கொஞ்சும் காதல் சாரல் -14

அத்தியாயம் -14

தன் கண்ணெதிரில் நிற்பவள் நிஜமாகவே மிதுன்யாதானா என குழம்பிப் போனவனாக பார்த்திருந்தான் ஜீவா. 

ஈரப் படலமான விழிகளும் துடிக்கும் இதழ்களுமாக  அவனை நெருங்கி வந்த மிது, “நான் ஒருத்தி இருக்கேங்கிறதை மறந்தே போயிட்டீங்களா ஜீவா?” எனக் கேட்டாள். 

உன்னை மறக்க முடியாமல்தான் இப்படி ஆகியிருக்கிறேன் என மனதில் நினைத்துக் கொண்டவனுக்கு வாய் வார்த்தையாக எதுவும் அவளிடம் பேச முடியவில்லை. இனி எப்போதுமே இவளை பார்க்க நேர்ந்து விடக்கூடாது என்ற உறுதியோடு இருந்தவனுக்கு இவளது திடீர் வரவு அதிர்ச்சியையே கொடுத்திருந்தது. 

அவனிடம் என்னென்னவோ பேச வேண்டுமென மிதுவுக்கு இருந்தது. ஆனால் அவனது உடல்நிலையையும் அவளிருக்கும் உணர்ச்சி பெருக்கான நிலையையும் கருத்தில் கொண்டு எதையும் பேச வேண்டாம் என முடிவு செய்து கொண்டாள். 

லேசாக இருமினான். அவள் தண்ணீர் எடுத்து கொடுக்க, கிளாசை பெற்றுக் கொள்ள கையை நீட்டினான். தராமல் அவளே அவனுக்கு பருக கொடுத்தாள். பருகிக் கொண்டிருக்கும் போதே கிளாசை அவனது கைக்கு மாற்றிக் கொண்டு விட்டான். 

உன் வரவால் எனக்கு எந்த பாதிப்புமில்லை என அவளிடம் காட்டிக் கொள்ள முயன்று கொண்டிருந்தான். அதை புரிந்து கொண்டவளாக, “எதுவும் யோசிக்காதீங்க ஜீவா” என்றாள்.

எப்படி இருக்கிறாள், எங்கு இருக்கிறாள், என்ன செய்து கொண்டிருக்கிறாள், இப்போது எதற்காக இங்கு வந்திருக்கிறாள் என அவனுள் பல கேள்விகள்.

 கேட்டு தெரிந்து கொள்ளலாம்தான், ஆனால் தங்களுக்குள் முடிந்து போனதாக அறிவித்துக் கொண்ட உறவை எந்தக் காரணத்தை கொண்டும் புதுப்பித்துக் கொள்ள விரும்பவில்லை அவன். தன் எந்தவொரு செயலும் தங்களுக்குள் இன்னும் எதுவோ இருக்கிறது என்ற சைகையை அவளுக்கு தந்து விடக்கூடாது என்பதிலும் கவனமாக இருந்தான். 

இப்போது அவனிருக்கும் சூழலில் அவளின் அருகாமை அவனுக்கு அத்தியாவசியம்தான். ஆனால் அவள் வாழ்வில் தன் வரவு விரும்பத் தகாத விளைவுகளையே ஏற்படுத்தும் என நன்றாக தெரிந்தும் தன் சுயநலத்துக்காக அவளை வேதனையடைய செய்ய விரும்பவில்லை அவன். 

உறக்கம் வராவிட்டாலும் நன்றாக படுத்து கண்களை மூடிக் கொண்டான். செவிலியர் மருந்து செலுத்த வரும்போது மணியும் பங்கஜும் வந்தனர். அப்போதும் அவன் கண்களை திறக்கவில்லை. செவிலியர் கேட்ட கேள்விகளுக்கு கூட கண்களை மூடிய படியேதான் பதில் சொன்னான். 

ஏதோ மருந்தை சலைன் வழியாக செல்லும் படி ஜீவாவுக்கு போட்டு விட்ட செவிலியர் சென்று விட்டார்.  

