ஆதவன் அருகே நின்ற தில்லைக்கோ ஓரளவிற்கு மேல் பொறுமையாக நிற்க முடியவில்லை. எனவே ஆதவன் அருகில் வந்து நின்றவள் ,
“என்ன வேணும்.. ” என , அவள் மட்டுமே நினைவில் நின்றதால் அவனிடம் தான் பேசுகிறாள் என்பதும் ஆதவனுக்கு மயக்கத்தைக் கொடுக்க அவன் கேட்டதொனியோ அவன் மீது ஈர்ப்பைக் கொடுக்க .. அவனும் விளையாட்டாக…
“நீதான் வேணும்..” என எழுந்து அவளருகில் நின்றான். இந்த நெருக்கத்தை சற்றும் எதிர்பாராத தில்லை பின்னால் காலை வைக்க காய்ந்த தேங்காய் ஒன்றில் கால் பட்டு பின்னால் விழப் பார்க்க.. அவள் விழுந்து விடுவாளோ என்ற பதற்றத்தில் தில்லையைப் பிடிக்க… அது இருவரையும் கட்டிலில் விழ வைத்தது. நொடியில் ஆதவனின் நெஞ்சின் மீது தில்லை விழுந்திருந்தாள்.
இப்படியொரு நிலையை இருவருமே எதிர்பார்க்கவில்லை.. நெஞ்சில் விழுந்தவள் முகம் நிமிர்த்தி ஆதவனைப் பார்க்க… அவனும் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது இரு கரங்களும் தில்லையைச் சுற்றி தான் இருந்தது. இருவருமே ஒரு வித தயக்கத்திலும் உடல்கள் உரசப்பட்ட மயக்கத்திலும் இருந்து மீள்வதற்குள் வீட்டினுள்ளிருந்து பெண்களின் அழுகுரல்கள் கேட்க.. சட்டென இருவருமே தங்களின் நிலையுணர்ந்து எழ முயன்றனர்.
எப்படியும் அவனைப் பிடித்துக் கொண்டே தான் எழ முடியும்.. தில்லை யோசிப்பதற்குள் ஆதவன் அவளைப் பிடித்து நிறுத்திவிட்டு தானும் எழ.. புடவையே கட்டிப் பழகாதவளுக்கு அது தன் விருப்பத்திற்கு ஒதுங்கி நின்றது. அதற்குள் விஜய் தூரத்தில் வருவது தெரிய … சட்டென தில்லையை மறைத்து நின்றவன்,
“ட்ரஸ் சரி பண்ணிக்கோ..” என்றதும் திடுக்கிட்டு மறுபுறம் திரும்பி தன்னை சரி செய்துக் கொண்டவள் அவனைச் சுற்றிவேகமாக நடக்க … எதிரில் வந்த விஜயானந்த் ,
“ஆதவ் உன் சிஸ்டர் அழறாங்க போல…” சொன்ன அடுத்த நொடி புடவையை சற்று உயர்த்தி கையில் பிடித்தவாறு தில்லை ஓட ஆரம்பித்தாள். அதனை எதிர்பார்த்து தான் விஜயானந்தும் நண்பனிடம் கூறியது.
தாமரையை மனதில் கொண்டு தான் தில்லை ஆதவனையும் … ஆதவன் தில்லையையும் மணந்திருப்பார்கள் என்பது விஜயின் யூகம். அது சரியென்பது போல தாமரையுடன் மட்டுமே தான் தில்லை இருந்தாள். சற்று முன் கூட தோழியிடம் தில்லைப் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டவனாதலால் தற்போதைக்கு தில்லை தாமரை அருகில் இருக்க வேண்டிய அவசியம் உணர்ந்து தான் அவர்களிடம் தானாகவே கூறினான்.
தில்லை ஓடிய அடுத்த நொடியே ஆதவன் நண்பனை அணைத்துக் கொண்டவன் , “தேங்க்ஸ் டா… தேங்க்யூ சோ மச்…” என்றவாறே தாமரையைத் தேடி ஓடினான்.
அங்கு தில்லை அருகில் வந்த அடுத்த நொடியே அவளது மடியில் படுத்துக் கொண்ட தாமரை சத்தமிட்டு கதறி அழ ஆரம்பித்தாள்.ஆதவன் பின்னாலயே ஓடி வந்தவன், தங்கை அருகே சென்று தலையில் கை வைக்க அண்ணனைக் கண்டவள் அவனிடமும் , ” ண்ணா .. ம்மா…” என தேம்பலோடு கூறி அழ அவளை தோள் சாய்த்துக் கொண்டான் ஆதவன்.
