“என்னாச்சு?” என்றான் ஒன்றும் தெரியாதவனைப் போல். அவள் கீழே இறங்க, தானும் இறங்கியவன்,அவளின் சொருகி இருந்த முந்தானையை எடுத்து வேர்வையை துடைத்துக் கொள்ள, அவளோ அவனை முறைத்தாள்.

“ஹேய் கர்சீப் இல்லம்மா” என்றான்.

“நம்பிட்டேன்” என்பதைப் போல் பார்த்தவளுக்கும் சிரிப்பு வர, அது ஆதியின் கண்களிலும் பட்டிருந்தது.

“இப்படி ஒரு சில்வண்டு பின்னாடி சுத்துவேன்னு நினைச்சு கூட பார்க்கலை” என்றவன் அவளின் முந்தியை தானே சொருகிவிட, அவனின் விரல் தீண்டலில் கூசி சிலிர்த்தாள்.

“நேத்து வரைக்கும் நீ பார்க்கலையேன்னு கவலைப் பட்டேன்டி. இப்போ இத்தனை நாள் இவளை நான் ஏன் பார்க்காம விட்டேன்னு கவலைப் படுறேன்டி” என்றான் ஒரு மார்க்கமான குரலில்.

அப்போது அவனுக்கு அலைபேசி அழைப்பு வர, எடுத்துப் பேசியவன்,

“தீர்த்தா எனக்கு தோப்பு வரைக்கும் ஒரு வேலை இருக்கு.  பாட்டியும் மாமாவும் என்னமோ பேசணும்னு வந்திருக்காங்களாம். நான் போய் பார்த்துட்டு வந்திடுறேன். நீ இங்கயே இரு. நான் வந்து கூட்டிட்டு போறேன்” என்றவன் கிளம்பிவிட்டான்.

‘எதுக்கு இப்போ இவரை பேசக் கூப்பிடுறாங்க. அதுவும் வீட்ல இல்லாம தோப்புல’ என்று யோசித்திருந்தாள் சிவ தீர்த்தா.

சற்று நேரம் கிருஷ்ணனுடன் சேர்ந்து சுற்றிக் கொண்டிருந்தவளைத் தேடி வந்தாள் கவிதா.

“ஹேய் கவி என்ன இந்த பக்கம்?” என்றாள் சிவா.

“ஆதி அண்ணாவைப் பார்த்தேன். அவர் தான் நீ இங்க இருக்குறதா சொன்னார். அதான்டி வந்தேன்” என்றாள்.

“அது சரி” என்றவர்கள் போன கதை வந்த கதையெல்லாம் பேசிக் கொண்டிருக்க,

“சிவா ஒன்னு கேட்பேன் கோவிச்சுக்க மாட்டியே?” என்றாள் கவி பீடிகையுடன்.

“சொல்லு கவி” என்றாள்.

“இல்ல, அந்த ஆத்தோர மாந்தோப்புக்கு போகலாமா? காய் எல்லாம் நல்லா பழுத்திருக்கும்டி. வாயேன் போய் பார்த்துட்டு வருவோம்” என்றாள்.

“அடிங்க..! நான் மாட்டேன்ப்பா..! ஓனர் பார்த்து விரட்டுறதுக்கா?” என்றாள் சிவா.

“கூறு கெட்டவளே! இப்போ அந்த தோப்புக்கு ஓனரே நீதான்டி. அதான் அன்னைக்கே ஆதி அண்ணா தெளிவா சொன்னார்ல. தோப்பை வாங்கி மூணு மாசம் ஆச்சுன்னு” என்றாள் கவி.

“ஆமாம்ல” என்ற சிவா,

“இருந்தாலும் வேணாம்” என்றாள் பிடிவாதமாய்.

“நீயெல்லாம் பிரண்டுன்னு வெளிய சொல்லிக்காத. நான் என்ன உன் சொத்தையா எழுதிக் கேட்டேன். ஒரு மாம்பழத்துக்கு ஆக மாட்டேனா நானு” என்று கவி வராத கண்ணீரைத் துடைக்க,

“ஓவரா நடிக்காதடி, வந்து தொலையறேன்” என்றவள் கிருஷ்ணனிடம் கூறிவிட்டு சென்று விட்டாள்.

