அலை 6

                        மனசு தடுமாறும்

                       அது நெனைச்சா நிறம் மாறும்

                        மயக்கம் இருந்தாலும்

                        ஒரு தயக்கம் தடை போடும்…

          “பாப்பா…” என்ற ஆதவனின் அழைப்பு தாமரையை  நிகழ்வுக்கு கொண்டு வர… ஒரு வித பதற்றம் உருவாகி சகோதரனைக் கூட நிமிர்ந்துப் பார்க்க விடாமல் குற்றவுணர்வு உருவாகி கண்களில் நீரை தேக்கியது.ஆதவனோ தங்கையின் கண்ணீரில் பதற்றமானவன் ,

” என்ன.. என்ன பாப்பா…” எனவும் .. அந்த கண்ணீர் தேம்பலாக மாறி..மீனாட்சியின் தோளில் முகத்தைப் புதைத்து அழ ஆரம்பித்து விட்டாள். மற்ற மூவருக்கும் அவளின் அழுகை வருத்தத்தைக் கொடுக்க.. ஏன் அழுகிறாய் என்ற அவர்களின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் மனதில் உள்ளதை மறைத்து…

 “அண்ணா நீங்களும் வெளிநாட்டுக்கு போயிருவீங்க.. அம்மாவுக்கும் உடம்பு சரியில்ல… மதுரை மெடிக்கல் காலேஜ்ல கிடைக்கலனா… பேசாம நானும் தில்லைக் கூட மதுரைலயே அக்ரி படிக்க போறேண்ணா… மெட்ராஸ் பயமா இருக்கு …” என முன்பே தான் நினைத்து வருந்திக் கொண்டிருந்ததைக் கூற..மீனாட்சியோ … மகளைப் பிடித்து தானும் அழுதவர், கணவனிடம் ..

” பார்த்தீங்களாங்க.. இப்படி பயப்படுற புள்ளைய எப்படி படிக்க அனுப்ப… பேசாம கல்யாணம் பண்ணி வச்சுட்டா எனக்கு என்ன வந்தாலும் பரவாயில்லனு இருக்கிற நாள்லயாவது சந்தோஷமா இருப்பேன்…” என புலம்ப… அருணாச்சலம் மனைவியிடம் …

“பயப்படக் கூடாதுனு சொல்லுவியா… கல்யாணம் அது இதுனு ..” என மனைவியைத் திட்ட ஆரம்பிக்க .. ஆதவன்  தங்கையின் கையினைப் பிடித்துக் கொண்டவன்…

“பாப்பா… நீ எடுத்துருக்க மார்க்குக்கு நீ விரும்பின ஊர்லயே சீட் கிடைக்கும் பாப்பா… அம்மாவுக்கு ஒன்னுமில்ல… தைரியமா இருக்கணும். அப்படி உனக்கு பயமா இருந்தா சொல்லு.. நான் வெளிநாட்டுக்குப் போகாம இங்கேயே இருக்கிறேன். நீ மெடிக்கல் படி.. அண்ணா இருக்கேன் உனக்கு..”

ஆதவனின் வார்த்தைகளைக் கேட்டவளுக்கு மேலும் அழுகை பொங்கியது.. “எனக்காக தன் ஆசையை… அதுவும் இன்னும் சிறிது நாட்களில் படிப்பே முடிந்து விடக் கூடும்… அதனைக் கூட விட்டுத் தர நினைக்கிற அண்ணனோட ஃபிரண்ட் மேல எனக்கு இப்படி ஒரு அபிப்பிராயம் வர்றதே தப்பாச்சே… ஐயோ கடவுளே… ” என நினைத்தவள் தன்னைக் கட்டுப்படுத்தி… கண்ணீரைத் துடைத்துக் கொண்டே ..

“அண்ணா… நான் பயப்பட மாட்டேன் .. நீங்க வெளிநாடு போய் நல்லா படிச்சுட்டு வாங்க … நான் தைரியமா இருப்பேன்… அதோட தில்லை என்கூடவே தான் இருப்பேன்னு சொல்லியிருக்கிறா.. உங்களப் போல தாண்ணா அவளும்… எப்போவும் எனக்கு சப்போர்ட்டா இருப்பா…” என்றவளை ஆச்சரியத்தோடு பார்த்தான் ஆதவன்.

