Advertisement

இரவில் மோகனுக்கு கதவை திறப்பாதா, வேண்டாமா என்று நறுமுகை யோசித்து கொண்டிருக்கும் போதே, அழைப்பு மணி விடாமல் அலறியது.

பெரியவீட்டம்மாவின் உறக்கத்திற்கு குந்தகம் விளைந்துவிடுமோ என்ற ஐயம் எழுந்தது அவளுக்கு.

மல்லிகை பந்தலில் மோகன் பார்த்த பார்வை வெகுவாக நறுமுகைக்கு தயக்கத்தை கொடுக்க, அதேசமயம் இத்தனை நாட்களில் அவனின் பார்வையில் இருந்த கண்ணியம், ஒருவித தைரியத்தையும் கொடுத்தது.

இருப்பினும் தன்னை ஒரு முறை குனிந்து பார்த்து கொண்டாள் நறுமுகை. உடலை இறுக்கி பிடிக்காமல், தளர்வான மேல் சட்டையும், கால்சட்டையும் தான் அணிந்து இருந்தாள்.

இரவு உடையில் குற்றம் எதுவும் அவள் கண்களுக்கு தெரியவில்லையாயினும், சட்டையின் மீது அருகில் இருந்த துப்பட்டாவை எடுத்து போட்டு கொண்டாள்.

மழை அப்போது தான் சற்று நின்று இருக்க, நறுமுகை கதவை திறந்ததும் குளிர் காற்று, அவளின் உடையை மீறி, உடலை தீண்டியது.

அந்த குளிர் காற்றில் கதவுக்கு உள்பக்கம் நின்ற நறுமுகை மெலிதாக நடுங்க, மோகன் அவளை பார்த்த பார்வையில், அவளுக்கு உடல் எல்லாம் எரிவது போல இருந்தது.

அவன் பார்வை தந்த எரிச்சலில் நறுமுகை, கோபத்துடன்,

“என்ன”

என்று கேட்க, அவனோ,

“நான் எம்புட்டு ஆ……சையா உன்னை பார்க்க வந்து இருக்கேன், இப்படி வெடுக்குன்னு பேசுரியே கண்ணு, மாமா மனசு இன்னுமா உனக்கு பு…ரி…ல”

என்று மனைவி ஊரில் இல்லாத திமிரோ, அல்லது சுற்றிலும் ஆள் அரவம் இல்லாத தைரியமோ அவன், காதலியை சந்திக்க வந்த காதலனை போலவே பேசி வைத்தான்.

மோகனின் பேச்சில் வெளிப்பட்ட அவனின் எண்ணமும், அவனிடம் இருந்து வந்த மதுவின் வாடையும், நறுமுகையின் முகத்தை சுழிக்க வைத்தது.

நறுமுகையின் கண்கள் மோகனை அலச, அவனின் நிற்க முடியாமல் தள்ளாடுவதையும், அவனின் கையில் பணம் இல்லாதையும், குறித்து கொண்டாள்.

மோகனின் இந்த நிதானமற்ற நிலையை, பயன்படுத்தி அவனிடமிருந்து தப்பிக்க நினைத்த நறுமுகை, நிமிடமும் தாமதிக்காமல் கதவை மூட முயன்றாள்.

ஆனால் அவளால் முயல மட்டுமே முடிந்தது, நொடிக்குள் சுதாரித்த மோகன், கதவிற்கு இடையில் காலை வைத்து, அவளின் முயற்சியை தடுத்தப்படி,

“இப்படி ஒரு சந்தர்ப்பத்திற்காக எத்தனை நாளா வெய்ட் பண்ணி கிட்டு இருந்தேன், அவ்ளோ ஈஸியா நழுவ விட்டுடுவேனா கண்ணு”

என்று பேசியபடியே நறுமுகையை நெருங்கி, அவள் நடப்பதை உணர்ந்து சுதாரிக்கும் முன், அவளின் வாயை பொத்தி, வீட்டை விட்டு வெளியில் இழுத்து வந்தான்.

