மீண்டும் ஒரு நாள் பாலச்சந்திரனின் அப்பா வந்தார், கணவரின் பிரிவால் அருந்ததியின் உடல்நிலை நலிவடைவதாகவும் அன்பு உறக்கத்திலும் அப்பா என அழுவதாகவும் சொன்னார். இப்போது வரவில்லை என்றால் அவர்களை உயிரோடே பார்க்க முடியாது என பயமுறுத்தினார். 

பக்கத்து வீட்டில் இருந்த கோபிகாவுக்கும் இது கேட்கத்தான் செய்தது. பதிலே தராமல் அழுத்தமாக இருந்த சந்திரனின் மீது வெறுப்பும் ஆத்திரமும் பெருகியது. 

வெளியில் வந்த கோபிகா உடனடியாக ஊருக்கு செல்லா விட்டால் இப்போதே மாண்டு போவேன் என பயமுறுத்தினார். வயிற்று பிள்ளையோடு அவர் கத்தியதை கண்ட சந்திரனின் அப்பாவுக்கே பகீர் என்றானது. 

இனி என்னை காண நினைத்துக் கூட பார்க்க கூடாது என்ற சத்தியத்தை பெற்றுக் கொண்டு சந்திரனை ஊருக்கு அனுப்பி வைத்து விட்டுத்தான் வீட்டிற்குள் நுழைந்தார் கோபிகா.

அடுத்த ஒரு வார காலத்தில் மதுரைக்கு சென்று விட்டனர். மிச்சமிருந்த சில்லறை நகைகளை விற்று தம்பிக்கு தொழில் வைத்துக்கொடுத்தார். 

ஜீவா பிறந்த போது பங்கஜ்க்கு நடன இயக்குநராக வாய்ப்பு கிடைத்திருந்தது. தன்னுடன் வந்து பணி புரிய அவர் கேட்கவும் ஆறு மாத குழந்தையையும் பெற்றோரையும் அழைத்துக் கொண்டு மீண்டும் சென்னைக்கே வந்து விட்டார் கோபிகா. 

தன்னை தன் குடும்பத்தை சிரமம் இல்லாமல் கவனித்துக் கொள்ளும் அளவுக்கு அவருக்கு வருமானம் வந்தது. 

‘உன்னை நானும் விரும்பினேன், நீ வேறு தவறான நபரை தேர்ந்தெடுத்து விட்டாய், இப்போதும் உன் மீதான என் அன்பு குறையவே இல்லை, ஜீவாவை என் மகனாக பார்த்துக் கொள்வேன், மணந்து கொள்வோமா?’ என பங்கஜ் கேட்டதை பரிசீலனை கூட செய்யாமல் நிராகரித்து விட்டார் கோபிகா. 

இரண்டு வருடங்கள் தான் உண்மையாக வாழ்ந்த வாழ்க்கை பொய்யான போது வெளியில் திடமாக தெரிந்தாலும் உள்ளுக்குள் உடைந்து போனவருக்கு மீண்டும் குடும்ப வாழ்வில் அத்தனை ஈடுபாடு இருக்கவில்லை. பங்கஜை எப்போதும் எனக்கு நல்ல நண்பன் நீ என்ற எல்லையிலேயே நிறுத்தி விட்டார். 

ஜீவாவின் மூன்றாவது வயதில் சந்திரன் இறந்து போனதாக செய்தி வந்தது. அழவும் இல்லை சந்தோஷ படவும் இல்லை. சென்று வரலாமா என அவரது பெற்றோர் கேட்ட போதும், விருப்பமில்லை என சொல்லி விட்டார். 

உயிரான மகனையும் உடன் வைத்துக்கொள்ள முடியாமல் அவரது வேலை தடை செய்தது. தந்தைக்கு உடம்பு முடியாமல் மதுரைக்கு சென்ற தன் பெற்றோரிடமே ஜீவாவை விட்டு விட்டார். 

பங்கஜ் மிகவும் பிரபலமானார், பிஸியும் ஆனார். உறுதுணையாக இருந்த கோபிகாவுக்கு உழைப்புக்கேற்ற ஊதியம் கொடுத்தார். மகன் நன்றாக வாழ வேண்டும் என்பதை தவிர அவரிடம் வேறு ஆசைகள் இல்லை. 