மெல்ல நடந்து வந்த அருணாச்சலமும் மகள் அருகே சென்று அமர்ந்துக் கொண்டார். ஒரு வழியாக அம்மூவரையும் அனைவரும் தேற்றி அன்றைய மாலை நேர பூஜைக்கான ஏற்பாடுகளை கவனிக்கலாகினர்.
மாலையில் பூஜைகள் முடிந்து… உறவுகள் முறை செய்து விட்டு ஒவ்வொருவராக கிளம்ப.. அவர்கள் அனைவரும் ஆதவனிடம் அவன் மறுநாள் வெளிநாடு செல்வதைக் குறித்துப் பேசும் போது தான் தாமரைக்கு ஆதவன் மறுநாள் கிளம்ப இருப்பதே தெரிந்தது.
ஓரளவு அனைவரும் கிளம்பியதும் தில்லையிடம் கேட்க அவளைத் தேட அவளைச் ஆழ்ந்து உறவினர்கள் சிலர் பேசிக் கொண்டிருந்தனர். சிலருக்கும் மட்டுமே தெரிந்திருந்த ஆதவன் தில்லையின் திருமணம் , தற்போது பலருக்கும் தெரிந்ததால் தேவகியிடமும் தில்லையிடமும் பேசிக் கொண்டு இருந்தனர். எனவே தோழியை தொந்திரவு செய்ய விரும்பாது தந்தை அருகில் நின்றிருந்த ஆதவனிடம் வந்த தாமரை …
“அண்ணா நாளைக்கு ஊருக்குப் போறீங்களா..”சோர்ந்த விழிகளில் தவிப்புடன் கேட்டவளை தோளோடு அணைத்துக் கொண்ட ஆதவன் ,
“பாப்பா நீ வேண்டாம்னு சொன்னா நான் போகமாட்டேன் மா…” என்றதும் தாமரைக்கு அழுகை வந்து விட… அந்த அழுகை சத்தத்தில் தில்லை , தேவகி மட்டுமல்லாது தேவராஜன் விஜயானந்தும் வந்து நின்றனர். ஆதவன் சமாதானம் செய்த விதம் கண்டு சூழ்நிலையைப் புரிந்துக் கொண்டதால் , தேவகியும் தில்லையும் அருகில் வந்து நின்றனர்.ஆதவனோ ,
“பாப்பா.. செல்வி மா.. அழாத மா.. இப்படி அழுதா என்னால எப்படி வெளிநாடு கிளம்ப முடியும் …மேற்படிப்பு தான… அப்புறம் கூட படிச்சுக்கலாம் … நான் இந்தியாவிலயே இருக்கிறேன் சரியா…” என்றவனையே தில்லைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“அட இவ சும்மா அண்ணன் நொண்ணனு சொல்லல போலயே… தங்கச்சிக்காக படிப்ப நிறுத்துராறாமா.. .” என எப்போதும் போல கேலியாக நினைத்தாலும் அவனது ஆறுதல் மொழியும் தங்கை மீதான அதீத பாசமும் அவன் மீது பார்வையை நன்கு நிலைக்க விட்டது. கூடவே ..
“ஆ…மணி பாரதி வெளிநாட்டுக்கு போய்டும்..தாமரைக் கூடவே நான் இருக்கலாம்னு தானே கல்யாணம் பண்ணிட்டு வந்தேன். அப்புறம் எப்படி.. அதோட… ” என நினைத்தவள் இப்போது ஆதவனை முறைக்க ஆரம்பித்தாள்.
தங்கையை தேற்றிக் கொண்டிருந்தவன் முதலில் தில்லையை கவனிக்கவில்லை. அவளது முறைப்பை அவன் கவனிக்கவில்லை என்றதும் ,
“தாமரை அவங்க படிக்க போகட்டும் டி.. நான் உன் கூடவே தான் இருக்கப் போறேன்.. அழாத… ” என்றவாறு ஆதவனை முறைக்க.. இப்போது தான் மனைவியை கவனித்தான், அதற்குள் தேவகி , அருணாச்சலம் என பலரும் தாமரையிடம் எடுத்துக் கூற அழுதுக் கொண்டே இருந்தவள் காதில்…
“ஆதவ்… காலையில அஞ்சு மணிக்கு இங்க இருந்து சென்னைக்கு ஃபிளைட் நீ என்ன சொல்ற… டிக்கட் இருக்கட்டுமா கேன்சல் பண்ணிரலாமா…” என விஜயானந்தின் குரல் கேட்டது.