தேங்கி இருந்த நீர் உடையில் தெறிக்க, சகதியில் இழுத்து செல்லப்பட்ட நறுமுகையோ, அவன் பிடியில் இருந்து தப்பிக்க, தன்னால் முயன்ற மட்டும் போராடினாள்.

ஆனால் மாதுவின் மீது கொண்ட மோகத் தீ, மதுவின் உபயத்தால் கொழுந்து விட்டெரிய, முழுதாக மிருகமாகமாக மாறி இருந்த மோகன், அவளின் போராட்டத்தை எல்லாம் வெகு சுலபமாக முறியடித்தபடி, அவளை இழுத்து வந்து, தன் வீட்டிற்குள் தள்ளினான்.

அவன் முரட்டு தனமாக தள்ளியதில் தடுமாறி கீழே விழுந்த நறுமுகையின் கை முட்டி, கால் முட்டி எல்லாம் தரையில் சிராயத்து கொள்ள, இரத்தமும் வந்தது.

அந்த வலியை எல்லாம் உணராத நறுமுகை, அவன் பிடியில் சிக்குவதற்குள் எழுந்து தன்னை தற்காத்து கொள்ள எதாவது ஆயுதம் கிட்டுமா என அவள் சுற்றும் முற்றும் பார்க்கலானாள்.

அந்த இடைவெளியில் கதவை தாளிட்ட மோகன், நறுமுகையை பார்த்து கேவலமாக இளித்தப்படி,

“இன்னைக்கு என் கிட்ட இருந்து உன்னால, தப்பிக்கவே முடியாது கண்ணு”

என்று அவளை நெருங்கினான்.

அவசரத்திற்கு எதுவும் கையில் சிக்காமல் போக, தன் முன்னால் மலை போல நின்றவனை தள்ளி விட்டு, அவனுக்கு பின்னால் இருக்கும் கதவை திறந்து தான் தப்பிக்க முடியாது என்பது, நறுமுகைக்கு நன்கு புரிந்தது.

பயத்தில் மசமசத்த மூளையில், சமயசஞ்சீவியாக வீட்டின் பின்புறம் இருக்கும் கதவு நினைவுக்கு வந்தது நறுமுகைக்கு.

தன் எண்ணத்தை, தன் முன்னால் இருக்கும் மிருகம் கிரகிக்கும் முன்பு, பின்னால் திரும்பி, வெகுவேகமாக வீட்டின் பின்புற கதவை அடைந்த நறுமுகை, அதை திறந்து கொண்டு வெளியே ஓடினாள்.

இதற்கு மேல் அவளால் எதுவும் செய்ய முடியாது என்ற திமிரில் சற்று அசந்திருந்த மோகன், நறுமுகையின் இத்தகைய செயலை முற்றும் எதிர்பார்க்கவில்லை.

ஒரு நிமிடம் திகைத்தவன், உடனே சுதாரித்து கொண்டவனாக, அவளை துரத்தி கொண்டு சென்றான்.

பண்ணையில் முழுக்க சேறும், சகதியுமாய் இருக்க, சிறிது நேர ஓட்டமே நறுமுகையின் பெரும்பாலான சத்தை உறிஞ்சிவிட்டது.

கால் போன போக்கில் பண்ணைக்குள் ஓடிய நறுமுகைக்கு, என்ன ஆனாலும் அவன் கைகளில் மட்டும் சிக்கிவிட கூடாது என்ற எண்ணமே வலுவை தர, தன்னால் முடிந்த மட்டும் ஓடினாள்.

சற்று நேரம் ஓய்ந்திருந்த மழை, மீண்டும் கொட்ட ஆரம்பிக்க, மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்க, இதற்கு மேல் ஓட முடியாது என்ற நிலையில், ஒரு மரத்திற்கு பின்னால் மறைந்து நின்றாள் நறுமுகை.

அவளை பின்னாலேயே துரத்தி வந்த மோகனின் வேகமும், சோவென கொட்டிய மழையில் சற்று மட்டுப்பட, குனிந்து மூச்சு வாங்கினான் அவன்.

