கொஞ்சும் காதல் சாரல் 12 2 5500 பசுபதி, வினோதினி இருவருக்கும் கூட மகளின் ஜாதகத்தில் தோஷம் என சொல்லியே நல்ல இடமாக ஏதும் அமையவில்லையே என்ற கவலை இருந்தது. மகளுக்கு பொருத்தமான நல்ல பையன், அதுவும் தூரமாகவும் இல்லாமல் அருகிலிருக்கும் ஊரை சேர்ந்த அன்புவை மகள் மணந்து கொண்டதில் அவர்களும் மகிழ்ச்சியாக இருந்தனர். இப்படியாக ஆளாளுக்கு ஒவ்வொரு மனநிலை. மணப்பெண்ணின் வீட்டில்தான் இரவு சடங்கு ஏற்பாடாகியிருந்தது. அன்புவின் ஒன்று விட்ட அத்தையும் மாமாவும் இங்கு அன்புக்கு துணையாக இருந்தனர். இரவு விருந்து முடியப் போகும் தருவாயில் அருந்ததி மயக்கமடைந்து விட்டதாகவும் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருக்கிறோம் எனவும் தகவல் வந்தது. ஒரே பதற்றம், அந்த ஊரில் இரவில் மருத்துவர் இருக்க மாட்டார் என்பதால் லாவண்யாவின் ஊருக்குத்தான் அழைத்து வந்து கொண்டிருந்தனர். அவர்கள் வருவதற்கு முன் அன்பு, அவனுடன் வந்தவர்கள், பசுபதி, வினோதினி ஆகியோர் அந்த சின்ன கிளினிக் வந்து விட்டனர். திருமண வேலைகள் அதிகம், நல்ல அலைச்சல், தன்னை சரியாக கவனித்துக் கொள்ளவே இல்லை அருந்ததி, இரத்த அழுத்தம் குறைந்து போய் மயக்கம் ஏற்பட்டிருக்கிறது. பயப்பட ஏதுமில்லை, சலைன் போட்டுக் கொண்டு வீட்டிற்கு சென்று விடலாம், நாளைக்கு மற்ற பரிசோதனைகள் செய்து கொள்ளலாம் என சொல்லி விட்டார் மருத்துவர். மயக்கம் தெளிந்திருந்த அருந்ததியும் மகனை வீட்டிற்கு செல்லும் படி கூறினார், அன்புக்கு எப்படி மனம் வரும்? அம்மாவை விட்டு அகலவில்லை. மூன்று மணி நேரம் கழித்து அருந்ததி அங்கிருந்து புறப்பட்டார். இதற்கு மேல் அவரது ஊருக்கு செல்ல வேண்டாம் என முடிவு செய்து தங்கள் வீட்டிற்கே அழைத்து வந்து விட்டார் பசுபதி. அருந்ததி வரும் வரை வீட்டில் யாருமே உறங்கியிருக்கவில்லை. அத்தை உள்ளே வரவுமே ஓடிப் போய் அவரின் கையை பிடித்துக்கொண்டு நலம் விசாரித்தாள் லாவண்யா. “ஒன்னுமில்லடா தங்கம், சாதாரண மயக்கம், கூட இருந்தவங்க பெருசு பண்ணிட்டாங்க” என்றார் அருந்ததி. “என் வயசுக்கு நான் எப்படி இருக்கேன், நீ என்னன்னா இப்படி கெடுத்து வச்சிருக்க உடம்பை” என கடிந்து கொண்டார் மங்கம்மா. “எங்க… சின்ன வயசுலேயே படக்கூடாத துன்பத்தையெல்லாம் எங்கண்ணி பட்டாச்சு, அன்பு இல்லைனா அண்ணி இந்தளவு கூட உடம்ப பார்த்திருக்க மாட்டாங்க” என்றார் அன்புவின் ஒன்று விட்ட அத்தை. “குத்து விளக்காட்டம் இருந்த எங்க பொண்ணுகிட்ட என்ன குறைய கண்டுபிடிச்சாரோ உன் அண்ணன், அவரை சொல்றதா, இல்லை அடுத்தவ முந்தியில பங்கு போட்டு புள்ளையே பெத்துகிட்ட அந்த சிறுக்கிய சொல்றதான்னு தெரியலை. அவளுக்கு முத மரியாதை தர்ற உன் பெரியண்ணன் இருக்காரே, அவரு அதுக்கும் மேல…” புலம்பினார் மங்கம்மா. “அந்த பய இவ பெரியண்ணன் பொண்ணு கல்யாணத்துக்கே ரைட்டு ராயலா வந்திருந்தான் பெரியம்மா. அந்த பெரிய மனுஷன்… அதான் இவ பெரியண்ணன் இன்னிக்கு கல்யாணத்துக்கு வரலைன்னு வேற இவளுக்கு வருத்தம்” சமய சந்தர்ப்பம் இல்லாமல் மனைவியை குறை கூறினார் அந்த அத்தையின் கணவர். “என்னை குறை பேசலைனா தூக்கம் வராதே உங்களுக்கு? என்ன இருந்தாலும் குடும்பத்துக்கு மூத்தவர் பெரியண்ணன்தான். அவரு மனசு துக்கப் பட்டாதாலதானோ என்னவோ அண்ணிக்கு உடம்பு முடியாம போயிடுச்சு” என்றார் அத்தை. “அதுக்கு… நம்ம அன்புவோட இடத்துல அந்த தரங்கெட்ட பயல நிக்க வைப்பாரா? வெக்கமில்லாம அவனும் வந்தானாம்” என்றார் அத்தையின் கணவர். “அப்படிலாம் அவனை பேசாதீங்க, சின்ன பையன், உங்கள என்ன பண்ணினான்னு இவ்ளோ கோவம் உங்களுக்கு அவன் மேல. அவனோட பொறப்பு அவன் தேர்ந்தெடுத்தது இல்லை” என கணவரிடம் வாதாடினார் அத்தை. “அத்தை!” போதும் இந்த பேச்சு என்பது போல அதட்டினான் அன்பு. இறுகிப் போயிருந்த அவனது தாடையும் கோவத்தில் தகித்த அவனது கண்களும் அத்தையை பயப்படுத்தியது. அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மிதுன்யாவுக்கு ஜீவாவை நினைத்து நினைத்து இரக்கமாக இருந்தது. தன்னை பிரிந்த அவனது முடிவு மிகச் சரிதான் என தனக்குள் சொல்லிக் கொண்டாள். “என்னங்க…” சின்னக் குரலில் தன் கணவனை அழைத்து சமாதானப் படுத்தினாள் லாவண்யா. “தேவையில்லாத பேச்சு எதுக்கு இப்போ?” என அனைவருக்கும் பொதுவாக பார்த்து சிடுசிடுத்தார் செல்வநாயகம். அருந்ததிக்கு தன் கணவரின் செயல்கள் நினைவுக்கு வர விரக்தியாக புன்னகைத்துக் கொண்டார். “ஆஸ்பத்திரியிலேருந்து வந்த அக்காவ ரெஸ்ட் எடுக்க விடாம என்னதான் தொண தொணன்னு பேசுவீங்களோ, நீயும் பார்த்துகிட்டே நிப்பியா வினோதினி?” என கடிந்து கொண்டார் பசுபதி. பின் வினோதினி மற்ற பேச்சுக்களை தடுத்து அருந்ததிக்கு குடிக்க பால் கொடுத்தார். தன்னால் அன்று நடக்க இருந்த சடங்கு நடக்காமல் போய் விட்டதே என சங்கடமாக உணர்ந்தார் அருந்ததி. அவரின் மனம் புரிந்தது போல, “இன்னிக்கு இல்லைனா இன்னோரு நாள் பார்த்து வைக்க போறோம், உங்களுக்கு என்னாச்சோன்னு எல்லாரும் எப்படி பதறிட்டோம், வேற ஏதும் யோசிக்காம நல்லா தூங்குங்க அண்ணி” என ஆறுதலாக சொன்னார். சடங்குக்காக ஏற்பாடு செய்யப் பட்டிருந்த லாவண்யாவின் அறையில் அன்பு தங்கிக் கொண்டான், இன்னொரு அறையில் அருந்ததி தங்க வைக்க பட்டார். அவருடன் துணைக்கிருப்பதாக வினோதினி, அன்புவின் ஒன்று விட்ட அத்தை ஆகியோர் சொல்லியும் கேளாமல் அத்தையுடன் தானே இருக்கிறேன் என அடமாக சொல்லி விட்டாள் லாவண்யா. திருமணம் நிச்சயம் ஆனது முதலே தினம் கைப்பேசி வாயிலாக அருந்ததியும் லாவண்யாவும் பேசிக் கொள்கின்றனர், அவர்களுக்குள் நல்ல பிணைப்பு இருந்தது. அன்பும் லாவண்யாவும் அடுத்தடுத்து இருந்த அறைகளில்தான் இருந்தனர். அருந்ததி உறங்கியிருக்க, மதியத்திற்கு மேலாக ஓய்வெடுத்திருந்த லாவண்யாவுக்கு உறக்கம் வரவில்லை. வெளியில் யாரோ நடமாடுவது ஜன்னல் வழியே