அவளை முறைத்தவன், “உன் கூட நிம்மதியா வாழணும்னு நினைக்கிறேன், சண்டை போட்டு மண்டைய உடைச்சுக்க முடியாது” என்றான். 

அவனது நெற்றிக் காயத்தை தடவிப் பார்த்தவள், “அதான் ஏற்கனவே உடைஞ்சு போச்சே” என்றாள். 

“பீ சீரியஸ் மிது, நாலு வருஷம் முன்னாடி ஷாலினி கூட நான் டான்ஸ் ஆடினேன்னு நமக்குள்ள நடந்த சண்டை எனக்கு நல்லா நினைவிருக்கு, நீயும் மறந்திருக்க மாட்டேன்னு நினைக்கிறேன்”

“ஹ்ம்ம்… பரவாயில்லை, அவ பேரெல்லாம் நல்லா நினைப்பு வச்சிருக்கீங்க”

“ஏன் எனக்கென்ன ஞாபக மறதி வியாதியா? அவ நம்பர் கூட என் காண்டாக்ட் லிஸ்ட்ல இருக்கு” 

“இருக்கட்டும்” என்றவள் அவனது நெச்சை பலமாக குத்தி, “ஃபோன்ல யார் நம்பர் இருக்குங்கிறது முக்கியம் இல்லை, இங்க எவ இருக்காங்கிறதுதான் முக்கியம்” என்றாள்.

“என்னதான் நார்மலா இருக்கிறதா நீ காட்டிகிட்டாலும் ஏதோ பொசுங்கிற வாசனை எனக்கு நல்லா தெரியுது. இந்த விஷயத்துல என்னால உன் கூட மல்லுகட்ட முடியாது” 

 “முன்னாடி இருந்த மிது கிடையாது நான். இப்போ நல்லா மெச்சூர்ட் ஆகிட்டேன்” என்றாள். 

“எப்படி யார் கூடவும் நெருக்கமா ஆடினா வெறும் டான்ஸ்தான்னு புரிஞ்சுப்பியா?” 

“நான் பங்கஜ் ஸார்கிட்ட தெளிவா பேசிட்டேன், மத்தவங்களுக்கு டான்ஸ் கத்துதான் தரப் போறீங்க நீங்க. எவ கூடவும் ஒட்டி உரசுர வேலையெல்லாம் உங்களுக்கு இருக்க போறதில்லை” என்றாள். 

அவள் சொன்ன விதத்தில் சிரித்தவன், “செட் ஆகாது மிது. ஒருநாள் இல்லை ஒரு நாள் நமக்குள்ள பிரச்சனை ஆகிடும். டான்ஸ் விட நீதான் எனக்கு முக்கியம்னு எப்பவோ தெரிஞ்சுகிட்டேன். நீ உனக்கு தெரிஞ்ச பெரிய ஆளுங்ககிட்டவே பேசு. பங்கஜ் ஸார்கிட்ட போட்ட டீலை டீலால விட்ரலாம்” என்றான். 

அவனது வாயை மூடியவள், “நம்ம பார்ட்னருக்கு ரெஸ்ட்ரிக்க்ஷன்ஸ் போடாம அவங்கள அவங்களாவே இருக்க விடறதுதான் ரிலேஷன்ஷிப்பை ஸ்மூத்தா கொண்டு போகுமாம். உங்களுக்கு பிடிச்சத நீங்க செய்றீங்க, அவ்ளோதான்” என்றாள். 

அவளது கையை விலக்கி விட்டவன் வேறு ஏதோ சொல்லப் போனான். 

“என்னை எதிர்த்து எதுவும் பேசக்கூடாது” என்றவள் மீண்டும் அவனது வாயை பொத்தினாள். 

