இதோ சிவா கேட்ட பாப்பாவும் அவள் வயிற்றில் வளரத் தொடங்கி, ஏழாவது மாதம் நடந்து கொண்டிருந்தது. ஆதி கேசவன் அவளை உள்ளங்கையில் வைத்துத் தாங்கினான் என்று சொன்னால் தான் சரியாக இருக்கும். ரேணுகாவோ அதற்கும் ஒரு படி மேலாக அவளுக்கு எந்த ஏக்கமும் வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார்.
பெற்ற மகள் தாயாகப் போகும் சந்தோசம் மனம் முழுவதும் விரவிக் கிடந்தாலும் அதை காட்டிக் கொள்ள முடியாமல் சுபத்ராவும் ஒரு பக்கம் தவித்திருந்தார். இது இதோடு முடியும் தவிப்பல்ல என்று அவருக்கு நன்றாகத் தெரியும். ஏதோ அவளை ஒரே வீட்டில் பார்த்துக் கொள்ளவாவது முடிகிறதே என்பது தான் அவருடைய அப்போதைய ஆறுதல்.
மகள் கருவுற்ற செய்தி கேட்டு கிருஷ்ணன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஏற்கனவே மகள் என்றால் அவருக்கு அவ்வளவு பிரியம். அவரின் உலகமே அவள் மட்டும் தான். இப்போது அந்த உலகத்திற்குள் புதிதாய் ஒரு ஜீவன் என்று நினைத்து நினைத்து பெரும் மகிழ்ச்சி அடைந்திருந்தார்.
இதோ மகளுக்கு வளைகாப்பு வைப்பது பற்றி தான் மருமகனிடம் பேசிக் கொண்டிருந்தார் கிருஷ்ணன்.
“அதெல்லாம் சரியா வரும் மாமா. அது உங்க மக வீடு. நான் ஒன்னும் உங்களை தினமும் வரச் சொல்லி கட்டாயப்படுத்தலையே? நீங்க அங்க வந்து தான் வளையல் போட்டு தீர்த்தாவை கூட்டிட்டு வரணும்?” என்றான் முடிவாய்.
“ஒரு மண்டபம் பார்த்து விசேஷத்தை அங்க வச்சுக்கலாம் மாப்பிள்ளை” என்று கிருஷ்ணன் வாதாடிக் கொண்டிருந்தார்.
ஆதி எவ்வளவு சொல்லியும் அவர்கள் வீட்டிற்கு செல்ல மறுத்துவிட்டார் கிருஷ்ணன். கடைசியில் அவர் சொன்னபடி பெரிய மண்டபமே பிடித்துவிட்டான் ஆதி. ஒரு வகையில் அவனுக்கும் இதுவே சரியாகப் பட்டது. அவர்களின் திருமணம் தான் அவசர கதியில் நடந்திருந்தது. வளைகாப்பு விழாவாது சிறப்பாக இருக்கட்டும் என்று எண்ணிவிட்டான்.
சிவா ஏற்கனவே அழகு. இப்போது தாய்மையின் பூரிப்பில் மேலும் பளபளத்திருந்தாள். மேடிட்ட வயிறுடன் அழகாய் கிளம்பியிருந்தவளைப் பார்த்தவனுக்கு ஒரு சொல்ல முடியாத உணர்வு அவனை ஆட்கொண்டு தவிக்க விட்டுக் கொண்டிருந்தது.
“என்னாச்சு? ஏன் அப்படி பார்க்குறிங்க?” என்றாள் மலர்ந்த முகத்துடன்.
“மாசமா இருக்கும் போது இப்படி இருக்கு அப்படி இருக்குன்னு சொல்லி புருஷனைப் பாடா படுத்தனும். இது தான் சாக்குன்னு என்னை நல்லா வேலை வாங்கணும். ஆனா இங்க அதெல்லாம் நடக்கவே இல்லை. எப்பவும் போல என் பொண்டாட்டிக்கு சாமர்த்தியம் பத்தலை” என்றான் சிரிப்புடன்.