“அப்ப நாங்க கிளம்பறோம்மா, ஈவ்னிங் வர்றோம்” என மிதுவிடம் சொன்னான் மணி. 

“ஈவ்னிங் வேலை இருந்தா கூட நீங்க பாருங்க, நான் பார்த்துப்பேன், ஏதும் வேணும்னா கால் பண்றேன், அப்ப வந்தா போதும்” என்றாள் மிது. 

அதிர்ந்து போய் எழுந்த ஜீவாவின் உடலால் அந்த திடீர் வேகத்தை தாள முடியவில்லை, அந்த தள்ளாமை அவனது முகத்தில் தெரிந்தது. அவனை ஆதரவாக பிடித்துக் கொண்ட மிது, “மெதுவா எழாம என்ன இது ஜீவா?” என கடிந்து கொண்டாள். 

தோளை குலுக்கி தன்னை பற்றியிருந்த அவளது கைகளை விலக்கி விட பார்த்தான். அவளோ விலகுவேனா  என நின்றாள். 

கோவமாக மணியை பார்த்தவன், “உன் வேலையா இது? என் கண்ணு முன்னாடி நிக்காம போடா, அப்படியே இவளையும் கூட்டிட்டு போ” என சத்தமிட்டான். பின் சோர்ந்து போனவனாக கண்களை மூடிக் கொண்டான். 

“ஏன் இப்படி நடிச்சு உன்னையே ஏமாத்திக்கிற ஜீவா?” எனக் கேட்டான் மணி. 

“எல்லாம் தெரிஞ்சவன் மாதிரி பேசாத” என சீறிய ஜீவா, இப்போது வேகமாக தன் தோளை குலுக்க, அவனுக்கு ஏதாவது ஆகி விடப் போகிறதோ என்ற பயத்தில் அவனை விட்டு விலகி நின்றாள் மிது. 

“போங்க எல்லாரும், யாரும் இருக்காதீங்க இங்க” என மீண்டும் சத்தம் போட்டான் ஜீவா. 

“ஏய் ஜீவா, எதுக்கு உன்னை சிரம படுத்திக்கிற, அமைதியா இரு” என கண்டிப்போடு சொன்னார் பங்கஜ். 

அவரை முறைத்து பார்த்தவன், “எனக்கு பிடிக்காததை செஞ்சா அப்படித்தான் சத்தம் போடுவேன். இவளை பார்க்க பிடிக்கல, அழைச்சிட்டு போங்க இவளை” என்றான். 

மிதுவுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. 

இடுப்பில் கை வைத்து முறைத்த பங்கஜ், “இந்த பொண்ணுகிட்ட எது சொல்றதா இருந்தாலும் நீயே சொல்லிக்கடா” என்றார்.

அவள் அழுகிறாள் என்பது பக்கவாட்டு பார்வையிலேயே தெரிய, அந்தக் காட்சியை நேருக்கு நேராக பார்க்கும் துணிவின்றி தலையை குனிந்து கொண்டான் ஜீவா. 

சில நொடிகளுக்கு பின், “நான் கிளம்புறேன் ஸார், அப்புறமா வரேன்” என சொல்லி வெளியேறப் பார்த்தாள் மிது. 

“அட ஏம்மா நீ வேற? எங்க போக போற இப்போ? என்ன… எங்களுக்கு வேற வேலை இல்லைனு நினைச்சியா? மணி ஆஃபிஸ் போயி மூனு நாளாகுது. எனக்கு ஒரு குடும்பம் இருக்கு, இவனே கதின்னு கிடக்க முடியாது எங்களால” என மிதுவிடம் சற்று கடினமாக பேசிய பங்கஜ், “நீ வாப்பா மணி” என மணியை இழுத்துக் கொண்டு கிளம்பி விட்டார்.

