கன்னங்களில் வழிந்த கண்ணீரை புறங்கையால் துடைத்துக் கொண்டே அவனை கோவமாக பார்த்திருந்தாள்.
“மிது வா, நாம போலாம்” என அவளின் கையை பிடித்தான் மணி.
மணியின் பிடியை உதறிய மிது, “உங்க ஃப்ரெண்ட்க்கு என்னை பார்த்தா எப்படி தெரியுது? மத்தவங்கள பத்தி யோசிச்சு இவரை விட்டு கொடுத்த தியாகி மிது இல்லை நான், ரொம்ப சுயநலம் ஆகிட்டேன், நாலு வருஷ நரக வாழ்க்கை எனக்கு நல்ல பாடம் கத்து கொடுத்திடுச்சு. என்னை மீறி என்ன செய்வார்னு பார்க்கிறேன்” என்றாள்.
மிது யாரென தெரிந்து விட்ட நொடியிலேயே பழைய நினைவுகளால் கிளறி விடப் பட்டிருந்தார் இளங்கோ. காதல் தோல்வியில் அக்காவை விட்டு பிரிந்து சென்று அவரை கவனிக்காமல் விட்டுவிட்டான் என ஜீவாவின் மீதும் அவருக்கு கோவம் உண்டு, ஜீவாவின் காதலி அக்காவை ஏமாற்றியவனுக்கு சொந்தம் என அறிய நேர்ந்த போது அவரடைந்த ஆத்திரத்தை அளவிட முடியாது.
பல வருடங்களுக்கு முன்பு கோபிகாவை நன்றாக ஏமாற்றி விட்டு உன்னை விட்டு செல்ல மாட்டேன் என கூறினார் பாலச் சந்திரன். இன்று இந்த பெண்ணும் என் அக்கா மகனை விட்டு சென்று விட்டு, பின் அவளாகவே வந்து ஏதேதோ நாடக வசனம் பேசுகிறாள் என நினைத்தவர் தன்னிலை இழந்து விட்டார்.
“போன்னு சொல்லிட்டு இருக்கேன், என்ன தேவையில்லாம பேசிட்டு நிக்கிற?” என ஆவேசமாக கேட்டுக் கொண்டே அவளை நெருங்கி வந்தார்.
அவரை பற்றி சரியாக தெரியாத மணி, “அமைதியா இருங்க ஸார், நான்தான் மிதுவை அழைச்சிட்டு போறேன்னு சொல்றேன்ல?”என வாய்வழியாக அவரை சமாதானம் செய்ய பார்த்தான்.
மாமாவின் கோவத்தை பற்றி நன்றாக தெரிந்து வைத்திருந்த ஜீவாவுக்கு மிதுவை அவர் எதுவும் செய்து விடுவாரோ என்ற அச்சம் எழுந்தது. ஒட்டு மொத்த சக்தியையும் திரட்டிக் கொண்டு எழுந்தவன் மிதுவை நோக்கி விரைந்தான்.
மிதுவை இழுத்து வெளியே தள்ளி விட வேண்டும் என சென்ற இளங்கோ தவறுதலாக ஜீவாவின் கையை பிடித்து இழுத்து வாயிலை நோக்கி தள்ளி விட்டார். பலஹீனமாக இருந்தவனால் சமாளிக்கவே முடியவில்லை. சுவரில் மோதி மயங்கி சரிந்து விட்டான். நெற்றியில் காயமாகி இரத்தம் வந்து கொண்டிருந்தது.
ஜீவா என அலறினாள் மிது. அவளின் சத்தம் கேட்டு மருத்துவமனை ஊழியர்கள் அங்கு வந்தனர். சற்று நேரத்தில் அங்கே பதற்றம் தொற்றிக் கொண்டு விட்டது.
தானே தன் மருமகனை காயம் செய்து விட்டேனே என்ற குற்ற உணர்வில் தளர்ந்து போனவராக ஒரு ஓரமாக அமர்ந்திருந்தார் இளங்கோ.
மூடப் பட்டிருந்த அறையை பயத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள் மிது. அவளை கிளம்பச் சொல்லி எவ்வளவோ வற்புறுத்தி விட்டான் மணி, ஜீவாவின் நலத்தை அறிந்து கொள்ளாமல் நகர மாட்டேன் என அடமாக அங்கேயே இருந்தாள்.