அவளின் கையை அவன் விலக்கி விட,  அவள் மீண்டும் அவனது வாயை பொத்த என செல்லமாக விளையாடிக் கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் அவளின் இரு கைகளையும் கெட்டியாக பிடித்துக்கொண்டவன், “ஒழுங்கா நான் சொல்றத கேளு” என்றான். 

“முடியாது” என்றாள் அவள். 

“கேட்டுத்தான் ஆகணும், கேளு. அவர்கிட்ட வேலைக்கு போனேன்தான். முன்னாடி மாதிரி அப்படி ஒன்னும் எனக்கு டான்ஸ் மேல இன்ட்ரெஸ்ட் இருக்கல. ஒரு வாரத்துல வேணாம்னு வந்திட்டேன். திரும்பவும் அவர்கிட்ட போக சொல்லாத, அப்புறம்…” என சொல்லிக் கொண்டிருந்தவனின் பேச்சை நிறுத்துவதற்காக அவனது வாயை தன் இதழ்கள் கொண்டு அடைத்தாள். 

அவளது கைகளை விட்டு விட்டவன் அவளை பற்றிக் கொண்டு முத்தத்தில் லயித்தான். விலகிக் கொண்ட பின் ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்க்க முடியாத படி வெட்கத்தில் திக்கு முக்காடினார்கள். 

மார்பிலிருந்து நழுவிப் போயிருந்த அவளது புடவையை தயக்கத்தோடே சரி செய்து விட்டான். அவள் முறைக்க, “சரிதானே பண்ணி விட்டேன்?” என பாவமாக கேட்டான். 

“அங்க ஏன் போகுது உங்க பார்வை?”

“ரொம்ப மோசமான கேள்வி, இதை வன்மையாக கண்டிக்கிறேன். நல்லதுக்கே காலம் இல்லை இப்போ” என்றவன் புடவையை பழைய படி விலக செய்து, “நான் பண்ணின தப்பை சரி பண்ணிட்டேன், போதுமா?” எனக் கேட்டான். 

“உங்களை…” என்றவள் அவனை நெருங்கி அவனது தலை முடியை கலைத்து விட்டாள். விலக அவன் போராட, அவள் விடாமல் போக விளையாட்டு தொடர்ந்தது. 

ஒரு கட்டத்தில்தான் சோஃபாவில் பாதி படுத்திருந்தவன் மேலே தானும் படுத்துக் கொண்டிருப்பதை உணர்ந்து ஸ்தம்பித்து போனாள். அவளின் அந்த பார்வையில் குழம்பிப் போய் என்னவென  கேட்டான். 

அவள் கலைத்து விட்ட கேசம் அவனது பாதி நெற்றியை மறைத்திருந்தது. முதன்முதலாக இவனை பார்த்த நாள் அவளின் நினைவிலாடியது. அப்போதிருந்த வசீகரம்  இப்போதும் குறையவில்லை என நினைத்துக்கொண்டவள் அவனது நெற்றி மறைத்த முடியை ஊதி விட்டு சரி செய்ய முயன்றாள். 

அவளின் செய்கையில் இதமாக உணர்ந்தவன் கண்களை மூடிக் கொண்டான். இப்போது அவனது முகமெங்கும் தென்றல் வீசி விட்டாள். 

 விழுந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் அவளை பிடித்திருந்தான், அவள் தந்த இனிமையை அனுபவித்தவன் அவளின் இடையிலிருந்த தன் கைப்பிடியின் அழுத்தத்தை கூட்டினான்.  தன் வெற்றிடை உணர்ந்த அவனது ஸ்பரிசத்தில் நெளிந்தாள். 

“என்ன செய்ற நீ, விழுந்திடாத மிது” என்றான்.

“கையை எடுங்க” என அவள் சொல்லவும், தன் கை இருக்குமிடம் உணர்ந்து சட்டென விட்டான். அதில் சமநிலை இழந்து விழப் போனவளை சட்டென பிடித்து மீண்டும் தன் மீது போட்டுக் கொண்டான். 