“கேட்டுக் கிடைக்கலைன்னாத் தான் சாமர்த்தியம் தேவைப்படும் மாமா. எனக்குத் தான் கேக்குறதுக்கு முன்னாடியே எல்லாம் கிடைச்சுடுதே. அப்பறம் என்ன?” என்றவளை அணைத்து முத்தமிட்டவன், வயிற்றிலும் முத்தமிட, உள்ளிருந்த மகவோ தன் இருப்பை தந்தையிடம் உணர்த்த அசைந்து கொடுத்தது.
“என் பிள்ளைகிட்ட எனக்கு என்ன பொறாமை? இது நம்ம குழந்தை மாமா. தாய்ப்பாசம்னா என்னனே தெரியாம வளர்ந்த நான் இப்போ தாயாகிட்டேன் இல்ல மாமா. இது எனக்கு எப்படி இருக்கு தெரியுமா? இந்த உணர்வை சொன்னா புரியாது” என்று கண் கலங்கினாள்.
“நீ சொல்லவே இல்லைன்னாலும் எனக்கு புரியும்மா” என்றவன் அவள் நெற்றியில் முத்தமிட,
“நீங்க என்ன எப்ப பார்த்தாலும் அங்கேயே முத்தம் குடுக்குறிங்க?” என்றாள் கேள்வியாய்.
“ம்ம், நெத்தியில முத்தம் குடுத்தா உனக்கு எல்லாமுமா நான் இருப்பேன்னு அர்த்தம்” என்றான்.
அவளைப் பார்க்காததைப் போல் பார்த்திருந்த விசாலாட்சிக்குக் கூட அப்படித்தான் தோன்றியது.
‘சும்மா சொல்லக் கூடாது நல்லாத்தான் இருக்கா’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டார். என்ன இருந்தாலும் பேரனின் வாரிசை சுமந்து கொண்டிருக்கிறாளே!
வளைகாப்பை ஆதியே எதிர்பார்க்காத அளவிற்கு தடபுடல் செய்திருந்தார் கிருஷ்ணன். வந்தவர்கள் வாய்மேல் விரல் வைக்காத குறை தான்.
அறிவழகனும் ஆர்மி சர்வீஸ் முடித்து ஊர் திரும்பியிருந்தார். அவரும் காவேரியும் எல்லா வேலைகளையும் எடுத்துச் செய்ய,
நீண்ட நெடிய வருடங்களுக்குப் பிறகு சிரித்த முகமாய் வலம் வரும் கிருஷ்ணனைத் தான் அனைவரும் பார்த்திருந்தனர். மண்டபத்தில் எந்த இடத்திலும் அவர் சுபத்ராவின் அருகிலோ அல்லது நிமிர்ந்தோ கூட பார்த்திருக்கவில்லை. அதை ஆதியும் கவனித்திருந்தான். அவரைப் பொறுத்தவரை சுபத்ரா ஆதியின் அத்தை அவ்வளவு தான். பழைய ரணங்களைக் கீறிப் பார்க்க அவர் விரும்பவில்லை.
விசாலாட்சி கூட அவ்வப்போது கிருஷ்ணனை பார்த்திருந்தார். வெறுப்பை முகமூடியாய் மாட்டிக் கொண்டு பார்ப்பதற்கும் அதை சற்று தள்ளி வைத்து பார்ப்பதற்கும் தான் எவ்வளவு வித்தியாசம். முதன் முறையாக மகள் வாழ்க்கையை கெடுத்த குற்ற உணர்ச்சி அவரின் மனதை அரிக்கத் தொடக்கியிருந்து.