சில நொடிகளுக்கு பின்பு அவன் நிமிர, இவ்வளவு நேரமும் அவனின் கண் பார்வையில் இருந்த, நறுமுகையை காணவில்லை.

நாலாப்பக்கமும் சுற்றி, சுற்றி தேடிய மோகனுக்கு, இவ்வளவு பெரிய பண்ணையில் அவள் எந்த பக்கம் சென்றால் என்று எப்படி கண்டுபிடிப்பது என்று புரியவில்லை.

கைக்கு எட்டிய வாய்ப்பை நழுவ விட்ட கடுப்பில் அவன்,

“ஹா………ஹா”

என்று பெருங்குரலெடுத்து கத்த, அவன் முன்பு, பிரகாசமான மின்னல் ஒன்று வெட்டியது.

அந்த மின்னல் ஒளியில், அவனுக்கு கொஞ்சம் முன்பு இருந்த ஒரு மரத்தின் ஓரத்தில், ஏதோ ஆடையின் சிறு பகுதி ஒன்று தெரிய, அவனின் முகத்திலோ அவ்வளவு பிரகாசம்.

வேடனின் பரவசத்தோடு, கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், அந்த மரத்தை பின்னால் இருந்து நெருங்கினான் அவன்.

மரத்தின் பின்னால் ஒளிந்திருந்த நறுமுகையோ, பயத்தில் வாயை இறுக்கமாக மூடியபடி,

“இப்படி இவன் கிட்ட எல்லாம் மாட்டிக்கிட்டு சீரழியவா, நீங்க என்னை தனியா விட்டுட்டு போனீங்க”

என்று தன் பெற்றோரிடம் மானசீகமாக கதற, அப்போது தான் முதல் மின்னல் வெட்டியது. அதை எல்லாம் கவனிக்காத நறுமுகை, விரக்தி மீதூறும் குரலில்,

“நீங்க இல்லாத இந்த உலகத்துல என்னால தனியா இருக்க முடியாது,
என்னையும் உங்க கூடவே கூட்டிகிட்டு போய்டுங்கமா”

என்று தேம்பி அழ, அப்போது அதே இடத்தில் மீண்டும் ஒரு மின்னல் வெட்ட, அந்நேரம் அவளை கிட்டத்தட்ட நெருங்கி இருந்தான் மோகன்.

மரத்தை நெருங்கிய மோகன், நறுமுகையின் கையை பிடிக்கப் போக, அந்நேரம் அவள் கைகளால் முகத்தை மூடி கொண்டு,

“எனக்கு ரொம்ப ரொம்ப ப….பயமா இருக்குப்பா”

என்று கரைய, அந்த வினாடியில் மூன்றாவது மின்னல் வெட்டியது.

திடிரென மரத்தின் அருகே கருந்துளை ஒன்று உருவாகி, நறுமுகையை முழுவதுமாக உள்ளிழுத்து கொண்டது.

நறுமுகை மோகன் பார்த்து கொண்டிருக்கும் போதே, காற்றில் மாயமாக மறைந்துப்போக, அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.

மழையிலும், மின்னலின் பிரகாசத்திலும்
அவனுக்கு கருந்துளை எல்லாம் கண்ணுக்கு தெரியவில்லை பாவம்.

கண்களை இரண்டு முறை கசக்கி விட்டு கொண்டு பார்த்தவனுக்கு, காண கூடாததை கண்டதை போல, உள்ளம் முழுக்க பெரும் பயம் ஒன்று வியாபிக்க, அலறி கொண்டே திரும்பி பார்க்காமல் தலைதெறிக்க ஓடினான்.

அதேசமயம் சட்டென்று தோன்றிய கருந்துளையின் உள்ளிழுக்கப்பட்ட நறுமுகைக்கோ, அடி, முதலே இல்லாத பள்ளத்தில் விழுவது போன்ற தோற்ற மயக்கம்.

எத்தனை மணி நேரம் அவள் அப்படி விழுந்து கொண்டிருந்தாளோ அவளே அறியாள்.