வெளியில் வந்த பிறகு, “விடுங்க ஸார், மிதுவை மட்டும் எப்படி தனியா விட முடியும், வேற ஹெல்ப் தேவைப்பட்டா என்ன செய்வா? உடம்பு முடியாதவன்கிட்ட போய் இப்படியா பேசுவாங்க? இதான் உங்க அக்கறை காட்டுற லட்சணமா?” என கோவப்பட்டான் மணி. 

“சில விஷயம்லாம் இப்படித்தான் டீல் பண்ணனும். அந்த பொண்ணு ஒன்னும் பச்ச குழந்தை கிடையாது. எல்லாம் பார்த்துக்கும். என் ஆளு ஒருத்தன் இங்க இருப்பான், எதாவதுன்னு அவன் கூப்பிட்டு சொல்வான். நாம இங்க இருந்தா அந்த பய அப்படித்தான் பேசுவான். என்னை நம்பு, நாம போலாம்” என தீர்மானமாக சொன்னார் பங்கஜ். 

சரியென மணியும் ஒத்துக் கொண்டான்.

ஜீவாவின் முன்னால் அழக் கூடாது என தீர்மானித்த மிது கண்களை துடைத்துக் கொண்டு இன்னும் கூட இவன் கோவப்பட்டாலும் தாங்கிக் கொள்ளலாம் என மனதை தைரியப் படுத்திக் கொண்டாள். எதற்காக எந்த எண்ணத்தில் தன்னை போக சொல்கிறான் என அவளுக்கும் ஓரளவு புரியத்தான் செய்தது. 

முடிந்த வரை இந்த சூழலையும் இவனையும் இலகுவாகவே கையாள்வது என முடிவு செய்து கொண்டாள். 

இதற்குள் ஜீவாவின் சக்தியெல்லாம் வடிந்து விட்டது. முற்றிலும் தளர்ந்து போனவனாக படுத்துக் கொண்டான். அதே அறையிலிருந்த ஒற்றை படுக்கையில் அமர்ந்து கொண்டாள் மிது. 

அலுவலகத்திலிருந்து அவளுக்கு அழைப்பு வந்தது. “ஸாரி ஸார், மெடிக்கல் எமர்ஜென்சி, அதான்…” என சின்ன குரலில் சொல்லிக் கொண்டிருந்தாள். அவனுக்கு நன்றாகவே கேட்டது. 

அலுவலகத்தில் சரியான தகவல் சொல்லாமல் கிளம்பி வந்திருக்கிறாள் போல என புரிந்து கொண்டான்.

மேலும் என்ன கேட்டார்களோ, “என் ஃபியான்ஸேக்குத்தான் முடியலை ஸார். கூட நான்தான் இருக்கேன்” என்றாள். இவளுக்கு முதுகு காண்பித்து படுத்திருந்த ஜீவா வாயை குவித்து மூச்சு விட்டான். 

நான்கு நாட்களுக்கு விடுப்பு வேண்டும் என கேட்டு பெற்றுக் கொண்டு கைப்பேசியை வைத்தவள், ஜீவா உறங்குகிறானா எதுவும் தேவையா என அறிந்து கொள்வதற்காக அவனிடம் வந்தாள். 

அவளின் காலடியோசை கேட்டு கண்களை இறுக மூடிக் கொண்டான். அவனது நெற்றி, கன்னம், கழுத்து என தொட்டுப் பார்த்து காய்ச்சல் இருக்கிறதா என பரிசோதனை செய்து, அவனையும் வெகுவாக சோதனை செய்தாள். 

மருந்து முடிந்ததும் சலைன் இணைப்பை அகற்றி விட்டார்கள். 

ஓய்வறை செல்வதற்காக அவன் எழ, ஒற்றைப் படுக்கையில் அமர்ந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்த மிதுவும் எழுந்தாள். 

அவளை நேராக பார்த்தவன் அவளின் பரிதவிப்பான பார்வையில் மனமுருகி, எதுவும் சொல்ல இயலாமல் ஒருவித சங்கடத்தோடு ஓய்வறைக்கு சென்று வந்தான். ஏதாவது சொல்வானா என அவனது முகத்தை முகத்தை பார்த்தாள். பார்வை அவளிடத்தில் இல்லாத போதும் அவனது கவனம் அவளிடம்தான், ஆகவே அவனுக்கு எல்லாம் தெரிந்தது. 