“இப்படி நம்ம வந்து எத்தனை நாள் ஆச்சு, இல்லையா கவி?” என்று பேசிக் கொண்டே வந்த சிவாவிற்கு இத்தனை நாள் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடந்ததுக்கு இன்று ஏனோ சற்று ஆசுவாசமாய் இருந்ததைப் போல் உணர்ந்தாள்.

கவி கூறியதைப் போல் மரம் முழுவதும் முகம் சிவந்த பழங்களாய் இருக்க,

“கலரே செம்மையா இருக்குடி” என்றாள் கவி.

“உண்டி வில் இருக்கா? கல் எடுத்து அடிப்போம்” என்றாள் சிவா.

“உன்கூட தான வந்தேன். என்கிட்ட எங்க இருக்கு?” என்றாள் கவி.

“அப்போ உன் பாசக்கார அண்ணன்கிட்ட கேளு. அவரே கூடை கூடையா பிடுங்கித் தருவாரு. இப்போ ஆளை விடு. கைக்கு எட்டுற தூரத்துல இருக்குறதை வேணும்னா பிடுங்கிக்கோ” என்றாள் சிவா.

“எட்டுற மாதிரி எங்கடி இருக்கு? ஒரு மாம்பழத்துக்கூட “ என்று கவி ஆரம்பிக்க,

“அம்மா தாயே நிறுத்து” என்று கடுப்புடன் சொன்னவள்,

“கவி நான் புடவை கட்டியிருக்கேன். இதோட எப்படி ஏற முடியும்?” என்றாள்.

“தாவணி கட்டியே அசால்ட்டா ஏறியிருக்க? இதெல்லாம் ஒரு விஷயமா சிவா” என்றாள்.

“எல்லாம் என் நேரம்” என்று தலையில் அடித்தவள், பார்த்து மெதுவாய் ஏறி இருந்தாள். எப்போதும் போல் கொத்து கொத்தாய் அவள் பிடுங்கிப் போட, கவியோ பக்குவமாய் கீழிருந்து வாங்கிக் கொண்டிருந்தாள்.

மாம்பழத்தை பிடிங்கிக் கொண்டிருந்தவளின் கண்களில் சற்று தள்ளி பேசிக் கொண்டிருந்த ஆதி கேசவன் கண்ணில் பட, கை அப்படியே அந்தரத்தில் நின்றது. அவனின் எதிரில் மகாதேவனும், விசாலாட்சியும் நின்று எதையோ தீவிரமாய் பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது. ஆதியின் முகமோ இறுகிப் போயிருக்க, மகாதேவனின் முகமோ தொங்கிப் போயிருந்தது.

‘இவங்க தோப்புக்குத் தான போறேன்னு சொன்னாங்க. இங்க வந்திருக்காங்க’ என்று யோசிக்க,

‘தோப்புன்னா அது தென்னந்தோப்பா தான் இருக்கனுமா? ஏன் மாந்தோப்பா இருக்கக் கூடாதா?’ என்று உள் மனம் நக்கலடித்தது.

“அடியே கவி” என்று அவளை அழைத்தவள், தவிப்பாய் பார்க்க,

“என்னடி?”

“அவங்க இங்க தான் இருக்காங்க.என்னை மட்டும் இப்படி பார்த்தாங்க, மானம் போய்டும். ஏற்கனவே வீராப்பா பேசிட்டு போயிட்டு, மறுபடியும் இந்த தோப்புக்குள்ள பார்த்தா என்ன நினைக்க மாட்டாங்க” என்றாள் பாவமாய்.

“உன் புருஷன் தான. ஒன்னும் நினைக்க மாட்டாரு. பேசாம பிடுங்கிப் போடுற வழியைப் பாருடி. உன்னை வச்சுகிட்டு ஒரு மாம்பழம் பிடுங்க முடியுதா?” என்றாள் ஒரு பழத்தை சாப்பிட்டுக் கொண்டே.

