“அவ்வளவு ஆசை இருக்குறவர் இங்க கிளம்பி வர வேண்டியது தானே? யாரு உங்களை அங்கயே இருக்கச் சொன்னதாம்?”, என்று ஏக்கமும் எரிச்சலுமாக கேட்டாள். அவள் குரலில் இருந்த ஏக்கத்தை உணராதவன் “சரி நான் வைக்கிறேன். எனக்கு வேலை இருக்கு”, என்று சொல்லி வைத்து விட்டான்.
அவன் பேச்சால் கலங்கத் துவங்கிய கண்ணீரை துடைத்து விட்டு தன்னுடைய சீட்டில் அமர்ந்தவள் அடுத்த பீரியட் எப்போது என்று பார்க்க ஆரம்பித்தாள். அவளுக்கு மட்டும் அவனை எண்ணி ஆசை இருக்காதா?
அன்றைய நாள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக கடந்தது. ஆனால் யாருமே சந்தோஷமாக இல்லை என்று மட்டும் சொல்லலாம். அன்று இரவு உணவை முடித்து விட்டு மொட்டை மாடியில் படுத்திருந்தான் சரவணன். சிறிது நேரத்தில் எழுந்து நடை பயின்றான். முழு நிலா காய்ந்து கொண்டிருந்தது. தன்னுடைய கையில் செல்லை எடுத்து மணி பார்த்தான். இரவு பதினொரு மணி என்று காட்டியது அது.
ஊரே உறங்கி இருக்க இவன் மட்டும் மொட்டை மாடி கை பிடிச் சுவரில் சாய்ந்து நின்றான். அவன் முகத்தில் வந்து மோதிய குளிர்ந்த தென்றல் கூட அவன் மன இறுக்கத்தைக் குறைக்க வில்லை. முழு நிலவும் அந்த ஏகாந்த இரவும் வண்டுகளின் ரீங்காரமும் அவனுக்கு அமைதியைத் தரவில்லை.
எப்படி முடிந்தது அவளால் என்று எண்ணியவனுக்கு அவன் தாலி கட்டிய மனைவி நினைவு வந்தது. வைஷு… வைஷ்ணவி அவனுடைய மனைவி. இப்போது இந்த நிமிடம் வேறு ஒருவனின் மனைவி. ஆம் அவனை விட்டுவிட்டு இன்னொருவனுடன் ஓடி விட்டாள்.
அவனுக்கு திருமணம் முடிந்து நாற்பது நாட்கள் ஆகி இருக்க முப்பது நாட்கள் அவனுடன் ஒரே அறையில் தங்கி இருந்தவள் இப்போது அவனை விட்டுச் சென்று பத்து நாட்கள் ஆகி இருந்தது. எங்கே சென்றாள் இப்போது எங்கே இருக்கிறாள் என்று ஒரு தகவலும் இல்லை.
வைஷ்ணவி வேறு யாரும் அல்ல. அவனது சொந்த தாய் மாமனின் மகள் தான். வசந்தாவின் உடன் பிறந்தவர் தான் மூர்த்தி. அவரின் ஒரே மகள் தான் வைஷ்ணவி. சொந்தம் விட்டுப் போகக் கூடாது என்று தான் பெரியவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தார்கள்.
யாரும் அவளுடைய சம்மதத்தை கேட்க வில்லை என்று இப்போது அவனுக்கு புரிகிறது. ஆனால் அவள் சொல்லி இருக்கலாமே? “அத்தான் எனக்கு உன்னை பிடிக்கலை. இந்த கல்யாணத்தை நிறுத்து”, என்று அவனிடம் சொல்லி இருக்கலாமே? அதை விட்டுவிட்டு அவன் கழுத்தை அல்லவா அறுத்து விட்டுச் சென்று விட்டாள்?
திருமணம் வரைக்குமே அவனுக்கும் அவள் மீது காதல் ஈடுபாடு எல்லாம் இல்லை. அவன் மனதில் இருந்த விஷயமும் தீர்மானமும் வேறு. அவனது அன்னை வசந்தா வைஷ்ணவிக்கும் அவனுக்கும் திருமணம் செய்யப் போறதைப் பற்றிச் சொல்ல அவன் அன்னைக்கு கொடுத்த பதில் வேறு. அதைக் கேட்டு கொதித்து போன வசந்தா மகனை அன்பு வலையில் சிக்க வைத்து இந்த திருமணத்தை நடத்தி வைத்தாள்.
