அதிகாலையில் எப்போதும் போல் நான்கு மணிக்கெல்லாம் முழிப்பு வந்திருந்தது சிவ தீர்த்தாவிற்கு. தூக்கக் கலக்கத்துடன் எழ முயற்சி செய்தவளால் அசைய கூட முடியவில்லை.
“என்னாச்சு?” என்று கண்களை நன்றாக திறந்து பார்த்தவளுக்கு அப்போது தான் புரிந்தது, அவள் ஆதியின் வலிய கரங்களுக்குள் அகப்பட்டுக் கொண்டிருப்பது. அவளை விடவே மாட்டேன் என்பதைப் போல் இறுக அணைத்திருந்தவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். பாதி இரவிற்கு மேல் தான் உறக்கமே அவனை ஆட்கொண்டிருந்தது.
“அய்யோ” என்று எண்ணியவளுக்கு நெஞ்சம் அதிவேகமாக அடித்துக் கொள்ள, தூக்கக் கலக்கம் எல்லாம் தூரம் சென்றிருந்தது. சட்டென்று ஒரு வேகத்தில் அவன் கைகளை விடுவித்தவள், பதட்டத்தில் எழுந்துவிட்டாள். இதயமோ தாறுமாறாகத் துடிக்க, நெஞ்சில் கை வைத்துக் கொண்டவள்,
“நான் எப்படி அவங்க பக்கத்துல போனேன்? தூக்கத்துல உருண்டு போற பழக்கம் கூட இல்லையே?” என்று புரியாமல் பார்த்திருந்தாள்.
“அவங்க என் பக்கத்துல வந்து தூங்கியிருப்பாங்களோ?” என்று வேகமாய் கட்டிலை ஆராய்ச்சி செய்ய, அவன் எப்போதும் தூங்கும் இடத்தில் தான் தூங்கிக் கொண்டிருந்தான்.
“ச்ச்ச..!! இப்படியா தூங்கி வைப்பேன். அவங்க மட்டும் பார்த்திருந்தா? சிவா ஜஸ்ட் மிஸ்சு! ஊப்” என்று மூச்சை வெளியிட்டவள், இப்போது அவனைப் பார்க்க, சீராக ஏறி இறங்கிய மூச்சே அவன் நல்ல உறக்கத்தில் இருக்கிறான் என்று சொல்லியது.
ஏனோ சற்று முன் அவன் கையணைப்பில் இருந்தது கனவோ என்று எண்ணும் அளவிற்கு சட்டென்று அவனிடம் இருந்து விலகியது, அவளுக்கே என்னவோ போல் இருந்தது. மனதில் ஒரு இனம் புரியாத குறுகுறுப்பு.
“பேசாம இன்னும் கொஞ்ச நேரம் அப்படியே தூங்கியிருக்கலாமோ?” என்ற ஒரு நிமிட ஏக்கம் அவள் மனதில் மின்னலாய் வந்து சென்றிருந்தது. அவனையே பார்த்திருந்தவளை தூக்கத்தில் கூட வசீகரித்துக் கொண்டிருந்தான் ஆதி கேசவன்.
அவன் அன்று கூட்டத்தில் சொன்ன “வாழ்வோ சாவோ அது ஒருத்தி கூட மட்டும் தான்” என்ற வார்த்தைகள் மட்டும் ஏனோ அவளின் மனதிலும் பதிந்து போயிருந்தது. அதனால் தானோ என்னவோ அவனிடம் சற்று பிடிவாதத்தைத் தளர்த்திக் கொண்டிருந்தாள்.
குளித்து முடித்து கீழே சென்றவள் ரேணுகாவைத் தேடி செல்ல, அவரோ அப்போது தான் எழுந்து குளித்து வெளியே வந்தார்.
“சிவாம்மா, என்ன இந்த நேரத்துல?” என்றார் ஆச்சர்யமாய்.
“எப்பவும் வீட்ல இந்த நேரத்துக்கே எழுந்திடுவேன். பழக்கத்தை மாத்த முடியலை,அதான்” என்றாள்.
“அதுக்குன்னு இவ்வளவு சீக்கிரமாவா? இன்னும் கொஞ்ச நேரம் தூங்கியிருக்கலாமே சிவா” என்றார் சோர்வாய்.
