Advertisement

மூர்ச்சியுற்ற தாயை மடியில் தங்கி கொண்டு, நடுங்கும் கைகளால் அலறிய கைபேசியில் அழைப்பை ஏற்று காதில் வைத்து நறுமுகை,

“ஹெலோ”

எனவும் அந்த பக்கம்,

“ஹெலோ, நான் பி2 ஸ்டேஷன் ஏட்டு பேசுறேன்மா, முன்னாடி முழுசா சொல்றதுக்குள்ள போன் கட் ஆகிடுச்சு போல, சந்திரசேகர் வீடு தானே”

என்று மறுபுறம் பேசியவர் உறுதிப் படுத்திக்கொள்ள மீண்டும் கேட்க, காவல்துறை என்றவுடன் ஏனோ உள்ளே ஒரு நடுக்கம் பரவ நறுமுகை,

“ஆமா சார், என்னோட அப்பா தான் சொல்லுங்க”

என்று முயன்று சாதாரண குரலில் பேச,

“அவர் வந்த கார் ஆக்சிடன்ட் ஆகிடுச்சுமா “

என்று அவர் பட்டென்று விஷயத்தை சொல்லவும், தாயின் மயக்கத்திற்கான காரணம் மண்டையில் உரைக்க, கேட்ட செய்தியின் கணத்தில் தலை சுற்றுவது போல இருந்தது நறுமுகைக்கு.

தான் பேச வேண்டிய அவசியம் புரிய,

“அப்பாக்கு என்ன ஆச்சு சார், அ….ப்…பா, அப்பா நல்லா தானே இருக்காங்க”

என்று ஏதோ ஒரு மெல்லிய நம்பிக்கையில், தந்தையின் நலனை உறுதிப்படுத்தி கொள்ள விழைந்து திக்கி திணறி கேட்க,

“வீட்டுல வேற யாரும் ஜென்ஸ் இல்லையமா, இருந்தா அவங்க கிட்ட போன் அஹ கொடேன்”

என்று இத்தனை வருடத்தில், இந்த மாதிரி பல சூழ்நிலைகளை கையாண்ட பக்குவத்தில், இவளின் நிலையை உணர்ந்தவராக அந்த பக்கம் சொன்னார் அந்த காவல்துறை அதிகாரி.

அவரின் பதிலில் அந்த மெல்லிய நம்பிக்கை இழை பட்டென அறுந்து போக, கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க நறுமுகை,

“வீட்டில வேற யாரும் இல்ல சார், சொல்லுங்க என்ன ஆச்சு அப்பாக்கு”

என, ஒரு பெருமூச்சை வெளியிட்ட அவர்,

“உங்க அப்பா போன கார், ஆப்போசிட்ல வந்த லாரி கூட நேருக்கு நேர் மோதி ஆக்ஸிடண்ட், கார்ல இருந்த மூணு பேரும் ஸ்பார்ட்லேயே இறந்துட்டாங்க, யாரையாவது துணைக்கு கூட்டிகிட்டு ஜி.எச்-கு வாமா”

என்று சொல்ல, கேட்ட செய்தியை புரிந்து கொள்ள முடியாமல், இரண்டு மணி நேரம் முன்பு, தன்னை கொஞ்சிய தந்தை இப்போது இந்த உலகத்தில் இல்லை என்பதை ஏற்று கொள்ள முடியாமல், முற்றிலும் உறைந்து, உடைந்து போனாள் நறுமுகை.

விபத்து என்றதற்கே மூர்ச்சையான அம்மாவிடம், அப்பா நிரந்தரமாக நம்மை விட்டு சென்று விட்டார் என்பதை எப்படி சொல்வேன் கடவுளே……

யோசிக்க, யோசிக்க நடக்கும் நிகழ்வின் கணம் தாங்காமல் கண்கள் எல்லாம் இருட்ட, மூச்சு முட்ட ஆரம்பித்தது நறுமுகைக்கு.