அனைவரையும் அறையை விட்டு வெளியேற்றியிருந்த மணி, ஜீவாவுக்கு சிகிச்சை ஆரம்பித்த உடனேயே பங்கஜ்க்கும் தகவல் சொல்லியிருந்தான். உடனே வீட்டிலிருந்து புறப்பட்டிருந்தவரும் வந்து சேர்ந்து விட்டார்.
ஜீவாவின் நெற்றியில் இரண்டு தையல் போட்டிருந்தனர். வெளி வந்த மருத்துவர், சண்டை போடுவதற்கு இது இடமல்ல, உடனே டிஸ்சார்ஜ் செய்து விடுகிறேன், வேறு மருத்துவமனை சென்று விடுங்கள் என காட்டமாக கூறினார்.
பங்கஜ் சமாதானமாக ஏதோ சொல்லவும், இனி இப்படி நடக்க கூடாது என கண்டிப்போடு சொன்ன மருத்துவர் யாராவது ஒருவரை மட்டும் உடனிருக்க சொல்லி மற்றவர்களை உடனே கிளம்பும் படி உத்தரவிட்டார்.
பத்து நிமிடங்களில் இவர்களை அப்புற படுத்தி விடுகிறேன் என சொல்லி மருத்துவரை சம்மதிக்க வைத்த பங்கஜ், அவர் சென்றதும் இளங்கோவை கோவமாக பார்த்தார்.
“அப்ப இந்த பொண்ணுக்கு அடி பட்ருக்கும், மனுஷன்னா ஒரு நிதானம் வேணாம்?” என கடிந்து கொண்டார்.
இந்த பேச்சுக்கள் தனக்கு தேவையற்றது என்பது போல ஜீவாவை பார்க்க சென்றாள் மிது. இவளை சங்கடமாக பார்த்தவன், “இன்னும் போகலையா நீ?” எனக் கேட்டான்.
வேகமாக அவனிடம் ஓடி வந்தவள் அவனது தோளை தன் வயிற்றோடு சேர்த்து அணைவாக பிடித்துக்கொண்டாள். அவனுக்கு குறு குறுப்பாக இருந்தது. அவளை நன்றாக அணைத்து அவளிடம் இளைப்பாற துடிக்கும் உள்ளத்தை கட்டுப்படுத்த முடியாமல் போராடினான்.
“ஏம்மா நல்லதா ஏதாவது பேச மாட்டியாம்மா? மண்டை உடைஞ்சு போயிருக்கவனை இன்னும் பயமுறுத்தாத” என சொல்லிக் கொண்டே உள்ளே வந்தார் பங்கஜ்.
ஜீவாவை விட்டு விலகினாள் மிது.
“தயவுசெஞ்சு என்னை தனியா விடுங்க ஸார், எல்லாரையும் கூட்டிட்டு போங்க” என்றான் ஜீவா.
“இவனை ரிலாக்ஸா விடும்மா, டிஸ்சார்ஜ் ஆனதும் நாம எல்லாரும் சேர்ந்து நல்லா வச்சு செய்யலாம். இங்க ரங்கசாமி இருந்துப்பார்” என மிதுவிடம் சொன்னார் பங்கஜ்.
“உடம்ப பார்த்துக்கோங்க ஜீவா, நான் வர்றேன்” என சொல்லி விடைபெற்றாள் மிது.
“ஃபைனலா சொல்றேன், என் மாமா பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணிக்க போறேன், உன் வழிய பார்த்திட்டு போ, இவங்க பேச்செல்லாம் கேட்டுகிட்டு மறுபடியும் என்னை தேடி வராத” என்றான் ஜீவா.
மிது பங்கஜை பார்க்க, “டிஸ்சார்ஜ் ஆனதும் நானே முன்ன நின்னு இவன் மாமா பொண்ணோட இவனுக்கு கல்யாண ஏற்பாடு பண்றேன், இவன் மட்டும் அந்த பொண்ண கல்யாணம் பண்ணட்டும், என் ஒரு பக்க தலையை மொட்டை அடிச்சிக்கிறேன் மா நான். பொய் சொல்றான்மா ராஸ்கல்!” என்றார் அவர்.
