வயதுப் பெண்கள் இருக்கும் வீட்டில் எதற்கடா வயதுப் பையனை தங்க வைக்கிறாய் என மகனை கடிந்து கொண்டார் மங்கம்மா.
“என் வயசுக்குன்னு ஒரு அனுபவம் இருக்குல்ல ம்மா, அந்த பையன் ரொம்ப நல்ல மாதிரி. தெரியாத ஊர்ல எங்க போய் தங்குவான்? இந்த காலத்துல போய் பையன் பொண்ணுன்னு… எல்லாரையும் நல்லா கவனிச்சு விடு” என்றார் பசுபதி.
மிதுன்யா அவளது தோழிகள் மற்றும் அக்காவுடன் பின் பக்கத்தில் அமர்ந்திருந்தாள். அப்பார்ட்மென்ட் வீடுகளில் வசிக்கும் சென்னைவாசிகள் இருவரும் அந்த பெரிய வீட்டையும் வீட்டை சுற்றி இருக்கும் பெரிய இடத்தையும் சிலாகித்து பேசிக் கொண்டிருந்தனர்.
“கவலை படாத பாப்பா, இந்த பக்கமாவே ஒருத்தனை பார்த்து கட்டிக்கிட்டா இங்கேயே இருந்திடலாம்” என்றார் பாட்டிக்கு உதவி செய்ய வந்த பெண்களில் ஒருத்தி.
“அதெல்லாம் என்னிக்காவது ரசிக்க நல்லாருக்கும் இங்கேயேன்னா போர் அடிச்சிடும் க்கா” என்றாள் லாவண்யா.
“அப்படிலாம் இல்லக்கா, நான் ரெடிதான்” என்றாள் வாசுகி.
“விட்டா நாளைக்கே மாப்ள பார்த்து நாளான்னிக்கே கட்டி வைக்க சொல்வ போல, படிச்சு முடிக்கிற வழிய பாருங்க” என்றாள் லாவண்யா.
“அத உங்க தங்கச்சிகிட்ட சொல்லுங்க” என ஏதோ போன்ற குரலில் சொன்னாள் வாசுகி.
லாவண்யா தன் தங்கையை பார்த்து ‘என்ன விஷயம்?’ என்பது போல புருவம் உயர்த்த, “அவ சொன்னா அவகிட்டேயே என்னன்னு கேளு” என்ற மிதுன்யா தோழியை முறைத்து வைத்தாள்.
தனக்கென கொடுக்க பட்டிருந்த அறையின் ஜன்னல் வழியே இவர்களைத்தான் பார்த்திருந்தான் ஜீவா.
மிதுன்யா பதட்டத்திலேயே இருப்பதை கண்டவனுக்கு தான் இங்கு வந்திருக்க கூடாதோ என தோன்றியது. என்ன செய்தாவது அவளை உற்சாக படுத்தி விட வேண்டுமென்ற ஆவலும் பிறந்தது.
தாத்தாவும் பசுபதியும் காலை உணவை முடித்துக் கொண்டு வெளியில் புறப்பட்டு விட்டனர்.
“அந்த தம்பியையும் சாப்பிட கூப்பிடு” என்றார் பாட்டி. யாராவது சொல்ல மாட்டார்களா என காத்திருந்த மிதுன்யா, வாசுகியை போய் அழைத்து வரச் சொன்னாள்.
“இதோ என் அத்தானை போய் அழைச்சிட்டு வர்றேன்” என சொல்லிக் கொண்டே ஓடிச் சென்றாள் வாசுகி.
அந்த வீட்டினரை பொறுத்த வரை ஜீவா வாசுகியின் சொந்தக்கார பையன், மிதுன்யாவுக்கு முன்னரே அறிமுகம் ஆகியிராதவன்.
உன் ஆளு என தான் சொன்னதற்காக மிதுன்யா கோவித்துக் கொண்டதால் அவளை சீண்டி விட வேண்டும் என முடிவு கட்டியிருந்தாள் வாசுகி.
உணவு மேசையிலேயே தன் திடீர் அத்தானை விழுந்து விழுந்து கவனித்துக் கொண்டாள்.