உழைத்து முறுக்கேறியிருந்த உடல் அவரை இளமையாகத் தான் காட்டிக் கொண்டிருந்தது. சொல்லப் போனால் கிருஷ்ணன் இளம் வயதில் மிக அழகு. அவரைக் கொண்டு பிறந்தாதாலோ என்னவோ சிவாவும் தந்தையைப் போலவே இருந்தாள். சுபத்ராவோ அந்த இடத்தில் இருக்கவே பெரும்பாடு பட்டார். இனி காலம் முழுவதும் இந்த உறவு முறை நெருஞ்சியாய் அவர் நெஞ்சைத் தைக்கும் என்பதில் கொஞ்சமும் ஐயமில்லை. அவர் இழந்த இழப்பு இப்போது பேரிழப்பாய் தோன்றியது. அது சிவாவின் விஷயமாக இருந்தாலும் சரி, கிருஷ்ணனின் விஷயமாக இருந்தாலும் சரி.
அனைவரும் வளையல் போட்டு முடித்திருக்க, சுபத்ராவோ மகளை ஏக்கமுடன் பார்த்திருந்தார். அவர் பார்வையின் பொருள் சிவாவிற்கு நன்றாக விளங்கியது. காவேரியும் சிவாவிடம் ஜாடை காட்டியிருந்தார்.
“மாமா உங்க சின்ன அத்தையை வந்து வளையல் போட சொல்லுங்க” என்றாள் ஏதோ போனால் போகிறதென்று.
“சுபாத்தை வந்து தீர்த்தாவுக்கு வளையல் போடுங்க” என்று ஆதியும் சொல்ல, ஒரு நிமிடம் தயங்கியவர், மகளை நோக்கி சென்றிருந்தார். தாய்மையின் பூரிப்பில் சந்தனம் குங்குமம் அப்பிய கன்னங்களுடன் இருந்தவளைப் பார்த்தவருக்கு மனமெல்லாம் நிறைவு நிரம்பி வழிய, ஒரு நடுக்கத்துடன் வளையலைப் போட்டு முடித்திருந்தார். சிவாவும் கலங்கிய கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டாள்.
“விசாகா யாரைத் தேடிட்டு இருக்க?” என்றார் ரேணுகா.
“ஏம்மா? உங்க அண்ணன் குடும்பமே இங்க இருக்கு. ஆனா உங்க அண்ணன் மகளை மட்டும் தான் பார்க்க முடியலை. அவ வரலையாம்மா?” என்றான் ஒரு எதிர்பார்ப்புடன்.
“அவ வரலைடா. எக்ஸாம் இருக்காம்” என்றார் ரேணுகா.
“அதான? நம்ம பிக்கப் ஆகுறது தான் யாருக்கும் பிடிக்காதே” என்று முனங்கிக் கொண்டே சென்றவனைப் பார்த்து சிரித்துக் கொண்டார் ரேணுகா.
கிருஷ்ணன் மகளுக்கு ஒவ்வொரு வகை உணவையும் ஊட்டிக் கொண்டிருக்க, ஆதியோ அவர்களை எப்போதும் போல் ஒரு ஏகாந்த உணர்வுடன் பார்த்திருந்தான்.
‘அப்பனை சொன்னா ஏன் வரிஞ்சுகட்டிகிட்டு சண்டைக்கு வந்தான்னு இப்பத்தான தெரியுது’ என்று விசாலாட்சி கூட மனதிற்குள் நினைத்துக் கொண்டார்.
“என்ன மாமா? மகளை ரொம்பத்தான் தாங்குறிங்க?” என்று எப்போதும் வம்பிழுக்கும் உறவுக்கார பெண் பகடி பேச,
“வருத்தம் இல்லாம எப்படி இருக்கும் சிவாம்மா. என் மாமன் மட்டும் அப்பவே சரின்னு சொல்லியிருந்தா?” என்று அவர் எப்போதும் போல் பெருமூச்சு விட, சிரித்த சிவாவோ,
“அப்பா, சித்தி எப்பவும் போல உங்களை ஓவரா சைட் அடிக்கிறாங்க. நீங்க தான் கொஞ்சம் கருணை காட்டினா என்னவாம்?” என்றாள் கிண்டலாய்.
“கழுதை பேசாம சாப்பிடுடா” என்று வந்த சிரிப்பை அடக்கியபடி மகளுக்கு ஊட்டிக் கொண்டிருந்தார்.