“அட என்னையப் போல சப்போர்ட்டா இருப்பாளா .. ஆனா அவ என்னையப் பார்த்தா மட்டும் முறைச்சிட்டே இருக்காளே…ஒரு வேளை என் முறைப் பொண்ணுகிறதால இந்த முறைப்பா… ” என நினைத்தவனுக்கு தில்லைநாயகி அவனிடம் நடந்துக் கொள்ளும் நடவடிக்கைகளை நினைத்து இதழோர புன்னகையும் மலர்ந்தது.

தாமரை விரும்பியபடி மதுரை மருத்துவ கல்லூரியே அவளுக்கு கிடைத்து விட… மகிழ்ச்சியுடன் குடும்பத்தினர் அனைவரும் அவர்கள் ஊருக்கு திரும்பினர்.வருகையில் அவர்களது சொந்த வாகனத்திலேயே மதுரைக்கு திரும்பினாலும் … விஜய் ஆனந்துடன் பயணித்த அந்த இரயில் பயணம் மீண்டும் மீண்டும் நினைவுகளில் வந்து போனது தாமரைக்கு.

இது என்ன மாயம் இது என்ன ஜாலம்

இது என்ன மாயம் இது என்ன ஜாலம்

காதலா ஆசையா காரணத்தை நீயும் சொல்லடி…

வீட்டிற்கு வருபவர்களை வரவேற்க முன்பே தாயையையும் தமையனையும் அழைத்துக் கொண்டு தனது அம்மாச்சி வீட்டிற்கு வந்து காத்திருந்தாள் தில்லைநாயகி.

வீட்டின் முன்புறம் வெளியே இருந்த வேப்ப மரத்தில் ஊஞ்சல் இருக்க அதில் அமர்ந்து ஆடிக்கொண்டும்… அருகில் இருந்த தேவகியிடம் உணவை வாங்கிக் கொண்டேயும் தேவராஜனிடம்…

“ஏண்ணா இந்நேரம் மதுரையை தாண்டி இருப்பாங்கள்ள .. இன்னும் காணோம்.” எனக் கேட்டாள். தாமரையை காணும் ஆவலில் டிரைவரை வேண்டாம் என்றுக் கூறி விட்டு தேவாவே வண்டியோட்டிக் கொண்டு வந்திருந்தான்.

தேவகியின் பெற்றோர் இருந்தவரை குழந்தைகளை அழைத்துக் கொண்டு மாதம் இருமுறையாவது வந்துப் போனவர் அவர்களது மறைவிற்கு பின் அதிகம் வருவதில்லை.. வந்தாலும் சிறுமியான தில்லையை மட்டும் அழைத்துக் கொண்டு வருவார்.அன்று கோவிலில் தாமரையை பார்ப்பதற்கு முன்பு வரை அம்மாச்சி வீட்டிற்கு அதிகம் வராத தேவராஜன் இப்போது தாமரை மனதினுள் புகுந்ததாலயே முக்கியமான வேலையைக் கூட விட்டு விட்டு வந்திருந்தான்.

தங்கையின் கேள்விக்கு பதிலாக சாலையைப் பார்த்துக் கொண்டே.. “அதான் பாப்பா நானும் யோசிச்சுட்டு இருக்கிறேன்.. இப்ப வந்துருக்கணும்… ” எனும் போதே தூரத்தில் அவர்களது கார் வருவது தெரிந்தது. அந்த நேரம் தில்லை வேகமாக ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்தாள். அதனால் அவளால் ஊஞ்சலை ஒரு நிலைப்படுத்தி இறங்க முடியவில்லை.

இதனை ஓட்டுனர் அருகில் அமர்ந்து வந்துக் கொண்டிருந்த ஆதவன் பார்த்துக் கொண்டே வந்து இறங்கினான். அவர்கள் காரிலிருந்து இறங்கும் போது ஊஞ்சலாட்டத்தின் வேகம் குறைந்து அது நன்கு நிற்கும் முன்னேயே துள்ளி இறங்கிய தில்லை வேகமாக காரை நோக்கி ஓடி வந்து தோழியின் முன்  மூச்சிரைக்க நின்றாள்.