உடனேயே தாமரையின் பார்வை விஜயானந்தை நோக்கி உயர .. அந்த நொடியில் தானே தான் கண்களைப் பார்த்து “அழாதே ” என்பது சைகை செய்த விஜய் மற்றவர்களது பார்வையும் தன் புறம் திரும்ப போவதை உணர்ந்தவன் , சட்டென பார்வையை மாற்றி ஆதவனிடம் நிறுத்தினான்.
“நீ வெளிநாடு போகலனா நாளைக்கு மெட்ராஸ்ல நடக்கிற மீட்டிங்லயும் நீயே கலந்துக்கலாம் தானே.. உன் காலேஜ் மேட் ரிச்சர்ட் ஃபோன் இன்னைக்கு நான் தான் எடுத்தேன். நீ கண்டிப்பா வருவ… உன் மனைவி இங்க குடும்பத்த பார்த்துப்பாங்கனு சொன்னேன்…” என்றதும் தில்லையின் முகத்தில் மலர்ச்சி … அந்த மலர்ச்சியுடனேயே ,
“ஆமாம்ணா.. நான் தாமரையையும் பெரிய மாமாவையும் கவனிச்சுக்குவேன்…” என, தேவகியும் ,
“ஆமாம் ஆனந்துதம்பி … ராஜா கூட சொன்னான் நீங்க அண்ணனுக்கு உதவியா நிறைய வேலை செஞ்சுக் கொடுத்தீங்களாம்… ஒரு ஆறு மாசம் கூட இருந்தீங்கனா மருமவன் படிப்ப முடிச்சுட்டு வந்துருவாரு…”
இப்படி ஒவ்வொருவரும் இந்த பதினைந்து நாட்களில் என்ன நடந்தது என்பதனை தாமரை யாரிடமும் சென்றுக் கேட்காமலேயே எல்லா தகவல்களும் அவள் அறியும்படி ஆதவன் செய்துக்கொண்டிருந்தான். ஒவ்வொருவர் பேசுகையிலும் ” கேட்டாயா, அழாதே.. ” என்பது போல் தாமரைக்கு மட்டும் புரியும்படி அவனது கண்ணசைவுகள் இருந்தன.
மொத்தத்தில் ” இங்கு நாங்கள் அனைவரும் இருக்கிறோம் முக்கியமாக நான் இருக்கிறேன் உனக்கு…உன் சகோதரனை நிம்மதியாக வெளிநாட்டில் படிக்க அனுப்பு… ” என்பது போல் அவனது கண் ஜாடைகள் சொல்லிக் கொண்டே இருக்க… ஆதவனை நிமிர்ந்துப் பார்த்தவள் , வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டே தில்லையின் வலது கையையும் பிடித்துக் கொண்டவள் ,
“அண்ணா நீங்க படிப்ப முடிச்சுட்டே வாங்க.. என் கூட இத்தனைப் பேர் … ” என்ற தாமரையின் விழிகள் நொடியில் விஜயை தழுவி மீண்டதை அவன் கவனித்துக் கொண்டு தான் இருந்தான். அவள் தொடர்ந்து தில்லையின் தோள் மீது சாய்ந்துக் கொண்டவள் ,
“அதுவும் திலோ என் கூடவே இருக்கிறப்ப எனக்கு எந்த பயமும் இல்லண்ணா … ” என்ற தாமரையை தானும் பிடித்துக் கொண்டதில்லை தன்னைப் பிடித்திருந்த அவள் புறங்கையில் அழுத்தமாக முத்தமிட்டு ,
“தேங்க்ஸ் டி..” என்றவாறு ஆதவனை முறைத்தவள்…’ பார்த்தாயா… ” என்பது போல் புருவத்தை ஆதவனிடம் ஏற்றி இறக்கி, உதட்டில் புன்னகை நிரம்ப ஆதவனைப் பார்த்தாள்.இவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த விஜயிற்கு ,
“அட… எனக்கும் இந்த வாய்ப்பு கிடைக்காதா..” எனத் தோன்றி இதழோர புன்னகை உண்டாகியதென்றால்… ஆதவனுக்கு ,
” இந்த முத்தம் எனக்கும் கிடைக்காதா…” என்று தோன்ற, அவளது அந்தப் பார்வையும் புன்னகையும் தில்லை மீது புது வித எண்ணங்களைத் தோற்றுவித்தாலும் ,தன் தங்கை மீது அவள் வைத்திருந்த பாசம் தில்லை மீதான அன்பை ஆதவனுக்கு அதிகரித்தது.
