அத்தியாயம் 12

வலி தரும் வார்த்தைகளை

வீசிச் செல்வது ஏனடி சகியே?!!!

விசாலத்துக்கும் அதிர்ச்சி தான். ஆனால் அது ஆனந்த அதிர்ச்சி. அவர்களின் மகள் வாழ்க்கையில் விடிவுகாலம் வந்து விட்டதா? இருவர் முகமும் மலர்ந்து போனது.

“ரெண்டு பேரும் வாழ வேண்டிய வயசுல வாழ்க்கையை இழந்துட்டு நிக்குறாங்க. ரெண்டு பேருக்கும் சின்ன வயசு. கல்யாணம் ரெண்டாவதுன்னாலும் உங்க பொண்ணும் மாப்பிள்ளை கூட வாழலை. அதே மாதிரி என் மாப்பிள்ளையும் என் பொண்ணு கூட வாழலை. அவங்களை சேத்து வச்சா நல்லா இருக்கும்னு எனக்கு தோணுச்சு. அதான் கேக்க வந்தேன்“, என்றார் மூர்த்தி.

“இப்படி ஒரு விஷயம் நீங்க கேக்க வந்ததுக்கு நான் உங்க காலுல விழுந்து கும்பிடனும்”, என்று குற்றாலம் சொல்ல அவர்கள் முகம் மலர்ந்தது.

“என்னோட பாவம் தான் என் பொண்ணை பிடிச்சிருச்சு. அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையாதான்னு தான் ஒவ்வொரு நிமிசமும் துடிச்சிட்டு இருக்கேன். அதுவும் மாப்பிள்ளை நம்ம சரவணன்னா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. எனக்கு பரிபூரண சம்மதம்”, என்று சொன்னார் குற்றாலம்.

“அவசரப் படாதீங்க. வெண்மதி கிட்டயும் கேட்டுட்டு சொல்லி அனுப்புங்க”, என்றார் வெற்றிவேல்.

“என் பொண்ணு கிட்ட கண்டிப்பா கேக்குறேன். சரவணன் என்ன சொன்னாப்ல?”

“அவன் சரின்னு சொன்னதுனால தான் நாங்க கேக்க வந்தோம். நீங்க பொண்ணு கிட்ட பேசிட்டு தகவல் சொல்லுங்க. அப்புறம் நாங்க முறைப்படி பொண்ணு பாக்க வரோம்”, என்று சொன்ன வெற்றிவேல் எழுந்து கொண்டார்.

தன்னுடைய எண்ணை குற்றாலத்திடம் கொடுத்த மூர்த்தியும் அவர்களிடம் இருந்து விடை பெற்றார். மூவரும் சொல்லி விட்டு வீட்டுக்கு வந்தார்கள்.

அவர்கள் சென்றதும் “விசாலம் நம்ம பொண்ணுக்கு விடிவு காலம் வந்துருச்சா டி?”, என்று கேட்டார் குற்றாலம்.

“ஆமாங்க, எனக்கும் சந்தோஸமா இருக்கு. பையன் ரொம்ப அழகா இருக்கான். நல்ல குணமும் கூட”

“ஆமா டி, பையன் தங்கம். ஓரளவு வசதியானவங்க தான். இவனை முன்னாடியே நம்ம வெண்மதிக்கு பாத்திருக்கணும். நான் தான் நம்மளை விட கோடீஸ்வரங்க வேணும்னு ஆசைப் பட்டு என் மக வாழ்க்கையைத் தொலைச்சிட்டேன். ஆனா அவர் அல்ப ஆயுசுல போய்ட்டார்”

“எல்லாம் விதிங்க. வேற என்ன செய்ய?”

“ஆமா டி”

“சரி அந்த தம்பி நம்ம பொண்ணைக் காப்பாத்தினான்னு சொன்னீங்களே? அது என்ன விஷயம்?”, என்று விசாலம் கேட்க “ஐயையோ இவ இருக்குறதை மறந்து உளறிட்டேனே?”, என்று எண்ணிக் கொண்டு நடந்ததைச் சொன்னார்.

அதைக் கேட்டு அதிர்ந்து போனாள் விசாலம். “இவ்வளவு பெரிய விஷயத்தை என் கிட்ட இருந்து மறைச்சிட்டீங்களே? எல்லாம் நீங்க செஞ்ச பாவம் தானே?”, என்று கணவனை ஒரு மூச்சு திட்டித் தீர்த்தாள். அவள் திட்டுகளை வாங்கிக் கொண்டு அமர்ந்திருந்தார் குற்றாலம்.

