அன்பு சென்னையிலிருந்து ஊர் வந்து சேர்ந்த போது நடு இரவாகியிருந்தது. சத்தம் செய்யாமல் தன்னை சுத்தம் செய்து கொண்டு வந்தவன் லாவண்யாவின் அருகில் படுத்து அவளது கழுத்து வளைவில் முத்தமிட்டான். அந்த ஸ்பரிசத்தில் விழித்துக் கொண்டவள் அவனை கண்டு விட்டு அப்படியே அவன் மேல் படுத்துக் கொண்டாள்.
அவளை அணைத்துக் கொண்டவன், “ஒரு நாள் பார்க்காம போனதுக்கே ஓவரா இருக்கே உன் பாசம், மாசக் கணக்குல விட்டுட்டு போனா என்னடி பாப்பா பண்ணுவ?” எனக் கேட்டான்.
“ஒரே ஒரு நாள் நீங்க என் கூட இல்லாமலே எல்லாரும் வாய்க்கு வந்ததை பேசுறாங்க, மாசக் கணக்குல விட்டுட்டு போனா பேச்சு தாங்க முடியாம போய் சேர்ந்திடுவேன்” என்றவள் அவனது மார்பில் முகத்தை அழுத்திக் கொண்டாள்.
அவளின் கண்ணீரை உணர்ந்தவன், “யாரு என்னடி சொன்னாங்க?” என பதற்றமாக கேட்டான். அவள் சொல்லவில்லை.
திருமணம் முடிந்த அன்றே அருந்ததிக்கு முடியாமல் போய் பின் சரியானது. லாவண்யா புகுந்த வீடு வந்த ஒரு வாரத்தில் எண்ணெய் லோடு ஏற்றி சென்ற வாகனம் விபத்துக்குள்ளாகி நஷ்டம் ஏற்பட்டது.
ஜாதகத்தில் கோளாறு உள்ளவளை மணந்து கொண்டாய், ராசியில்லாதவள் இவள் என்றெல்லாம் பேச ஆரம்பித்து விட்டார் அன்புவின் அம்மாச்சி விஜயலக்ஷ்மி. வீட்டின் மூத்த பெண்மணியாக இல்லாமல் வேறு யாராக இருப்பினும் தொலைத்து கட்டியிருப்பான் அன்பு. வயதானவரிடம் கடுமையை காட்ட இயலாதே, ஆகையால் இனி இப்படி பேசக்கூடாது என கண்டித்தான்.
விஜயலக்ஷ்மி அடங்கினால்தானே, எதேச்சையாக ஏதாவது சிறு அசம்பாவிதம் நடந்தாலும் லாவண்யாவின் ராசியை பற்றி சொல்ல ஆரம்பித்து விடுவார். அருந்ததியும் கேட்டுக் கொண்டு சும்மா இருக்க மாட்டார், அம்மாவை கண்டிப்பார்.
ஒரு முறை விஜயலக்ஷ்மி தன் மனைவியை குறை சொன்னதற்காக நன்றாக திட்டி விட்டான் அன்பு. கோபித்துக் கொண்ட விஜயா இரண்டு நாட்கள் சாப்பிடாமல் மயக்கமடையும் நிலைக்கு சென்று விட்டார். மருத்துவமனையில் சேர்த்து அங்கேயும் சாப்பிட மறுத்து, அன்பு வந்து சாப்பிட சொன்ன பிறகுதான் சாப்பிட்டார்.
தன் பேத்தியை குத்தி காட்டி பேசுவதை தெரிந்து கொண்ட செல்வநாயகம் அவளை தன் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார். இனி அங்கு அனுப்ப மாட்டேன் என உறுதியாக சொல்லி விட்டார். அன்பு தன் அம்மாவோடு வந்து பேசி லாவண்யா வீட்டினரை சமாதானம் செய்துதான் தன் மனைவியை அழைத்து சென்றான்.
இப்படியெல்லாம் களேபரம் நடப்பதால் தன்னை விஜயா எது சொன்னாலும் கண்டு கொள்ளாமல் கடந்து செல்ல பழகிக் கொண்டாள் லாவண்யா. பாட்டியின் இந்த துவேஷத்திற்கு மாறாக அருந்ததி தன் மருமகளின் மீது அன்பை பொழிந்தார் என்றால் அவரின் மகன் அன்பு தன்னையே தன் மனைவிக்கு சாசனம் எழுதிக் கொடுத்து விட்டான்.
