ஆனால் அந்த வேலையால் தனக்கும் மிதுவுக்கும் பிரச்சனைகள் வருமோ என நினைத்து பயந்தவன் மணியிடம் ஆலோசனை செய்தான். 

“பங்கஜ் ஸார்கிட்டதானே போற, உனக்கு எல்லா விதத்திலேயும் சப்போர்ட் பண்ணுவார். வேலை செய்ற இடத்துல நடக்கிற எதையும் வீட்ல டிஸ்கஸ் பண்ணாம இரு, எந்த பிராப்லமும் வராது” என தைரியம் சொன்னான் மணி. 

ஜீவா, பங்கஜை தொடர்பு கொண்ட போது அன்று காலைதான் வெளியூருக்கு சென்றிருப்பதாக சொன்னார். உங்களிடம் வேலைக்கு வரவா? என இவன் கேட்க, தான் சென்னை வந்ததுமே வந்து விடு என மகிழ்ச்சியோடு சொன்னார். 

மணி ஏதோ மீட்டிங்கில் பிஸியாகி விட அங்கிருந்து கிளம்பி விட்டான் ஜீவா. யாருமில்லாத வீட்டிற்கு செல்ல பிடிக்காமல் காரில் சென்னை நகரையே வலம் வந்து கொண்டிருந்தான். 

மிதுவுக்கு ஏதாவது வாங்கித் தர வேண்டும் என அவனுக்கு தோன்றியது. பட்டுப்புடவை வாங்கலாம் என நினைத்தவன் பெரிய கடை ஒன்றுக்கு சென்றான். அங்கே மிதுவை சிறிதும் அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. 

“ஹேய் இங்க என்ன பண்ற? ஓ பி அடிக்கிறியா?” என கேட்டுக் கொண்டே அவளிடம் வந்தான். பயத்தோடு அவனை பார்த்தவள் தன்னிடம் வர வேண்டாம் என ஜாடை காட்டினாள். 

சுற்றும் முற்றும் பார்த்தவன் கண்களால் என்னவென கேட்டான். 

“அங்க என்ன பண்ற மிது, இங்க வா” என யாரோ கூப்பிடுவது கேட்கவும் அந்தப் பக்கம் பார்த்தான். 

“வர்றேன் மாமா” என சொல்லி இவள் செல்லவும் யாராக இருக்கும் என குழப்பத்தோடே நின்றான் ஜீவா. 

‘என் அக்காவின் கணவர், சென்னைக்கு ஏதோ வேலையாக வந்தவர் அக்காவுக்கு புடவைகள் வாங்க உதவி செய் என அழைத்தார், நானும் அரை நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு வந்து விட்டேன்’ என ஜீவாவின் கைப்பேசிக்கு செய்தி அனுப்பி வைத்தாள் மிது. 

இவர்தான் என் சகலையா?’ என இவன் செய்தி அனுப்ப, ‘ஆமாம், நீங்க ஏன் இங்க வந்தீங்க?’ என பதில் செய்தி அனுப்பினாள். 

‘அவர் மட்டும்தான் அவரோட வைஃபுக்கு ட்ரெஸ் எடுப்பாரா? நானும் என் வைஃபுக்கு எடுப்பேன்’

‘விளையாடாம கிளம்புங்க ஜீவா’

‘சீரியஸா சொல்லிட்டு இருக்கேன்’

‘மாமாக்கு டவுட் வந்தா அவ்ளோதான், ரொம்ப கோவக்காரர் வேற’

‘இதென்ன அநியாயம், என் வைஃப், என் உரிமை’  

மிது கைப்பேசியில் கவனமாக இருக்க, “அடடா, அத கொஞ்சம் உள்ள வச்சிட்டு இங்க பாரு, இந்த புடவை நல்லாருக்கான்னு பாரு” என்றான் அன்பு. 

மிது புடவைகளை பார்க்க, அங்கே ஜீவாவும் வந்து நின்றான். 

இரண்டு புடவைகளை தேர்வு செய்த மிது, “போதுமா மாமா?” எனக் கேட்டாள். 

“வெறும் ரெண்டு புடவையா? இன்னும் பாரு” என்ற அன்பு  அவனுக்கு வந்த கைப்பேசி அழைப்பை ஏற்றுக் கொண்டு சற்று தள்ளி சென்றான்.