“உங்க கூட இருந்தா என் பொண்ணுக்கு பாதுகாப்பு இல்லை. அவளுக்கு சீக்கிரம் கல்யாணம் நடக்கணும். ஏங்க வெண்மதி இதுக்கு சம்மதிப்பாளா? அவ மனசுல என்ன இருக்குன்னே எனக்கு தெரியலைங்க. அவ புருஷன் செத்ததுக்கு இப்ப வரைக்கும் ஒரு சொட்டு கண்ணீர் கூட சிந்தலை. என்னால அவளை புரிஞ்சிக்கவே முடியலைங்க. அவளைக் கூட்டிட்டு வரும் போது கொஞ்சம் பொறுமையா அவ கிட்ட விஷயத்தைச் சொல்லுங்க”

“சரி டி, வீட்டுக்கு வந்த பிறகே அவ கிட்ட பேசுறேன்”, என்று சொன்ன குற்றாலம் மகளை அழைக்கச் சென்றார்.

வீட்டுக்கு வந்ததும் எப்போதும் போல அவள் அறைக்குள் முடங்கப் போக “பாப்பா”, என்று அழைத்தார் குற்றாலம்.

“சொல்லுங்க பா”

“உனக்கு ஒரு வரன் வந்துருக்கு டா. பையன் நல்ல பையன்”, என்று அவர் ஆரம்பிக்க “அந்த பேச்சே வேண்டாம் பா”, என்றாள் வெண்மதி.

“எத்தனை நாள் நீ தனியா இருப்ப மா?”

“எனக்கு பழகிருச்சு பா. இன்னொரு வலியை எல்லாம் என்னால தாங்க முடியாது. ரெண்டாவது கல்யாணம் எல்லாம் வேண்டாம் பா”

“என்ன டி வேண்டாம்? எத்தனை நாள் இப்படி தனியாவே இருப்ப? உனக்குனு குடும்பம் குழந்தைகள்ன்னு வேண்டாமா? உன்னை இப்படியே விட்டுட்டு போனா எங்க கட்டை கூட வேகாது டி. நாங்க உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க தான் போறோம்”, என்றாள் விசாலம்.

“அப்படின்னா நான் செத்துப் போறேன்”, என்று வெண்மதி சொல்ல பெற்றவர்கள் இருவரும் அதிர்ந்து போனார்கள்.

“என்ன வார்த்தை சொல்ற வெண்மதி?”, என்று கேட்டார் குற்றாலம்.

“என்னை வேற என்னப்பா சொல்லச் சொல்றீங்க? முதல்ல கல்யாணம் வேண்டாம்னு அம்மா கிட்ட சொன்னப்ப அவங்க கேக்கலை. உடனே சரின்னு மண்டையை ஆட்டினேன். இப்ப மறுபடியும் என்னால…. அதெல்லாம் முடியாது… நான் உங்களுக்கு பாரமா இருந்தா சொல்லுங்க. இந்த உலகத்தை விட்டே போறேன். இனி இன்னொரு கல்யாணம் பத்தி பேசினா அப்புறம் நீங்க என்னை உயிரோட பாக்க முடியாது”, என்று சொல்லி விட்டு அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டவள் அந்த கதவிலே சாய்ந்து அமர்ந்து அழுதாள்.

ஒரே ஒரு வார்த்தை மாப்பிள்ளை சரவணன் தான் என்று அவர்கள் சொல்லி இருந்தால் வெண்மதி சரி என்று சொல்லி இருப்பாள். அவர்கள் சொல்லாதது விதியின் செயலோ என்னவோ?

மகள் அப்படிச் சொன்னதும் பெற்றவர்கள் முகம் கூம்பிப் போனது. உடனே மூர்த்தியை அழைத்து மகளுக்கு விருப்பம் இல்லை என்று சொல்லி விட்டார் குற்றாலம். அவர்களிடம் இருந்து நல்ல தகவல் வரும் என்று எதிர் பார்த்து ஏமாந்து போனார் மூர்த்தி.

