பெண்களை முன்னால் செல்ல விட்டு ஆதவனும் விஜயும் வண்டியை நிறுத்திவிட்டு பொருட்காட்சி திடலுக்குள் நுழைந்தனர்.தேவகியும் மீனாவும் மெல்ல நடக்க இளம் பெண்கள் இருவரும் அங்குள்ள கடைகளை வேடிக்கைப் பார்த்த வண்ணம் நடந்தனர். மீனாவின் முகம் பார்த்த தேவகி…
“மதினி என்ன செய்யுது… முகமெல்லாம் இப்படி வேர்க்குது..”
“இல்ல மதினி. இப்பல்லாம் என்னால வீட்டுக்குள்ள ரெண்டு எட்டு எடுத்து வச்சாக் கூட மூச்சு வாங்குது. கால் வலி வேற படுத்தி எடுக்கு … ஆதவன் வரங்காட்டியும் தான் இங்கயே வந்தேன்… பாவம் சின்ன புள்ள ஆசைப்படுதேனு… என்னால வெளிய எங்கேயும் கூட்டிட்டு போக முடியாது…” என்றவர் அதற்கு மேல் நடக்க முடியாது அமர இடம் பார்க்க .. ஆதவன் மீனாட்சி அருகில் ஓடி வந்தான்.
தாமரையும் தில்லையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்ததால் இவர்களை கவனிக்காது முன்னே நடந்துக் கொண்டிருந்தனர். தேவகி மகளை அழைக்க அவளருகில் செல்லப் பார்க்க… கைப் பிடித்து தடுத்த மீனாட்சி ..
“மதினி சின்ன புள்ளைங்க சந்தோஷத்த கலைக்க வேண்டாம்..” எனவும் தேவகியும் ஆதவனிடம் …
“மருமவனே … நான் மதினி கூட இப்படி ஓரமா உக்காந்துக்கிறேன். நீங்க சிறுசுங்க கூட போங்க.. ” எனவும் ஆதவனும் தாயிடம் தலையசைத்து விட்டு தங்கையை பின் தொடர… கூடவே விஜயும் நடந்தான் .
தாமரையை பார்க்காமல் இருக்க விஜய் தனது விழிகளோடு போராடினான் என்பதே உண்மை. எத்தனையோப் பெண்களை இது போன்ற பஞ்சாபி உடைகளில் பார்த்திருக்கிறான் தான் … ஏன் இப்போது ஆதவனது தங்கையின் அருகில் நிற்கும் அவர்களது உறவுப்பெண் கூட அது போன்ற ஓர் ஆடையை தான் அணிந்திருக்கிறாள்.. அவர்களை பார்க்கும் போதெல்லாம் தோன்றாத ஒர் புதிய உணர்வு அவனது தங்கையை பார்க்கும் போது மட்டும் தோன்றக் காரணம்…
விழிகளை இறுக்க மூடிக் கொண்டு தன்னைக் கட்டுப்படுத்தியவாறே… “இல்ல இது தப்பு.. நண்பனோட தங்கச்சி .. எனக்கும் … ” என அடுத்த வார்த்தையை அவனால் சிறிதும் பொருத்த முடியாது திணறியவன்… ஆவுடை ஆச்சி வீட்டில் ஏறிய நேரத்திலிருந்து இங்கு வந்து இறங்கும் வரை கண்களை திறக்கவில்லை.. வரும் வழி யாவும்…
“இல்லை … பார்க்க கூடாது… ” என்ற முடிவிலேயே வந்து இறங்கி பெண்கள் புறமே திரும்பாது நடந்தான். தாமரையோ தில்லையோ யாரையும் கண்டுகொண்டதாக தெரியவில்லை. இருவரும் சிரித்துப் பேசி சலசலத்துக் கொண்டே கடைகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டே நடந்தனர்.