தேவகியும் அருணாச்சலமும் கூட தங்கள் மகள்களைக் கண்டு மகிழ்ந்ததோடு ஆதவனை மறுநாள் கிளம்ப ஆயத்தமாகக் கூறினர். பக்கத்தில் உள்ள உறவினர்கள் அனைவரும் சென்று விட , குடும்ப உறுப்பினர்களோடு விஜய் மட்டும் நின்றுக் கொண்டிருந்தவன் தானும் கிளம்பத் தயாரானான். கிளம்புவதற்கு முன்பு ஒரு முறை தாமரையைப் பார்த்து விட்டு செல்லும் ஆவலில் மாலையில் தாமரையைப் பார்த்த ஜன்னல் அருகே வந்து அவள் தென்படுகிறாளா எனப் பார்த்துக் கொண்டிருந்தான். அங்கு தில்லை மட்டுமே தென்பட ஏமாற்றமடைந்தவன் நேரமானதால் கிளம்ப போனான்.
மீண்டும் மறுநாள் காலையே வந்து ஆதவனோடு சென்னைக்கு பயணிக்க வேண்டியிருக்கும். அதன் பிறகு தாமரையைக் காண்பது கடினம் என்பது வேதனையைக் கொடுத்தது.
“ஆதவ் கிளம்புறேன்” என வந்து நின்றவனிடம், “இந்த நேரத்துல எங்க கிளம்புற .. அதோட நாம ரெண்டு பேரும் தான் நாளைக்கு மெட்ராஸ் கிளம்பறோம்… வாடா…” என்றவன் வீட்டினுள் அழைத்துப் போகப் பார்க்க ,
“என்ன ஹோட்டல் ரூம் எடுத்துருக்கியா… நம்ம வீட்ல தங்குறத விட்டுட்டு.. வா என் கூட … ” எனப் பேசிக் கொண்டிருக்கும் போதே தேவராஜன் வந்தவன்,
“விஜய் அதான் மச்சான் சொல்றாருல… என்னோட தங்கிக்கோங்க காலையிலயே ஏர்போர்ட் கிளம்ப சரியா இருக்கும். நான் பார்த்துக்கிறேன் மச்சான். எதுவும் எடுத்து வைக்கணும்னா தங்கச்சிட்ட சொல்லிட்டு நீ போய் கொஞ்ச நேரம் தூங்கு மச்சான்… ” என ஆதவனிடமும் ,
‘விஜய் வாங்க என் கூட.. மாடியிலயும் பந்தல் இருக்கு, நாங்க பேச்சிலர்ஸ் அங்க படுத்துக்கிறோம் ” என தேவராஜன் அழைக்கவும் தான் ஆதவனுக்கு தன்னுடன் விஜய் தங்குவதற்கு ஏன் தயங்குகிறான் என்பதே புரிந்தது. புரிந்தவனுக்கு மெல்லிய புன்னகையும் அரும்பியது.
“நானும் பேச்சிலர்தான் மச்சானுங்களா..” என தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டவன் ,
” எல்லாம் தயாரா தான் இருக்கு.. தூக்கம் வர்ற வரை நானும் மாடியில இருக்கிறேன்.” என்ற ஆதவன் வெளிபக்கமிருந்து செல்லக் கூடிய மாடிப்படிகளில் அவர்களோடு சென்றவன் நண்பனுக்கு தேவையானதை செய்து விட்டு, அவர்களோடு சிறிது நேரம் உரையாடிவிட்டு வந்து அவனது அறைக்கதவை திறக்க… வெளியே இருந்து ஜன்னல் வழி வந்த வெளிச்சத்தில், அழகோவியமாக நின்றுக் கொண்டிருந்தாள் தில்லைநாயகி.