சிவ தீர்த்தாவின் திருமண நாளும் நெருங்கியிருந்தது. விடிந்தால் திருமணம் என்ற நிலையில் எந்த வித பரபரப்புமின்றி எப்போதும் போல் அமைதியாக இருந்த சிவ தீர்த்தாவைப் பார்த்த கவிதாவிற்கு தான் அய்யோ என்றிருந்தது.
“நான் சந்தோஷமாத்தான் இருக்கேன். என்னைப் பார்த்தா எப்படி தெரியுது உனக்கு?” என்றாள் சிவா.
“கல்யாணக் கலையே முகத்துல தெரியலையே?” என்றாள் கவி.
“அப்படி எல்லாம் இல்ல கவி. மனசுக்குள்ள கொஞ்சம் கவலை இருக்கத்தான் செய்யுது. நான் கல்யாணம் பண்ணிட்டு போய்ட்டா அப்பாவோட நிலைமை. அதான் கொஞ்சம் யோசனையா இருக்கு” என்றாள் மனதில் உள்ளதை வெளிப்படையாய்.
“ஆமா நீ மட்டும் இந்த ஊர்லையே இருக்க போற பாரு. உனக்கும் சீக்கிரம் கல்யாணத்தை முடிச்சு அனுப்பிடுவாங்க” என்றாள் சிவா குறையாய்.
“அதுக்குத் தான் வழியே இல்லையே? என் கதி உள்ளூர் தான்” என்றாள் கவி.
“அப்போ பாண்டி அண்ணா தானா?” என்றாள் சிவா சிரிப்புடன்.
“அத்தை மகன் அவர் இருக்கும் போது வெளிய எப்படி கட்டிக் குடுப்பாக சிவா. எனக்கும் வெளியூர் மாப்பிள்ளை எல்லாம் வேண்டாம். கண்ணுக்குத் தெரியாத பேயை விட, தெரிஞ்ச பிசாசே மேல்” என்றாள் கவி.
“சூப்பர், இன்னும் கொஞ்சம் மேக்கப் போட்டிருக்கலாம்” என்றாள் கவி.
“நாளைக்குத் தான் கல்யாணம். பரிசம் போடுறதுக்கு இந்த மேக்கப்பே போதும்டி” என்றாள் சிவா.
“அழகை எதுக்குடி அழகு படுத்தனும்?” என்று கவி கேட்க,
“முடியலை, புல்லரிக்குது” என்று சிவா சொல்ல இருவரும் சிரித்துக் கொண்டனர்.
சந்தோஷத்தில் கிருஷ்ணன் நிற்காமல் வேலை செய்து கொண்டிருந்தார். திருமண வீட்டில் எடுத்து செய்ய அத்தனை வேலைகள் இருந்தது.
அப்போது காவேரியின் தாய் பேச்சி வர,
“வாங்க அத்தை, எங்களை எல்லாம் மறந்துட்டு ஒரேடியா மகன் வீட்லயே இருந்துட்டிங்களே?” என்றார் கிருஷ்ணன்.
“என் மகன் பிள்ள பேரன் இருக்கும் போது நீ எப்படிப்பா வெளிய மாப்பிள்ளை பார்க்க போச்சு?” என்று கோபத்துடன் தான் வந்திருந்தார் பேச்சி.
“அய்யோ நான் அப்படி எல்லாம் நினைக்கலை அத்தை. நம்ம புள்ளைய பிடிச்சிருக்குன்னு கேட்டாங்க. நல்லா இடமா இருக்கவும் சரின்னு சொல்லிட்டேன். அதுவுமில்லாம நீங்களும் ஒரு வார்த்தை கேட்கலையே” என்றார் மறைமுகமாய்.
தன் மகன் வீட்டில் சிவாவை பெண் கேட்கவில்லை என்று அவர் மறைமுகமாய் சொல்வதை உணர்ந்து கொண்ட பேச்சி,
“அதுவும் வாஸ்தவம் தான் தம்பி. அவன் தான் டவுன்ல எதோ புள்ளைய விருப்பிட்டு, கட்டுனா அந்த புள்ளையைத் தான் கட்டுவேன்னு நிக்கிறானாம்மா. நாம ஆசைப்பட்டா போதுமா? அந்த கடவுள் முடிச்சு போட்டு வச்சிருக்கனுமே?” என்று புலம்பியவர், மகளிடம் சென்றார்.
“வாம்மா, இப்பத்தான் வழி தெரிஞ்சதா? அண்ணன் வீட்ல எல்லாரும் சௌக்கியமா? எங்க அவங்க யாரும் காணோம்” என்றார் காவேரி.
“எல்லாம் நல்லாத்தேன் இருக்காக காவேரி. கல்யாணத்துக்கு வந்திடுவாக ” என்ற பேச்சி,
“அம்மாடி சிவா” என்று அழைக்க,
“பாட்டி” என்ற சிவாவைப் பார்த்தவர் வாயைப் பிளந்து நின்றுவிட்டார்.
“அடியாத்தி இதென்ன சேலையில இம்புட்டு அழகா இருக்கவ?” என்றவர் கன்னத்தில் கை வைக்க, சிரித்த சிவா, அவரின் காலில் விழ,
“நல்லா இருடியம்மா”என்றவருக்கு, கடந்த காலங்கள் எல்லாம் கண் முன்னால் வர,
“இப்பத்தான் சின்ன புள்ளையா பார்த்த மாதிரி இருக்கு. அதுக்குள்ளே வளர்ந்து கல்யாணத்துக்கு தயாராகிட்டா” என்றார் பேச்சி.
