அத்யாயம் 21:

உள்ளுக்குள் தோன்றிய அத்தனை கோபத்தையும் அடக்கிக் கொண்டிருந்தவளுக்கு, வந்த அழுகையே அடக்குவதும் பெரும்பாடாய் இருந்தது.

“போதும் இதோட நிறுத்திக்கங்க” என்றாள் பல்லைக் கடித்தபடி.

“எதுக்குடி நிறுத்தனும்? அதான் ஊரே பேசி சிரிக்குதே? உன் வீட்டு லட்சணத்தையும், உன் அப்பனோட லட்சணத்தையும்” என்றார் விசாலாட்சி.

பொறுமையை இழந்தவள்,

“இவர் உங்க புருஷனோட தம்பி தான?” என்றாள் மணிமேகலையைப் பார்த்து.

“ஏன் தெரியாதா உனக்கு?” என்றார் மேகலை.

“உங்க புருஷன் இப்போ உயிரோட இல்லை. அவர் தம்பி இந்த வீட்ல தான் இருக்கார். இதோ இப்படி தினமும் அவர் கூட சகஜமா தான் பேசிட்டு இருக்கீங்க? அப்போ நீங்க இவரை மயக்க ட்ரை பண்றிங்களா?” என்றாள் நிதானமாய்.

அவளின் வார்த்தைகளில் அதிர்ந்த ரேணுகா,”சிவா வேண்டாம்மா” என்று அவளைத் தடுத்தார்.

“கையை விடுங்க ரேணுமா? இவ்வளவு நேரம் எப்படி கேவலமா பேசுனாங்க. இப்போ பதில் சொல்லட்டும்” என்றாள் உக்கிர பார்வையுடன்.

“சொல்லுங்க ட்ரை பண்றிங்களா?” என்றாள் ஆங்காரமாய்.

“ஏய்? யாரைப் பார்த்து என்ன பேச்சு பேசுற?” என்றார் விசாலட்சி கோபத்தில்.

“இருங்க இதுக்கே மிரண்டா எப்படி?” என்றவள்,

“உங்க பொண்ணு தாரணி கூட தான் கல்யாணம் ஆன என் புருஷன் கூட சகஜமா பேசுறா, கூட போறா வர்றா. ஏன்? மாமா மாமான்னு மூச்சுக்கு முன்னூறு தடவை கூப்பிடுறா?அப்போ அவ என் புருஷனை மயக்க ட்ரை பண்றாளா?” என்றாள் மீண்டும் நிதானமாய்.

விசாகனோ மனதிற்குள் சபாஷ் போட்டுக் கொண்டான்.

“அண்ணி இவ வாய்க்கு வந்ததெல்லாம் பேசிட்டு இருக்கா, நீங்க கேட்டுட்டு இருக்கீங்க?” என்றார் மேகலை.

“நீங்க பேசுனதை எல்லாம் எந்த கணக்குல சேர்க்குறது மேகலை” என்றார் ரேணுகா.

“ஏய்? என்ன வாய் நீளுது?வாயை அடக்கிட்டு இருக்குறதா இருந்தா இரு. இல்லைன்னா பெட்டியைக் கட்டிட்டு கிளம்பிட்டே இரு. கூடிய சீக்கிரம் ஆதியே வெளிய அனுப்புவான்” என்றார் மகாதேவன்.

“யோவ் போயா” என்றவள்,சட்டையே செய்யாமல் படியேற, விசாகனோ வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தான்.

“என்னை இவ்வளவு அசிங்கமா கேள்வி கேட்டுட்டு போறா? நீங்க அமைதியா இருக்கிங்கம்மா?” என்றார் மேகலை கண் கலங்கியபடி.

“பொறுமையா இரு மேகலை, பார்த்துக்கலாம்” என்ற விசாலாட்சி,

“எப்படி பேசுனாலும் அசர மாட்டேங்குறா. ரோஷப்பட்டு அவளே வீட்டை விட்டு கிளம்புவான்னு பார்த்தா, இருந்து சமாளிக்கிறாளே” என்று முனங்கினார் விசாலாட்சி.

“என்னையவா மரியாதை இல்லாம பேசிட்டு போற? சின்னப் பொண்ணுன்னு நினைச்சது தப்பா போச்சு” என்ற ஆத்திரத்துடன் இருந்தார் மகா தேவன்.

அறைக்குள் சென்ற சிவ தீர்த்தாவிற்கு அதுவரை இருந்த தைரியம் எல்லாம் வடிந்து போய் அழுகையாய் வந்தது. மனமெல்லாம் தாங்க முடியாமல் வலித்தது.