கோவக்காரன் என பெயர் பெற்றிருந்தவன் இது நாள் வரை தன் மனைவியிடம் ஒரு சொல் கடிந்து சொன்னதில்லை. தொழிலில் சில சவால்கள் சந்திக்க நேரிடும், சொந்தங்களில் ஏதாவது பிரச்சனைகள் வரும், எதை முன்னிட்டும் அவளிடம் முகம் காட்டியதில்லை.
அவளை கண்ட அடுத்த நொடியே கனிவாக மாறி விடும் அவனது பார்வை. தன்னை உயிராக நேசிக்கும் கணவனை உயிருக்கும் மேலாக நேசித்தாள் லாவண்யா.
திருமணம் முடிந்து மூன்று வருடங்கள் முடிந்தும் இன்னும் இவர்களுக்கு குழந்தைப்பேறு இல்லை. சோதனைசெய்து பார்த்ததில் லாவண்யாவுக்குத்தான் ஏதோ பிரச்சனை என சிகிச்சை எடுத்துக் கொள்கிறாள்.
அன்பு இல்லாத நேரத்தில், பாட்டிதான் “என் வம்சத்தை தழைக்க வைக்க துப்பில்லாத ராசி கெட்டவ. என் பேரனுக்கு வேற பொண்ண பார்த்து கட்டி வைக்கிறேன் பாரு” என சொல்லியிருந்தார்.
மற்ற திட்டுக்களை போல லாவண்யாவால் இதை எளிதாக கடக்க முடியவில்லை. அறைக்குள் வந்து முடங்கி விட்டாள். எப்போது அன்பு வருவான், எப்போது அவனிடம் தஞ்சைமடையலாம் என காத்திருந்தவள் அப்படியே தூங்கியிருந்தாள்.
அவனை காணவும் அடக்கி வைத்திருந்ததை கொட்டி விட்டாள்.
அன்புவுக்கு தன் அம்மாச்சி மீது ஆத்திரம் பொங்கியது. மனைவியை தள்ளி படுக்க வைத்தவன் வேகமாக எழ, அவனது கையை பிடித்துக்கொண்டவள், “எங்க போறீங்க?” என்றாள்.
“எவ்ளோ தைரியம் இருந்தா அம்மாச்சி உன்னை இப்படி பேசியிருக்கும்? இப்பவே ஒரு முடிவு கட்டுறேன்” என்றான்.
“ஏஏய்… அது பேச்சை பெருசு பண்ணிகிட்டு… அழுவாதடி” என சொல்லிக் கொண்டே அவளுக்கு நெருக்கமாக அமர்ந்து கொண்டான். தன் வேஷ்டி கொண்டு அவளின் அழுகையை துடைத்து விட்டான்.
சற்று நேரத்தில் அழுகையை விட்டவள் எப்போது கிளம்பினீர்கள், என் தங்கையை பார்த்தீர்களா? என விசாரித்தாள்.
எழுந்து போய் அவளுக்காக வாங்கி வந்த பட்டு புடவைகளை எடுத்து வந்தான். அந்த நேரமே ஆவலாக பிரித்து பார்த்தவள், “இத்தனை புடவையா?” என வியப்பாக கேட்டாள்.
“இன்னும் கூட எடுக்கலாம்னு இருந்தேன்”
“எதுக்கு இத்தனை, எங்க கட்டிட்டு போக போறேன்?” என அலுத்தாள்.
“பார்க்க நான் இருக்கேனே, தினம் ஒன்னுன்னு கட்டிக்க பாப்பா”
“ஆமாம் அப்படியே வீட்டுல இருக்கிற மாதிரிதான்… காலைல கிளம்பினா மதியானம் போல சாப்பாட்டுக்கு வருவீங்க, அதுவும் அரை மணி நேரத்துல போயிடுவீங்க”
“ராத்திரி வீட்டுக்குத்தான் வர்றேன்” என்றான்.
“ஹ்ம்ம்… நல்லாருக்கு நைட்ல பட்டு புடவை கட்டிகிட்டு படுத்து தூங்குறதா?”
“நீ புடவையை கட்டிக்க, நான் பார்த்து ரசிக்கிறேன், அப்புறம் புடவையை கசங்காம பத்திரமா மடிச்சு வச்சிட்டு என்னைய கட்டிகிட்டு தூங்கு” என சாதாரணமாக சொல்வது போல சொன்னான்.