பழைய நினைவுகளில் மூழ்கி பின் நடப்புக்கு மீண்ட கோபிகா விரைவிலேயே மகன் சரியாகி விட வேண்டும் என மனதுக்குள் பிரார்த்தனை செய்து கொண்டார். 

தான் இப்படியே இருந்தால் அம்மாவை பாதிக்கிறது என புரிந்து ஜீவாவும் இயல்பாக இருப்பது போல காட்டிக் கொண்டான். 

மிதுன்யாவுடன் பேசியே பல நாட்கள் ஆகி விட்டன. மணியின் வீட்டில் உண்மை தெரிந்த பிறகு என்ன பேசுவது, செய்வது என ஜீவாவுக்கு எதுவும் தெரியவில்லை. 

ஒருவிதமான சங்கடத்தோடுதான் அங்கிருந்து கிளம்பியிருந்தனர். கைப்பேசியில் அவனிடம் பேச முயன்ற மிதுவிடம், சில நாட்களுக்கு தனிமை வேண்டும், நானே அழைக்கும் வரை என்னை என் போக்கில் விடு என கேட்டுக் கொண்டிருந்தான். 

அவளும் இவனது மனநிலை புரிந்தவளாக  விலகியே நிற்கிறாள். 

ஜீவாவுக்கு கைக்கட்டு பிரித்தாகி விட்டது. சில உடற்பயிற்சிகள் மட்டும் செய்தால் போதுமானது என சொல்லி விட்டனர். 

ஜீவாவுடன் பேசாத மிதுவை பார்க்கவே நன்றாக இல்லை, அவளை தவிர்க்க வேண்டாம் என செய்தி அனுப்பியிருந்தாள் வாசுகி. அப்போதும் ஜீவா மிதுவிடம் பேச முயலவில்லை.

 நீயாகத்தான் பேசேன் என வாசு சொன்னதை கேளாமல், “அவரே பேசுவார்” என சொல்லி காத்திருந்தாள் மிது. 

மேலும் ஒரு மாதம் கடந்தும் இருவரும் பேசிக் கொள்வதாக இல்லை. 

வாசுகியும் மணியும்  திட்டமிட்டு பூங்கா ஒன்றில் இருவரையும் சந்தித்துக் கொள்ளும் படி செய்தனர். 

என்ன பேசுவது, எப்படி ஆரம்பிப்பது என ஜீவாவுக்கு தெரியவில்லை. கை எப்படி இருக்கிறது என மிதுதான் விசாரித்தாள். ஓரிரு வார்த்தைகளில் பதில் சொன்னான். 

“சிக்கல்தான் ஜீவா, ஆனா நிறைய வருஷம் இருக்கு. ரொம்ப யோசிக்க வேணாம், என் வீட்ல என் கல்யாணம் பத்தி பேசுறப்ப என்ன செய்யலாம்னு பார்க்கலாம். நீங்க… உங்களை இப்படி பார்க்க கஷ்டமா இருக்கு, ப்ளீஸ்  நார்மலா இருங்க” என்றாள் மிது. 

பின்னந் தலையை தடவிக் கொண்டே  அவளை தவிர எங்கெங்கோ பார்த்தான். 

திடீரென, “ஸாரி மிது” என உடைந்து போன குரலில் சொன்னான்.

இத்தனை நாட்கள் தன்னுடன் பேசாமல் இருந்ததற்காக சொல்கிறான் போல என நினைத்தவள், “இட்ஸ் ஓகே” என்றாள். 

அவளது கணிப்பை புரிந்து கொண்டவன் மறுப்பாக தலையாட்டினான். 

“நீ தெரிஞ்சுகிட்டத வச்சு  என் அம்மா பத்தி என்ன நினைக்கிற மிது?” எனக் கேட்டான். 

“சத்தியமா தப்பா நினைக்கல ஜீவா” என உடனே சொன்னாள். 

நன்றியாக பார்த்தவன், “இதே புரிதல் எல்லாருக்கும் இருக்குமா மிது?” எனக் கேட்டான். 

புரிந்து கொள்வார்கள் என மிதுவால் உறுதியாக சொல்ல முடியவில்லை. 

“என்னை பிடிப்பா வச்சு வாழ்ந்திட்டு இருக்காங்க என் அம்மா. இத்தனை வருஷம் கழிச்சு என்னால என் அம்மா வேதனை பட போறது சரியா இருக்குமா மிது?” எனக் கேட்டான்.