“ஏன் பேச மாட்ட, உன்னை கீழ வந்து வச்சுக்கிறேன்” என்று அவளிடம்  பேசிவிட்டு நிமிர்ந்து பார்க்க, அவனைக் காணவில்லை.

“கவி போய்ட்டாங்க போலடி” என்று குனிந்து பார்க்க, அவனோ கீழிருந்து அவளைத் தான் முறைத்திருந்தான். கவியோ பாதி சாப்பிட்ட மாம்பழத்துடன் பாவமாய் பார்த்திருக்க,

‘சிவா, அவங்க கீழ இருக்காங்க. நீ மேல இருக்க. அதுவும் புடவையில’ என்று தோன்றியவுடன், சட்டென்று கிளையில் அமர்ந்துவிட்டாள்.

“அண்ணா அவ வர மாட்டேன்னு தான் சொன்னா. நான் தான் வம்பா கூட்டிட்டு வந்தேன். நீங்க இங்க இருக்கிங்கன்னு எங்களுக்கு தெரியாது” என்றாள் கவி பாவமாய்.

“ தெரிஞ்சிருந்தா இல்லாதப்ப வந்திருப்பிங்களா? மாம்பழம் வேணும்னா என்கிட்ட சொல்றதுக்கு என்ன? இப்படி மரம் ஏறி கீழ விழுந்து வச்சு ஏதாவது ஒண்ணுன்னா என்ன பண்றது?” என்றான் கோபமாய்.

“அதெல்லாம் விழ மாட்டேன்னு சொல்லு கவி” என்றாள் எங்கோ பார்த்துக் கொண்டு.

“இவளை” என்று அவன் பல்லைக் கடிக்க,

“நான் தான் கூட்டிட்டு வந்தேன்ண்ணா. எனக்காக தான் வந்தா” என்றாள் கவி.

“இனியொரு தடவை எந்த மரத்துலையாவது இவளைப் பார்த்தேன்” என்று கை நீட்டி எச்சரித்திருந்தான்.

“கவி நான் எங்க வீட்டு மரத்துல உனக்கு பிடுங்கித் தரேன்டி” என்றாள் வீராப்பாய்.

“அடிங்க..! அப்போ இது யார் வீட்டு மரம்? நான் என்ன சொல்லிட்டு இருக்கேன். நீ என்ன பேசிட்டு இருக்க?” என்றான்.

“அண்ணா இந்த தோப்புல அதுவும் இந்த மரத்துப் பழம் நிஜமாவே நல்லா இருக்கும். காய் கூட டேஸ்ட்டா இருக்கும். வருஷா வருஷம் நாங்க இங்க வந்து ஆட்டையப் போடுறது வழக்கம். நீங்க வாங்கினது எங்களுக்கு நிஜமாவே தெரியாது.அன்னைக்கு தெரியாம தான் வந்தோம்” என்றாள் கவி பாவமாய். அவள் பேச்சில் ஆதிக்கு சிரிப்பு வந்துவிட,

“லூசு லூசு, உன்னைக் கேட்டாங்களா? நீயா ஒப்புதல் வாக்குமூலம் குடுத்துட்டு இருக்க? எருமை மாடே கொஞ்சம் நேரம் அமைதியா இரேன்டி” என்றாள் சிவ தீர்த்தா.

“நம்ம ஆதி அண்ணா தானடி” என்றாள் கவி.

“நம்ம இல்லை, உனக்கு தான் அண்ணா” என்றவள்,

‘ஒரு மாம்பழத்துக்கு என்னா உருட்டு உருட்டுறா’ என்று நொந்து கொண்டாள் சிவா.

“சரி நீ இறங்கு” என்றான் ஆதி.

“கவி நீங்க ரெண்டு பேரும் போங்க, நான் இறங்கி வர்றேன்” என்றாள்.

“ஏன் எங்க முன்னாடி இறங்குனா என்ன? சீக்கிரம் வாடி” என்றாள் கவி.

“லூசு லூசு, மரியாதையா போய்டு” என்று கடித்துத் துப்பினாள்.