சரவணன் வீட்டிலும் எதிர் பார்த்தார்கள். சரவணனுக்கும் கூட ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது என்பது தான் அப்பட்டமான உண்மை. உடனே மூர்த்தி வெற்றிவேலை அழைத்து விஷயத்தைச் சொல்ல அவருக்கு கஷ்டமாக இருந்தது. வீட்டில் உள்ள அனைவரிடமும் அவர் சொல்ல எல்லாருக்கும் வருத்தம் தான். சரவணனுக்கோ சொல்ல முடியாத அளவுக்கு ஒரு பெரிய வலி எழுந்தது.

அவன் மனநிலை புரியாமல் “அவ போனா போறா டா? ஊர் உலகத்துல அவ தான் பொண்ணா? அம்மா உனக்கு வேற பொண்ணு பாக்குறேன்”, என்று வசந்தா சொல்ல அடுத்த நொடி மகன் முறைத்த முறைப்பில் கப்பென்று வாயை மூடிக் கொண்டாள்.

“இனி இன்னொரு கல்யாணம்…. பொண்ணுன்னு ஏதாவது பேசினீங்க, வீட்டை விட்டே போயிருவேன்”, என்று அவன் கத்த அதற்கு பிறகு அந்த பேச்சே அங்கே எழ வில்லை.

விஷயம் அறிந்த சாந்தி மற்றும் சக்திவேலுக்கு கூட வருத்தம் தான். இந்த விஷயத்தை அவர்கள் பூர்ணிமா மற்றும் செந்திலிடம் மூச்சு விட வில்லை. பூர்ணிமாவுக்கு தெரிந்தால் “எதுக்கு டி என் அண்ணனை வேண்டாம்னு சொன்ன?”, என்று அவள் வெண்மதியிடம் கேட்கும் நிலை வந்து அவர்கள் நட்பு உடைந்து விடும் என்பதால் சாந்தி மகளிடம் இது பற்றி பேச வில்லை. இப்படியே நாட்கள் நகர்ந்தது.

அதற்கு பின் சரவணன் வெண்மதியைப் பார்க்க வில்லை. திருமணத்தை அவள் மறுத்த பிறகு அவளைச் சென்று பார்த்து ஒரு சங்கடத்தை அவளுக்கு கொடுக்க மனதில்லாமல் அவளைப் பார்க்க போவதை நிறுத்திக் கொண்டான்.

இப்போது பூர்ணிமாவுக்கு ஐந்தாம் மாதம் நடந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு நாள் குற்றாலம் வெண்மதியை பள்ளிக்கு அழைத்துக் கொண்டு போகும் போது நடு வழியில் கார் பிரேக் டவுன் ஆகி நின்று விட்டது.

“என்ன ஆச்சு மருது?”, என்று கேட்டார் குற்றாலம்.

“ஐயா, கார்ல என்ன பிரச்சனைன்னு தெரியலை. மெக்கானிக் கிட்ட கொடுத்து தான் சரி பண்ணனும். நான் வேலுவை பெரிய கார் எடுத்துட்டு வரச் சொல்றேன்”

“அவன் எப்ப வந்து பாப்பா எப்ப ஸ்கூல்க்கு போறது? பஸ் வேற போயிருச்சு”, என்று புலம்பிய படி நின்றார். வெண்மதியும் அவருடன் இறங்கி நின்றாள்.

இருவரும் ரோட்டில் நின்று கொண்டு அடுத்த பஸ்க்காக காத்திருந்தார்கள். அந்த வழியாக சென்ற சரவணன் அவர்களைப் பார்த்து விட்டு அவர்கள் அருகே சென்று வண்டியை நிறுத்தி “சார் என்ன ஆச்சு?”, என்று கேட்டான். அவள் புறம் செல்லத் துடித்த பார்வையை அடக்கிக் கொண்டான். அவளோ அவனையே தான் இமைக்காமல் பார்த்தாள்.

“என்ன பிரச்சனைன்னு தெரியலை பா. வண்டி நின்னுருச்சு. மருது வேலுக்கு கால் பண்ணிருக்கான். அவன் வந்துருவான். பாப்பாவுக்கு தான் நேரம் ஆகிருச்சு. தென்கலம் பஸ் இப்ப வரும் தானே?”, என்று கேட்டார் குற்றாலம். அவனை தங்கள் வீட்டுப் பெண் வேண்டாம் என்று சொல்லி இருக்க அதை எல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாமல் அவன் அக்கறையாக விசாரிப்பது அவருக்கு இன்னும் அவனை அதிகம் பிடிக்க வைத்தது.