தெரிந்தது. கதவை திறந்து பார்த்தாள். அன்புதான் கைகளை பின்னால் கட்டிக் கொண்டு கோவ முகத்தோடு நடை போட்டுக் கொண்டிருந்தான். லாவண்யா வரவும், “தூங்காம என்ன செய்ற?” எனக் கேட்டான். “நீங்க என்ன பண்றீங்கன்னு பார்க்க வந்தேன்” என்றாள். அறையை எட்டிப் பார்த்து அம்மா ஆழ்ந்து உறங்குவதை உறுதி செய்து கொண்டவன் கதவை வெறுமனே சாத்தி விட்டு, லாவண்யாவின் கையை கெட்டியாக பிடித்துக்கொண்டான். மூச்சை நன்றாக உள் இழுத்து விட்டவன், “எங்கம்மாவுக்கு நிம்மதிங்கிறதே கிடையாதா? அவங்களுக்கு கல்யாணம் ஆன அன்னிலேருந்தே சோதனைக்காலம் ஆரம்பிச்சிடுச்சு, காரணகர்த்தா செத்து போயும் கூட அந்த பேச்சு ஓயுறதே இல்லை. எங்கம்மா மனக் காயத்தை ஆற விடாமலே பார்த்துகிறதுல என் சொந்தத்துக்கு எல்லாம் என்னதான் கிடைக்குமோ? எந்த தப்பும் செய்யாம எங்கம்மாவுக்கு வாழ்நாள் முழுக்க தண்டனை கிடைக்குது பார்த்தியா? எதுக்காக லாவண்யா?” எனக் கேட்டான். “இனிமே யாரும் தேவையில்லாத விஷயங்களை பேச வேணாம், பேசாம நாம பார்த்துக்கலாம்” என அவள் சொல்ல, தலையாட்டிக் கொண்டான். “ரொம்ப கோவம் வருது உங்களுக்கு” என்றாள். “பின்ன அத்தை எப்படி பேசினாங்கன்னு கேட்டதான? பெரியப்பாவை கூப்பிடலைன்னு அம்மாக்கு கூட கோவம். எத வேணா பொறுத்துப்பேன் லாவண்யா, என் அம்மா வாழ்க்கை தொலைஞ்சு போக காரணமா இருந்தவங்கள மட்டும் எந்த காலத்திலேயும் மன்னிக்கவே முடியாது. அவங்கள சேர்த்துக்க நினைக்கிறவங்க யாரா இருந்தாலும் அவங்களும் எனக்கு எதிரிதான்” என்றான். “அவங்கலாம் நம்ம கூட எந்த சம்பந்தமும் இல்லாம எங்கேயோ இருக்காங்க, வேற பேசுங்க” என்றாள். அலங்காரம் செய்யப் பட்டு இப்போது புடவை மட்டும் மாற்றியிருந்த புது மனைவியை ரசனையாக பார்த்தவன், “என்னத்த பேசடி?” எனக் கேட்டான். “எதே ‘டி’யா?” பொய்யாக முறைத்தாள். அவ்வப்போது அவளை ‘டி’ போட்டு பேசுவது அவனுக்கு அவனை மீறி வந்து விடும், அப்படி கூப்பிட கூடாது என இவளும் சண்டை போடுவாள். “வேணும்னா சொல்றேன், தானா வருது” என்றான். “வரும் வரும். போங்க, போய் தூங்குங்க” என்றவளை தன்னை நோக்கி இழுத்தான். அவனது மார்பில் மோதி நின்றவள் வெட்கச் சிரிப்போடு முறைத்தாள். அவளது கன்னத்தை தன் கன்னத்தால் வருடினான், நெளிந்தவளின் இதழ்களில் தன் கன்னத்தை வைத்து அழுத்திக் கொண்டான். விலகிப் போனவளின் இடையை வளைத்துக் கொண்டான். சில நிமிடங்கள் புது மண தம்பதிகளுக்கே உரித்தான இனிய நேரமானது. “எல்லை மீறி போறீங்க, விடுங்க என்னை” என மயக்கும் குரலில் சொன்னாள். அவள் சொல்வது நிஜம்தான் என உணர்ந்து விலகியவன், “சீக்கிரம் போயிடு, இல்லைனா உன்னை விட மாட்டேன்” என்றான். அவனது மார்பில் ஆசையாக குத்தி விட்டு அறைக்குள் ஓடிச் சென்றாள் லாவண்யா. வெளியில் நின்ற படியே கை அசைத்து விட்டு கதவை வெறுமனே அடைத்து விட்டு தன்னறைக்கு சென்ற அன்புவின் மனநிலையை முற்றிலுமாக மாற்றியிருந்தாள் லாவண்யா.