“நீங்க ஏன் இவ்வளவு சீக்கிரம் எழுந்திங்க?” என்றாள்.
“அது அப்படியே பழகிடுச்சுமா. முன்னாடி எல்லாம் மூணு மணிக்கே எந்திரிச்சுடுவேன். பால் கறக்க ஆள் வந்திடுவாங்க அப்போல்லாம். இப்ப தான் இந்த நேரத்துக்கு எந்திரிக்கிறேன்” என்றவர், வாசல் தெளிக்க வெளியே செல்ல,
“நீங்க இருங்க நான் தெளிக்கிறேன்” என்றாள்.
“வேண்டாம்மா! நீ தலையை பிரிச்சு காய வை” என்றார்.
“நான் தான் சொல்றேன்ல, உங்களுக்கு உடம்பு சரியில்லை போல. ரொம்ப சோர்வா தெரியரிங்க. இதோட எழுந்து இதையெல்லாம் செய்யனுமா என்ன? இந்த வீட்ல தான் இத்தனை பேர் இருக்காங்களே? இல்லைன்னா வேலைக்கு ஆள் வச்சிருக்கலாமே?” என்றாள் சிவ தீர்த்தா.
“வெளி வேலைக்கு தினமும் ஆள் வந்திடுவாங்கம்மா! ஆனா, வீட்டுக்குள்ள நாம தான் செய்யணும். அத்தைக்கு வேற யார் செஞ்சாலும் பிடிக்காது” என்றார் ரேணுகா.
“அதுக்கு அவங்க தான் செய்யணும். இல்லைன்னா அவங்க மகளுகள செய்ய சொல்லணும்” என்றாள் கடுப்பாய்.
“விடுடா..! நம்ம வீட்டு வேலை, யார் செஞ்சா என்ன?” என்றவரை ஆயாசமாய் பார்த்திருந்தாள்.
“நீங்க இருங்க நான் பண்றேன்” என்று அவரை வம்படியாய் நிறுத்தியவள், அவள் வீட்டில் செய்வது போல் பம்பரமாய் வேலை செய்ய, ரேணுகாவிற்கோ ஆச்சர்யம். அவள் தோட்ட வேலை செய்து பார்த்திருக்கிறார். ஆனால் வீட்டு வேலை செய்து பார்த்ததில்லையே? இன்று அவளின் வேலை செய்யும் பாங்கை கண்டவருக்கு, நிஜமாவே இவள் சுபத்ராவின் பெண் தானா? என்ற சந்தேகம் கூட வந்து விட்டிருந்தது.
“அடுத்து என்ன பண்ணனும்?” என்று வந்து நின்றாள்.
“கோலம் ரொம்ப அழகா இருக்குடா” என்றார் ரேணுகா.
“அப்படியா சொல்றிங்க? இருந்தாலும் உங்க அளவுக்கு இல்லை. டெய்லி நான்தான் பார்க்குறேனே? அவ்வளவு அழகா நீங்க போடுவிங்க” என்றாள் சிவா.
“விளக்கு ஏத்தனும்ம்மா” என்றார் ரேணுகா.
ஒரு நிமிடம் சிவா தயங்கி நின்றாள். ஏனோ அதை செய்ய மட்டும் அவளுக்கு மனம் முழுமையாய் ஒப்பவில்லை.
“என்னம்மா? சரியோ தப்போ இனி இது உன் வீடு சிவா. என்னைக்கா இருந்தாலும் நீ செஞ்சு தானே ஆகணும்?” என்றார் ரேணுகா.
கண்களை மூடி தன்னை நிலைப்படுத்தியவளுக்கு,
“இல்ல, ஏற்கனவே நான் பிறந்ததால தான் உங்க குடும்பம் விளங்காம போச்சுன்னு உங்க மாமியார் சொல்லுவாங்க. இப்போ விளக்கை ஏத்தி அதுக்கும் ஏதாவது பேசுவாங்கன்னு தான் அமைதியா இருந்தேன்” என்றாள்.
“அவங்க எனக்கு தான் மாமியார் சிவா. உனக்கு இல்லை. உனக்கு நான் தான் மாமியார். நான் அப்படி சொன்னாதான் நீ கவலைப்படணும். நீ இந்த வீட்டோட மூத்த மருமக சிவா. ஆதியோட பொறுப்புல பாதி உனக்கும் இருக்கு. எதை செஞ்சாலும் முழு மனசோட செய்யணும்” என்றார் ரேணுகா.
