அன்று எடுத்த புகைப்படங்களை கவி சிவாவிற்கு அனுப்பியிருக்க, அதைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள் சிவ தீர்த்தா. தன்னருகில் அமர்ந்திருந்த ஆதி கேசவனை நிறுத்தி நிதானமாய் பார்த்திருந்தாள். அழகும் கம்பீரமும் கலந்து அம்சமாய் தன்னருகில் இருந்தவனைத் தான் இமைக்காமல் பார்த்திருந்தாள்.
விசாலாட்சியின் பேரன் என்று மனதில் பதிந்திருந்த பிம்பத்தை தள்ளி வைத்துவிட்டு, ரேணுகா தேவியின் மகனாக மட்டும் அவனைப் பார்த்திருந்தாள். விசாலாட்சியின் பேரனைத் தான் அவளால் கணவனாக பார்க்க முடியாது. ரேணுகா தேவியின் மகனை கணவனாக பார்க்க முடியுமே.
அவனைப் பற்றி அவளுக்கு எதுவும் தெரியாது. தெரிந்து கொள்ள விருப்பப்பட்டதில்லை என்பதே உண்மை. விசாகன் உள்ளூரில் இருந்ததால் அவனை அவ்வப்போது பார்த்திருக்கிறாள். வெளியூருக்கு படிக்க சென்று அவ்வப்போது வந்து சென்ற ஆதி கேசவனை அவள் அதிகம் பார்த்ததில்லை.
இப்போது சில வருடங்களாக ஊரில் தான் இருக்கிறான். கவிதா எப்பொழுதும் ஆதி கேசவனின் புகழ் பாடிக் கொண்டிருப்பதை கேட்டிருக்கிறாள். இவளும் பள்ளி,கல்லூரி என்று சென்று கொண்டிருந்ததால் அவனைப் பார்க்கும் வாய்ப்பு அவளுக்கும் வாய்த்ததில்லை.
அவர்கள் ஊர் திருவிழாவில் இருந்து தான் அவன் அடிக்கடி அவள் கண்ணில் பட்டான். பார்த்த அனைத்து சந்தர்ப்பங்களும் நல்ல விதாமகவும் அமையவில்லை. அப்படி அமைந்த சந்தர்ப்பத்திலும் அவன் முகம் பார்த்து அவள் பேசியிருக்கவில்லை. இறுதியாக விசாகனிடம் பழகுவதை நிறுத்திக் கொள் என்பதைப் போன்று அவன் பேசவும் அவனை இன்னொரு விசாலாட்சியாகவே எண்ணிக் கொண்டாள்.
ஆனால், தான் அப்படி இல்லை என்று ஒவ்வொரு செயலிலும் காட்டிக் கொண்டிருந்தவனின் உண்மையான குணம் இப்போது தான் அவளுக்கும் புரியத் துவங்கியிருந்தது. விருப்புக்கும் வெறுப்புக்கும் இடையில் இருந்த நூலிலையில் தான் அவள் மனம் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது.
கோவிலில் இருந்து வந்தபிறகு வெளியே சென்றவன் இன்னமும் வந்திருக்கவில்லை. எவ்வளவு நேரம் தான் அறைக்குள்ளேயே இருப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே, ரேணுகா அவளை அழைக்க, எழுந்து சென்றிருந்தாள்.
“நீயும் ஆதியும் நம்ம வீட்டுக்கு விருந்துக்கு வரணும்மா” என்று ரேணுகாவின் தாயார் சொல்ல, அதையே ரேணுகாவின் அண்ணன் குடும்பமும் கூறியிருந்தனர்.
“சரிங்க பாட்டி” என்றாள் சிவா.
அவர்களுடனே சிவாவும் வெளியே கார் வரைக்கும் செல்ல, அவளைத் தனியாக பிடித்துக் கொண்டார் ரேணுகாவின் தாயார்.
“அம்மாடி சிவா, சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதம்மா? இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி ஒதுங்கி ஒதுங்கியே இந்த வீட்ல இருப்ப? நீ என் பேரன் ஆதியோட பொண்டாட்டிமா. உனக்கு தெரியுதா தெரியலையான்னு தெரியலை, வெளிய அவனுக்கு எத்தனை பொறுப்பு இருக்குன்னு? ஒரு வார்த்தை அவன்கிட்ட பேசணும்னா எல்லாரும் யோசிச்சு தான் பேசுவாங்க. ஆனா நீ இவ்வளவு கோபப்பட்டும் ஏன் அமைதியா இருக்கான்னு உனக்கு புரியலையா சிவா? என் சம்பந்திக்கு கொஞ்சம் குணம் பத்தாது தான். இவ்வளவு ஏன் ரேணுகாவை இங்க கட்டிக் குடுத்தப்போ என் மகளையே அந்த பாடு படுத்துனாங்க. ரேணுகா எல்லாத்தையும் சமாளிச்சு வந்தா. இப்போ புருஷனும் இல்லை. புள்ளைங்க மட்டும் தான் அவ உலகம். இனி நீ தான் ரேணுகாவையும் பார்த்துக்கணும்மா” என்றார் பொறுமையாய்.
“புரியுது பாட்டி” என்றாள் சிவா.
“புரிஞ்சு புத்திசாலித்தனமா பிழைச்சுக்கோ. உடமைப் பட்டவ விட்டுட்டா அப்பறம் அது ஊர் பொருளாகிடும். எப்ப எப்பன்னு இருக்குறவங்களுக்கு சந்தர்ப்பத்தை நீயே குடுத்துடாதம்மா சிவா” என்று நாசூக்காய் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.
“ஏன் இப்படி சொல்லிட்டு போறாங்க?” என்றவளுக்கு ஒன்றும் புரியவில்லை.