‘புடவையோட இவங்க முன்னாடி எப்படி இறங்க முடியும். இந்த லூசுக்கு இது புரியுதா?’ என்று நொந்து போன பார்வையை பார்க்க, கவிக்கு புரிந்ததோ இல்லையோ ஆதிக்கு தெளிவாய் புரிந்தது.

‘செம்ம சான்ஸ்டா ஆதி. தானா வந்து சிக்கியிருக்கா பாரேன்’ என்றவன் என்ன தான் செய்கிறாள் என்று விடாமல் பார்த்துக் கொண்டு நின்றான்.

பொறுத்து பார்த்த கவிதா, ‘வந்தா வாடி, இல்லைன்னா போடி’ என்று மாம்பழங்களை மட்டும் எடுத்துக் கொண்டு போக,

“துரோகி, விட்டுட்டு போறா பாரு” என்று முனங்கினாள் சிவா.

“இறங்கு”

“மாட்டேன்” என்பதைப் போல் பார்த்தாள்.

அவனும் அசையாமல் அதே இடத்தில் நிற்க, அவளும் இறங்குவேனா என்று வீம்பாய் அமர்ந்திருந்தாள்.

“ஹேய் பாம்புடி” என்றான் ஆதி.

‘இதை நம்பி இப்போ நான் குதிப்பேன், சார் அப்படியே பிடிப்பார். அந்த காட்சி எல்லாம் இங்க இல்லை’ என்று சிலுப்பியவள் அவனை மிதப்பாய் பார்க்க,

“சில்வண்டு நிஜமாவே பாம்பு தான்டி. லூசு மேல பாரு” என்றான் பதட்டமாய்.

“என்ன இவ்வளவு பதட்டப்படுறாங்க?” என்று அவள் மேலே பார்க்க, மேல் கிளையில் இருந்து தொங்கிக் கொண்டிருந்த பாம்பைப் பார்த்தவளுக்கு பயத்தில் கண்கள் விரிய, இப்போது சாவகாசமாய் இறங்கியும் செல்ல முடியாது என்று தோன்றியது அவளுக்கு.

பாவமாய் அவனைப் பார்க்க, உடலோ பயத்தில் உதறிக் கொண்டிருந்தது.

“சரி நீ இறங்குற மாதிரி தெரியலை. நான் போயிட்டு அப்பறம் வரேன்” என்று அவன் கிளம்பப் போக, அவளுக்கோ பயத்தில் நா உலர்ந்தது.

‘ஆபத்துக்கு பாவமில்லை, கண்ணை மூடிட்டு குத்திச்சுடுடி சிவா’ என்று கண்ணை இறுக மூடி குதித்திருந்தாள். குதித்தவள் அழகாய் ஆதியின் கைகளில் இருக்க, தடுமாறி நின்றான் ஆதி.

‘என்னா கணம் கணக்குறா?’ என்று எண்ணியவன், அவளைப் பார்த்து சிரிக்க, பயத்தில் இருந்தவளோ, மேலே அந்த பாம்பைத் தான் எட்டி பார்த்திருந்தாள். அது இன்னமும் அதே இடத்தில் இருக்க, மூச்சு விட்டவள் அப்போது தான் அவன் தாங்கிப் பிடித்திருப்பதையே உணர்ந்தாள்.

“ஆத்தி” என்று துள்ளி கீழே இறங்க, அவனோ பிடியைத் தளர்த்தாமல் தன்னோடு சேர்த்து இறுக்கிக் கொண்டான். அவள் பயப்படாமல் இருக்க பேசியிருந்தவனும் உள்ளுக்குள் பயந்து தானே போயிருந்தான். அவன் இதயம் வேகமாய் துடிப்பதை அவளும் உணர்ந்திருந்தாள்.

மீண்டும் விலகப் போனவள்.. மகாதேவனும், விசாலாட்சியும் நடந்து வருவதைப் பார்த்துவிட்டு மேலும் அவனுக்குள் ஒண்டிக் கொண்டாள். அவள் பயத்தில் தன்னை அணைத்திருக்கிறாள் என்று என்று நினைத்தவன்,

“ரிலாக்ஸ், ஒண்ணுமில்லை” என்றான்.