தன்னைத் தேடி வந்தவளை தான் நோகடிக்கிறேன் என்பதை தாங்க முடியாமல், அறையிலிருந்து வெளியில் வந்தான். அவளும் அவனை பின் தொடர்ந்து வந்து விட்டாள். 

சலிப்போடு அவளை பார்த்தவன் அங்கிருந்த இருக்கை ஒன்றில் அமர்ந்து விட்டான். ஒரு இருக்கை தள்ளி மிதுவும் அமர்ந்து கொண்டாள். 

தொற்று குறைந்திருக்கிறதா என்பதை பார்க்க அதிகாலையிலேயே டெஸ்ட் செய்திருந்தார்கள், அதன் முடிவை மிதுவிடம் அறிவிக்க வந்த செவிலியர், “நீங்கதான் இவர் கூட இருப்பீங்கன்னு சொன்னாங்க, டெஸ்ட் ரிப்போர்ட் வந்திடுச்சு” என்றார். 

நல்ல முன்னேற்றம் இருப்பதாகத்தான் சோதனையின் முடிவில் வந்திருந்தது. வேறு ஏதோ சந்தேகங்கள் கேட்டு தெளிவு பெற்றுக் கொண்டாள் மிது. 

“நீங்க இவருக்கு என்ன வேணும்?” எனக் கேட்டார் அந்த நடுத்தர வயதுடைய செவிலியர். 

“நான் கல்யாணம் பண்ணிக்க போறவர்” என்றாள் மிது. 

“அதெல்லாம் இல்லை” என காட்டமாக சொன்னான் ஜீவா. 

செவிலியர் மிதுவை பார்க்க, “எம்மேல கொஞ்சம் கோவத்துல இருக்கார், அதான் இப்படி சொல்றார்” என்றாள் மிது. 

“இல்லயில்ல சிஸ்டர், இவ எனக்கு யாரும் இல்லை. சொல்ல போனா எனக்கு யாருமே இல்லை. எப்ப டிஸ்சார்ஜ் பண்ணுவாங்க என்னை? எனக்கு நிறைய வேலையிருக்கு” என்றான். 

“முழுசா சரியானாதான் டிஸ்சார்ஜ் பண்ணுவாங்க. வீட்டுக்கு போயும் ரெஸ்ட்லதான் இருக்கணும், நிறைய வேலையெல்லாம் செய்யக் கூடாது” என்றார் செவிலியர். 

“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் சிஸ்டர். என்ன செய்யணும் செய்யக்கூடாதுங்கிற அட்வைஸ்லாம் என்கிட்டேயே சொல்லுங்க” என்றாள் மிது. 

“நீ கொஞ்சம் வாய மூடுறியா?” என எரிச்சலாக கேட்டான். 

“ரிலாக்ஸா இருங்க தம்பி” என்றார் செவிலியர். 

“இவளை கிளம்ப சொல்லுங்க, அப்பதான் நான் ரிலாக்ஸ் ஆவேன்” என்றான். 

“யாராவது உங்க கூட இருக்கணும்ல? இவங்களும் போயிட்டா என்ன செய்வோம்?” என்றார் செவிலியர். 

“நல்லா சொல்லுங்க சிஸ்டர், இவர் வெளியூர் போக பிளான் போட்டார். என்னையும் இவர் கூட கூப்பிட்டார். கல்யாணத்துக்கு முன்னாடியே அப்படிலாம் எப்படி போக முடியும் சொல்லுங்க, நான் வர முடியாதுன்னு சொல்லிட்டேன். இவர் மட்டும் தனியா போயிட்டு வந்து உடம்புக்கும் இழுத்துக்கிட்டார். அந்தக் கோவத்துலதான் இப்படி பேசுறார்” என்றாள் மிது. 