தாமரையைக் கண்டதால் மலர்ந்து விரிந்திருந்த தில்லையின் முகத்தைக் காண காண ஆதவனிற்குள்ளும் ஏதேதோ மாற்றங்கள். தாவணி முந்தானையை இடுப்பில் செருகிக் கொண்டும்.. ஊஞ்சலாடியதால் முன்புறம் வந்து விழுந்திருந்த கூந்தலை ஒரு கையால் காதோரம் ஒதுக்கிக் கொண்டும் தாமரையிடம் கல்லூரிப் பற்றிய விவரங்களை மகிழ்வுடன் கேட்டுக் கொண்டிருந்தவளை ஆதவனுக்கு ரசிக்கத் தோன்றியது.

அதற்குள் அனைவரும் வீட்டிற்குள் செல்ல… தலையை உலுக்கி ஒரு புன்னகையோடு ஆதவனும் வீட்டினுள் சென்றான். மாடியில் ஆதவன் அறைக்கு எதிர் அறைதானே தாமரையுடையது. தோழிகள் இருவரும் மகிழ்ச்சியோடு பேசிக் கொண்டு இருப்பதை ஆதவனால் உணர முடிந்தது.

“தில்லை நல்லா சரி பார்த்துக்கோடி… நீ கேட்டது எல்லாமே வாங்கிட்டு வந்துட்டேன். இதுல பாதி எப்படி உபயோகிக்கனுக் கூடத் தெரியல… “என்றத் தாமரையிடம், அவள் கொண்டு வந்த பொருட்களை எடுத்துப் பார்த்துக் கொண்டே ..

“எங்கண்ணன்கிட்ட ஃபெமினா புக் வாங்கித் தரச் சொன்னேன் டி .. அதுலதான் இதையெல்லாம் எப்படி உபயோகப்படுத்துறதுனுப் பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன். அப்புறம் நம்ம கவி அம்மா பியூட்டிப் பார்லர் வச்சுருக்காங்கள்ல அவங்க கிட்ட கேட்டும் தெரிஞ்சுக்கலாம். காலேஜ் போறப்ப போட்டுக்கலாம் சரியா…” தோழிகளின் உரையாடல் இப்படிச் சென்றுக் கொண்டிருக்க அவர்களைப் பெற்றவர்களின் பேச்சுக்கள் வேறு மாதிரி இருந்தது.

மீனாட்சி தேவகியிடம் … “மதினி என்னவோ தெரியல உடம்பு ரொம்பவே படுத்தி எடுக்குது… அண்ணன்கிட்ட எதுவும் பேசுனீங்களா…”தேவகியும் …

“அவரு பிள்ளைங்க விருப்பம்தான் என் விருப்பம்னு சொல்றாரு… நம்ம கைல ஒன்னும் இல்ல மதினி.. எல்லாம் அந்த ஆண்டவன் கைல தான்…” என வருத்தமுற்றார்.

தேவராஜனுக்கு தாமரையை திருமணத்திற்கு கேட்டால் சரி என சொல்லிவிட தான் தோன்றியது… ” திருமணம் செய்துக்கொண்டாலும் நான் அவளை படிக்க வைக்கப் போகிறேன்..” என ஒரு பக்கம் சிந்தனை செல்ல … மறுபக்கம் …

“தேவா.. உன் தங்கச்சிக்கு ஒரு நியாயம் அந்த புள்ளைக்கு ஒரு நியாயமா.. என்ன மனுஷன் டா நீ… ” என்பதாக மனசாட்சியும் கேள்வி கேட்க .. அவனுக்கு மனது இறுக்கமாக இருப்பது போல் தோன்றவும் …

“ம்மா மில்லுக்கு போகணும்.. நான் வண்டிய எடுக்கிறேன் சீக்கிரம் வாங்க.” என்றவன் வெளியே சிறிது தூரம் நடந்து சென்று ஒரு பெட்டிக்கடையில் சிகரெட் வாங்கி அங்கேயே  புகைக்க ஆரம்பித்து விட்டான்.

