அலுவலக கேண்டீனில் குழுமி இருந்தனர் விஜயின் குழுவினர்.வருண் விஜயின் கண்களை பொத்தியவாறு அழைத்து வந்து அந்த வட்ட மேஜையின் முன் நிற்க வைக்க,அவனின் முன் ஒரு கேக்கை கீர்த்தனா வைத்தாள்.அனைவரும் தங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டு இருக்க,
“டேய் என் கண்ணை திறங்கடா…எவ்வளவு நேரம் தான் நான் இப்படியே இருக்குறது…”என்று விஜய் சத்தமிட,அப்போது தான் கண்களை திறந்தான் வருண்.தன் முன்னே தனது குழுவினர் அனைவரையும் கண்டவன் நட்புடன் புன்னகைத்தான்.அவனுக்கு டீம் லீடராக பதவி உயர்வு கிடைத்திருந்தது.அதை கொண்டாடவே இந்த பார்டீ.
“டேய் எல்லாரையும் பார்த்தது போதும்…முதல்ல கேக்க வெட்டு…”என்று வருணின் குரலில் குனிந்து கீழே பார்த்தவன் அப்போது தான் கேக் ஒன்று இருப்பதை கவனித்தான்.
“டேய் எதுக்குடா இதெல்லாம்…”என்று விஜய் கேட்க,
“என்ன விஜி…இப்படி கேட்டுட்ட….உன்னோட கடின உழைப்புக்கு கிடைச்ச முதல் வெற்றி அதை கொண்டாட வேண்டாமா…ம்ம் சீக்கிரம் வெட்டு…”என்று கீர்த்தனா கூற,அவளின் தலையில் செல்லமாக தட்டியவன்.மெழுகுவர்த்தியை ஊதி கேக்கை வெட்ட,
“ஓஓஓ….கூஊகூஊ……”என்று சந்தோஷ கூச்சலிட்டனர் அனைவரும்.கேக்கின் முதல் துண்டை எப்போதும் போல் அவன் கீர்த்தனாவிற்கே ஊட்ட,அதை மற்றவர்கள் மகிழ்ச்சியுடன் காண இரு கண்கள் மட்டும் பொறாமையுடன் நோக்கின.அவள் பூர்ணிமா.விஜயின் குழுவில் புதிதாக சேர்ந்திருப்பவள்,திறமையானவளும் கூட.இந்த மென்பொருள் நிறுவனத்தில் பணியில் சேர்ந்ததில் இருந்து அவளுக்கு விஜயின் மீது ஒருவித பிடித்தம்.
அலையலையான கேசம்,எப்போதும் புன்னகை சிந்தும் அதரங்கள்,வேலையில் விஜய் காட்டும் ஆளுமை என ஆண்களுக்கே உரிய இலக்கணமாக திரிபவனை யாருக்கு தான் பிடிக்காது.அதே போல் தான் அவன் பூர்ணிமாவையும் கவர்த்திருந்தான்.பூர்ணிமாவும் மாநிறத்திற்கு சற்று கூடுதல் நிறம் பார்பவர்களை கவர்ந்திழுக்கும் அழகியே.நிறுவனத்தில் பலரின் கண்கள் இவளின் மீது என்றால் இவளின் கண்களோ விஜயின் மீது தான் அதுவும் யாரும் அறியா வண்ணம் தான் பார்ப்பாள்.தன்னை யாரும் குறைத்து மதிப்பிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்பாள்.
இவ்வாறு பூர்ணிமா விஜயின் புற அழகில் மயங்கியிருக்க,அவளுக்கு மேலும் இனிக்க செய்யும் விஷயமாக நிகழ்ந்தது தான் அவனின் குழுவிலேயே அவளும் இடம் பெற்றது அவளே எதிர்பாராத ஒன்று.அவனின் குழுவில் அவள் இணைந்து இதோ ஒருவாரம் கடந்துவிட்டது.இந்த ஒருவாரத்தில் அவள் கண்டறிந்த ஒரே விஷயம் கீர்த்தனா விஜயின் உற்ற தோழி,அவளுக்கு தான் அவன் எப்போதும் முக்கியத்துவம் கொடுப்பான் என்பது.