பெரு மூச்சு விட்டவள் அதற்கு மேல் தாமதிக்காமல் கிளம்பி விட்டாள். இளங்கோ அறைக்குள் வந்த போது, அவரை பாராமல் முகத்தை திருப்பிக் கொண்டான் ஜீவா.
“நீ மதுரைக்கே கிளம்பு இளங்கோ, போயி பொண்ணை நல்லா படிக்க வைக்கிற வழிய பாரு. இவனை நான் பார்த்துக்கிறேன்” என்றார் பங்கஜ்.
“நீங்க என்ன செய்வீங்கன்னு எனக்கு நல்லா தெரியும், அதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன்” என்றார் இளங்கோ.
“ரொம்ப துள்ளாம கிளம்பு” என பங்கஜ் சொல்ல, கோவப்பட்ட இளங்கோவை வற்புறுத்தி வெளியில் அழைத்து சென்றார் ரங்கசாமி.
மதுரைக்கு செல்லாமல் ஜீவாவின் வீட்டில் தங்க போகிறேன், அவனுடன்தான் செல்வேன் என சொல்லி, வீட்டு சாவியை பெற்றுக் கொண்டுதான் கிளம்பினார் இளங்கோ.
இப்படியாக பெரும் கலவரம் தற்காலிகமாக அமைதியானது.
அடுத்த நாள் காலையிலேயே வந்து நின்றாள் மிதுன்யா. ஜீவா உறக்கத்திலிருக்க, ரங்கசாமி மூலமாக இவளின் வரவை அறிந்த பங்கஜ் இவளுக்கு அழைத்தார். டிஸ்சார்ஜ் ஆன பிறகுதான் இவனை பார்க்க வேண்டும் என சொல்லியிருந்தேன்தானே, ஏன் வந்தாய் எனக் கேட்டார்.
இந்த நிலையில் ஜீவாவுடன் இல்லாமல் வேறு எங்கும் தன்னால் இருக்க முடியாது, இவனுடைய கோவத்தை நான் சமாளித்துக் கொள்கிறேன் என சொல்லி விட்டாள். உடன் வேறு ஆள் இருந்தால்தான் கோவப்படுவான், அவர்கள் மட்டும் தனியாக இருந்தால் அமைதியாக இருப்பான் என நம்பிய பங்கஜும் ரங்கசாமியை கிளம்ப சொல்லி விட்டார்.
கண் விழித்த ஜீவா, மிதுவை கண்டு விட்டு அயர்வாக மூச்சு விட்டான்.
அவளின் பிடிவாதத்திற்கு முன் அவனால் போராட முடியவில்லை. மனமோ அவளுக்காகவே ஏங்க, எவ்வளவுதான் தன்னை கட்டுப் படுத்திக் கொண்டு நடிப்பான்? வேறு வழியின்றி அவளை அங்கிருக்க அனுமதித்தான்.
மிதுவை இருக்க சொல்லி விட்டான் என அறிந்த பங்கஜ், முதல் வேளையாக இளங்கோவை மதுரைக்கு மூட்டை கட்டி விட்டார்.
மிது அவனுடன் இருந்தாலும் அவனுக்கான எந்த உதவியையும் அவளால் செய்ய முடியவில்லை, அதற்கு அனுமதிக்காமல் தானே எல்லாம் பார்த்துக் கொண்டான். ஓரிரு வார்த்தைகளில் அவர்களின் உரையாடல் முற்று பெற்றது.
இரவிலும் அவள்தான் தங்கினாள். வேண்டுமென்றே பங்கஜும் மணியும் இங்கே தலைகாட்டவில்லை.
சரோஜா சமைத்து தர, அதை கொடுத்து விட்டு செல்வார் ரங்கசாமி.
மூன்று நாட்களுக்கு பிறகு அவன் டிஸ்சார்ஜ் ஆனதும் அவளும் அவனுடனே அவனுடைய வீட்டுக்கு சென்றாள்.
தாங்கள் சேர்ந்தால் இவளுக்குத்தான் வருத்தமும் வேதனையும் என்பதை எப்படி இவளுக்கு புரிய வைப்பது என தெரியாமல் தவித்தான் ஜீவா.
சமையல் வேலையெல்லாம் முடித்து விட்ட சரோஜா, ஏதோ வேலையாக வங்கிக்கு செல்ல வேண்டும் என சொல்லி கணவரோடு சென்று விட்டார்.