 தோழியிடம் பேசிக் கொண்டே வந்து விடைபெற்ற தில்லை..” தாமரை இந்த பைய ஒரு நிமிஷம் பிடிடி… எங்க வீட்டு ஊஞ்சல விட இதுதான் நல்லா வசதியா இருக்கு.. அம்மாவும் அண்ணனும் வரதுக்குள்ள ஒரு தடவை ஆடிட்டுக் கிளம்புறேன்..” என்றவள் ஊஞ்சலில் சென்று அமர்ந்து ஆட ஆரம்பித்து விட்டாள்.

மீனாட்சி ஏதோ தேவைப்பட தாமரையை அழைக்க… “நீ போடி நான் தனியா ஆடுறேன்…” என்ற தில்லை ஊஞ்சலாட ஆரம்பிக்க… வெளியே வந்த ஆதவன்  தனியாக இருக்கும் தில்லையை கண்டான். இன்னும் இரண்டு மூன்று வாரத்தில் வெளிநாடு கிளம்பி விடுவான்.தங்கையைக் குறித்து அவளிடம் பேசி விடும் எண்ணத்தில் அவளருகே சென்றான்.

மகிழ்ச்சியாக ஊஞ்சலாடிக் கொண்டிருந்தவள் அருகே ஆதவன் வரவும்… தில்லைக்குப் பதற்றம் உருவாகியது. எனவே இறங்க முற்பட்டவள் அது முழுமையாக ஒரிடம் வந்து நிற்பதற்குள் இறங்கிவிட நிலைத் தடுமாறி முன்புறம் விழப் போனாள். ஆனால் எப்படி விழுவாள்.. ஆதவன் தான் தாங்கிப் பிடித்திருந்தானே..

“ஹே …. பார்த்து பார்த்து “என சத்தமிட்டவாறே அவள் வயிற்றைச் சுற்றி கைப்போட்டிருக்கிறோம்… என்பதையே மறந்தவனிடமிருந்து விலகப் பார்த்த தில்லை …

“விடுங்க மாமா … விடுங்க… ” என்றவாறு அவன் கைகளை விலக்க … அவள் மெல்லிடையை அப்போதுதான் உணர்ந்த ஆதவன். இப்போது பேச்சற்று அவளைப் பார்த்தவன் மெல்ல விடுவிக்க .. மிரண்ட விழிகளால் அவனைப் பார்த்தவாறே விலகியவள் சற்று பின்னே தள்ளி நின்று தன் உடையை சரி செய்துக்கொண்டிருந்தவாறே …

“இந்நேரம் விழுந்திருப்பேன்…” என்றவளுக்கு பதிலாக …

“அதுதான் கீழ விழாம பிடிச்சுட்டேனே…” என ஆதவன் புன்னகைக்க … அவனை முறைத்தவள்..

”  வேகமாக ஊஞ்சலாடிட்டு இருக்கும் போது யாராவது முன்ன வருவாங்களா… ஏன் வந்தீங்க… “

  

“அது… “எனத் தடுமாறியவன் ..” நான் ஊருக்குப் போனதும் அப்பப்ப வந்து தங்கச்சியப் பார்த்துக்கோனு சொல்ல வந்தேன்… ” என்றவனை இடுப்பில் கை வைத்து முறைத்துப் பார்த்து..

“இங்க பாருங்க நீங்க சொல்லி தான் என் ஃபிரண்டப் பார்த்துக்கணும்னு இல்ல… நானே அவள நல்லாப் பார்த்துக்குவேன்… ம்ஹூம்..” என முகத்தை வெட்டி விட்டு விலகியவளைப் பார்க்க…

” இத்தனை நாள் இவரா பார்த்தாரு… பாச மலரு சிவாஜி.. இப்படியா வந்து பயமுறுத்துறது…” என முனுமுனுத்துக் கொண்டே சென்றதைக் கண்டவனுக்கு மறுபடியும் முகத்தில் புன்னகைத் தோன்றியது.