யுகமாக கழிந்த பல மணி நேரத்திற்கு பிறகு, மீண்டும் கருந்துளை ஒன்று, தரையில் இருந்து சற்று உயரத்தில் உருவாக, அதில் இருந்து பொத்தென்று கீழே விழுந்தாள் நறுமுகை.

அதோடு கருந்துளையில் செய்த பயணத்தின் விளைவாக, மயக்கத்திலும் ஆழ்ந்தாள்.

முகத்தில் யாரோ நீரை தெளிப்பது போல இருக்க, நீரின் விளைவாய், சற்று மயக்கம் தெளிந்தது அவளுக்கு.

அவளின் உணர்வுகள் முழுதாக விழிக்கும் முன்பு, உடல் ஏதோ மெத்தையில் படுத்திருப்பதை போல சுகமாக இருக்க, இப்படியும், அப்படியும் சற்று புரண்டாள் அவள்.

வெகுவாக பிரயத்தனப்பட்டு கண்களை திறந்தவளுக்கு, தான் திறந்த வெளியில் இருப்பதும், படுத்திருப்பது மெத்தை அல்ல புல்வெளி என்பதும், கொட்டியது நீர் அல்ல, மழையின் துளி என்பதும், புரிந்தது.

தன்னை துரத்திய மோகனின் நினைவு சட்டென முளைக்க, உடல் முழுவதும் பயத்தில் விரைத்தது.

பின்பு தான் அழுததும், அதை தொடர்ந்து என்னவென்றே தெரியாத எதற்குள்ளோ தான் விழுந்ததும், நினைவுக்கு வந்தது அவளுக்கு.

பாரமாய் கனத்த தலையை பிடித்து கொண்டு, எழுந்து அமர்ந்த நறுமுகை
சுற்றிலும் கண்களை ஓட்டி, தான் இருக்கும் இடத்தை அறிய முயன்றாள்.

ஆனால் அப்போது அது பண்ணை இல்லை என்பதை மட்டும் தான் புரிந்து கொள்ள முடிந்தது நறுமுகையால்.

பரிச்சயம் இல்லாத இடம் ஒரு பயத்தை தந்தாலும், அந்த கயவனிடமிருந்து தான் தப்பித்ததில், ஒரு சிறு நிம்மதியும் பிறந்தது அவளுக்கு.

புலன்கள் ஒன்று, ஒன்றாக உயிர்பெற, வெகு அருகில் நதி ஒன்று ஓடும் சத்தம் கேட்டது.

பூத்தூறலாய் அவளை தழுவிய மழை, அவளின் மயக்கத்தை துரத்த முயன்றபடி இருக்க, எழுந்து நின்ற நறுமுகைக்கு, அவளை சுற்றி இருக்கும் அனைத்தும் சுழல்வதைப் போல இருந்தது.

சற்று நின்று தன்னை நிதானப்படுத்தி கொண்டவள், நதியின் ஓசையை பின்பற்றி நதிக்கு செல்ல விழைந்து, கிழக்கில் ஒரு அடி வைக்க முயன்றால், அவள் கால் வடக்கை நோக்கி நகர்ந்தது.

இப்படியும், அப்படியுமாய் தள்ளாடியப்படியே ஒரு வழியாய் நதியை வந்து அடைந்தாள் நறுமுகை.

அமைதியாய் ஓடி கொண்டிருந்த நதி, ஏதோ ஒரு அமைதியை அவளுள் விதைக்க, அதன் குளிர்ந்த நீரை அள்ளி முகத்தை கழுவ, தலை பாரம் சற்று மட்டுப்பட்டதை போல இருந்தது.

எதிர்பாராமல் இன்று சந்தித்த நிகழ்வுகள் எல்லாம் அவளை மிகவும் சோர்வடைய செய்திருக்க, நதியின் நீரை பருகியே, இழந்த தெம்பை திரும்ப பெற முயன்றாள் நறுமுகை.