“இவங்க செஞ்சது சரிதானே தம்பி, நீங்களும் போகாம இருந்திருந்தா உங்களுக்கும் உடம்புக்கு வந்திருக்காது. வைஃப் பேச்சை கேட்டு நடக்கணும்னு சொல்வாங்கல்ல,  அதே மாதிரி வைஃபா வரப் போறவங்க பேச்சையும் கேட்டு நடக்கணும் தம்பி” என அறிவுரை வழங்கி விட்டு சென்றார் செவிலியர். 

ஜீவா மிதுவை முறைத்துக் கொண்டிருக்க, அவளோ நமட்டு சிரிப்பு சிரித்தாள். வேறு திசை திரும்பிக் கொண்டவனுக்கும் லேசாக சிரிப்பு வந்தது, ஆனால் நொடி நேரம்தான். உடனே முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டான். 

சற்று நேரத்தில் அவன் அறைக்கு செல்ல, அவளும் சென்றாள். அவனுக்கான மதிய உணவாக கஞ்சியும் ஏதோ காய்கறி பொரியலும் வந்தது. அவன் சாப்பிட ஏற்பாடு செய்து கொடுத்தாள். சாப்பிடாமல் அவளை தயக்கத்தோடு பார்த்தான். 

“என்ன ஜீவா, நான் ஊட்டி விடவா?” எனக் கேட்டாள். 

“ப்ச், போ நீயும் சாப்பிட்டு வா” என்றான். 

“பசி எடுத்ததும் போறேன்” என அவள் சொல்லவும், தன் அக்கறையை இதற்கு மேல் வெளிப்படுத்தி விடக்கூடாது என்ற மனக் கட்டுப்பாட்டுடன் அவளிடம் பேசாமல் சாப்பிட ஆரம்பித்தான். 

வாய்க்கு எதுவும் பிடிக்கவில்லை. மல்லுகட்டி கொஞ்சமாக சாப்பிட்டவன் வைத்து விட்டான். 

“இன்னும் கொஞ்சம் சாப்பிடுங்க” என்றாள். 

ஒரு கையால் போதும் என சைகை செய்தான். மீதமிருந்ததை அவள் சாப்பிட போக, வேகமாக அந்த கிண்ணத்தை பிடுங்கியவன், அவளை சுட்டெரிப்பது போல பார்த்தான். 

கலங்கிய கண்களோடு ரோஷமாக அவள் பார்க்க, “நான் சாப்பிட்டதை  சாப்பிட்டு உனக்கும் ஏதாவது வர்றதுக்கா? படுத்தாம போ, வேற சாப்பிட்டிட்டு வா” என தணிந்த குரலில் சொன்னான். 

ஒன்றும் சொல்லாமல் அமைதியாக அந்த ஒற்றை படுக்கையில் அமர்ந்து விட்டாள். 

“உன்னைத்தான் போ போய் சாப்பிடு” என்றான். 

இப்போது அவனை கண்டு கொள்ளாமல் படுத்தே விட்டாள். இரண்டு முறை அவளின் பெயரை சொல்லி அழைத்து பார்த்தான். அவள் திரும்பாமல் போகவும் செவிலியரை அழைத்து வந்து விட்டான். 

“என்னங்க நீங்க வேற, இவருக்குத்தான் உடம்பு முடியலை நீங்கதான் இவரை பார்த்துக்கணும். போங்க போய் சாப்பிட்டு வாங்க” என செவிலியர் சொல்லியும் அவளிடம் அசைவில்லை. 

அவளருகில் போய் பார்த்த ஜீவா, “தூங்கிட்டா சிஸ்டர், எழுந்ததும் சாப்பிட போவா, நீங்க போங்க” என்றான். 

“நல்ல பசங்க ரெண்டு பேரும். உங்க வீட்ல வேற யாரும் பெரியவங்க இல்லையா?” எனக் கேட்டார். 

பதில் தராமல் ஜீவா நின்ற விதமும் அவனது பார்வையும் அவரின் மனதை பிசைந்தது. 