எசகு பிசகான நிலையிலிருந்த இருவரின் மூச்சுகள் வேகமானது. தன்னிலை மறந்தவன் மனம் போன போக்கில் அவளை உணரத் துவங்க, “ஜீவா ஸ்டாப்…” மெல்லிய குரலில் சொல்லி அவனை தடுத்தாள். 

அவளை அமர வைத்து தானும் அமர்ந்து கொண்டான். அவனது முகத்தில் நிறைவான சிரிப்பு. அவளும் சிரிப்பை அடக்கிக் கொண்டு மலர்ந்த முகமாக இருந்தாள். 

“ஏதோ சத்தம் கேட்குற மாதிரி இருக்கு’ என வாய்க்கு வந்ததை சொல்லி விட்டு உள்ளே ஓடிச் சென்று விட்டாள்.

அவள் சென்ற திசையை ஆசையாக பார்த்திருந்தான்.

சற்று நேரம் கழித்து அவர்களாகவே இயல்பானார்கள். 

“உன் வீட்ட பத்தி என்ன  முடிவு பண்ணியிருக்க?” எனக் கேட்டான். 

உற்சாகமெல்லாம் வடிந்து போனவளாக படுக்கையில் அமர்ந்தாள். அவளை அப்படி பார்க்க அவனுக்கு பாவமாகி விட்டது.  

“நாம போய் பேசி பார்க்கலாம் மிது, உன் அப்பா என்ன திட்டினாலும் வாங்கிக்க தயாரா இருக்கேன்” என்றான். 

“பேசலாம் ஜீவா, கொஞ்ச நாள் ஆகட்டும். நீங்க என்ன செய்றீங்கன்னு அப்பா கேட்டா நம்மகிட்ட பதில் இருக்கணும்ல?” என்றாள். 

அவனது முகம் வாடிப் போனது.

“நான் சொன்னதை தப்பா எடுத்துக்காதீங்க ஜீவா, உங்களை எனக்கு தெரியும், அப்பாக்கு அந்த கவலையெல்லாம் இருக்கும்தானே?”

“உன்னை என்ன தப்பா நினைக்க போறேன்? உன் அப்பா கவலைதான் எனக்கும்.  ஐ டி வேலையா, டான்ஸான்னு ஒன் வீக்ல முடிவு பண்ணிடுறேன் மிது”  என அவன் சொன்னதற்கு சரியென்றாள். 

“தாத்தா பார்க்கத்தான் சாது, ஆனா ரொம்ப கோவக்காரர், அப்பாவோட பெரிய வீக்னெஸ் அவர்தான். இப்பவும் தாத்தா  பேச்சுக்குத்தான் என் அப்பா தலையாட்டுவார். தாத்தா கண்டிப்பா நம்ம விஷயத்துல கன்வின்ஸ் ஆக மாட்டார், அப்பா அப்படியில்லை, என்னை புரிஞ்சுப்பார், அம்மாவும் முதல்ல கோவப்பட்டாலும் அப்புறம் சமாதானம் ஆகிடுவாங்கங்கிற நம்பிக்கை இருக்கு. ஆனா இப்ப சொல்ல வேணாம் ஜீவா. சமயம் பார்த்து சொல்லலாம்” என்றவள் அன்புவை பற்றி மட்டும் இன்னும் இவனிடம் எதுவும் சொல்லியிருக்கவில்லை. 

மிதுவின் அக்காவுக்கு திருமணம் ஆகி விட்டது எனதான் ஜீவாவுக்கு தெரியும், யாரென அவன் கேட்டதற்கு அன்பு என்ன படித்திருக்கிறான் என்ன வேலை செய்கிறான் என்றெல்லாம் சொன்னவள் ‘அவர் உன் அண்ணன்’ என்பதை மட்டும் சொல்லாமல் விட்டாள். 