“மெட்ராஸ் பாப்பாவுக்கு அது அயித்தான் மேலதான் எம்புட்டு பாசம் பாரேன்” என்றாள் வேலை செய்யும் அக்கா.
“இருக்காதா பின்ன, மொறை பையன் ஆச்சே” என்ற மற்றொரு வேலை செய்யும் அக்கா, சின்ன குரலில், “சோடி பொருத்தம் கூட சூப்பரா இருக்கு” என்றாள்.
மிதுன்யாவுக்கு சாப்பாடே இறங்கவில்லை.
தான் சொல்ல சொல்ல கேளாமல் தன் இலையை வாசுகி நிரப்பியதால் பதிலுக்கு ஜீவாவும் அவளின் இலையில் பலகாரங்களை அடுக்கினான். அவள் கையை வைத்து மறிக்க, அவன் அவளது கையை பற்றி விலக்கி விட்டு, “நல்லா சாப்பிடு வாசு, என் அத்தையும் மாமாவும் உன்னை நல்லா கவனிக்கணும்னுதான் இவ்ளோ தூரம் அனுப்பி வச்சிருக்காங்க, சாப்டு சாப்டு” என வம்பு செய்தான்.
“அதானே நீயும் நல்லா சாப்பிடும்மா, தம்பி எப்டி ஐய்யனார் கணக்கா இருக்கு, நீயும் நல்லா கிண்ணுன்னு இருக்கணும். அப்பதான் உங்கள சேர்ந்து பார்க்கையில இன்னும் நல்லாருக்கும்” என்றாள் அந்த அக்கா.
“என்னடி ஏன் உன் முகம் சிவக்குது, காரம் ஜாஸ்தி ஆகிடுச்சோ” என மிதுன்யாவின் காதோரம் கிசு கிசுத்தாள் தீபா.
மிதுன்யா அமைதி காக்க, “உன் ஆளுதான்னு நிஜமாவே இவ தப்பாதான் சொல்லிட்டா. நடக்கிறத பார்த்தா போகும்போது ஜோடியாதான் போவா போல இவ” என்றாள் தீபா.
விளையாட்டுப் பேச்சுக்கள் என்பது புரிந்தாலும் மிதுன்யாவால் எளிதாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.
பாட்டி சமையலறையில் இருந்தாலும் லாவண்யா அவர்களுடன்தான் சாப்பிட்டுக் கொண்டிருந்ததால் மிதுவால் தோழிகளை கண்டிக்கவும் முடியவில்லை.
திடீரென பாட்டியின் அலறல் சத்தம். சமையல் கட்டில் கால் தடுக்கி விழுந்து விட்டார். இடது கால் பாதத்தை ஊன்ற முடியாமல் வலியில் அவஸ்தை பட்டார். அவரை ஹாலில் சோபாவில் படுக்க வைத்தனர்.
வீக்கம் இல்லாத காரணத்தால் சுளுக்காகத்தான் இருக்கும் என்ற வேலை செய்யும் அக்கா, “சுளுக்கு வழிச்சு விடுற முனியாத்தா கூட ஊர்ல இல்லியே, இப்போன்னு பார்த்தா பெரியம்மா கால்ல சுளுக்கு வுழணும்?” என அங்கலாய்த்தாள்.
தேங்காய் எண்ணெய்யை லேசாக சூடு செய்து தரும் படி கேட்டான் ஜீவா. என்ன செய்ய போகிறான் என யோசித்தாலும் அப்படியே செய்து தர சொன்னாள் லாவண்யா.
எண்ணெய் வரவும் பாட்டியின் கால் மாட்டில் அமர்ந்து கொண்ட ஜீவா, அவரது பாதத்தை மடியில் எடுத்து வைத்துக்கொண்டான்.
“உனக்கு இதெல்லாம் என்னத்தடா ப்பா தெரியும்?” என பயந்தார் பாட்டி.