“சரிங்க” என்றவள் அன்று தான் முழு மனதுடன் அந்த வீட்டில் விளக்கை ஏற்றி இருந்தாள். சிவ தீர்த்தாவின் இந்த மாற்றம் ரேணுகாவிற்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் இன்னமும் அவள் வீட்டில் யாரையும் முறை வைத்து அழைக்காதது ஒரு குறையாகத் தான் இருந்தது.
அவரைப் பார்த்து சிரித்தவள்,”இவங்க எடுத்துக் கொடுத்தது தான்” என்றாள்.
“என் பையனுக்கு இப்படி எல்லாம் புடவை எடுக்கத் தெரியும்னு எனக்கே இப்பதான்மா தெரியுது சிவா. சும்மா சொல்லக் கூடாது நல்லா தான் பார்த்து எடுத்து இருக்கான்” என்றார்.
“நீ போய் தலையை உலர்த்து சிவா. நான் சமையலை பார்க்குறேன். டீ போட்டுத் தரேன்டா, குடிச்சுட்டு போ” என்றார்.
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். இன்னைக்கு உங்களுக்கு ரெஸ்ட். என்ன சமைக்கணும்னு சொல்லுங்க. நான் சமைக்கிறேன்” என்றவளை கண்டு ரேணுகாவிற்கு மயக்கம் வராத குறை தான்.
“எதுக்கு இப்படி ஷாக் ஆகுறிங்க?” என்றாள் புரியாமல்.
“நிஜமாவே என் மருமக கிட்ட தான் பேசிட்டு இருக்கேனா?” என்றார் ரேணுகா.
அவள் அவரை முறைக்க, அவளைக் கண்டு சிரித்தவர், பின் யோசனைக்கு சென்றார்.
“என்ன யோசிக்கிறிங்க?” என்றாள்.
“இல்ல சிவா, அது அத்தைக்கு வேற யார் சமைச்சாலும் பிடிக்காது. நானே சமைச்சுக்கிறேன்” என்றார் ரேணுகா.
‘அது தான எனக்கும் வேணும்’ என்று எண்ணியவள்,
“இப்ப தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி, நீ தான் வீட்டுக்கு குலவிளக்கு, மத்ததெல்லாம் அகல் விளக்குன்ற மாதிரி பேசிட்டு இருந்திங்க. இப்போ நீங்களே உங்க மாமியாரைப் பார்த்து பயப்படுறிங்க பார்த்திங்களா?” என்றாள் கிண்டலாய்.
ரேணுகா அவளை பாவமாய் பார்க்க,
“எதுவும் வேலைக்கு ஆகாது. நான் தான் பண்ணுவேன்” என்றவளை அதற்கு மேல் ரேணுகாவால் தடுக்க முடியவில்லை.
“என்ன பண்ணனும்?” என்று அவரிடம் கேட்டுக் கொண்டவள், சமையலில் இறங்கினாள். எது எங்கே இருக்கிறது என்று தெரியாமல் கொஞ்சம் தடுமாறியவளுக்கு, ரேணுகா உதவி செய்ய இருவரும் பேசிக் கொண்டே வேலை செய்வதைப் பார்ப்பதற்கே நன்றாக இருந்தது.
காலையில் எழுந்து சமயலறைக்கு வந்த சுபத்ரா கண்டது என்னவோ இவர்களின் பிணைப்பை தான். அதிலும் தலையில் கட்டிய துண்டுடன், புடவையை சொருகியபடி சிவா நின்று சமைத்துக் கொண்டிருந்த அழகை ரசித்தவருக்கு, அவள் ரேணுகாவுடன் சகஜமாக பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து மனதின் ஓரத்தில் ஒரு ஏக்கமும் வந்து போனது.
“வா சுபத்ரா” என்ற ரேணுகாவின் குரலில், சிவாவின் பேச்சு அப்படியே நின்று போனது. வாயை மூடிக் கொண்டவள், வேலையை மட்டும் அமைதியாய் செய்து கொண்டிருந்தாள். நிமிர்ந்தோ, திரும்பியோ பார்க்கவே இல்லை.
“இன்னைக்கு சிவாவே எல்லாம் செஞ்சுட்டா சுபா. எனக்கே இங்க ஒரு வேலையும் இல்லை” என்றார் சிரித்துக் கொண்டே.