“மேடம் என் வைஃபுக்கு ஒரு சாரி எடுக்கணும், கொஞ்சம் செலக்ட் பண்ணி தர்றீங்களா?” என குறும்பாக கேட்டான் ஜீவா. 

“நீங்களே பார்த்து எடுத்துக்கோங்க ஸார், தெரியாதவங்ககிட்ட பேசினா என் மாமா திட்டுவார்” என அவளும் வெறுப்பேற்றினாள். 

“ஒரு சின்ன உதவி செய்ய முடியாதா மேடம், வர வர மனிதபிமானம் செத்து போச்சு” என்றான் ஜீவா. 

“உங்க வைஃப் பேவரைட் கலர்ல ஒரேயொரு சாரிதான் இங்க இருக்கு, முடிஞ்சா கண்டுபிடிச்சு எடுத்துக்கோங்க”  என சின்ன குரலில் குறும்பும் சவாலுமாக சொன்னாள். 

“ஹையோ! அவளுக்கு பிடிச்ச கலர் எதுன்னு மட்டும் கேட்டு சொல்றீங்களா?” என பாவமாக கேட்டான். நிஜமாகவே அவனுக்கு தெரியவில்லை. 

அவனை முறைத்தவள், “அது கூட தெரியலை!” என சொல்லி முகத்தை திருப்பிக் கொண்டாள். 

கடை ஊழியன் என்ன எப்படியோ பேசிக் கொள்கிறார்களே என பார்த்தானே தவிர எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை. இவர்களை பார்த்துக் கொண்டே வந்த அன்புக்கு ஜீவா மிதுவிடம் ஏதோ தேவையில்லாமல் பேசி வம்பு செய்கிறானோ என சந்தேகமானது. 

“என்ன மிது எதுவும் பிரச்சனையா?” ஜீவாவை பார்த்துக் கொண்டே கேட்டான் அன்பு. 

அன்புவின் பார்வை அவளை கலவரப்படுத்த, “நாம வேற கடைக்கு போலாம் மாமா” என்றாள் மிது. 

ஜீவா ஏதோ தகராறு செய்திருக்கிறான், தன்னிடம் சொன்னால் சண்டையாகும் என நினைத்து மறைக்கிறாள் என முடிவே செய்து விட்ட அன்பு, “ஏன் நாம ஏன் வேற  கடைக்கு போகணும்? இங்கேயே பார்க்கலாம்” என அதிகாரமாக சொன்னான். 

தனக்கு பிடித்த நிறத்தில் புடவை இருக்கிறது என மிது சொல்லி விட்ட காரணத்தால் அதை வாங்காமல் போக ஜீவாவுக்கும் விருப்பமில்லை. 

அன்பு ஜீவாவை கோவமாக பார்த்திருக்க, அவனது பார்வையை தவிர்த்த ஜீவா புடவை இருந்த அடுக்குகளை பார்வையால் அலச ஆரம்பித்தான். 

மாமா நீங்களும் பாருங்க” என சொல்லி அன்புவின் கவனத்தை மாற்றினாள் மிது. 

எந்த நிறம் கொண்ட புடவை ஒன்றுக்கும் மேல் அங்கு இல்லை என்பதை கூர்ந்து கவனித்தான் ஜீவா. ஊதா நிறப் புடவையில் தங்க நிற புட்டாக்கள் இருந்த புடவை அவனது கவனத்தை கவர்ந்தது. சட்டென மிதுவை பார்த்தான், அவளின் பார்வையும் அந்த புடவையில்தான் இருந்தது. 

‘அதுதானே?’ என அவன் பார்வையால் கேட்க, மெச்சுதலான பார்வையில் அதுதான் என்பதை அவனுக்கு புரிய வைத்தாள். 

“அந்த பர்பில் கலர் சாரிய எடுங்க” என்றான் ஜீவா. அதே நேரத்தில் அன்புவும் அந்த புடவையை எடுக்க சொல்லியிருந்தான். 

 யாருக்கு எடுத்து காட்டுவது என கடை ஊழியன் குழம்ப, “நான்தான் ஃபர்ஸ்ட்  கேட்டேன்” என்றான் ஜீவா. 

