சொன்னது போலவே அன்றிரவு உணவு முடிந்த நேரம் முதலில் தன் மூத்த மகளிடம் விசாரணையைத் தொடங்கினார். உடன் அவரது மனைவியும் இருக்க, மருமகன் அன்று காலையில் தன்னிடம் பேசியது மொத்தமும் கூறி முடிக்க, தமிழினிக்கு செயலில் கொதித்தது.
தனது கோபத்தைக் கட்டுப்படுத்தியவளாக அவள் அமர்ந்திருக்க, “உன்கிட்ட மாப்பிள்ளை இது விஷயமா பேசி இருந்தாரா?” என்று மகளிடம் விசாரித்தார் தந்தை.
“பேசினாங்கப்பா” என்று அவள் ஒரு வார்த்தையில் முடிக்க,
“இதை வச்சு தான் உனக்கும் மாப்பிள்ளைக்கும் சண்டையா” என்றார் அன்னை. தந்தையும் மகளின் முகம் பார்க்க, “ம்மா… சண்டையெல்லாம் இல்ல. ஏதோ கோபம் அவ்ளோதான்” என்று சமாளித்தாள் மகள்.
சங்கரி தன் கணவரை பார்க்க, “நீ என்ன நினைக்கிற தமிழு” என்றார் தணிகாசலம்.
“நான் நினைக்க என்னப்பா இருக்கு. இனியா படிப்பு இருக்கு தானே. அதோட அவ இப்போ கல்யாணத்துக்கு தயாரா இல்லையே. அவ படிச்சு முடிச்சு வேளைக்கு போகணும்னு வாய் ஓயாம சொல்லிட்டு திரியுறா. அவகிட்ட எப்படிப்பா இதை பேச முடியும்? அதோட, எனக்கு செல்வாவை நினைச்சும் கொஞ்சம் யோசனையா தான் இருக்கு. அந்த பொண்ணை விரும்பி இருக்காருப்பா. இப்போ அவரோட மனநிலை என்னனு தெரியாதே. எல்லாரும் சேர்ந்து பேசி, பொண்ணை கொடுத்துட்டாலும், வாழ வேண்டியது அவங்க தானே” என்றாள் தமிழ்.
அவள் பேச்சிலும் நியாயம் இருப்பதை உணர்ந்தாலும், “நீ சொல்றது நியாயம் தான் தமிழு. ஆனா, அதுக்காக அந்த பிள்ளைக்கு கல்யாணமே பண்ணாம இருக்க முடியாது இல்ல. அவனும் நம்ம குடும்பத்து பிள்ளை தானே. ” என்று சங்கரி கேட்க,
“ம்மா… நீ என்ன உன் மாப்பிள்ளை சொல்லிட்டாருன்னு பொண்ணு கொடுக்க தயாராகிட்டியா” என்றாள் தமிழ்.
“இல்லடி” என,
“ப்பா… எதுவா இருந்தாலும் நிதானமா யோசிச்சு முடிவு எடுங்க. நீங்க எனக்காகவெல்லாம் பார்க்க வேண்டியது இல்ல. இனியா கிட்ட பேசுங்க. அவ விருப்பம் என்னனு கேட்டுட்டு உங்க மருமகன் கிட்ட பேசுங்க” என்றாள் அவள்.
“அதுவும் சரிதான்” என்று சில நிமிடங்கள் யோசித்த தணிகா, இனியாழை அழைக்க, அவள் அறையிலிருந்து வந்து தந்தையின் அருகில் அமர்ந்தாள் மகள்.
கிருஷ்ணா அவள் வெளியே வரவும், அழுகையைத் தொடங்க, “நீ போக்கா” என்று அவளை அனுப்பி விட்டவள் தந்தையின் அருகிலே அமர்ந்து, “சொல்லுங்கப்பா” என்றாள்.
“நான் சொல்றதை பொறுமையா கேட்டுட்டு உன் முடிவைச் சொல்லுடா” என்றவர், காலையில் மருமகன் பேசியதை அவளிடமும் ஒருமுறை கூறி முடித்தார்.
கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு தலையைச் சுற்றும் உணர்வு தான். “நான் என்னடா பண்ணேன். என்னைய ஏன் இழுத்து விடறீங்க” என்று உள்ளுக்குள் அலறியபடியே அவள் அமர்ந்திருக்க,
“நீ என்னம்மா சொல்ற” என்றார் தந்தை.