இல்லை என்பதாக தலையாட்டினாள். 

“என் அம்மாவோட லைஃப் நான்தான் மிது, என் ஆசைக்காக அவங்க நிம்மதியை சந்தோஷத்தை அடகு வைக்க கூடாது, அவங்கள ஹர்ட் பண்ற எதையும் நான் செய்யக் கூடாது மிது, அப்படி செஞ்சா நீயே என்னை வெறுத்திடுவ” என்றான். 

அவளுக்கு ஏதோ புரிவது போலிருந்தது,  புரிந்து கொண்ட செய்தியால் அவளது கண்கள் கலங்கிப் போயின. 

“உனக்காக எதையும் விட நான் ரெடியா இருந்தேன், உனக்கே தெரியும். ஆனா அம்மாவை திரும்ப அவங்க ஃபேஸ் பண்ண விரும்பாத விஷயங்களை ஃபேஸ் பண்ண வைக்கிறது அநியாயம் மிது. உன் வீட்ல கேட்டு போராடாம ஈஸியா உன் பேரெண்ட்ஸ், வீடு எல்லாத்தையும் விட்டுட்டு என் கூட வான்னு சொல்றதும் அநியாயம் மிது” அவன் சொல்லும் போது கன்னங்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டாள். 

மண வாழ்க்கையில் என்ன தவறு செய்தாலும் ஆணுக்கு வழங்கப்படும் மன்னிப்பு பெண்ணுக்கு கிடையாது, அதை விட பெருங்கொடுமை அவனுடைய தவறுக்கு பெண்ணையே காரணமாக்குவதுதான். 

வைத்து வாழத் தெரியவில்லை என முதல் மனைவிக்கும் குடும்பத்தை கெடுத்து மணமான ஒருவனை வளைத்து விட்டாள் என இரண்டாவது மனைவிக்கும் அவப் பெயர்கள் கிடைத்து விடுகின்றன. ஆணின் துரோகத்தை ஆண் அப்படித்தான் என எளிதாக சொல்லி விடுகிறார்கள். 

ஜீவா மிதுவை அவளது வீட்டினர் சம்மதத்தோடு  மணந்து கொள்ள வேண்டுமென்றால் கோபிகா அவமானம் அடையப் போவது உறுதியாகி விடுமே. அதற்கு ஜீவா எப்படி அனுமதிப்பான்?

எந்தக் குறையும் இல்லாமல் வளர்த்து ஆளாக்கிய தன் பெற்றோரை எதிர்த்து, விரும்பியவனை திருமணம் செய்து கொள்வதை மிதுன்யாவாலும் எண்ணிப் பார்க்க இயலாது. 

“உன்னை கல்யாணம் பண்ணிப்பேங்கிற உறுதியோடதான் என் ஆசையை உன்கிட்ட சொன்னேன், இப்படி ஆகும்னு எனக்கு தெரியாது, ஆம் ஸாரி மிது” என்ற ஜீவாவின் கலங்கிப் போன குரல் சொன்னது எவ்வளவு பெரிய கடினமான முடிவை அவன் எடுத்திருக்கிறான் என்பதை. 

என்ன வேண்டுமானாலும் ஆசை படலாம், குடும்பம் வேண்டாம் என நினைத்தால் அதை நிறைவேற்றிக் கொள்ளவும் தடைகளே இல்லை. பொறுப்பான பிள்ளைகளுக்கு இறுதியில் ஏதோ ஒரு வகையில் மன பாரம் கூடி விடுமோ?

ஜீவாவின் மீதுள்ள அன்பில் அவனை பிரிய நினைத்தாள் மிது, உண்மை தெரிந்து சில்லு சில்லாக உடைந்து போன மனதுடன் நிற்கிறான் ஜீவா. இதைப் போலவே தன் அம்மாவை நொறுக்க விருப்பமில்லாமல் நல்ல மகனாக என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் செய்கிறான் என  ஜீவாவின் முடிவில் உள்ள நியாயத்தை புரிந்து கொண்டாள் மிது. 

கொள்ளை ஆசையையும் நிறைந்த அன்பையும் சொல்லில் அடங்காத நேசத்தையும் அப்படியே மனதுக்குள் அள்ளி வைத்து, பூட்டியடைத்துக் கொண்டு, சின்ன புன்னகை சுமந்த முகங்களோடு விடை பெற்றுக் கொண்டனர் இருவரும்.