எப்போதும் சிரித்த முகமாக மருண்ட விழிகளுடன் வலைய வரும் கீர்த்தனாவைக் கண்டாள் பூர்ணிமாவுக்கு சற்று எரிச்சலாக வரும்.அதுவும் அவள் விஜயை விஜி விஜி என்று அழைக்கும் போது எல்லாம் இழுத்துவைத்து அறையலாம் போல் இருக்கும் இருந்தும் தன்னை முயன்று அடக்கிக் கொள்வாள்.இன்றும் அதே போல் அவளுக்கே அங்கு முதல் கேக் துண்டை ஊட்ட பூர்ணிமாவுக்கு காதில் இருந்து புகை வராத குறைதான்.எப்போதும் அமைதியாக இருப்பவளுக்கு இன்று அதுபோல் இருக்க மனதில்லை அதனால்,
“என்ன விஜய்….கீரத்திக்கு மட்டும் தான் கேக்கை ஊட்டிவிடுவீங்களா எங்களுக்கு யார் கொடுப்பா…”என்று பூர்ணிமா கேட்க,விஜய் பதில் கூறும் முன்,
“உனக்கும் உண்டு இந்தா…”என்று ஒரு பிளேட்டில் அவளுக்கு கேக்கை கொடுத்தாள் கீர்த்தனா.தன் உள்ளே எழுந்த சினத்தை அடக்கியபடி அவளிடம் இருந்து பிளேட்டை வாங்கினாள் பூர்ணிமா.அனைவருக்கும் கேக்கை பகிர்ந்து கொடுத்துக்கொண்டிருந்த விஜய்க்கு ஏதோ மனது உந்த தன் கண்களை சுழற்றினான்.
அது காலை நேரம் என்பதால் கேண்டீனில் யாரும் இல்லை.நாம் தான் ஏதோ நினைத்து தேடுகிறோம் என்று நினைத்துவிட்டு மீண்டும் தனது நண்பர்களுடன் இணைந்து கொள்ள,மீண்டும் அதே உணர்வு அவனை ஆட்கொண்டது.ஏதோ யோசனையுடன் தன் எதிர் புறத்தை நோக்க அங்கு இவர்களையே வெறித்தபடி நின்றிருந்தாள் மிருணாளினி.அவளது கண்களோ சற்று கலங்கி இருப்பது போல் இருந்தது.
முதல் முறையாக விஜயின் மனம் மிருணாளினியைக் கண்டு சலனப்பட்டது.விஜய் பார்பதை முதலில் கவனிக்காத மிருணாளினி மனதின் உந்துதலில் அவனைக் காண அவனும் அவளை தான் பார்த்துக் கொண்டு இருந்தான்.இருவரின் கண்களும் ஒருவினாடி ஒருவருள் ஒருவர் கலந்தது.அவளிடம் இருந்து தன் பார்வையை திருப்பவது மிகவும் கஷ்டமாக இருப்பது போல் உணர்ந்தான் விஜய்.இருவரின் பார்வை யுத்தத்தை முதலில் முடிவுக்கு கொண்டுவந்ததது மிருணாளினி தான்.
சற்று நேரத்திற்கு எல்லாம் தன்னை சுதாரித்துக் கொண்ட மிருணாளினி தன் பார்வையை திருப்பிக் கொண்டு சென்றுவிட்டாள்.சோர்ந்த முகத்துடன் போகும் அவளைக் கண்டவனுக்கு சற்று முன் இருந்த மலர்ச்சி முழுவதும் மறைந்தது.
தனது இருக்கைக்கு வந்து அமர்ந்த மிருணாளினிக்கு மனதில் ஏதோ அழுத்துவது போல் உணர்வு.முயன்று தன்னை மீட்டவள் எப்போதும் தனக்குள் கூறிக் கொள்ளும் வரிகளை கூறினாள்.