“ஹான் சொல்லுங்கப்பா” என்று மகள் திணற,
“நான் மாப்பிள்ளைக்கு என்ன பதில் சொல்லட்டும்?” என்று மகளிடம் கேட்டார் அவர்.
“இல்லப்பா. படிச்சு முடிச்சுடறேனே” என்று அவள் தயங்க,
“இன்னும் ஆறுமாசம் தானேம்மா. நானே மாப்பிள்ளைகிட்ட பேசிடறேன். கல்யாணத்துக்குப் பிறகு நீ வேலைக்கு போகக்கூட ஒன்னும் பெருசா தடையிருக்காது. அந்த பிள்ளையும் சென்னையில தானே இருக்கு” என்றார் தணிகா.
தந்தை முடிவு செய்து விட்டது புரிந்தாலும், “கொஞ்ச நாள் போகட்டும்ப்பா. இப்போ இப்படி அவசரமா வேண்டாம். அட்லீஸ்ட் படிப்பை முடிச்சுட்டு பண்ணிக்கிறேன்” என,
“அப்போ உனக்கு சம்மதம் தானே. நான் மாப்பிள்ளைக்கிட்ட பேசிடவா?” என்று தந்தை கேட்டதில், திருதிருவென விழிக்க ஆரம்பித்து விட்டாள் பெண்.
அவள் பார்வையே பாவமாக இருக்க, “என்னடா” என்று தந்தை பதற,
“கொஞ்சம் பயமா இருக்குப்பா. நான் கல்யாணம் எல்லாம் யோசிக்கவே இல்லையே.”
“இதெல்லாம் ஒண்ணுமே இல்ல இனியா. எப்போ இருந்தாலும் உனக்கு கல்யாணம் செய்வோம் தானே. இப்போ மாப்பிள்ளைக்கு ஒரு சங்கடம், அதை தீர்க்க நம்மால முடிஞ்ச ஒரு விஷயம், நாம செய்யணும் தானே. அதோட அந்த பிள்ளையும் நல்லவன் தான் இனியாம்மா. என்னமோ அவன் கெட்ட நேரம் நடக்ககூடாதது எல்லாம் நடந்து போச்சு.”
“இப்போ அதை சரிசெய்ய ஒரு வழி கிடைக்கிறப்போ, அதை விட்டுடக்கூடாதுன்னு மாப்பிள்ளை நினைக்கிறார். உன் அக்கா அந்த வீட்ல வாழற வாழ்க்கைக்கு உன் மாமா தானே காரணம். அவருக்காக நாம இதை செய்யணும் தானே” என்றவர் மகளின் முகம் பார்க்க, இனியாழ் தெளியவே இல்லை.
“நான் நிச்சயமா கல்யாணம் பண்ணிக்கறேன்ப்பா. எனக்கு தனியா விருப்பம் எல்லாம் இல்ல. ஆனா, படிப்பை முடிச்சுடறேன். அதோட, கல்யாணத்துக்குப் பிறகு நிச்சயமா நான் வேலைக்கு போகணும்” என்று மகள் நிற்க,
“உன் படிப்புக்கு ஒரு குறையும் வராது இனிம்மா. அதெல்லாம் அப்பா பேசிக்குவாங்க. அதோட கல்யாணமும் உடனே முடிவு பண்ணி நாலு நாள்ல நடக்கிற விஷயம் இல்லையே. எல்லாம் பேசி முடிச்சு, நாள் குறிச்சு அப்படியே நாள் ஓடிடும். நீ சம்மதம்னு சொல்லிட்ட இல்ல. அதோட விடு” என்ற சங்கரி மகளை அவள் அறைக்கு துரத்திவிட்டார்.
“மாப்பிள்ளை சொல்றதை வச்சு பார்த்தா, உடனே கல்யாணம் வைக்கிறது போலத்தான் இருக்கும் சங்கரி. இவ படிப்பு முடியணும்னு அடமா இருக்காளே” என்று கவலை கொண்டார் தணிகா.