“இந்த பொண்ணு கண்ணுல உங்க மேல உள்ள அன்பும் பாசமும் அப்படியே தெரியுது. சண்டை போட்டுக்காம நல்லா இருங்க” என சொல்லி நகர்ந்தார்.

முதல் நாளிரவில் வெகு நேரம் கண் விழித்து அலுவலக பணியை பார்த்திருந்தாள் மிது, மருத்துவமனை வந்ததிலிருந்து அழுது அழுது கண்களிலும் நல்ல எரிச்சல், ஆதலால் தன்னை மறந்து உறங்கியிருந்தாள்.  

மிதுவின் தலைமாட்டில் இருந்த கொஞ்சம் இடத்தில் அமர்ந்தவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். 

வருடங்கள் கடந்தும் இம்மி அளவும் மனதிலிருந்து அகலாத முகம். இவளை மறந்து விட வேண்டும் என விரும்பிய காலம் ஒன்று உண்டு,  இப்போதெல்லாம் இவளின் நினைவுகள் மட்டுமே கொஞ்சம் போல இவனை உயிர்ப்பாக வைத்திருக்கிறது. 

துரத்திக் கொண்டிருந்த இந்த முகத்தை விட்டுத்தான் எங்கெங்கோ ஓடிச் சென்றான். ஏதேதோ நடந்த பின்னர் இந்த முகத்தை எல்லா இடங்களிலும் பார்க்கிறான். 

முதல் காதலென இவளை சொல்ல மாட்டான் ஜீவா, இரண்டாவதாக அந்த காதல் வேறு யாரிடமும் வர வாய்ப்பிருந்தால்தானே? இவள் மீது கொண்ட நேசமும் அன்பும் அப்படியே இருக்கிறது, சொல்லப் போனால் பல மடங்காகியிருக்கிறது. 

இன்று இவளை பார்த்து விட்டதில் முதலில் ஏற்பட்ட அதிர்ச்சி மறைந்து, காணத் துடித்ததை கண்டு விட்ட சிலிர்ப்பை உணர்கிறான். 

அம்மாவுக்காக இவளை பிரிந்து காதலனாக தவறிய நான், மகனாகவும் தவறி அம்மாவையே இழந்து விட்டேன் என நினைக்கையில் அவனது வற்றிப் போன கண்கள் மீண்டும் ஈரத்தை சுரந்தது. 

காலம் கடந்தும் தன்னை மறவாமல், குறையாத அதே காதலை சுமந்து கொண்டு தன்னை தேடி ஓடி வந்திருக்கும் இவளை பெருமை பொங்க பார்த்தான். 

இப்போதும் இவளை ஏற்றுக் கொள்ள முடியாத தன் நிலையை எண்ணி வருந்தினான். விரக்தியாக சிரித்தான். 

இவளின் குடும்பத்தினர் சம்மதத்தோடு தாங்கள் இணைவது என்பது முடியாத காரியம், நான்தான் என் அம்மாவை இழந்து நிற்கிறேன், இவளுக்கென்ன தலையெழுத்து, எனக்காக  ஏன் இவள் இவளின் பெற்றோரை சொந்தங்களை இழக்க வேண்டும்? 

இப்போது நான் யார்? அம்மாவின் பணத்தில் நடமாடிக் கொண்டிருக்கும் எதற்கும் யாருக்கும் பயணில்லாத ஒரு ஜீவன். எனக்கென்ன தகுதி இருக்கிறது இவளை மணந்து கொள்ள? 

ஜீவாவின் யோசனைகள் அவனது மனதில் பயங்கரமான வலியை உண்டாக்கியது. 

“என்னை விட்டு போ மிது, எங்கேயாவது போய் நல்லாரு மிது” கலங்கிய குரலில் முணு முணுத்தவன் எழுந்து கொண்டான். 

பட்டும் படாமல் அவளது கேசத்தை வருடி விட்டவன் அறையை விட்டு வெளியே போய் அமர்ந்து கொண்டான்.