அவர்கள் பின்னால் வந்துக் கொண்டிருந்த ஆதவன் , “ப்ச் … இப்பல்லாம் அம்மாவுக்கு ரொம்ப மூச்சு வாங்கி நடக்கவே சிரமப்படுறதா செல்வி லெட்டர் போடுவா… டெலிபோன்ல கூட அம்மா உடல்நிலைய அதிகம் சொல்லுவா… நேர்ல பார்க்கும் போது எனக்கே ரொம்ப பயமா இருக்கு… “நண்பனின் கவலையையும் போக்கும் விதமாக அவன் தோள் மீது கை போட்ட விஜய்,
“என்னடா இது நீ தான் அவங்களுக்கே தைரியம் சொல்லணும் .. சரியாகிடும் டா.. ” என்றாலும் …
“இப்ப நான் கிளம்புறதுக்குள்ள அம்மாவுக்கு ஃபுல் பாடி செக்கப் பண்ணிட்டு தான் டா கிளம்பணும்… ” எனும் போதே ஆதவனது தங்கையை கைப் பிடித்து ஒருவளையல் கடைக்கு அழைத்துச் சென்ற தில்லை… தாமரை உடைக்குப் பொருத்தமாக வளையல்களை தேர்ந்தெடுத்து தோழியின் கைகளில் அடுக்கி அழகுப் பார்க்கவும் ஆதவன் தனது சட்டைப் பையிலிருந்து பணம் எடுத்துக் கொடுப்பதற்குள் தில்லையே தன் தோளில் போட்டிருந்த கைப்பையிலிருந்து பணம் எடுத்துக் கொடுத்து விட்டாள்.
ஆதவனும் சரியாக அதே நேரம் பணத்தை எடுத்துக் கடைக்காரரிடம் நீட்ட … தில்லைக்கோ சுறு சுறுவென்று கோபம் பொங்கி ,
” அண்ணன்கிட்ட இது நான் என் ஃபிரண்டுகு வாங்கினது… நான் தான் துட்டு தருவேன்னு சொல்லு… ” என்றவள் கடைக்காரரிடம் …
“அண்ணே இந்தாங்க..” என்றவள் தோழியை இழுத்துக் கொண்டு செல்ல… தாமரை..
“உனக்கு வாங்கலயாடி ..” எனக் கேட்க ..
“நான் தான் மேட்சா போட்டுட்டு வந்துருக்கேனே… துணி வாங்குற அன்னைக்கே அம்மாவையும் அண்ணனையும் ஃபேன்சி ஸ்டோர் கூட்டிட்டு போயிருவேன்ல… இப்ப உனக்கு வாங்குனா தான் … ” என்றவள், பின்னால் தேவகியையும் மீனாட்சியையும் காணாது நெற்றி சுருக்கியவள்,
“ஏன்டி அம்மாவும் அத்தையும் எங்கடி..” தாமரையும் அப்போதுதான் அவர்கள் இல்லாததை கவனித்து விட்டு ஆதவனைப் பார்க்க.. தங்கை வருந்தக் கூடாது என்பதற்காக…
” அம்மாவையும் அத்தையையும் ஒரு இடத்துல இருக்க சொல்லிருக்கேன் பாப்பா… அது தான் நான் வர்றேன்ல… “
தில்லையோ.. வாய்க்குள்… நீங்க வர்றது தானே கடுப்பாகுது.. இந்த அண்ணன் அது ஃபிரண்டுங்க கூட சுத்தப் போயிருச்சே…” என வாய்க்குள் தேவராஜனைக் குறித்து முனங்கினாலும் பெரியவர்களின் உடல்நிலை அறிந்தவளதாலால்…
“அது தான் ரெண்டு பாடிகார்ட்ஸ் இருக்காங்கள்ல நாம தைரியமா இருக்கலாம்.. உடம்ப பாரு என்னமோ ஆணழகன் போட்டிக்குப் போற மாதிரி தான் .. சாஜன் சல்மான் கான்னு நினைப்பு.” என்றவாறு , ஆதவனைப் பார்த்து வாய்க்குள் சிரித்துக் கொள்ள..தாமரையோ விஜயைக் கண்டு மிரண்ட பார்வை பார்த்தாலும்.. திரும்பி நடந்துக் கொண்டே தோழியிடம்
“என்னடி சாஜன் படமும் பார்த்துட்டியா..”