திருமணத்திற்கு பிறகு மனைவி என்ற உரிமை உணர்வு அவனுக்கு வைஷ்ணவி மேல் வந்திருந்தது. ஆனால் காதல் எல்லாம் மலர்ந்து விட வில்லை. சிறு வயதில் இருந்து அவளைப் பார்த்து பழகி இருந்ததாலா என்னவோ? அவள் மீது எந்த ஈர்ப்பும் அவனுக்கு உருவாக வில்லை.
திருமணம் முடிந்த பிறகு இருவருக்கும் ஜாதகத்தில் பிரச்சனை இருந்ததால் ஒரு மாதத்துக்கு சாந்தி முகூர்த்தத்தை தள்ளிப் போட்டிருந்தார்கள். அதில் அவனுக்கு எந்த ஏமாற்றமும் இருக்க வில்லை. கொஞ்சம் மனதைத் தேற்ற நாட்கள் கிடைத்து விட்ட நிம்மதி தான் அவனுக்கு.
சரியாக அடுத்த நாள் சாந்தி முகூர்த்தம் என்று வீட்டில் சொல்லப் பட்டிருக்க அவனுக்குமே சிறு சங்கடமும் நாளை இரவு என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது என்பது தான் உண்மை. இந்த எண்ணத்தால் அவனால் இன்று இரவு அவளுடன் ஒரே அறையில் உறங்க முடியும் என்று தோன்ற வில்லை. அதனால் “வைஷு ரொம்ப புழுக்கமா இருக்கு. நான் மொட்டை மாடில படுக்குறேன். நீ தூங்கு”, என்று சொல்லி விட்டுச் சென்று விட்டான். அன்று தான் அவன் நன்கு தூங்கியது.
ஆனால் காலையில் அவன் எழுந்தது அன்னையின் கதறல் சத்தம் கேட்டு தான். கண் விழித்தவன் கீழே இறங்கிச் சென்றான். அம்மாவுக்கு என்ன ஆயிற்று என்று அவனுக்கு குழப்பமாக இருந்தது.
“பாவி மக இப்படி பண்ணிட்டு போய்ட்டாளே டா? ஐயோ என் மகன் வாழ்க்கையை நானே சீரழிச்சிட்டேனே?”, என்று கண்ணீருடன் புலம்பினாள் வசந்தா.
“அம்மா”, என்று அவன் கத்த “அம்மா பொய் சொல்லலை டா சரவணா. இங்க பார் அவ எழுதி வச்சிட்டு போன லட்டர். உங்க ரூம் கதவு திறந்து இருக்கேன்னு தான் தட்டிப் பார்த்தேன். சத்தம் இல்லைன்னதும் உள்ள போய் பாத்தா அவளைக் காணும். இந்த லட்டர் தான் கிடைச்சது”, என்று நீட்டினாள் வசந்தா.
நடுக்கத்துடன் அதை எடுத்துப் படித்துப் பார்த்தான். “என்னை மன்னிச்சிரு அத்தான். காலேஜ்ல படிக்கும் போது ரகுன்னு ஒருத்தரை நான் லவ் பண்ணினேன். லவ் பத்தி வீட்ல சொன்னப்ப அப்பா அவரை வெட்டிருவேன்னு மிரட்டினாங்க. அதனால தான் என்னால யார் கிட்டயும் உண்மையை சொல்ல முடியலை. இந்த ஒரு மாசமும் உன் கிட்டயும் உண்மைய சொல்ல தான் நினைச்சேன். ஆனா நீயும் அப்பா மாதிரியே இருப்பியோன்னு பயம்,. என்னால ரகுவை மறந்துட்டு உன் கூட வாழ முடியாது. அதனால நான் போறேன். என்னை யாரும் தேடாதீங்க. இப்படிக்கு வைஷ்ணவி”, என்று முடித்திருந்தாள்.