திரும்பி மாமியாரிடம் சென்றவள்,
“என்ன பண்றிங்க?” என்றாள்.
“நைட்டுக்கு சமைக்கனும்ல சிவா. அதான் எல்லாம் ரெடி பண்ணிட்டு இருக்கேன்” என்றார் ரேணுகா.
“நீங்களே எவ்வளவு வேலை செய்விங்க? யாரும் ஹெல்ப் பண்ண மாட்டாங்களா?” என்றாள்.
“சுபத்ரா ஹெல்ப் பண்ணுவாம்மா. இன்னைக்கு அவளுக்கும் ஏதோ தலைவலின்னு சொன்னா” என்றவர்,
“உனக்கு எதுவும் வேணுமா சிவா? பண்ணி தரவா?” என்றார் எதார்த்தம் போல்.
“எனக்கு எதுவும் வேண்டாம்” என்று தயங்கிவள்,
“நான் வேணும்னா உங்களுக்கு ஹெல்ப் பண்ணவா?” என்றாள். அப்படி கேட்ட மருமகளை திரும்பிப் பார்த்திருந்தார் ரேணுகா. பட்டுப்புடவையை மாற்றி ஜார்ஜெட் சில்க் மாதிரியான புடவையை உடுத்தியிருந்தாள். தழையத் தொங்கிய தாலியுடன், அன்று புது விதமான சோபையுடன் மிளிர்ந்தாள் சிவ தீர்த்தா.
“என்னாச்சு? ஏன் என்னையே பார்க்குறிங்க?” என்றாள் சிவா.
“ஆதி வந்த உடனே உங்க ரெண்டு பேருக்கும் இன்னைக்கு சுத்திப் போடணும்டா” என்றார் ரேணுகா.
“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் சிவா. நீ போய் வேற வேலை ஏதாவது இருந்தா பாரு” என்றார் ரேணுகா.
“இங்க ஒரு வேலையும் இல்லை. எங்க வீட்ல நான் இப்படி சும்மாவெல்லாம் இருந்ததே இல்லை. எனக்கு என்னவோ மாதிரி இருக்கு. இங்க சமைக்கலாம்னு வந்தா, இங்க இருக்கவங்களுக்கு பிடிக்காதோன்னு தான் நான் வர்றதில்லை. நீங்க என்னை ஏதும் நினைச்சுக்காதிங்க” என்றாள் தயக்கத்துடன்.
“இதெல்லாம் நீ சொல்லனும்னு அவசியமே இல்லை சிவா. தாரணியே ஒரு வேலையும் செய்ய மாட்டா. நாங்க செய்யவும் விடுறதில்லை. நீயும் தாரணி மாதிரி தானடா” என்று ரேணுகா சொல்லிக் கொண்டிருக்கும் போதே வந்திருந்தார் மேகலை.
“தாரணியும் இவளும் ஒண்ணா அண்ணி? தாரணி ஒரு வேலையும் செய்றதில்லைன்னு குத்திக் காட்டி பேசுறிங்களா?” என்றார் மேகலை கோபமாய்.
“நான் அந்த அர்த்தத்துல சொல்லலை மேகலா. நீயா எதையாவது கற்பனை பண்ணி பேசாத?” என்றார் ரேணுகா.
“எல்லாம் புது மருமக வந்த மயக்கத்துல இருக்கீங்க. என் மக இருக்க வேண்டிய இடத்துல இவளை வச்சு கொண்டாடிட்டு இருக்கீங்க? என் மேல அம்புட்டு பாசமா இருந்த ஆதி, இப்போ விரோதியை பார்த்த மாதிரி பார்க்குறான். நீங்க தான் ஆதி மனசை கெடுத்து வச்சிருக்கிங்க. எங்கண்ணன் உயிரோட இருந்திருந்தா எனக்கு இப்படி ஒரு நிலைமை வந்திருக்குமா?” என்றார் மேகலை.
“அவங்க தப்பா எதுவும் சொல்லலை. இதை வச்சு ஏன் ஒரு பிரச்சனை பண்றிங்க?” என்றாள் சிவா.
“இங்க பார் நான் என் அண்ணிகிட்ட பேசிட்டு இருக்கேன். நீ யாரு இடையில? உனக்கு விட்ட வேலை என்னவோ அதை மட்டும் பாரு” என்றார் மேகலை.
“உங்க அண்ணி தான் யார் இல்லைன்னு சொன்னது? ஆனா, அவங்க இப்போ என்னோட மாமியார். அவங்களை யாரும் பேசட்டும்னு வேடிக்கை பார்த்துட்டு போக முடியாது” என்றாள் பட்டென்று.
“சிவா வேண்டாம்மா! அமைதியா இரு” என்றார் ரேணுகா.
“நீங்க கொஞ்ச நேரம் அமைதியா இருங்க. உங்க பையன் இருந்தா, ஒன்னும் தெரியாத மாதிரி அமைதியா இருக்க வேண்டியது. அவர் இல்லைன்னா இஷ்ட்டத்துக்கு பேச வேண்டியது. ஏன் அவர் இருக்கும் போது இப்படி பேச வேண்டியது தானே?” என்றாள் சிவா. ஒண்ணுமே இல்லாத விஷயம் கூட இந்த வீட்டில் பெரிசாக பேசப்படுவதைப் போன்ற எண்ணம் அவளுக்கு.
“அப்ப நான் இந்த வீட்ல எதுவுமே பேசக் கூடாதா அண்ணி” என்றார் மேகலை.
“ஏன் பேசக் கூடாது? நல்லா பேசுங்க, ஆனா நல்லதை மட்டும் பேசுங்க” என்றாள் பட்டென்று. மணிமேகலை அவளை முறைக்க,