லாம் நல்லா ஆடுவான் போல, அவன் ப்ரொக்ராம்ல வரப் போறத முன்னாடியே வாசுகி உனக்கு சொன்னாளா?” எனக் கேட்டாள். 

“ம் சொன்னா” என்ற மிது பேச்சை மாற்றி விட்டாள். 

நிகழ்ச்சியில் தான் ஆடியதை அம்மாவோடு சேர்ந்து டிவியில் பார்த்து முடித்த ஜீவா, “எப்படிம்மா?” எனக் கேட்டான். 

“ஏதோ சும்மா பேச்சுக்கு சொல்ற, கொஞ்ச நாள்ல நீயாவே விட்ருவன்னுதான் நான் நினைச்சிருந்தேன். சூப்பரா ஆடினங்கிறது விட என்ஜாய் பண்ணி ஆடின, கஷ்ட படாம ஈஸியா வருது டான்ஸ் உனக்கு.  நிஜமா ரொம்ப பெருமையா இருக்குடா” என்றார் கோபிகா. 

“ஓ… இதான் ஃபர்ஸ்ட் டைம் நான் ஆடுறத பார்க்கிறியா ம்மா?” என கிண்டலாக கேட்டான். 

“அப்பலாம் உன்கிட்ட நிறைய விளையாட்டுத் தனம் இருக்கும். இப்போதான் உன் கண்ல சின்ஸியாரிடிய பார்க்க முடியுது” என அவர் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே பங்கஜ் அழைத்தார். 

கோபிகாவிடம் ஓரிரு வார்த்தைகள் பேசி விட்டு ஜீவாவிடம் பேசியவர் அவனை புகழ்ந்து தள்ளி விட்டார். பின்னர் குறைகளையும் சொல்லி சரிசெய்து கொள்ள சொன்னார். நேரில் பார்க்கும் போது சில நடன நுணுக்கங்கள் சொல்லித் தருவதாகவும் சொன்னார். 

நண்பர்கள் அழைத்து பேசினார்கள், அவனுக்கு நெருக்கமான கல்லூரி பேராசியர் சிலர் பேசினார்கள். வாசுகி, தீபா இருவரும் செய்தியாக தங்கள் வாழ்த்தையும் பாராட்டையும் சொல்லியிருந்தனர். 

சமையல் முடித்து விட்டு வீடு சென்றிருந்த சரோஜா கூட அழைத்து பேசினார். 

இத்தனை பேர் அழைத்தது மகிழ்ச்சி என்றாலும் அவனது மனமோ மிதுவின் அழைப்புக்காக, அவளின்  வார்த்தைகளுக்காக ஏங்கியது. 

அவள் பார்த்திருப்பாள் என்பது இவனுக்கு நன்றாக தெரியும், ஆடப் போகிற அன்று அவள் வாழ்த்து சொல்லாமல் போனதை எளிதாக கடந்தவனுக்கு இன்று அவள் பாராட்டாமல் கண்டு கொள்ளாமல் விடுவதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. 

தன்னை இவள் புரிந்து கொள்ளவே மாட்டாளா என வருத்தமாக இருந்தது. 

ஈகோ பாராமல் அவனே அவளுக்கு அழைப்பு விடுத்தான். ஏற்றுக் கொண்டவள் ஏதும் பேசாமல் அமைதி காக்க, “ஏதாவது சொல்லு மிது, என் டான்ஸ் நல்லா இல்லைன்னாவது சொல்லேன்” என்றான். 

அவனது அந்தக் கெஞ்சலில் அவளுக்கு பாவமாகி விட்டது. 

“சேச்ச சூப்பரா ஆடியிருந்தீங்க” என்றாள். 

“ஹ்ம்ம்… நானா கேட்டாதான் சொல்வியா?”

“படிச்சிட்டு இருந்தேன்”

“நம்பிட்டேன் மிது”

“திரும்ப என்னிக்கு ப்ரொக்ராம்?”

“சண்டே சண்டே வரும். நெக்ஸ்ட் வீக்  வரப்போற ப்ரொக்ராம் ஷூட்டிங் போன வாரமே முடிஞ்சிடுச்சு” என்றான். 

அத்தனை ஆர்வமாக அவன் சொல்லவும், “என்ன சாங்’குக்கு ஆடியிருக்கீங்க?” எனக் கேட்டு வைத்தாள். 

பிரபலமான  டூயட் ரக பாடலை சொன்னான். 

“அந்த பொண்ணோட சேர்ந்து ஆடியிருக்கீங்களா?” என உள்ளே போன குரலில் கேட்டாள். 

சிரித்தவன், “வெறும் டான்ஸ்டி கண்ணம்மா, என் பக்கத்துல நிக்கிற எல்லாரும் நீயாகிட முடியாது, நார்மலா பேசு” என்றான். 

வெறும் நடனம் என்பதை அவள் அறிய மாட்டாளா? மனம் கேட்டால்தானே? இந்த பேச்சு மேலும் தொடர்ந்தால் தங்களுக்குள் சண்டை வருமோ என பயந்தவள் உறக்கம் வருவதாக பொய் சொல்லி பேச்சை முடித்துக் கொண்டாள். 

பொய் என அவனுக்கு தெரியாதா என்ன? நேரம் போவதே தெரியாமல் பேசிக் கொண்டிருந்த காலம் போய் தன்னை தவிர்த்து ஓடுகிறாள் என்பதில் அவனது மகிழ்ச்சி எல்லாம் ஒட்டு மொத்தமாக வடிந்து போய் விட்டது.  

தங்களுக்குள்  இந்த கண்ணாமூச்சி  சரியாகி எல்லாம் பழைய படி ஆகாதா என நினைத்தான். ஆயாசத்தோடு இரு கைகளையும் இடுப்பில் வைத்து கண்களை மூடிக் கொண்டான்.