“அதெல்லாம் நாம பேசிக்கலாம்ங்க. நீங்க முதல்ல மாப்பிள்ளைக்கு தகவல் சொல்லுங்க. குறைந்தபட்சம் ஒரு மூணு மாசத்துக்குப் பிறகு நாள் குறிக்கச் சொல்லுங்க. அப்போ இனியாகிட்ட பேசிக்கலாம்” என்றார் சங்கரி.
தணிகாசலம் மனைவியிடம் தலையாட்டிக் கொண்டவர், அடுத்த நாளே மருமகனிடமும் தகவல் தெரிவித்துவிட, நிம்மதியாக மூச்சு விட்டு கொண்டான் அருள்.
“ரொம்ப நன்றி மாமா” என்று மருமகன் கூறிவிட,
“அட என்ன மாப்பிள்ளை நீங்க. பெரிய வார்த்தையெல்லாம் பேசிட்டு இருக்கீங்க. அதுவும் நம்ம வீட்டு பிள்ளை தானே” என்றார் தணிகா.
சந்தோஷம் மாமா” என்றவனிடம், மகளின் படிப்பு குறித்து தணிகா எடுத்துரைக்க, “அதெல்லாம் இனியாழ் விருப்பம் தான் மாமா. அவ மேல படிக்கணும்னு நினைச்சா கூட படிக்கட்டும். செல்வா செய்வான்” என்ற அருள் அவரிடம் பேச்சை முடித்துக்கொண்டு விஷயத்தை தன் தந்தையிடம் பகிர்ந்து கொண்டான்.
ராமமூர்த்தி நிதானமாக கேட்டுக் கொண்டவர், “செல்வா என்ன சொல்வானோ தெரியலையே அருள். அவன்கிட்ட பேசாம, நீ ஏன் சம்பந்தி வீட்ல பேசின?” என்றார்.
“பேசித்தான் ஆகணும்ப்பா. எதையாவது சொல்லுங்க. அவனை அங்கேயே விட்டு வைக்க முடியாது” என்று காரண காரியங்களுடன் மகன் விளக்க, ராமமூர்த்திக்கு மகன் சொல்வது தான் சரியாகப்பட்டது. அவரும் இளையவனிடம் பேச வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டார்.
இங்கே சென்னையில் காலைநேர வேலைகளை முடித்துவிட்டு நிம்மதியாக எழில் அமர்ந்த நேரம் அவரை தேடிக்கொண்டு வந்தார் அவரது இரண்டாவது ஓரகத்தி லீலாவதி.
“வாங்கக்கா” என்று அழைத்த எழிலுடன் அமர்ந்து கொண்டவர், சம்பந்தமில்லாமல் எதையோ வளவளத்துக் கொண்டிருக்க, எழில் குழப்பத்துடன் அவரை பார்த்திருக்கும்போதே, “செல்வா எப்படி இருக்கான் தமிழ். வண்டி எடுத்துட்டான் போல” என்றார் அவர்.
“அவனுக்கென்னக்கா. நல்லா இருக்கான். அவனும் தொழிலை பார்க்கணும் இல்ல.” என்றாள் எழில்.
“திவ்யாவைப் பார்த்தியா?” என்றவர் எழிலின் அமைதியில், “நடந்தது நடந்து போச்சு. அவளும் ரொம்ப நொந்து போய் தான் வந்திருக்கா எழில். யாரை குத்தம் சொல்ல முடியும்” என, அப்போதும் எழில் வாய் திறக்கவில்லை.
லீலாவே, “ஏன் எழில்… ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பினவங்க தான. இடையில நடந்ததெல்லாம் மறந்து, மறுபடியும் பேசிப் பார்த்தா என்ன? நின்னுப் போன கல்யாணம் நடந்தா எல்லாருக்கும் நல்லது தானே” என்று முடிக்க,
“என் தம்பியை சபையில நிற்க வச்சுட்டு ஓடிப் போனபோதே, அவ செத்துப் போயிட்டா. அவளைப் பத்தி இந்த வீட்ல பேசாதீங்க. அதோட என் தம்பிக்கு நாங்க ஏற்கனவே பொண்ணு பார்த்திட்டோம். சீக்கிரமே கல்யாணத்துக்கு பத்திரிக்கை வைக்கிறேன்” என்று முகத்தில் அடித்தது போல் எழில் பேசிவிட, லீலாவதிக்கு முகம் சிறுத்துப்போனது.