அத்யாயம் 18:

நாட்கள் யாருக்காகவும் காத்திருக்காமல் அதன் போக்கில் உருண்டோடிக் கொண்டிருக்க, சிவ தீர்த்தாவிற்கும் கல்லூரி திறந்து, அவளும் கல்லூரி சென்று வந்து கொண்டிருந்தாள்.

அந்த வீடோ, வீட்டில் இருப்பவர்களின் குணமோ எதுவும் மாறியிருக்கவில்லை. ஆனால் இப்போதெல்லாம் ரேணுகாவிற்கும், சிவாவிற்கும் இடையிலான உறவு பிணைப்பு மேலும் வலுவாகியிருந்தது. சிவாவை விட ரேணுகா தான் அவளை அதிகம் எதிர்பார்த்தார்.

அவளை காலையில் கல்லூரியில் சென்று விடுவதும், மாலையில் அழைத்து வருவதும் ஆதி கேசவன் தான். சிவ தீர்த்தா எவ்வளவு மறுத்துப் பார்த்தாலும் அவளை பேருந்தில் செல்ல அனுமதிக்கவில்லை அவன். ஆனால் அவளிடத்தில் நன்றாக இருந்தவனிடத்தில் இப்போதெல்லாம் கொஞ்சம் ஒதுக்கம் தென்படுவதைப் போல் தெரிந்தது சிவ தீர்த்தாவிற்கு.

அவள் விலகிப் போனாலும் இழுத்து வைத்து பேசுபவன், இப்போது வலிய வந்து அவளிடம் எதுவும் பேசுவதில்லை. அனைவரின் முன்பாக இணக்கமாக பேசுபவன் அறைக்குள் சென்றால் அமைதியாகிவிடுவான். அவளுக்கு காரணமும் புரியவில்லை. ஆனால் அவளுக்கு செய்யும் கடமைகளில் எதையும் குறை வைக்கவில்லை. அவளின் கண் பார்த்தே அவளுக்குத் தேவையான அனைத்தையும் செய்வதில் கிருஷ்ணனையே மிஞ்சியிருந்தான்.

அவள் தான் காரணம் தெரியாமல் உள்ளுக்குள் மறுகிக் கொண்டிருந்தாள். ஏனோ அவனின் அமைதியும் விலகலும் அவளை மனதளவில் பாதித்திருந்தது.

சமையல் அறையில் ஏதோ யோசனையுடனே சமைத்துக் கொண்டிருந்தவளை ரேணுகா புரியாமல் பார்த்திருந்தார்.

“என்னாச்சு சிவா? ஏன் முகம் ஒரு மாதிரி இருக்கு?” என்றார் அக்கறையுடன்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லை ரேணுமா” என்றவளின் கைகள் தன் போக்கில் வேலை செய்து கொண்டிருக்க,

“நீ விலகு சிவா. மிச்சத்தை நான் பார்த்துக்கிறேன். நீ போய் கிளம்பு. உனக்கு நேரமாகுது. வீட்ல இருக்குற அன்னைக்கு இதெல்லாம் செஞ்சா பத்தாதா? நான் பார்த்துக்கிறேன்னு சொன்னாலும் கேட்குறது இல்லை” என்றவர் அவளை வம்படியாய் தடுத்து நிறுத்தியிருந்தார்.

“எல்லாம் முடிஞ்சது ரேணுமா”என்றவள் எதுவும் பேசாமல் சென்றிருக்க,

“என்னாச்சு இந்த பொண்ணுக்கு?” என்று யோசனையுடன் பார்த்திருந்தார் ரேணுகா.

அறைக்குள் வந்தவளை நிமிர்ந்தும் பார்க்கவில்லை ஆதி கேசவன். ஏதோ முக்கியமான வேலையில் இருந்திருப்பான் போலும்.

“காலையிலயே அப்படி என்ன முக்கியமான வேலை?” என்று அவனை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே கிளம்பிக் கொண்டிருந்தாள்.

அவள் தன்னை பார்ப்பது தெரிந்திருந்தாலும், ஆதியோ நிமிர்ந்தும் பார்த்தானில்லை.

பொறுத்துப் பார்த்தவள், அங்கிருந்த ரூம் ஸ்ப்ரே பாட்டிலை கீழே தள்ளிவிட, சத்தத்தில் நிமிர்ந்து பார்த்தவன், எதுவும் பேசாமல் மீண்டும் தன் வேலையைப் பார்க்க, அவளுக்கோ எரிச்சலாய் வந்தது.

‘பேசாம போய் சட்டையைப் பிடிச்சு, ஏன் இப்படி அமைதியா இருக்கிங்கன்னு கேட்டா என்ன?’ என்று கூட தோன்றியது அவளுக்கு. அப்படி செய்ய எண்ணிய நிமிடமே ஒரு தயக்கமும் வந்து ஒட்டிக் கொண்டது. அவள் அவனையே பார்த்துக் கொண்டு நிற்பதைக் கண்டவன், மெதுவாய் எழுந்து வந்து அவள் கீழே போட்ட பொருளை எடுத்து அதன் இருப்பிடத்தில் வைத்தான்.