“ஆமா அத்தை எனக்கும் அப்படித்தான் தோணுது” என்ற கிருஷ்ணனை பார்த்த பேச்சி,
“நீ சாதிச்சுட்டயா கிருஷ்ணா” என்றவருக்கு மேற்கொண்டு பேச வார்த்தைகள் வரவில்லை.
மாப்பிள்ளை வீட்டில் இருந்து வந்தவர்கள் நல்ல நேரத்தில் பரிசமும் போட்டு, அவளை அழைத்துக் கொண்டு சென்றனர்.
“நீயும் ஒரு பெக் அடி மச்சி. மனசுல இருக்குற சோகம் எல்லாம் இருந்த இடம் தெரியாம போய்டும்” என்றனர்.
“ஆதி அண்ணாவுக்கு மட்டும் நான் குடிச்சேன்னு தெரிஞ்சது, அவ்வளவு தான்” என்றான் விசாகன்.
“இவன் என்னடா இப்படி ஒரு பயந்தாங்கோலியா இருக்கான். எப்பப் பாரு அண்ணன் அடிப்பாரு, உதைப்பாரு, மிதிப்பாருன்னுட்டு. நமக்குன்னு வந்து வாய்ச்சிருக்கான் பாரு” என்று ஒருத்தன் எரிச்சல் பட,
“ஏன் சொல்ல மாட்ட? வாங்கிப் பார்த்தா தான தெரியும்” என்றான் விசாகன்.
“அப்போ நீ சிவாவை மறந்துட்ட” என்றனர்.
“எனக்கு பிடிச்சிருந்தது சொன்னேன். சிவாவுக்கு பிடிக்கலைன்னு சொல்லிடுச்சு. அதோட பேச்சு முடிஞ்சு போச்சு. இனி இதைப் பத்தி பேசுறதை விட்டுட்டு போய் வேற வேலை இருந்தா பாருங்கடா” என்றான் விசாகன்.
“நண்பன் லவ் பெயிலியர்ல இருக்கும் போது, நாங்க மட்டும் எப்படிடா சந்தோஷமா இருக்குறது. அதான் புண் பட்ட மனசை சரக்கடிச்சு தேத்திட்டு இருக்கோம்” என்றவர்கள் மேலும் குடித்துக் கொண்டிருக்க,
“நான் கிளம்புறேன்” என்றபடி கிளம்பினான் விசாகன்.
“அட இரு மச்சான். என்ன அவசரம்? எப்படியும் பரிசம் போட்டு முடிச்சிருப்பாக. சிவாவை இங்க தான் கூட்டிட்டு வருவாங்க. பார்த்துட்டு போ. மாப்பிள்ளை தினேஷ் எனக்கு மச்சான் முறை தான் ஆகணும்” என்றான் ஒரு நண்பன்.
பெருமூச்சு விட்டுக் கொண்டான் விசாகன். ஆதி பேசிய பிறகு அவனுக்கு ஒரு தெளிவு கிடைத்திருந்தது.
“நான் யாரையும் பார்க்கலை. அது சரியாவும் இருக்காது. நீங்க என்ஜாய் பண்ணுங்க. நான் வீட்டுக்கு கிளம்புறேன்” என்றபடி கிளம்பிவிட்டான் விசாகன்.
“என்னடா இப்படி சொல்லிட்டு போறான்?” என்றான் ஒரு நண்பன்.
“காதலியை இன்னொருத்தன் பொண்டாட்டியா பார்க்க தெம்பில்லைன்னு சொல்லாம சொல்லிட்டு போறான்டா” என்றான் ஒருவன் போதையில்.
“இவன் அண்ணன் மட்டும் குறுக்க வராம இருந்திருந்தா, இவனை இவன் ஆசைப்பட்ட பொண்ணு கூடவே சேர்த்து வச்சிருக்கலாம்” என்றான் மற்றொருவன்.
“இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகலை, நாம நினைச்சா இவங்களை சேர்த்து வைக்க முடியும்” என்றவன்,
“பொண்ணைத் தூக்கிடுவோம். நாளைக்கு காலையில அதே முகூர்த்தத்துல விசாகனோட கல்யாணம் பண்ணி வச்சுடுவோம். அவன் அண்ணன் என்ன பெரிய புடுங்கியா? என்ன பண்றான்னு பார்ப்போம்” என்று ஒருவன் தீவிரமான குரலில் சொல்ல,
“உனக்கு நண்பன் காதலை விட, உன் சொந்தக்கார மச்சான் பெருசா போயிட்டானா?” என்ற நண்பர்களின் கேள்வியில் வேறு வழியின்றி சரி என்று தலையை ஆட்டினான் அவன்.
“உங்க ஊர் பொண்ண வம்பிழுத்தோம்னு தான ஸ்டேஷன் கம்ப்ளைன்ட் வரைக்கும் போன ஆதி. உன் தம்பி பேர் மட்டும் வெளிய வரக் கூடாதுன்னு என்னவெல்லாம் பண்ண? நாளைக்கு வரும் பாரு உன் தம்பி பேரு” என்று அவர்களுக்குள் இருந்த ஒருவன் மனதிற்குள் கறுவிக் கொண்டான். விசாகனுக்கு உதவி செய்வது போல் அவர்களின் வன்மத்தை தீர்க்கத் தயாராய் இருந்தான் அவன்.