“நானும்தான் கேட்டேன், கொடுப்பா” என்றான் அன்பு. 

ஸார் ப்ளீஸ், இந்த கலர் என் வைஃபோட பேவரைட் கலர். நான் வாங்கிக்கிறேனே” என அன்புவிடம் தன்மையாகவே கேட்டான் ஜீவா.  

ஜீவா மீது அன்புக்கு நல் அபிப்ராயம் ஏற்படவில்லை, முதல் பார்வையிலேயே பிடிக்காமலும் போய் விட்டது. ஆகவே தான்தான் அந்த புடவையை வாங்குவேன் என பிடிவாதமாக சொன்னான். 

“கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்களேன் ஸார்” என்றான் ஜீவா. 

ஜீவாவை அலட்சியம் செய்த அன்பு, புடவையை பேக் செய்யும் படி கூறினான். மிது செய்வதறியாமல் சங்கடமாக நின்றிருந்தாள். 

கடை ஊழியன் ஜீவாவை தயக்கமாக பார்க்க, “இட்ஸ் ஓகே, அவங்களுக்கே கொடுத்திடுங்க” என்றான் ஜீவா. 

“காசு கொடுத்துதானே நான் வாங்குறேன், நீ எதுக்குப்பா அந்தாள பார்க்கிற?” என ஊழியனிடம் கோவப்பட்டான் அன்பு. 

“ஸார் ஸார்… விடுங்க, நான் கிளம்பறேன்” என்றான் ஜீவா. 

முன்பின் தெரியாத பெண்ணிடம் வம்பாக ஏதோ பேசி விட்டு இப்போது நல்லவன் போல நடிக்கிறானா? இந்த கடைக்காரன் என்னை வில்லன் போல பார்க்கிறானே என அன்புவுக்கு சீற்றமானது. 

“உன்கிட்ட எனக்கு எந்த பேச்சும் இல்லை, போறதுன்னா போ, என்கிட்ட எதுக்கு சொல்ற?” என கோவப்பட்டான் அன்பு. ஜீவாவுக்கும் கோவம் வந்தது, ஆனால் மிதுவுக்காக பொறுத்துக் கொண்டான். 

“மாமா அமைதியா இருங்க” என கெஞ்சினாள் மிது. 

தான் சென்றால்தான் இவர் அமைதியாவார் என நினைத்து வேகமாக நகர்ந்தான் ஜீவா. அப்படி மிதுவை கடந்து செல்கையில் எதிர்பாராமல் அவளின் தோளில் இடித்து விட்டான். 

ஆத்திரமடைந்த அன்பு, “பொறுக்கி ராஸ்கல்!” என திட்டிக் கொண்டே ஒரு கையால் ஜீவாவின் சட்டையை பற்றி இன்னொரு கையால் அவனை அடிக்க போனான். தன்னை அடிக்க வந்த  அன்புவின் கையை கெட்டியாக பிடித்துக் கொண்ட ஜீவா, அவனை முறைத்தான். 

இருவரும் ஒருவரையொருவர் பார்வையாலேயே முறைத்து சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். 

“தெரியாமத்தான் இடிச்சிட்டார் மாமா, அவரை விடுங்க மாமா” என பதறினாள் மிது. அவளின் பயத்தில் நிதானித்தான் ஜீவா. 

அன்பு இன்னுமே ஜீவாவின் சட்டையை விடாமல் போக  அந்தக் கையை தன் சக்தி திரட்டி அகற்றி விட்ட ஜீவா, “தெரியாம இடிச்சதுக்கு இப்படித்தான் திட்டிவீங்களா ஸார்?” என ஆதங்கமாக கேட்டான்..

“உன் மூஞ்ச பார்த்தாலே தெரியுது, தெரிஞ்சு செஞ்சியா தெரியாம செஞ்சியான்னு” என கோவமாக சொன்னான் அன்பு. 

“சண்டை போடணும்னு முடிவு கட்டிகிட்டு பேசினா என்ன சொல்றது நான்?” என்ற ஜீவா அங்கிருந்து சென்று விட்டான். 

மிதுவுக்கு மனமே சரியில்லை, ஜீவாவின் மீது தவறில்லை என அன்புவுக்கு புரிய வைத்து விடும் நோக்கத்துடன், “நிஜமாவே தெரியாமத்தான் இடிச்சிட்டார் மாமா” என்றாள். 