அதைப் படித்து விட்டு இடிந்து போய் அமர்ந்தான். அப்போது உள்ளே வந்த வெற்றிவேல் மனைவியின் கண்ணீரையும் மகனின் இடிந்த தோற்றத்தையும் கண்டு திகைத்து விட்டார்.
“வசந்தா என்ன ஆச்சு? சரவணா என்ன டா அச்சு? ஏன் இப்படி இருக்கீங்க ரெண்டு பேரும்?”
“என்னங்க நாம மோசம் போய்ட்டோம். இந்த கேடு கெட்ட சிறுக்கியை என் மகனுக்கு கட்டி வச்சி அவன் வாழ்க்கையை அழிச்சிட்டேனே?”
“என்ன சொல்ற வசந்தா?”
“இந்த வைஷ்ணவி எவன் கூடவோ ஓடிப் போயிட்டாங்க. எங்க அண்ணன் நம்மளை மோசம் பண்ணிட்டார்”, என்று சொல்லி மகன் கையில் இருந்த லட்டரை அவரிடம் நீட்ட அதை வாங்கிப் படித்த வெற்றிவேலின் முகம் கோபத்தால் சிவந்தது. உடனே மூர்த்தியை போனில் அழைத்தார்.
அதை எடுத்த மூர்த்தி “சொல்லுங்க மாப்பிள்ளை”, என்றார்.
“உன் பொண்டாட்டியை கூட்டிட்டு வீட்டுக்கு வா யா”, என்று சொல்லி விட்டு வெற்றிவேல் போனை வைக்க மூர்த்தி திகைத்து விட்டார்.
அவர் முகம் ஒரு மாதிரி இருக்கவும் அவர் மனைவி மங்கை “என்னங்க ஆச்சு?”, என்று கேட்டாள்.
“வெற்றிவேல் மாப்பிள்ளை பேசினார் மங்கை. ஒரு மாதிரி மரியாதை இல்லாம பேசின மாதிரி தோணுச்சு. எப்பவும் மச்சான் மச்சான்னு பேசுறவர் இப்ப வாயான்னு சொல்றார். இப்ப நம்ம ரெண்டு பேரையும் வீட்டுக்கு வரச் சொல்றார்”
“அப்படியா? அண்ணா அப்படி எல்லாம் பேச மாட்டாங்களே. வைஷ்ணவி ஏதாவது தப்பு பண்ணிட்டாளா? சரி வாங்க போய் பாத்துட்டு வருவோம்”, என்று மங்கை சொன்னதும் இருவரும் கிளம்பினார்கள். அவர்கள் போவதற்குள் சக்திவேல், சாந்தி, பூர்ணிமா மூவருமே அங்கு இருந்தார்கள்.
அவர்களும் நடந்ததைக் கேட்டு அதிர்ந்து தான் போனார்கள். அண்ணனைக் கண்டு பூர்ணிமா கண்ணீர் விட்டு நின்றாள். யாருமே இப்படி வைஷ்ணவி வீட்டை விட்டு ஓடிப் போவாள் என்று எதிர் பார்க்கவே இல்லை.
அனைவரும் கண்ணீருடன் நிற்க திகைப்பாக வீட்டுக்குள் வந்தார்கள் மங்கையும் மூர்த்தியும். அவர்களை கண்டு ரவுத்திரமாக எழுந்து நின்ற வசந்தா “ஏன் அண்ணா இப்படி பண்ணின? உனக்கு நாங்க என்ன கெடுதல் செஞ்சோம்? என் கூட பிறந்தவன்னு தானே நீ கேட்ட உடனே உன் பொண்ணை என் மகனுக்கு கட்டி வச்சோம். இப்ப அவனை விட்டுட்டு அவ ஓடிப் போட்டா. இப்ப என் மகனுக்கு நீ என்ன நியாயம் செய்யப் போற?”, என்று கேட்க இருவரும் அதிர்ந்து போனார்கள்.
மங்கை தலையில் அடித்துக் கொண்டு அழ மூர்த்தி மௌனமாக கண்ணீர் விட்டார்.