அவன் பற்றிய உண்மை தெரிய வந்தால் திருமணத்துக்கு சம்மதிக்க மாட்டானோ என்ற பயம்தான் காரணம். பங்கஜ், மணி, வாசுகி போன்றோரும் இப்போதைக்கு சொல்லாதே எனதான் யோசனை சொல்லியிருந்தார்கள். 

“அதான் வீட்ல ஒத்துக்க வைக்கிறது அவ்ளோ கஷ்டமில்லைனு நீயே சொல்றியே, அப்புறம் ஏன் டல் ஆகுற? நீ இப்படி  ஆனா எனக்கும் மூட் ஆஃப் ஆகிடுது” என்றான் ஜீவா. 

வெளியில் போய் வரலாம் என கிளம்பினார்கள். அணிந்திருந்த புடவையையே திருத்தமாக கட்டிக் கொண்டாள். பக்கத்திலிருந்த கோயிலுக்கு சென்றார்கள். இரவு உணவு சமைக்க வரட்டுமா என கேட்டு அழைத்தார் சரோஜா. இன்று வேண்டாம் நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என சொல்லி விட்டான் ஜீவா. 

வீடு வந்த பின் புடவையை கலைந்து இலகுவான ஆடைக்கு மாறிய மிது அவனையும் ஆடை மாற்றிக் கொள்ள செய்தாள். சமைக்கலாம் என ஆரம்பிக்கையில் அவளது வீட்டிலிருந்து அழைப்பு வந்தது. 

பேசியவளுக்கு வீட்டினரை ஏமாற்றுகிறோமே என குற்ற உணர்வானது. அவளுக்கு தனிமை தேவை என உணர்ந்து தொந்தரவு செய்யவில்லை அவன். வெகு நேரமாகியும் அவள் அவனிடம் வரவே இல்லை. இரண்டு முறை அவளை பார்த்து சென்றான். ஏதோ யோசனையிலேயே இருந்தாள். 

மூன்றாவது முறையாக வந்தவன் அவள் பக்கத்தில் அமர்ந்து தன் தோளோடு அணைத்துக் கொண்டான். 

“அக்காவோட மேரேஜ் நடந்தப்ப நமக்கு அப்படி நடக்காதான்னு ஏக்கமா பார்த்தேன், வீட்ல எல்லாரும் எவ்ளோ ஹேப்பியா இருந்தாங்க தெரியுமா ஜீவா? எனக்கும் எல்லாம் செஞ்சு பார்க்கணும்னு அவங்களுக்கு ஆசை இருக்கும்தானே? வேற வழி இல்லாமதான் அவங்களுக்கு சொல்லாம உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டேன், அவங்க என்னை புரிஞ்சுக்கணும் ஜீவா” என்றவள், “புரிஞ்சுப்பாங்கதானே?” எனக் கேட்டாள். 

எப்படி  அவனால் உறுதியாக சொல்ல முடியும்? தங்களை ஏற்றுக் கொண்டால் மகிழ்ச்சி, இல்லையென்றால் அவர்கள் இல்லாத வாழ்க்கையைத்தான் வாழ வேண்டும். அந்த வேதனை இவளுக்கு வேண்டாமென்றுதானே விலகிப் போனான். 

“நாம ட்ரை பண்ணுவோம் மிது, இப்போ உடனே எதுவும் செய்ய போறதில்லதானே, ரிலாக்ஸ் மிது” என்றான். 

தான் சோர்ந்து ஜீவாவையும் சோர்வாக்குகிறேன் என உணர்ந்து எழுந்து கொண்டாள். இருவரும் சேர்ந்து எளிமையாக சமைத்து, சாப்பிட்டு முடித்து, உறங்க சென்றார்கள். 

ஒருவர் அணைப்பில் ஒருவரென அந்த அணைப்பு மட்டுமே போதுமானது என்பது போல படுத்திருந்தவர்கள்  அப்படியே உறங்கிப் போனார்கள்.