கிருஷ்ணனுக்கு போன் செய்து அடக்க மாட்டாமல் அழுது தீர்த்திருந்தாள்.  போனில் மகளின் அழுகையைக் கேட்டவருக்கோ மனம் ஒரு நிலையில் இல்லை.

“சிவா, யம்மாடி என்னடா ஆச்சு? ஏன்டா இப்படி அழற?” என்றார் பரிதவிப்பான குரலில்.

“நான் தான் இந்த கல்யாணம் வேண்டாம்னு சொன்னேன், கேட்டிங்களாப்பா? இங்க இருக்குற யாருக்குக்கும் மனுஷத் தன்மையே இல்லை. வீடாப்பா இது? எப்பப் பார்த்தாலும் மயக்குறியா? வச்சிருக்கியா? அவன்கூட போன இவன்கூட போனன்னு? இதை விட்டா இவங்களுக்கு வேற எதுவுமே தெரியாதாப்பா? ஒன்னு உங்களை பேசுறாங்க? இல்லைன்னா என் கேரக்டரை தப்பா பேசுறாங்க. ஒரே நெகட்டிவிட்டி. நானும் எத்தனை நாளைக்கு தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது, என்னால முடியலைப்பா” என்று தன் ஆதங்கத்தை எல்லாம் கொட்டித் தீர்த்திருந்தாள்.

“முதல்ல அழுகையை நிறுத்திட்டு கண்ணைத் துடைமா” என்றார் ஆதுரமாய்.

“இப்ப என்ன? நீங்க எனக்கு தான் அட்வைஸ் பண்ணுவிங்க. நம்ம வீட்ல இருக்குற வரைக்கும் நிம்மதியா இருந்தேன். இங்க ஏன்டா இருக்கேன்னு இருக்கு” என்றாள் கடுப்புடன்.

“என் பொண்ணுக்கு அழுகை நின்னுடுச்சா?” என்றார்.

“அது உங்க குரலை கேட்டாலே எனக்கு எல்லா பிரச்சனையும் சரி ஆகிடும்” என்றாள் இழையோடிய குரலில்.

அவளின் வார்த்தைகளைக் கேட்டு கண் கலங்கிய கிருஷ்ணனோ,

“எந்த வகையிலையும் உன்கிட்ட அவங்க நினைச்சது எதுவும் எடுபடலை. அந்த கோபத்துல அவங்க எடுத்திருக்குற கடைசி ஆயுதம் தான் கேரக்டரை தப்பா பேசுறது. நீ இதுல எமோஷ்னல் ஆகி, உடனே கிளம்பி வெளிய போய்டுவன்னு நினைச்சிருப்பாங்க. காலங்காலமா அதைத் தான பண்றாங்க சிவாம்மா” என்றார் பொறுமையாய்.

“என்னை மட்டுமில்லை, உங்களையும் தான் பேசுனாங்க” என்றாள் பட்டென்று.

“புதுசாவா பேசுறாங்க. பேசுற வரைக்கும் பேசிட்டு போகட்டும். கிருஷ்ணன் பொண்ணை தினமும் அந்த வீட்ல பார்க்குறதே அவங்களுக்கு தண்டனைன்னு சொன்னேன்லமா. அந்த ஆத்திரம் தான் இப்போ வார்த்தையா வெளிய வருது. இதுக்கு போய் சின்னப் பிள்ளை மாதிரி அழுதுகிட்டு” என்றார்.

“நான் அவங்க முன்னாடி ஒன்னும் அழலை. நல்லா கேட்டுட்டு தான் வந்தேன்” என்று தான் பேசிய அனைத்தையும் கூறியிருந்தாள்.

“அவங்க தான் அப்படி பேசுறாங்கன்னா, நீயேன்டா இப்படி பேசி வச்சிருக்க. என்ன இருந்தாலும் வயசுல பெரியவங்க. உனக்கு அவங்க பெரியம்மா வேற” என்றார்.

“நான் அம்மாவே இல்லைங்கிறேன், இதுல பெரியம்மா வேற? போங்கப்பா அங்கிட்டு. நீங்க புத்தராவே இருங்க. என்னால அப்படி இருக்க முடியாது. என்கிட்ட எப்படி நடந்துக்கிறாங்களோ, நானும் அப்படித்தான் நடந்துப்பேன்” என்றாள் பட்டென்று.

“அப்படியா? அப்போ மாப்பிள்ளை உன்கிட்ட நடந்துக்கிற மாதிரி தான் நீ நடந்துக்கிறியா சிவாம்மா” என்றார்.

