“உளறல் இல்ல பாட்டி, உண்மை இது தான்” என்றான் சாவகாசமாய்.
“அதெப்படி சொத்துக்கு உடமைப்பட்டவங்க இத்தனை பேர் இருக்கும் போது இந்த பொண்ணு பேர்ல மாத்த முடியும்?” என்றார் மகாதேவன், அதிர்ச்சியை விழுங்கிக் கொண்டு.
“நான் தான் தெளிவா சொன்னேனே? என் சம்பந்தப்பட்ட, அதாவது என் பேர்ல இருந்த சொத்துக்கள், நான் வாங்கினது, என்னோட கம்பெனின்னு இதையெல்லாம் தான் சொன்னேன். ஏன் உங்களுக்குப் புரியலையா?” என்றான் நக்கலாய்.
“அப்போ விசாகனுக்கு?” என்றார் மேகலை வேகமாய்.
“விசாகனுக்கு பூர்வீகத்துல கொஞ்சம் இருக்குதான் இல்லைன்னு சொல்லலை. அவனுக்குத் தேவைன்னா அவன் தான் சம்பாரிச்சுக்கனும்” என்றான் ஆதி தம்பியை தீர்க்கமாய் பார்த்தபடி.
“அண்ணா சொல்றது உண்மை தான? அவரோட உழைப்பை நான் எப்படி பங்கு கேட்க முடியும்? அண்ணாவே குடுத்தாலும் நான் அதை வேண்டாம்னு தான் சொல்லுவேன்” என்ற விசாகனை முதன் முறையாக நல்ல விதமாக பார்த்திருந்தாள் சிவா.
“இப்படியெல்லாம் உடனே செய்யணும்னு என்ன அவசியம் வந்தது ஆதி?” என்றார் விசாலாட்சி கோபமாக.
“இப்படி கேட்டா எப்படி சொல்றது பாட்டி? இன்னொரு முறை நல்ல சோத்தைப் பார்த்திருக்கியான்னு என் பொண்டாட்டியைப் பார்த்து எவனும் நாக்கு மேல பல்லைப் போட்டு பேசிடக் கூடாது பாருங்க, அதான்” என்றான் மகாதேவனையும், விசாலாட்சியையும் முறைத்தபடி.
“வார்த்தையை பார்த்து பேசு ஆதி? மரியாதை ரொம்ப முக்கியம்” என்றார் மகாதேவன்.
“சரிங்க மாமா, நீங்க சொன்னா சரித்தான்” என்றவன்,
“தீர்த்தா சைன் பண்ணுன்னு சொன்னேன்” என்றான் அதட்டலாய். அவன் கோபத்தில் மிரண்டவள், சட்டென்று அதில் கையெழுத்திட,
“நானே குடுத்துக்கிறேன்” என்று செக்கை எடுத்துக் கொண்டவன், போன உடனே வர்றேன்மா” என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான். விசாகனிடம் எதையோ பார்வையால் உணர்த்திவிட்டுச் சென்றான்.
அவன் வெளியேறியது தான் தாமதம், பிடித்துக் கொண்டார் விசாலாட்சி.
“எத்தனை நாளாடி இப்படி கணக்கு போட்டு வச்சிருந்த? சும்மா சொல்லக் கூடாது பயங்கர கைக்காரி தான் நீ. வந்த கொஞ்ச நாளல்லயே என் பேரனை மயக்கி சொத்தையெல்லாம் உன் பேருக்கு எழுதி வாங்குற அளவுக்கு திறமை இருக்கு. நான் கூட உன்னை என்னமோன்னு நினைச்சுட்டேன்” என்றார் விசாலாட்சி.
“பார்த்து பேசுங்க! அவர் இப்படி பண்ணது எனக்கே தெரியாது. அதுவுமில்லாம புருஷனை மயக்கி சொத்தை எழுதி வாங்கனும்னு எனக்கென்ன அவசியம் வந்தது. இப்பவும் சொல்றேன், இந்த வீட்டுல இருந்து சும்மாவே கிடைச்சாலும் எனக்கு எதுவும் தேவையில்லை” என்றாள் பட்டென்று.
“நான் சொன்னப்ப எல்லாம் நீங்க நம்பலை அத்தை. இப்போ பார்த்திங்களா எங்க வந்து நிக்கிதுன்னு. இவ அப்பன் அவனால முடியாததை மகளை வச்சு சாதிக்கனும்னே இங்க அனுப்பி வச்சிருப்பான்” என்றார் மகாதேவன் நாக்கு கூசாமல்.
“ஏய்!” என்ற சிவா விரலை நீட்டி எச்சரித்திருந்தாள்.
“என் அப்பாவை பத்தி பேசுற தகுதியெல்லாம் உனக்கு கிடையாது. அவரைப் பத்தி இன்னொரு வார்த்தை பேசுன மரியாதை கெட்டிடும்” என்றாள் கோபமாய்.