“அதெப்படி உனக்கு தெரியும்? அவன் ஆள் சரியில்லை” என சிடு சிடுத்தான் அன்பு. 

அதன் பின் ஜீவாவை பற்றிய பேச்சை விடுத்து மேலும் புடவைகளை எடுத்தவள் ஜீவா தேர்வு செய்த புடவையை காட்டி, “இத நான் எடுத்துக்கட்டுமா மாமா?” எனக் கேட்டாள். 

“வேணாம் மிது, இத பார்க்கும் போதெல்லாம் அவன் ஞாபகம் வந்து தொலையும், வச்சிடு” என அன்பு சொல்ல மனமே இல்லாமல் வைத்து விட்டாள். 

இதற்கு ஏன் இவ்வளவு சண்டை என்பது போல பார்த்தான் ஊழியன். அதை புரிந்து கொண்டது போல, “இதுக்குண்டான பணத்தையும் பில்ல சேர்த்திடுங்க, ஆனா இது வேணாம்” என்றான் அன்பு. 

அப்படியெல்லாம் செய்ய தேவையில்லை என சொல்லி விட்டான் ஊழியன். 

ஒரு வழியாக அன்புவை ஊருக்கு பயணப்படுத்தி வைத்தவள் மீண்டும் இந்த கடைக்கு வந்தாள். அவளுக்கு முன் அங்கு வந்திருந்த ஜீவா அந்த பட்டுப் புடவையை வாங்கிக் கொண்டிருந்தான். 

தனக்காக மீண்டும் இங்கே வந்திருக்கிறான் என்பதில் நெகிழ்ந்து போனவளாக அவனை நெருங்கினாள். அவளின் வரவை ஆச்சர்யமாக பார்த்தவன், “என்ன ஆனாலும் இது என் வைஃபுக்குத்தான், விட்டுத் தர மாட்டேன்” என்றான். 

திரும்பவுமா என கடை ஊழியன் பயத்தோடு பார்த்திருந்தான். 

ஜீவாவின் கையை  பிடித்து, ஆதூரமாக பார்த்தவள், “ஸாரி ஜீவா” என்றாள். 

“கூல் மிது, இன்னும் ஏதாவது பாரு, வாங்கலாம்” என்றான். வேறு எதுவும் வாங்கும் மனநிலை அவளுக்கு இல்லாத போதும் அவனை இலகுவாக்க எண்ணி வேறு புடவைகள் பார்த்தாள். 

“ரொம்ப காரசாரமான பேர்வழியா இருக்கார் உன் மாமா. தோள்ல இடிச்சேன்னு என்னா சத்தம்?” என்ற ஜீவா புடவைகளை அவளின் தோளில் வைத்து பார்த்து தேர்வு செய்தான். 

ஊழியன் என்னடா நடக்குது என விழிக்க, “இவங்கதான் என் வைஃப் பாஸ். எங்களுக்கு கல்யாணம் ஆனது இவங்க வீட்டுக்கு இன்னும் தெரியாது, லவ் மேரேஜ்” என்றான் ஜீவா. 

முகம் மலர்ந்த ஊழியன், உடனே பாவமான பாவனையில், “ரொம்ப கஷ்டம் ஸார், எப்படி சமாளிக்க போறீங்களோ!” என்றான். 

மிதுவும் அதே கவலையோடு ஜீவாவை பார்த்திருந்தாள். 

“சமாதானமா போனா சமாதானம், இல்லைனா நாமளும் சண்டை செய்ய வேண்டியதுதான். புடிச்ச பொண்ணு கூட நின்னா தைரியம் தானா வரும்ல?” என விளையாட்டாக சொன்னான் ஜீவா. 

அவன் சொன்ன விதத்தில் சிரித்த மிது, “சண்டையெல்லாம் கூடவே கூடாது. ஒன்லி சமாதானம்!” என்றாள். 

“நீ சொன்னா கேட்டுக்க வேண்டியதுதான்!” என்றான் ஜீவா. 

‘அடடா என்ன அழகான பொருத்தமான ஜோடி!’ என நினைத்துக் கொண்டான் அந்த ஊழியன்.