கொஞ்சம் தெம்பு வந்ததும், மூளை சுற்றுப்புறத்தை தெளிவாக அலச, தான் இருக்கும் இடம் ஏதோ காடு என்று புரிந்தது.

அவள் மயங்கி கிடந்த இடம் மட்டும், ஏதோ திட்டு போல புல்வெளியாய் இருக்க, அதை சுற்றி மரங்கள், நெருக்கமாக, வானுயர வளர்ந்து, மக்கள் நடமாட்டமே இல்லாத அடர்ந்த வனம் போல இருந்தது அப்பகுதி.

“எதற்குள்ளோ விழுந்தோமே அது என்னது”

“நாம எப்படி இங்கு வந்தோம்”

“இது என்ன இடம்”

“இங்க இருந்து எப்படி வெளிய போறது”

என்ற பல கேள்விகள் வண்டாய் துளைக்க, நறுமுகை ஒன்றும் புரியாமல், மழலையாய் செய்வது அறியாமல் மயங்கி நின்றாள்.

அப்போது ஏதோ சத்தம் கேட்க, நறுமுகைக்கு அப்போது தான்,

“இது காடு மாதிரி இருக்கே, அப்போ இங்க வைல்ட் அனிமல்ஸ் எல்லாம் இருக்கும் இல்ல”

என்ற எண்ணம் உதிக்க, சத்தம் கேட்டு திசையை திகைத்து பார்க்க, சத்தம் கொஞ்சம், கொஞ்சமாக நெருங்கி வந்தது.

பயத்தில் உறைந்து, உயிரை கையில் பிடித்து கொண்டு, முகம் எல்லாம் இரத்தப்பசையை இழக்க, நறுமுகை வெலவெலத்து நின்றாள்.

மரங்களை விலக்கி கொண்டு, அந்த அடர்ந்த வனப்பகுதியில் இருந்து ஆடவன் ஒருவன் வெளிப்பட, நறுமுகை சற்றே ஆசுவசமானாள்.

வந்தது மிருகம் அல்ல மனிதன் என்பதும், தனக்கு உதவி கிட்ட போவதில், சட்டென்று சிறு மகிழ்ச்சியும் உதயமானது அவளுக்குள்.

ஆனால் அங்கு அவளை பார்த்த அந்த ஆடவனின், முகத்தில் பல உணர்ச்சிகள் மாறி மாறி ஊர்வலம் போக, கடைசியாக இவளை முழு சந்தேகத்துடன் பார்த்தபடி,

“யார் நீ, இச்சமயத்தில் இங்கு எப்படி வந்தாய், இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாய்”

என்று கூர்மையுடன் கேட்க, அவனின் குரலே நறுமுகை உறைய செய்ய போதுமானதாக இருக்க, அவள்,

“அ…து வ….ந்…து, அது வந்து”

என்று தனக்கே தெரியாத ஒன்றை அவனிடம் என்னவென்று, எப்படி விளக்கி சொல்வது என்று திணற, அவள் முன்னால் நின்றிருந்த ஆடவனுக்கு, இவள் மேல் சந்தேகம் வலுப்பெற்றிருக்க வேண்டும்.

இவள் பார்த்து கொண்டிருக்கும் போதே, அவன் கைகளை காற்றில் சுழற்ற, சிறு சிறு மழை துளி எல்லாம் ஒன்றாக இணைந்து, நீளமான, கூர்மையான வாளாய் அவன் கையில் உருமாறி, நீல நிறத்தில் பளபளவென மின்னியது.

அந்த வாளை, நறுமுகையின் முன்னால் நீட்டியவன் மீண்டும்,

“யார் நீ”

என்று உரும, இன்றைய நாளில் நடைப்பெற்ற பல சம்பவங்களின் முத்தாய்ப்பாய், மழையில் இருந்து முளைத்த நீலநிற வாளை பார்த்த நறுமுகை, இந்நாள் தந்த அதிர்ச்சிகளின் கணம் தாங்க முடியாதவளாய், அப்படியே மயங்கி சரிந்தாள்.

Advertisement