“நான் சொன்னதுல என்ன தப்பு? ஆதியை மயக்கி அவன் சொத்தை உன் பேருக்கு மாத்தியாச்சு. நேத்து இருந்து விசாகனை மயக்க ஆரம்பிச்சிருக்க, இனி இவனுக்கு வர வேண்டிய கொஞ்ச நஞ்சமும் உன் பேருக்கு வந்துடும். எப்படி பார்த்தாலும் நீ நினைச்சு வந்தது நடந்திடுச்சு தான?” என்றார்.
“மரியாதையா பேசுங்க, யாரைப் பார்த்து என்ன வார்த்தை பேசுறிங்க? பொண்ணு வயசுல இருக்குற புள்ளகிட்ட பேசுற பேச்சா?” என்று அவரின் வார்த்தைகளை தாங்க முடியாமல் சுபத்ரா முதன் முறையாக வாயைத் திறந்திருக்க, மகாதேவனை பேசப் போன ரேணுகா அப்படியே வாயை மூடிக் கொண்டார்.
“என்னடி வாய் நீளுது?” என்று அவர் பல்லைக் கடிக்க,
“அவளைப் பத்தி பேச உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது” என்றார் சுபத்ரா.
“இப்பல்லாம் அடிக்கடி முதல் புருஷனுக்கு பிறந்த பொண்ணு மேல பாசம் பொங்குது உனக்கு. என்ன விஷயம்? ஏன் அவனை விட்டுட்டு இருக்க முடியலையா?” என்று மகாதேவனும் கோபத்தில் முதன் முறையாக தன் சுய ரூபத்தை அனைவருக்கும் பொதுவில் காட்டியிருந்தார்.
“மகாதேவா” என்ற விசாலாட்சி அதிர்ந்திருக்க,
“மன்னிச்சுக்கங்க அத்தை. இனி இவளை நம்ப முடியாது. இதோ இவளுக்கு சேர வேண்டிய சொத்தையும் இந்த பொண்ணு பேர்ல எழுதிக் குடுத்தாலும் குடுத்துடுவா. நீங்க இவ பங்கு சொத்தை என் பையன் பேருக்கு எழுதிக் குடுங்க” என்றார்.
“அது ஜீவனுக்கு தான் மகாதேவா, கோபப்பட்டு வார்த்தையை விடாத” என்றார் விசாலாட்சி.
“நீ எல்லாம் ஒரு அம்மாவா? இந்த ஆளு இந்த வயசுலயும் இப்படி எல்லார் முன்னாடியும் பச்சையா பேசிட்டு இருக்காரு. நீ இந்த ஆளை சமாதானப்படுத்திட்டு இருக்க?” என்று ஆத்திரம் தாங்காமல் கத்தியிருந்தார் சுபத்ரா.
“என்னடி வாய் நீளுது?” என்ற மகாதேவன் சுபத்ராவை ஓங்கி அறைந்திருக்க, இத்தனை நாள் அறைக்குள் நடந்து கொண்டிருந்த நாடகம் இன்று வெளிச்சத்திற்கு வந்திருந்தது.
“அப்படித்தான் பேசுவேன், என்ன பண்ணுவ?” என்று சுபா கேட்க, மீண்டும் அறையப் போனவரை விசாகன் தடுப்பதற்குள் அவரின் கையைப் பிடித்து தடுத்திருந்தாள் சிவா.
விசாலட்சியோ நெஞ்சில் கை வைத்து நிற்க,
“உன்னோட ஆம்பளைத் திமிரை எல்லாம் சரியான ஆம்பளைகிட்ட தான் காட்டனும். அதை விட்டு பொம்பளையை அடிச்சு வீரன்னு காட்டக் கூடாது” என்றாள் நிமிர்ந்த பார்வையுடன்.
“என் பொண்டாட்டியை அடிப்பேன் என்னமும் செய்வேன்? அதைக் கேட்க நீ யாரு முதல்ல” என்றார் மகாதேவன்.
“யோவ் எத்தனை தடவை சொல்றது நான் யாருன்னு? ஏன் உனக்கு நான் யாருன்னு தெரியாதா?” என்றாள் நக்கலாய்.
“ஏன் தெரியாம? இதோ இவ வயசுக்கும் வேகத்துக்கும் ஒரு கையாலாகாதவன் கூட ஓடிப் போய், வயித்துல வாங்கி, அதையும் பெத்து வேண்டாம்னு தூக்கிப் போட்டுட்டு வந்த எச்சத்தோட சொச்சம் தான நீ” என்று மகாதேவன் சொல்லி முடித்தது தான் தாமதம் அவரை அறைய கையை ஓங்கியிருந்தாள் சிவ தீர்த்தா. பல்லைக் கடித்து பொறுமை காத்தவள்,
“நானும் ஒரு வயசான ஆளை கை நீட்டக் கூடாதுன்னு பொறுமையா போனா உன் இஷட்டத்துக்கு பேசிட்டு போற? என் அப்பாவை பத்தி பேச உனக்கென்ன தகுதியிருக்கு? இல்ல இவங்களுக்கு தான் என்ன தகுதியிருக்கு?” என்றாள் விசாலாட்சியை பார்த்தவாறு.