“இப்ப என்ன பிரச்சனை உனக்கு?கிளம்பாம ஏன் இப்படி பார்த்துட்டே நிக்கிற?” என்றான் ஆதி.

அவளோ அவனை முறைக்க,

“இந்த அறைக்குள்ள நீ நடிக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை தீர்த்தா. நீ நீயாவே இரு. எதுக்கு போட்டு ரொம்ப வருத்திக்கிற? இந்த வீட்ல இருக்குறவங்க பேசுனதுக்காக வீட்ல உரிமையை நிலைநாட்டுற மாதிரி என்கிட்டயும் அப்படி நடந்துக்கணும்னு எந்த அவசியமும் இல்லை. நீ சொன்ன மாதிரி தான், உரிமையும் அன்பும் கூட உள்ளார்ந்து வரணும். மத்தவங்களை வெறுப்பேத்த வரக் கூடாது” என்றான் ஆதி பட்டென்று.

‘என்னைப் பார்த்தா நடிக்கிற மாதிரியா இருக்கு?’ என்ற ஆவேசத்துடன் அவள் பார்க்க,

“நீ நடிக்கிறன்னு நான் சொல்ல வேண்டிய அவசியமே இல்லையே?அது உண்மைதான்னு உனக்கே தெரியும். வீட்ல இருக்குற மத்த உறவுகளும் கணவன் மனைவி உறவும் ஒன்னு கிடயாது. இக்கட்டான சூழ்நிலையில தாலி கட்டியிருந்தாலும் முழுமனசோட தான் உன்னை இந்த வீட்டுக்கோ கூட்டிட்டு வந்தேன். அந்த நேரத்துல ரெண்டு குடும்பத்து பிரச்சனையெல்லாம் என் கண்ணுக்குத் தெரியலை. உன்னோட வலியும் நியாயமும் புரிஞ்சதால தான் இப்ப வரைக்கும் அமைதியாவும் இருக்கேன். உரிமையோட விடாம நான் மட்டும் இழுத்துப் பிடிச்சு என்ன ஆகப் போகுது?” என்றவன் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை.

அவனின் அமைதிக்காக காரணமே இப்போது தான் அவளுக்கு பிடிபட்டது.

‘வீட்ல நடந்த பிரச்சனையை எல்லாம் அப்போ இவங்ககிட்ட யார் சொல்லியிருப்பா? அதனால தான் நான் மாறியிருக்கேன்னு நினைச்சுட்டு இருக்காரோ?’ என்று அவள் யோசிக்க,

‘உண்மை அது தான சிவா. அந்த கிழவி மட்டும் அன்னைக்கு அப்படி பேசலைன்னா இன்னும் நீ ஓரமா ஒதுங்கி தான போயிருப்ப’ என்றது மனசாட்சி.

‘அன்னைக்கு நடந்த பிரச்சனை மட்டும் தான் தெரியுமா? இல்லை நடந்த எல்லா பிரச்சனையும் தெரியுமான்னு வேற தெரியலையே?’ என்றவளின் கண்களில் அப்பட்டமாக பயம் வந்து போயிருந்தது.

அனைத்தையும் தெரிந்து அமைதியாய் இருக்கும் ரகம் அவனில்லையே என்ற எண்ணம் தான் அவளுக்கு.

“நான் கிளம்பனும்” என்றான் ஆதி கடுப்பாக. அப்போது தான் கண்ணாடி முன் வெகு நேரம் நின்றிருப்பது புரிந்தது அவளுக்கு. அவனை ஒரு முறை முறைத்தபடியே கிளம்பி கீழே சென்றிருந்தாள் சிவா.

“இப்பவாவது வாயைத் திறந்து பேசுறாளா பாரு? அழுத்தம் பிடிச்சவ?” என்று  உள்ளுக்குள் உறுமிக் கொண்டிருந்தான் ஆதி கேசவன்.

“என்ன ரேணுமா இன்னும் அவங்களைக் காணோம். எனக்கு டைம் ஆகுது” என்று எரிச்சலுடன் பேசிக் கொண்டிருந்தாள்.

“இன்னைக்கு என்னாச்சு சிவா உனக்கு?” என்ற ரேணுகா தான் பாவமாய் பார்த்திருந்தாள்.

தாரணியும் கல்லூரி செல்ல கிளம்பி சாப்பிட அமர்ந்திருக்க, அமிர்தாவும் ஜீவனும் கூட பள்ளி செல்ல கிளம்பி, சாப்பிட அமர்ந்திருந்தனர்.

“தீர்த்தா  கிளம்பியாச்சா?” என்றபடி வந்தவனைத் தான் இமைக்காமல் பார்த்திருந்தாள். இத்தனை நாள் வேஷ்ட்டி சட்டையில் பார்த்தவனை இன்று முதன் முறையாக பேண்ட் ஷேர்ட்டில் பார்க்கிறாள். பிளாக் பேண்ட், வொயிட் ஷேர்ட் அவனுக்கு கச்சிதமாய் பொருந்தியிருக்க, நடையின் வேகம் அவனுக்கும் நேரமாகிவிட்டதை உணர்த்தியது.