“இந்த உலகத்தில எதுவும் நிரந்திரம் இல்லை….”என்று தனக்குள் கூறிக் கொண்டவள்.தன் வேலைகளை தொடங்கினாள்.ஆனால் ஐந்து நிமிடத்திற்கு மேல் அவளாள் அதில் கவனத்தை வைக்க முடியவில்லை.தன்னை போல் அவளது மனம் ஒருவாரம் முன் நடந்த நிகழ்வுக்கு சென்றது.விஜயிடம் பேசிவிட்டு தன் வீட்டிற்கு வந்தவளுக்கு அத்தனை நாள் அடக்கி வைத்திருந்த அழுகை எல்லாம் சேர்த்து வைத்து அழுது தீர்த்தாள்.
தனது சோகம்,துக்கம் அனைத்தையும் அழுகையில் கரைத்தவள்.ஒருவாறு தன்னை சமன் செய்து கொண்டு தனது அன்றாட வேலைகளை செய்ய,அவளது அலைபேசி இடைவிடாது ஒலித்துக் கொண்டிருந்தது.அதை எடுத்தவள் யார் அழைப்பது என்று பார்த்தாள் கீர்த்தனா தான் தொடர்ந்து அழைத்துக் கொண்டிருந்தாள்.யாரிடமும் இப்போது பேசும் எண்ணம் இல்லை அதனால்,
“ப்ளீஸ்….டோன்ட் டிஸ்ரப் மீ கீதூ….ஐ வில் டாக் டூ யூ லேட்டர்…..”என்று அவளது எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டவள் சோர்ந்து போய் தன் படிக்கையில் விழுந்தாள்.சில நிமிடங்கள் கழித்து குறுஞ்செய்தி வந்திருக்கான ஒலி எழுப்ப,கீர்த்தியாக தான் இருக்கும் என்று பார்க்க,அவளது டீல்லிடம் இருந்து செய்தி வந்திருந்தது.அவளை வேறு புராஜக்ட்டிற்கு மாற்றிவிட்டதாக அதற்கான மின்னஞ்சலில் படிவம் அனுப்பட்டுள்ளதாக தகவல் அனுப்பியிருந்தார்.இதை ஓரளவிற்கு அவள் ஊகித்து இருந்ததால் அவளுக்கு அது பெரிய விஷயமாக தெரியவில்லை.
மனது கீர்த்தனா ஏதாவது செய்தி அனுப்புவாளா என்று எதிர்பார்க்க அவளோ அனுப்பவே இல்லை.ஆனால் தான் அனுப்பியதை பார்த்ததிற்கான அறிகுறி மட்டும் இருந்தது.மனது வலித்தது குறுகிய காலத்தில் கீர்த்தனாவிடம் தன் தாயிடம் பெற முடியாத அன்பை உணர்ந்திலாலோ என்னவோ அவளை மிகவும் மனம் தேடியது.தான் பேச வேண்டாம் என்றால் அவள் பேசமாட்டாளாமா என்று சிறுபிள்ளை தனமான கோபம் வந்தது அவளின் மீது.
இதோ ஒருவாரம் முடிந்துவிட்டது கீர்த்தனா மிருணாளினியிடம் நேரடியாக பேசி ஆனால் காலை எழுந்தும் குறுஞ்செய்தி மட்டும் அனுப்பிவிடுவாள்.சாப்பிட்டாயா,என்ன செய்யற,இப்ப எப்படி இருக்க என்று கேட்பாள் ஆனால் மிருணாளினி பார்ப்பாளே தவிர பதில் ஏதும் அனுப்பமாட்டாள்.கீர்த்தனாவும் மிருணாளினி பதில் அனுப்புவாள் என்று நினைக்கமாட்டாள் ஆனால் குறுஞ்செய்தி அனுப்புவதை மட்டும் நிறுத்தவில்லை.
கீர்த்தனாவின் மீது எப்போதும் இருக்கும் பிடித்தம் இப்போது மேலும் கூடிகொண்டிருப்பதை மட்டும் மிருணாளினி உணரந்தாள்.இவ்வாறு அவள் தன் எண்ணவோட்டங்களில் இருக்க இன்றய கொண்டாத்தை கண்டவளுக்கு மனது மீண்டும் பழைய நிலையை அடைந்தது போல் உணர்வு.கீர்த்தனாவும் தன்னை புறக்கணித்துவிட்டது போல் மனது வலிக்க செய்தது.