“சித்தி இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகலை. எங்கப்பா முரட்டு சிங்கிள் தான். என்ன சித்தப்பா தான் பாவம் பரவாயில்லையா?” என்றவளை முறைத்தான் ஆதி.
“ஹி..ஹி.. அது அவங்க எப்பவும் அப்படித்தான் வம்பிழுப்பாங்க மாமா. நானும் இப்படித்தான் பதில் சொல்லுவேன்” என்று அசடு வழிந்தாள்.
“தாராளமா மாப்பிள்ளை, நானா வேண்டாம்னு சொன்னேன்” என்று சிரித்தவரை அன்று ஆச்சர்யமாய் பார்த்திருந்தான் ஆதி.
“என்ன மாப்பிள்ளை” என்றார்.
“மாமா நிஜமாவே உங்களை இப்படி பார்க்க எப்படி இருக்குத் தெரியுமா? இத்தனை நாள் எங்க வச்சிருந்திங்க இந்த சிரிப்பை” என்றான்.
“என் குழந்தைக்கே ஒரு குழந்தை வரப் போகுதே மாப்பிள்ளை. அந்த சந்தோசம் தான். இதை சொன்னா புரியாது உங்களுக்கு. நாளைக்கு நீங்க இதே இடத்துல இருக்கும் போது தான் இந்த சந்தோஷத்தோட அளவு தெரியும்” என்றார்.
அவர்களைப் பார்த்த சுபத்ராவிற்கு ஒன்று மட்டும் தெளிவாய் புரிந்தது. அவர் வாழ்க்கையை தவறவிடவில்லை. சொர்க்கத்தையே தொலைத்திருக்கிறார் என்று. அவர்கள் கூட்டிற்குள் அவருக்கு எப்போதும் இடமில்லை என்பதும் புரிந்திருந்தது.
சிவாவின் அருகில் அமர்ந்திருந்த அமிர்தாவோ,
“அக்கா எங்கப்பா ஒரு நாள் கூட எங்களுக்கு இப்படியெல்லாம் ஊட்டினதே இல்லை.அம்மா தான் ஊட்டி விடுவாங்க” என்றாள். அவள் எதார்த்தமாகத் தான் சொன்னாள். ஆனால் அதைக் கேட்டிருந்த சிவாவிற்கு தான் ஒரு மாதிரியாகிப் போனது. சுபத்ரா இவர்களுக்கு உணவு ஊட்டும் போது அந்த வலியை உணர்ந்திருக்கிறாளே. அவளோ அர்த்தத்துடன் கிருஷ்ணனைப் பார்க்க,
“நீயும் சாப்பிடுமா” என்று அவர் அமிர்தாவுக்கும் ஊட்ட, அவளோ தயக்கமாய் சிவாவைப் பார்த்தாள்.
“எனக்கு அப்பான்னா, உனக்கும் அப்பா மாதிரி தான் அமிர்தா, வாங்கிக்கோ” என்று சொல்ல, அமிர்தாவோ அடுத்த நிமிடம் உணவை வாங்கிக் கொண்டாள்.
இதையெல்லாம் குடும்பமே கண்டும் காணாமல் இருக்க,
“அப்போ எங்களுக்கு” என்று தாரணியும், விக்கியும், ஜீவனும் கூட வந்திருந்தனர். பாரபட்சமின்றி அனைவருக்கும் ஊட்டியிருந்தார் கிருஷ்ணன்.
“இப்ப தெரியுதா பாட்டி, நீங்க எப்பேர்பட்ட ஒரு மனுஷனை இப்படி இந்த நிலைமைக்கு ஆக்கியிருக்கிங்கன்னு” என்ற ஆதியின் குரலில், அவர்களையே பார்த்துக் கொண்டிருந்த விசாலாட்சியின் தலை தன்னால் குனிந்திருந்தது.
“அண்ணா நீங்க சாப்பிடுங்க. இவங்களை நான் பார்த்துக்கிறேன்” என்று ரேணுகா சொல்ல,
“நாங்க சாப்பிட்டே முடிச்சுட்டோம் அத்தை” என்று கோரசாக சொல்லியிருந்தனர்.