அத்யாயம் 17

அவளைத் தோட்டத்தில் இறக்கி விட்டவன், நீ இங்க இரு. முக்கியமான வேலை ஒன்னு இருக்கு. முடிச்சுட்டு வரேன்” என்று சொல்ல, அவன் வீட்டிற்கு தான் போகிறான் என்று அவளுக்கு அப்பட்டமாய் தெரிந்தது.

நடந்த விஷயம் ஆதிக்கு தெரிந்தால் பிரச்சனை அதிகமாகும் என்று தான் தோன்றியது சிவாவிற்கு. ஏற்கனவே ரேணுகாவின் உடல்நிலையும் மன நிலையும் சரியில்லாமல் இருக்க, இந்த நேரத்தில் மீண்டும் பிரச்சனை வேண்டாம் என்று நினைத்தாள்.

“இப்ப எதுக்கு என்னையவே பார்த்துட்டு இருக்க? இறங்கு, நான் போயிட்டு வந்திடுறேன்” என்றான் மீண்டும். இறங்கியவளோ வேகமாய் மறுபுறம் வந்து ஜீப்பை அணைத்து சாவியை எடுத்துக் கொண்டாள்.

“சாவியை குடு தீர்த்தா” என்றான் பல்லைக் கடித்துக் கொண்டு.

“மாட்டேன்” என்று தலையை ஆட்டியவள், அவன் கையைப் பிடித்து இழுத்திருந்தாள்.

‘சில்வண்டுக்கு தைரியத்தை பாரேன், கையை பிடிச்சு இழுக்குறா? முதல்ல என்னை அசைக்க முடியுமா இவளால’ என்று எண்ணியவன் கீழே இறங்கி அசையாமல் நிற்க, அவனை முறைத்தவள், வேகமாய் நடக்கத் தொடங்கினாள்.

 “சரி சரி..! இரு வரேன்” என்று அப்போதும் அவன் தான் தணிந்து போக வேண்டியிருந்தது.

‘எல்லாம் என் நேரம்டி’ என்றவன் தலையில் அடித்துக் கொண்டான்.

மகள் வருவதைக் கண்டு மகிழ்ந்த கிருஷ்ணன்,

“அம்மாடி சிவா, பார்த்து வாம்மா” என்றார். அவளோ அவரைக் கண்டு வரப்பில் ஓட்டமாய் ஓட,

“இவளுக்கு மெதுவா நடக்கவே தெரியாதா? என்னமோ அப்பாவைப் பார்த்து ஆறுமாசம் ஆன மாதிரி” என்று எண்ணியவனுக்கு முதன் முறையாக அவர்களைப் பார்த்து மனதிற்குள் பொறாமை உணர்வு வந்திருந்தது.

“எப்படிப்பா இருக்கீங்க?” என்றாள் மூச்சு வாங்க.

“மெதுவா வர்றதுக்கு என்ன சிவாம்மா. பாரு எப்படி மூச்சு வாங்குதுன்னு” என்றவர் துண்டால் மகளின் வேர்வையைத் துடைத்து விட,

‘முடியலைடா சாமி’  என்று எண்ணிக் கொண்டான் பின்னே வந்த ஆதி.

“வாங்க மாப்பிள்ளை. எப்படி இருக்கீங்க?” என்றார்.

“இது உங்களுக்கு ஓவரா இல்லை. நான் தினமும் தான் இங்க வர்றேன். புதுசா கேட்குற மாதிரி கேட்குறிங்க?” என்றான்.

“பழக்க தோஷத்துல வந்திருச்சு மாப்பிள்ளை” என்றார் கிருஷ்ணன்.

“என்னப்பா பண்ணிட்டு இருக்கீங்க?” என்றாள்.

“வயல்ல வேலை செய்ய ஆள் வந்திருக்காங்கம்மா..! சோளம் விதைக்கனும்ல. அதான் உழவு ஓட்டிட்டு இருந்தேன்டா” என்றார்.

அவரை முறைத்தவள்,

“உங்களை ஓட்டக்கூடாதுன்னு சொல்லியிருக்கேன்ல” என்று மிரட்டினாள்.

“என்ன சிவா? எப்பவும் இங்க வேலைக்கு வந்தா உன் புண்ணியத்துல சூடா டீ,காபி  கிடைக்கும். இப்போ அதுவும் இல்லாம போச்சு” என்றார் ஒரு பெண்மணி.

“எனக்கு இன்னைக்கு வேலை பார்க்குறது தெரியாது சித்தி. தெரிஞ்சிருந்தா போட்டு எடுத்துட்டு வந்திருப்பேன்” என்றாள்.

“எங்க? மாமனும் ஒன்னும் கண்டுக்க மாட்டேங்குறாரு” என்றார் கிருஷ்ணனைப் பார்த்து.

“நீங்கதான் கண்டுக்கங்களேன் ப்பா..! சித்தியும் எத்தனை நாளா உங்களுக்கு ரூட் போடுறாங்க” என்றாள் சிவா நமட்டு சிரிப்புடன்.

“கழுதை பேசாம இருமா” என்று கிருஷ்ணன் சொல்ல, ஆதிக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

“மாமன் மட்டும் கட்டிக்கிற வயசுலையே சரின்னு சொல்லியிருந்தா என் பொழப்பு ஏன் இப்படி இருக்கப் போகுது” என்றவர் பெருமூச்சு விட,

“இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகலை, நான் வேணும்னா சித்தப்பாகிட்ட பேசவா சித்தி” என்றாள் சிரிப்புடன்.