அவளோ அமைதி காக்க,

“இப்பத் தெரியுதா சிவாம்மா,உரிமை இருக்குற மாதிரி நீ நடிக்கிறதுக்கும், நிஜமாவே உரிமையோட நீ நடந்துக்கிறதுக்கும் நிறைய வித்யாசம் இருக்குடா. அதை யோசி” என்றவர் அழைப்பை துண்டித்த பிறகும், வெகு நேரம் அப்படியே இருந்தாள் சிவா. ஆதியும் இதைத்தானே சொல்லியிருந்தான்.

‘இப்ப எதுக்கு சம்மந்தம் இல்லாம அப்பா உரிமை அது இதுன்னு பேசிட்டு வைக்கிறாரு. எதையோ சுத்தி வளைச்சு சொல்ல வர்றாரு. ஆனா, அது என்னன்னு தான் புரியலை’ என்றவளுக்கு மண்டை காய்ந்தது.

‘ச்ச்ச..!” என்று சலித்துக் கொண்டவள்,

“சிவா இந்த வீட்ல இருக்குறவங்களை மட்டுமில்லை இந்த வீட்டையே மாத்தணும் போல இருக்கே. என்ன பண்ணலாம்? ” என்று யோசித்தபடியே குளித்து முடித்து வந்தவள், புடவையைக் கட்டிக் கொண்டு கீழே வந்தாள்.

இதுவும் விசாலாட்சியின் ஆர்டர் தான்.

“இதென்ன இப்படி உடுப்பை போட்டுக்கிட்டு இருக்க? இங்க இருக்குற வரைக்கும் ஒழுக்கமா புடவையைத் தான் கட்டனும்” என்று முன் தினம் அதிகாரமாய் கூறியிருந்தது ஞாபகத்திற்கு வந்தது.

அவள் கவலைப்பட்டுக் கொண்டிருப்பாள் என்று நினைத்துக் கொண்டிருந்த ரேணுகா, அவள் குளித்து முடித்து சிரித்த முகமாய் வருவதைக் கண்டு ஆச்சர்யப்பட்டார்.

“என்ன ரேணுமா அப்படி பார்க்குறிங்க?” என்றாள் சிரிப்புடன்.

“நீ வருத்தப்பட்டுகிட்டு இருப்பன்னு நினைச்சேன்டா” என்றார்.

“நான் ஏன் வருத்தப்படனும் ரேணுமா? என்னை வருத்தப்படுத்தனும் அப்படின்றது தான அவங்க நோக்கம். அதை எப்படி நான் நிறைவேற விடுவேன். நான் சந்தோஷமா இருந்தா அவங்களால நிம்மதியா இருக்க முடியாது. அப்போ நான் சந்தோஷமா இருந்தாலே போதும். அவங்க நிம்மதி தன்னால போய்டும்” என்று சிரித்தவள்,

“அது மட்டுமில்லாம இப்படியே நெகட்டிவிட்டியோட போனா, நானும் அவங்களை மாதிரி மாறிடுவேனோன்னு இருக்கு. நாம எப்படி இருக்கணும்னு நாம தான ரேணுமா முடிவு பண்ணனும்.இப்படியே போனா நான் சிரிக்கிறதையே மறந்திடுவேன் போல” என்றாள் கண் சிமிட்டி.

“எப்படிடா இப்படி ஒரு தெளிவு?” என்றார் ரேணுகா.

“எல்லாம் என் அப்பா தான் ரேணுமா. அவர்கிட்ட பேசுனாலே போதும், என்னோட எல்லா குழப்பமும் தீர்ந்துடும்” என்றவள், சுபத்ரா வருவதைக் கண்டதும்,

“என் அப்பா தான் பெஸ்ட் ரேணுமா. அவரோட அருமை மத்தவங்களுக்கு புரியாம இருக்கலாம். ஆனா பெத்த பொண்ணு எனக்கு புரியாம இருக்குமா?” என்றாள் வேண்டுமென்றே.

“எல்லாருக்கும் அப்படி பெஸ்ட் அப்பா கிடைக்குறது இல்லை அண்ணி. கிடைச்சவங்க கொண்டாடுறாங்க, கிடைக்காதவங்க திண்டாடுறாங்க” என்ற சுபத்ரா சமையலறைக்குள் சென்று விட,

சிவா எதையோ வேகமாய் சொல்ல போக,

“சிவா வேண்டாம்டா, பாவம்” என்றார் ரேணுகா.