“என் பாட்டிக்கு இதெல்லாம் தெரியும், அவங்க செய்யும் போது பார்த்து பார்த்து நானும் தெரிஞ்சுகிட்டேன். பயப்படாதீங்க, அஞ்சு நிமிஷம் வலி பொறுத்துக்கோங்க” என்றவன் அழகாக அவரது பாத சுளுக்கை விடுவித்து விட்டான்.
காலை ஆட்டி அசைத்து பார்த்த பாட்டி நன்றாக எழுந்தமர்ந்து ஜீவாவின் முகவாயை வருடி, “வயசான காலத்துல நடமாட முடியாத ஏதோ பெரிய வினையா வந்து போச்சோன்னு பயந்தே போயிட்டேன். என் தங்கம்… சட்டுனு சரி பண்ணிட்டியே!” என்றார்.
“ஆஹா என் அத்தான் சாதாரண இன்ஜினியர்னு பார்த்தா சைடுல டாக்டருக்கு வேற படிச்சிருக்கார் போலயே” என்றாள் வாசுகி.
“ஆமாம் உன் மொறைப்பையன் கை வித்தைக்காரன்தான். நீயும் ரொம்ப கொடுத்து வச்சவதான்டி பொண்ணு” என்றார் பாட்டி.
வேண்டுமென்றே மிதுன்யாவின் தோளை தன் தோளால் இடித்து, ‘எப்படி?’ என புருவம் உயர்த்தினாள் வாசுகி.
சாதாரணமாக செல்வது போல அங்கிருந்து அகன்று அறைக்கு சென்று விட்ட மிதுயாவுக்கு கண்கள் கலங்கிப் போயிருந்தன. விளையாட்டாக கூட அவனை யாரோடும் இணைத்து பேசுவது தன்னை ஏன் இந்தளவு பாதிக்கிறது என அவள் மீதே அவளுக்கு கோவம்.
லாவண்யா தங்கையை அழைக்க, முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு வெளியேறினாள்.
பாட்டிக்கு ஜீவாவை மிகவும் பிடித்து விட்டது. இயல்பாகவே அவனிடம் நிறைந்து காணப் பட்ட வசீகரிக்கும் தன்மையாலும் துறு துறு குணத்தாலும் பணிவான நடத்தையாலும் அவரின் மனதில் இடம் பிடித்து விட்டான்.
பாட்டி சமையல் செய்யும் வேலையை விட்டே பல வருடங்கள் கடந்து விட்டன. இன்று சின்ன பிள்ளைகளுக்கு தன் கையால் சமைத்து போட பிரியப் பட்டார். நின்று கொண்டே கேஸ் அடுப்பில் சமைப்பதெல்லாம் அவருக்கு சரி வராது.
உட்கார்ந்து கொண்டு சமைக்க வசதியாக பின் கட்டில் விறகடுப்பு அமைப்பு உள்ளது.
மசாலா அரைப்பது, காய் நறுக்குவது, தேங்காய் அரைப்பது என ஆளுக்கொரு வேலையாக பிரித்துக் கொண்டனர். வேலை செய்ய வந்த பெண்கள் இறைச்சியை சுத்தம் செய்து, பாத்திரம் கழுவுவது, வீட்டை பெருக்குவது என்ற வேலைகள் மட்டுமே செய்தனர்.
வாசுகி வெறுப்பேற்றிக் கொண்டே இருந்ததால் அங்கிருக்க பிடிக்காமல் வறுத்த மசாலா பொருட்களை அம்மியில் அரைக்கிறேன் என தள்ளி சென்று விட்டாள் மிதுன்யா. இயல்பாக செல்வது போல ஜீவாவும் அவளிடம் சென்றான்.
“நான் ஹெல்ப் பண்றேன் மிது, என்ன செய்யணும்?” என கேட்டுக் கொண்டே அம்மிக் குழவியை கையில் பிடித்தான்.
“தள்ளி போங்க, உங்க அத்தை பொண்ணுக்கு போய் ஹெல்ப் பண்ணுங்க. என்கிட்ட வராதீங்க” என சிடு சிடுத்தாள்.
“நிஜமான அத்தை பொண்ணு நீதான் மிது” என அவன் சொல்லவும் அதற்கு என்ன சொல்வதென பார்த்தாள்.