“அதெப்படி விடுவேன்.. வீட்ல இருந்த வீடியோ கேசட் ஒன்னு விடாம பார்த்துட்டேன்ல… என்ன நிறைய சாமி படமா அண்ணன் வச்சுருக்கு பேரைப் பார்த்ததும் அதெல்லாம் அப்புறம் பார்க்கலாம்னு விட்டுட்டேன்…”
“சாமி படம் நிறைய இருக்குதா… கொடுடி அம்மா பார்க்க ஆசைப்படுவாங்க… ” என்றவளுக்கு பதிலளித்தவாறு…
அருகிலிருந்த பிறகடைகளுக்கும் அழைத்துப் போய் தோழிக்கு நிறைய பொருட்கள் வாங்கிக் கொடுத்தாள் தில்லைநாயகி.
தன் அத்தை மகள் தன்னை ஏதோ கேலி செய்து சிரிக்கிறாள் என்பது ஆதவனுக்கு புரிய… தாமரை தன்னைப் பார்த்த பார்வை பெண்களுக்குள் தன்னைக் குறித்து ஏதோ பேசிக் கொள்கிறார்கள் என்பது விஜய்க்கும் புரிய … குழப்பங்கள் தெளிந்து தாமரையை மீண்டும் கவனிக்க ஆரம்பித்தான் விஜய் ஆனந்த்.
பின்னாடியே நடந்து வந்த இரு இளைஞர்களின் முகமும் இப்போது புன்முறுவலுடனேயே இருந்தது. ஆதவன் தில்லையை தான் கவனித்துக் கொண்டு இருந்தான். அவனது தங்கையை அவ்வளவு அழகாக கவனித்துக் கொண்டு இருந்தாள். தாமரைக்கு ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து தேர்வு செய்து.. ஏன் வரும் போது பாவடை தாவணி இரட்டை ஜடையில் இருந்த தங்கையை சடுதியில் அன்றைய நாகரீக உடையில் .. கூந்தல் அலங்காரத்தில் மாற்றியிருந்தாளே .. அதோடு ஏதோ குழந்தை கூட்டத்தில் தொலைந்து விடாமல் இருக்க குழந்தையின் கைப்பிடித்து பாதுகாப்பாக அழைத்துச் செல்வது போல் தங்கையின் கரத்தினை விடாமல் பிடித்திருந்தவளை பார்க்க ஆச்சரியமாக இருந்தது ஆதவனுக்கு.
விஜயிற்கோ தாமரையை பார்க்க கூடாது என்று இழுத்துப் பிடித்திருந்த கண்கள் அவளைத் தவிர வேறு எங்கும் பார்க்க முடியாது அவளையேப் பார்க்கத் தூண்ட… தாமரை. கடைகளை விழி விரிய வேடிக்கைப் பார்ப்பதும்.. அவள் தோழி என்ன சொன்னாலும்… செய்தாலும்… ஒத்துழைப்பு தந்து சிறு குழந்தையாக தலையசைத்துக் கேட்டு கொண்டு செயல்படுவதும் கண்ணில் விழுவதோடு விஜயின் இதயத்திலும் தாமரை செல்வி நுழைந்துக் கொண்டிருந்தாள்.
இப்படியாக இரு இளைஞர்களும் இரு பெண்களையும் கண்களோடு கருத்திலும் நிறைத்துக் கொண்டு நடத்தனர்.ஆதவன் …
“பரவாயில்லயே பாப்பாவ நல்லா பார்த்துக்கிறாளே… காலேஜ் கூட ரெண்டு பேரும் ஒன்னா சேர்ந்தா நல்லா இருக்கும் … ” என்று எண்ணமிடும் போதே அவர்கள் இருவரும் அப்பளம் … பஜ்ஜி விற்கும் கடைக்கு செல்வதைப் பார்த்தவன்.. விஜயிடம் ,
” விஜய் .. வா நாமளும் போவோம் … ” என்றவன் அவர்களுக்கு முன்பாக போய் நின்று …
” பாப்பா நீங்க ரெண்டு பேரும் ஓரமா போய் உட்காருங்க நாங்க வாங்கிட்டு வாறோம்…” என்றதும் இருவரும் சற்றுத் தள்ளி மணலில் சென்று அமர்ந்துக் கொண்டனர்.