“ஆமாம், இல்லைனா மட்டும் இவரை நான் கட்டிக்கிறதே இல்ல!” என சின்ன புன்னகையோடு முணு முணுத்தாள்.
“எனக்கென்னமோ அப்படித்தான் தோணுது” என்றவன் ஏற்கனவே நெருங்கி அமர்ந்திருந்தவளை தன் வெற்று மார்போடு இன்னும் நெருக்கமாக்கிக் கொண்டான்.
“போதும் போதும், இதுக்கு மேல நெருங்க முடியாது” என்றாள்.
“எங்கடி நெருங்கியிருக்கோம், அதான் நம்ம ரெண்டு பேருக்கும் நடுவுல நீ போட்ருக்க துணி மலை போல இருக்கே” என்றான்.
“எது இந்த நைட்டி மலையா?”
“எனக்கு அப்படித்தான்” என்றவன் அவளை ஆசையாக உச்சிமுகர்ந்தான். தடைகள் ஏதுமில்லாமல் அவளை தன்னில் ஏந்திக் கொண்டான். அவள் மீது கொண்ட பித்து இன்னும் குறையவில்லை என்பதை அவளுக்கு புரிய வைத்தான். அவனது வருகைக்கு முன் அப்படியொரு கவலையில் இருந்தவளோ அவனது வருகைக்கு பின் அவனின் அருகாமையில் கவலையின் சுவடுகள் கூட இல்லாமல் நிர்மலமாக உறங்கிப் போனாள்.
காலையில் அவன் மட்டும் எழுந்து அறையை விட்டு வெளி வந்தான்.
“இன்னும் லாவண்யாவை காணோமே, உடம்புக்கு ஏதும் இல்லையேப்பா?” என விசாரித்தார் அருந்ததி.
“நேத்து ராத்திரியும் சீக்கிரமா ரூமுக்கு போயிட்டாளா, உடம்புக்குதான் என்னவோன்னு நினைச்சிட்டேன், நல்லா தூங்கி வரட்டும்” என்ற அம்மாவிடம் தன் மனைவியை அம்மாச்சி பேசியதை பகிர்ந்தான்.
நெஞ்சில் கை வைத்து அதிர்ந்தவர், “எனக்கு தெரியாதுடா தம்பி, வயசு ஏற ஏற இப்படி புத்தி காணாம போகுதே என் அம்மாக்கு. அழுதாளாய்யா? எத்தனை குணமான பொண்ணு, அத போய் அப்படி பேச எப்படித்தான் இதுக்கு மனசு வந்துச்சோ?” என கலங்கிப் போனார்.
“வேற யாரும்னா உண்டு இல்லைனு பண்ணியிருப்பேன், வயசான அம்மாச்சியை என்ன செய்யன்னே தெரியலை” என அன்புவும் கவலை பட்டான்.
“நான் எடுத்து சொல்றேன் தம்பி”
“போம்மா, யார் சொல்லி கேட்குற ஆளு அது?” என அவன் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே வந்து விட்டார் விஜயா.
“ஏன் இன்னும் மகாராணி எந்திரிக்கலியா? என்ன வளப்போ! காலத்துல எந்திரிச்சு எல்லா வேலையும் ஆடி ஓடி பார்த்தாதானே உடம்புல உள்ள நோய் விட்டு விலகும்? கரு தங்கும்!” என அங்கலாய்த்தார் விஜயா.
“அம்மாச்சி!” என அதட்டிய அன்பு, வேற்று ஆட்கள் யாரும் இருக்கிறார்களா என பார்த்தான். வீட்டு வேலை பார்க்கும் ஆட்கள் இன்னும் வந்திருக்கவில்லை. லாவண்யாவுக்கு ஏதோ பிரச்சனை, வைத்தியம் பார்க்கிறாள் என்பதையெல்லாம் வெளியாட்கள் பேசு பொருளாக ஆக்குவதை அவன் விரும்பவில்லை.
முதலில் இப்படி என தெரிய வந்த போதே யாருக்கும் தெரியப்படுத்த வேண்டாம் என உறுதியாக இருந்தவன் மனைவியிடமும் அதைத்தான் சொல்லியிருந்தான். அவள்தான் மாமியாரிடம் உண்மையை சொல்லி விட்டாள், அதை ஒட்டு கேட்டு விட்டார் விஜயா.