“நாமதானே உண்மையான முறை பசங்க. உன் ஃ ப்ரெண்ட் விளையாடுறதுக்கு என்கிட்ட எதுக்கு கோவம்? இப்படி நீ மூஞ்ச திருப்பிக்கவா இவ்ளோ தூரம் டிராவல் பண்ணி வந்தேன்?” எனக் கேட்டான்.
அவளுக்கும் தன் சிறு பிள்ளைத் தனம் புரிய, “இந்த வாலுங்கள நீங்க எப்ப எப்டி பார்த்தீங்க?” என விசாரித்தாள்.
மிதுன்யா இவனுக்கு செய்தி அனுப்பிய அன்று மதுரையில் ஒரு மருத்துவமனையில் இருந்தானாம். இவனுடைய நண்பனின் அப்பாவுக்கு அவசர அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருந்தது. அவரது பிரிவு இரத்த வகை ஏற்பாடு செய்வதில் மற்ற நண்பர்களோடு சேர்ந்து இவனும் பிஸியாக இருந்ததால்தான் இவளுக்கு பதில் சொல்ல முடியவில்லையாம்.
“காலைல உனக்கு ரிப்லை பண்ணினா மெசேஜ் உனக்கு போய் சேரவே இல்லை. கால் பண்ணினாலும் ஃபோன் டெட். உனக்கு என்னாச்சோன்னு ரொம்ப கவலையா இருந்தது. சென்னைக்கு போனா காலேஜ் லீவ் விட்டு எல்லாரும் ஊருக்கு போயிட்டாங்க. உனக்கு என்னன்னு தெரியாம என்னால…” என்றவன் மேலே பேச முடியாமல் வாயை குவித்து மூச்சு விட்டான்.
“உன் ஊருக்கு வர ட்ரெயின் ஏறிட்டேன். எனக்கு பெர்த் கன்ஃபார்ம் ஆகல. நான் ஏறின அதே கோச்லதான் என் இன்ஸ்டன்ட் மொறை பொண்ணும் இருந்துச்சு. நீ எப்படியிருக்கேன்னுதான் ஃபர்ஸ்ட் விசாரிச்சேன். அப்பவே என்னை ஓட்ட ஆரம்பிச்சிட்டாங்க” என சொல்லி அவனுக்குள் சிரித்துக் கொண்டான்.
“மசாலா அரைக்க எவ்ளோ நேரம்னு அப்பயி சத்தம் போடும்” என சொல்லிக் கொண்டே அம்மியை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தாள் மிதுன்யா. என்ன செய்ய வேண்டும் என கேட்டு அவளுக்கு உதவினான் ஜீவா.
நேற்று இரவில் இரயில் பெட்டியில் இருக்கை கிடைக்காதவனுக்கு இவளின் தோழிகள்தான் உதவி செய்தனர். இரு பெண்களும் ஒரு இருக்கையை பகிர்ந்து கொண்டு இவனுக்கு தனி இருக்கை கொடுத்தனர்.
இவ்வளவு தூரம் வந்து விட்டேன், தூரமாக இருந்து மிதுன்யாவை பார்த்து விட்டு போய் விடுகிறேன் எனதான் ஜீவா சொன்னான். வாசுகிதான் திட்டம் போட்டு இவனையும் அவர்களுடன் அழைத்து வந்து விட்டாள்.
“உன் ஃப்ரெண்ட் வாலுதான், ஆனா நல்ல பொண்ணு. மாமாகிட்ட எப்படி பேசினா என்னை இங்க கூட்டி வருவாருன்னு தெரிஞ்சு பேசி என்னை இங்க வரவச்சிட்டா” என்றான்.
“மாமாவா… அது யாரு?” என பொய்யான கோவத்தோடு கேட்டாள்.
“உன் அப்பாதான், இல்லியா?” என கேட்டான்.
பதில் சொல்லாமல் சிரித்தவள் மசாலா அரைக்க, இவன் அரை பட்டுக் கொண்டிருக்கும் மசாலாவை குழவியை நோக்கி தள்ளி வைத்து அவளுக்கு உதவினான்.