“இதென்ன கூத்து அத்தை?” என்றார் மகாதேவன் கோபமாய்.

“என்ன சொல்ற மகாதேவா?” என்றார் விசாலாட்சி.

“அங்க பாருங்க” என்று அவர் காட்ட, மகாதேவன் காட்டிய திசையில் பார்த்தவர், அதிர்ந்து போய் நின்றார். அதைப் பார்த்த சிவாவிற்கு சிரிப்பு வர அடக்கிக் கொண்டவள், மேலும் அவனை இறுக அணைத்துக் கொண்டாள்.

“தோப்புக்கு பத்திரம் நம்ம போடலாம்னு நினைச்சா, இந்த பொண்ணு பட்டாவையும் சேர்த்து போட்ரும் போல” என்றார் மகா தேவன். விசாலாட்சிக்கு வாயைத் திறந்தால் வார்த்தை எங்கே வந்தது. காத்து தான் வந்தது.

“ஆதி” என்ற மகாதேவனின் குரலில், சிவா அவனிடமிருந்து விலகப் பார்க்க, ஆதியோ அவளை தன் கைப்பிடியில் இருந்து விடுவிக்கவே இல்லை..

“சொல்லுங்க மாமா” என்றான் புருவத்தை நெரித்தபடி.

“இதென்ன பழக்கம்? இப்படி தோப்புக்குள்ள?” என்றார் ஒரு மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு.

“இப்ப இங்க என்ன தப்பா பார்த்துட்டிங்க? முகம் ஏன் இப்படி போகுது? என் பொண்டாட்டிய நான் பிடிச்சிருக்கேன். இதுல என்ன இருக்கு? என்னவோ யாரோ ஒருத்தியை கட்டிப் பிடிச்சு நின்னதை பார்த்த  மாதிரி முகத்தை வைக்கிறிங்க?” என்றான் அவரின் கண் பார்த்து.

“நான் அப்படி சொல்ல வரலை ஆதி, யாராவது பார்த்தா என்ன நினைக்க மாட்டாங்க?” என்றார்.

“எதுவும் நினைக்க மாட்டாங்க. அப்படியே நினைச்சாலும் எனக்கு அதைப் பத்தி கவலை இல்லை” என்றவன்,

“வா கிளம்பலாம்” என்றபடி அவளை கூட்டிக் கொண்டு செல்ல, அவளோ விசாலாட்சியை நக்கலாய் பார்த்துக் கொண்டு சென்றாள்.

அவளை அழைத்து வந்து ஜீப்பில் தள்ளாத குறையாய் ஏற்றியவன்,

“இனிமேல் ஏதாவது மரம் மட்டையில ஏறுறதைப் பார்த்தேன் காலை ஓடிச்சுடுவேன்டி. கொஞ்ச நேரத்துல உசுரு போய் வந்திடுச்சு” என்று கோபத்தில் கத்தியிருந்தான். அவளோ தலையைக் குனிந்து பாவமாய் இருக்க, சிகையைக் கோதி கோபத்தை குறைத்தவன், அங்கு வேலைக்கு இருக்கும் ஆளை அழைத்தான்.

“மேற்கால பகுதி மரத்துல இருக்குற பழத்தை பறிச்சு வீட்டுக்கு அனுப்பிடுங்க” என்றபடி ஜீப்பை கிளப்பியிருந்தான்.

சிவ தீர்த்தாவோ அவனை ஓரக்கண்ணால் பார்த்து ரசித்திருந்தாள். இந்த இரண்டு நாட்களாக அவன் அதிகம் அவளிடம் உரிமை எடுத்துக் கொள்வதைப் போல் தோன்றியது அவளுக்கு. அமைதியாய் விலகிச் சென்றவனை விட, உரிமையாய் இழுத்துப் பிடித்தவனைத் தான் அவளுக்கும் பிடிக்க ஆரம்பித்திருந்தது.