“பார்த்தாலே தெரியுது அண்ணி” என்று சுபத்ரா சொல்லிக் கொண்டிருக்கும் போதே, தூக்கத்துடன் எழுந்து வந்த அமிர்தா,
“அம்மா பூஸ்ட்” என்று கேட்டுக் கொண்டே சுபத்ராவை கட்டிக் கொள்ள, அதை கண்டும் காணமல் வெளியே சென்றாள் சிவா. ரேணுகாவிற்கு அவள் மனநிலை புரிந்தது.
“போய் பல் தேய்ச்சுட்டு வா அமிர்தா. அத்தை கலந்து தர்றேன்” என்று ரேணுகா சொல்லவும் அவள் சென்று விட்டாள்.
சுபாவும் அந்த இடத்தை விட்டு நகரவும் தான் வந்தாள் சிவா.
“இன்னும் எத்தனை நாளைக்கு சிவா இப்படியே இருப்ப?” என்றார் ரேணுகா கவலையாய்.
“நான் சாகுற வரைக்கும்” என்றாள் பட்டென்று.
“சிவா, என்ன பேச்சு இதெல்லாம் காலைல” என்று ரேணுகா அதட்ட,
“உங்களுக்கு சொன்னா புரியாது. அனுபவிச்சவங்களுக்கு தான் அந்த வலியும் வேதனையும் புரியும்” என்றவள்,
“இதோ, இப்படி நான் உரிமையா கேட்டு எனக்கு டீயோ,காபியோ கலந்து தர்றதுக்கு எல்லாம் அம்மான்னு ஒரு ஜீவன் இருந்ததில்லை. விபரம் தெரியாத வரைக்கும் அப்பா செஞ்சு குடுத்தார். அப்பறம் அவருக்கு நான் செஞ்சேன். இது தான் என்னோட வாழ்க்கை. ஒரு பொம்பளை பிள்ளைய யார் துணையும் இல்லாம வளர்க்கிறது அவ்வளவு ஈசி எல்லாம் இல்லை. என்னதான் என் அப்பாவ பெத்த பாட்டி இருந்து வளர்த்தாலும் எல்லாரும் அம்மாவாகிட முடியாதே” என்றாள் எங்கோ வெறித்துக் கொண்டு.
“சுபத்ரா அப்படி நடந்துகிட்டதுக்கு ஒரு காரணம் இருக்கும் சிவாம்மா” என்றார் ரேணுகா பொறுமையாய்.
“ஒன்னென்ன ஓராயிரம் காரணம் கூட இருந்துட்டு போகட்டும். பெத்த பிள்ளையை வேண்டாம்னு சொல்லி தூக்கிக் குடுத்துட்டு போன தாய் எனக்கு தேவையே இல்லை.
வீட்டுக்கு பயந்தவங்க காதல் கல்யாணம் பண்ணி ஒருத்தர் வாழ்க்கையை அழிச்சிருக்கக் கூடாது. சமூகத்தையும், வாழ்க்கையில கஷ்ட்ட நஷ்ட்டத்தையும் எதிர்கொள்ளத் தயங்குனவங்க பிள்ளையே பெத்திருக்கக் கூடாது.
அப்படி பெத்ததுக்கு அப்பறமாவது எந்த சூழ்நிலையிலும் தன் குழந்தையை விட்டிருக்கக் கூடாது. எனக்கு அம்மான்னு ஒருத்தவங்க தேவைப்பட்ட நேரத்துலையே அவங்க வரலை. இனி இருந்தா என்ன? இல்லாட்டி என்ன? உறவுங்கிறது அன்பால பிணைக்கப்படனும். அது தான் நிலைக்கும். அழுத்தத்தால பிணைக்கப்பட கூடாது. அது எப்பவுமே நிரந்தரம் இல்லை” என்றவளைப் பார்த்த ரேணுகாவிற்கு தோன்றியது ஒன்று தான்.
‘தாரணி மாதிரி நீயும் சின்ன பொண்ணு தான், அது வயசுல மட்டும் தான் சிவா. ஆனா பெரியவங்களுக்கே புத்தி சொல்ற அளவுக்கு பக்குவமும் பொறுமையும் இருக்கு’ என்று எண்ணிக் கொண்டார்.