“அவ உன்னை ஒதுக்கினாளா….பைத்தியகாரி நீ தான அவளை ஒதுக்கி வச்சி இருக்க….”என்று அவளது மனசாட்சி காறி உமிழ்ந்தது.இருந்தும் சிறு குழந்தைகள் தவறை செய்துவிட்டு இல்லை என்று பிடிவாதம் செய்யுமே அதேபோல் இருந்ததது மிருணாளினியின் நிலை.தன்னை யாரும் உரிமையாக திட்டவோ,கொஞ்சவோ மாட்டார்களா என்று ஏங்கி தவிக்க ஆரம்பித்தாள்.
விஜய்க்கு மிருணாளினியை கண்டது முதல் உற்சாகம் முழுதும் வடிந்துவிட்டது போல் இருக்க நண்பர்களுடன் சிறிது நேரம் இருந்தவன் வேலை இருப்பதாக கூறிக் கொண்டு தனது இருக்கைக்கு வந்துவிட்டான்.தனது இருக்கையில் கண்களை மூடி அமர்ந்திருந்தவன் முன் மிருணாளினியின் கலங்கிய தோற்றம் தெரிய,மனது மீண்டும் மன்னிப்பை வேண்டியது.ஆனால் அவளிடம் நேரிடையாக கேட்க மனம் வரவில்லை.அதற்கு காரணம் அவளது அலட்சியம்.விஜய் இரண்டொருமுறை அவளிடம் பேச விழைந்தான் தான் அவள் தான் முகத்தை திருப்பிக் கொண்டு சென்றுவிட்டாள்.அதனால் விஜய்க்கு எப்போதும் இருக்கும் ஈகோ மீண்டும் தூண்டிவிடப்பட,
“சரி தான் போடி….”என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன் அதன் பின் அவளை நெருங்க முயற்சிக்கவில்லை.இதோ இன்று அவளது கலங்கிய விழிகள் அவனை மீண்டும் சலனப்படுத்த தன்னை மதிக்கதவள் மீது தனக்கு வரும் உணர்வினை மிகவும் வெறுத்தான்.இவ்வாறு தனது மனதுடன் புலம்பியவனை மீண்டும் வேலைகள் தனக்குள் இழுத்துக் கொண்டன.அவனும் மிருணாளினியின் நியாபகங்களில் இருந்து வெளிவர தனது வேலையை ஒரு திறவுகோலாக பயன்படுத்தி தன்னை அவளிடம் இருந்து மீட்க நினைத்து அதில் ஓரளவிற்கு வெற்றியும் கண்டான் என்று தான் கூறவேண்டும்.
விஜய் மிருணாளினியின் நினைவில் இருந்து வெளிவந்துவிட்டதாக நினைத்து கொண்டு இருக்க ஆனால் அவ்வாறு இல்லை என்பது அவனுக்கு அடுத்தவாரமே புரிந்தது.அதுவும் கீர்த்தனா இருநாட்களாக மிருணாளினியை காணவில்லை என்று கூறும்போது அவள் ஏதோ விளையாடுகிறாள் என்று நினைத்தவனுக்கு இல்லை அவள் உண்தமையில் சென்னையில் இல்லை என்பதை அறிந்தபின்,
“அய்யோ…எங்க போனா விஜி….நான் தான் தப்பு பண்ணிட்டேன்…”என்று கீர்த்தனா வாய்விட்டு கதறியதைவிட,
“நிஜமாவே போயிட்டாளா…எங்க போனா….ஏன்டி போன….”என்று தன் மனதுடன் விஜய் கதறிதான்விட்டான்.ஆனால் இவர்களை கதறவிட்டளோ ஒரு இடத்தில் தன்னிலை மறந்த நிலையில் மயக்கத்தில் இருந்தாள்.