“அட போ சிவ இந்த நேரத்துல போயி அந்த மனுஷனைப் பத்தி பேசிட்டு”  என்று சிரித்தவர் வேலையைப் பார்க்க,

“வாலு, வந்த உடனே ஆரம்பிச்சுட்டியா வேலைய” என்ற கிருஷ்ணன் மகளைத் தான் கூர்ந்து பார்த்திருந்தார்.

“ஆதி தம்பி..! அப்படியே இறங்கி மாமனார் வீட்டு வரப்பு பக்கமும் வாங்க! எத்தனை பேருக்கு இந்த குடுப்பனை கிடைக்கும். வரப்பு தான் குறுக்கால. இந்த பக்கம் புருஷன் தோட்டம், இந்த பக்கம் அப்பன் வீட்டு தோட்டம். சிவா உன் காட்ல மழை தான்” என்று ஒரு பெண்மணி வம்பிழுக்க,

“இன்னைக்கு உங்களுக்கு நான் தான் கிடைச்சேனா?” என்றவளைப் வேலை செய்து கொண்டிருந்த பெண்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் பார்த்திருந்தனர். அவளின் கதை தான் ஊருக்கே தெரியுமே.

“எப்பவும் இப்படி சந்தோஷமா இருடியம்மா” என்று அவர்கள் சொல்ல,

“நீங்க என்ன ஐஸ் வச்சாலும் இங்க பால் எல்லாம் இல்லை. அதானால கடுங்காப்பி வேணும்னா போட்டு தர்றேன்” என்றாள் சிரிப்புடன்.

சொன்னபடி தோட்டத்து வீட்டின் அந்த ஒற்றை சிறு அறையின் முன்பு, விறகு அடுப்பில் அவர்களுக்கு கடுங்காப்பியை போட்டுக் கொண்டு வந்து கொடுத்தவள், ஆதியைத் தேட, அவனோ போனில் வெகு தீவிரமாய் பேசிக் கொண்டிருந்தான்.

“அப்பா இதைக் குடிங்க” என்று அவரிடம்  சென்று கொடுத்தவள், அவள் ட்ராக்டரில் ஏறப் போக,

“என்னமா செய்ற? மாப்பிள்ளை ஏதாவது நினைச்சுக்க போறார்? அன்னைக்கே வேலைக்கு ஆள் வைங்கன்னு சொன்னார்” என்று கிருஷ்ணன் தடுக்க,

“ஒன்னும் சொல்ல மாட்டங்கப்பா..! கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க” என்றவள் ட்ராக்டரை ஓட்டிக் கொண்டிருக்க, போன் பேசிவிட்டு இவளைப் பார்த்தவன் பல்லைக் கடித்திருந்தான்.

“சும்மாவே இருக்க மாட்டா போல” என்று எண்ணியவன், அவளைத் தான் பார்த்திருந்தான். பார்வை அவளை எக்குத் தப்பாய் பார்த்து வைக்க,

‘அன்னைக்கு ஒரு நாள் இவ உழவு ஓட்டுனப்போ என் கண்ணு இப்படியெல்லாம் பார்க்கலையே? இப்ப ஏன் இப்படி தறிகெட்டு பார்க்குது’ என்று தன்னைத் தானே நொந்து கொண்டான்.

“நிறுத்து” என்பதைப் போல் அவன் கையைக் காட்ட, நிறுத்தியவள் அவனைத் தான் கேள்வியாய் பார்த்தாள்.

வேகமாய் வரப்பில் இருந்து இறங்கி வந்தவன், அவளுக்கு அருகில் ஏறி அமர்ந்து  கொள்ள, அவளுக்கோ ஆச்சர்யம்.

“என்ன பார்வை? அங்க நின்னு பார்க்குறப்போ எதுவும் தெளிவா தெரியலை. அதான் பக்கத்துலையே உட்கார்ந்து பக்கமா பார்க்கலாம்னு வந்தேன்” என்றான் மந்தகாசமாய்.

அவள் அவனை நம்பாமல் பார்க்க,

“நான் நீ உழவு ஓட்டுறதை பார்க்கலாம்னு வந்தேன். வேற ஒண்ணுமில்லை” என்றான் சிரிப்பை அடக்கி. அவளை ஒட்டி ஒரு பக்கமாக அமர்ந்திருந்தவனின் அருகாமையில் அவளுக்குத் தான் மூச்சடைத்தது. கைகள் நடுக்கம் கொடுக்க, ஸ்டியரிங்கை இறுகப் பிடித்துக் கொண்டாள்.

“இதென்ன இப்படி குலுங்குது. உடம்பு என்னத்துக்கு ஆகும்” என்றான் அவள் காதருகில்,அக்கறையாக. அவளோ அவனின் மூச்சுக் காத்தில் வெந்து கொண்டிருக்க, அவனோ அவளின் அவஸ்தையை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான்.

“என்ன இப்படி வேர்க்குது?” என்றவனைப் பார்க்க பாவமாய் இருந்தது.

‘நானா இப்ப என்கூட வர சொன்னேன். இதுல ஒருத்தர் உட்கார்ந்து ஓட்டுறது தானே சேப். இவங்க இப்படி சைட்ல உட்கார்ந்து வந்தா பேலன்ஸ் கிடைக்காதே’ என்று எண்ணியவள்,  எதையும் வெளியே சொல்லவில்லை. ஆனால் ட்ராக்டரை நிறுத்திவிட்டாள்.