கோவப்படாமல் நிதர்சனத்தை விளக்கி விடலாம் என யோசித்தவன், “மிது…” என அழைத்தான்.
அந்த அழைப்புக்காகவே காத்திருந்தவள் போல அவனிடம் வேகமாக வந்தவள் அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்.
இணக்கமாக பழகிய காலத்தில் கூட சாதாரணமாக தொட்டுக் கொள்வார்களே தவிர இப்படியான அணைப்புகள் எல்லாம் இருந்ததே இல்லை.
அந்த அணைப்பை ஏற்கவும் முடியாமல் அவளை விலக்கவும் மனமில்லாமல் திணறி நின்றான் ஜீவா.
தன் முகத்தை மட்டும் நிமிர்த்தி அவனை பார்த்தவள், “என்னால நீங்க இல்லாம இருக்க முடியாது ஜீவா, பிரியுற முடிவை எடுத்திருக்கவே கூடாதுன்னு நான் நினைக்காத நாள் இல்லை. கிட்டத்தட்ட நாலு வருஷம் ஒருத்தரை ஒருத்தர் பார்க்காம இருந்தும் கூட உங்களை மறக்கவே முடியலை. இனிமேலும் முடியாது. என்ன தப்பு பண்ணினேன்னு எனக்கு இவ்ளோ பெரிய பனிஷ்மென்ட் தர நினைக்குறீங்க, ப்ளீஸ் ஜீவா… என்னை போக மட்டும் சொல்லாதீங்க” என சிறு தேம்பலோடு சொன்னாள்.
தன்னைப் போலவே இவளும் கஷ்ட பட்டிருக்கிறாள் என நினைத்த ஜீவாவுக்கு தொண்டை அடைத்துக் கொண்டது.
“உண்மையை சொல்லுங்க ஜீவா, நான் இல்லாம சந்தோஷமா இருப்பீங்களா?” எனக் கேட்டாள்.
அவனுக்கு பொய் சொல்ல வரவில்லை. மறுப்பாக தலையாட்டினான்.
“வேற யாரையும் கல்யாணம் பண்ணிப்பீங்களா?” என்ற அவளின் அடுத்த கேள்விக்கும் மறுப்பாகத்தான் தலையாட்டினான்.
“நாம பிரிஞ்சு போனா அதுக்கப்புறம் நல்லாருப்போமா?” எனக் கேட்டாள். அவன் எதுவுமே சொல்லவில்லை.
“நான் நல்லாருந்தா அதுதானே என் வீட்ல உள்ளவங்களுக்கு சந்தோஷம்? உங்க கூட மட்டும்தான் நான் சந்தோஷமா நிம்மதியா இருப்பேன், என்னை நீங்க போக சொன்னா… நான் என்ன ஆவேன்னு தெரியாது ஜீவா. போக சொல்லாதீங்க” என அவள் சொல்லி முடிக்கையில் அவளது சிறு அழுகை பெரும் அழுகையாக மாறியிருந்தது.
அனைத்தையும் துறந்து விட்ட ஞானி இல்லையே ஜீவா. பிடிப்பற்ற அவனது வாழ்க்கையில் எல்லாமுமாக வருகிறேன் என மனமுவந்து சொல்பவளை மீண்டும் நழுவ விடும் துணிச்சல் அவனிடம் இல்லை.
என்ன நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என தீர்மானித்துக் கொண்டவன் அவளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான், அவளை பற்றிக் கொண்டு விட்டான்.
மீண்டும் அவனை நிமிர்ந்து பார்த்தவள், “இனி பிரிய மாட்டோம்ல?” எனக் கேட்டாள்.
வேகமாக அவளது இதழ்களில் முத்தமிட்டான். இருவரின் மூடியிருந்த கண்களை மீறி கண்ணீர் வழிந்தது. சில நொடிகளுக்கு பின் இதழ்களை அவளிடமிருந்து பிரித்தவன் அவளது முகத்தோடு முகம் பதித்துக் கொண்டான்.
“ஸாரி மிது” என்றான்.
ஜீவாவின் மன்னிப்பை ஏற்றுக் கொண்டவள் அவனது முகமெங்கும் முத்தமிட தொடங்கினாள்.