ஆதவன் வாங்கிக் கொண்டு திரும்புகையில் அவனது பள்ளித் தோழன் சந்துரு அவனைப் பார்த்து விட , தன் கையிலிருந்த உணவுப் பொருட்களையும் விஜயிடம் தந்தவன் ,
” விஜய் கொண்டு போய் தங்கச்சிக்கிட்ட கொடு… நான் பேசிட்டு வாறேன்…” என்றதும் அவனும் வாங்கிக் கொண்டு அவர்களருகில் வந்துக் கொடுத்தான்.
அவன் வருகைக்காகவே காத்திருந்த தில்லை…
” எண்ணே… அஞ்சு நிமிசம் இவ கிட்ட உட்காருங்க .. ” என்றவள் விஜயோ.. தாமரையோ பதில் சொல்வதற்குள் எழுந்து சென்று அருகிலிருந்த ஜிகர்தண்டா வாங்கும் கூட்டத்திற்குள் சென்று விட்டாள். விஜய்.. வட இந்திய பாணியில் மரியாதை விளிப்பாக “ஜி” என்று அவள் பின்னால் போகப் பார்க்க…
திகைத்த விழிகளுடன் ‘திரு… திரு…’ என விழித்துக் கொண்டிருந்த தாமரையைக் கண்டதும் அங்கேயே நின்று விட்டான்.தில்லை இருக்கும் புறம் சென்றால் தாமரையை தனியாக விட நேரிடும்… அதுவும் சில அடி தூரம் நின்ற வாலிபர்கள் பெண்களை கேலி கிண்டல் செய்து கொண்டிருக்க தாமரையை விட்டும் நகர முடியாமல் தில்லையை நோக்கியும் செல்ல முடியாமல் திணறியவன்.. பயந்த விழிகளோடு அவனைப் பார்த்தவளிடம் ..
” பயப்படாதீங்க… ” எனும் போதே ஆதவன் வருவதும் தெரிய.. தாமரை எழுந்து நின்றாள்.
“இதோ ஆதவ் வந்துட்டான் .. நான் அவங்களுக்கு ஹெல்ப் பண்றேன்…” என்றவன் , தில்லையைக் காணாது பதற்றத்தோடு வந்தவனிடம் ,விவரம் சொல்லி விஜய் நகரப் பார்க்க.. கூட்டத்தில் தில்லையைக் கண்ட ஆதவன்..
” விஜய் நீ என் தங்கச்சிக் கூட இரு … ” என நண்பனிடமும் ,
“பாப்பா உனக்கு துணைக்கு விஜய் இருப்பான்..நான் போறேன்…” என தங்கையிடமும் கூறியவன் , தில்லை இருந்த கடை நோக்கிச் சென்றான்..
இப்போது விஜயும் தாமரையும் அருகருகே இருக்க வேண்டிய நிலை ..தாமரையின் அருகாமை இதயத்தில் பூஞ்சாரலாய் வீசுவது போல் உணர்வு… தனது கைகளை கட்டி நின்று அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான். ஆதவனின் வார்த்தைகள் மீண்டும் மீண்டும் காதில் ஒலித்து உதட்டோர முறுவலைக் கொடுத்தது.
ஹேய் ஹேய் ஓராயிரம்
மலர்களே மலர்ந்தது
உலகிலே சுகமே இது தானோ …
இப்போது விழி மூடி அந்த உணர்வை ரசித்து ..
” ஒரே நாளில் ஒரு பெண்ணிடம் என் மனம் வீழ்ந்துப் போனதா.. இப்படியெல்லாம் நடக்குமா.. ” என்று எண்ணமிட்டுக் கொண்டிருந்தான்.