இது மயங்கி விழுவதற்கான நேரம் இல்லை என்பதையும், தான் துரிதமாக செயல்பட வேண்டியதின் அவசரத்தையும் உணர்த்தியது, அவளின் மடியில் இருந்த கணம்.

எழுந்து வெளியில் ஓடிய நறுமுகை, பண்ணையில் வேலை செய்யும் ஆட்களின் துணையுடன், அன்னையை பக்கத்தில் இருக்கும் மருத்துவமனையில் சேர்த்தாள்.

தேவியை பரிசோதித்த மருத்துவர்,

“ஷாக்ல வந்த மயக்கம் தான்மா, ட்ரிப்ஸ் போட்டு இருக்கேன், கொஞ்ச நேரத்துல கண்ணு முழிச்சிடுவாங்க”

என உறுதி செய்யவும், உடன் வந்த பண்ணையாளை அம்மாவுக்கு துணைக்கு வைத்துவிட்டு, தந்தையை காண அரசு மருத்துவமனைக்கு விரைந்தாள் நறுமுகை.

அங்கு ஏற்கனவே விஷயம் கேள்விப்பட்டு, அம்மையப்பரின் மகன் ராஜனும், அவரின் மேலாளரும் வந்து இருந்தனர்.

நறுமுகை வந்ததும், இறந்தவர்களை அடையாளம் காட்ட அவர்களை அழைத்து சென்றனர்.

முப்பொழுதும் புன்னகையுடன் வலம் வரும் தந்தையை, இரத்த வெள்ளத்தில் அவளால் பார்க்கவே முடியவில்லை.

கண்கள் கலங்க தந்தையை பார்த்தபடி நின்றிருந்த ராஜன், நறுமுகையின் அழுகையில் அவளை இரக்கத்துடன் பார்த்து, தன் மேலாளருக்கு கண்காட்ட, அவர் அவளை வெளியில் அழைத்து வந்து விட்டார்.

மீதி நடைமுறைகளை எல்லாம், ராஜனும், மேலாளரும் பார்த்து கொள்ள, சந்திரசேகரின் உடமைகள் எல்லாம் நறுமுகையிடம் ஒப்படைக்கப்பட்டன.

ஏற்கனவே ஒடிசலான தேகத்தை கொண்ட நறுமுகை, அடுத்தடுத்து நிகழ்ந்த நிகழ்வுகளால் ஓய்ந்து போய், மருத்துவமனையின் ஒரு ஓரத்தில் அழுகையில் கரைந்து கொண்டிருந்தாள்.

சட்டென்று தாயின் நினைவு வர, அவரின் நிலையை அறிய வேண்டி, ராஜனிடம் சொல்லிவிட்டு, மீண்டும் மருத்துவமனைக்கு விரைந்தாள்.

நறுமுகை நேராக தாயிடம் விரைய, மயக்கம் தெளிந்து அமர்ந்து இருந்த தேவியின் முகத்தில் துளியும் உயிர்பில்லை.

இவளை பார்த்ததும் லேசாக அவரின் கண்கள் ஒரு ஒளி பரவ, ஈன சுவரத்தில் இவளிடம்,

“அ…வ…ர்”

என்று கணவரின் நிலை அறிய கேட்க, கேவலுடன் தாயை அணைத்து கொண்ட நறுமுகை, விம்மலுடனும்,

“அ..ப்…பா, அப்பா நம்ம ரெண்டு பேரையும் விட்டு போயிட்டாரும்மா”

என்று கதற, தேவியின் முகத்திலோ ஒரு மாற்றமும் இல்லை.

நறுமுகையை மலங்க, மலங்க பார்த்தாரே தவிர, ஒரு வார்த்தையும் பேசவும் இல்லை, அவளை போல அழவுமில்லை.

பின்பு அன்னையை வீட்டிற்கு அழைத்து வந்து, தந்தைக்கு செய்ய வேண்டியதை எல்லாம் செய்ய என அடுத்துடுத்து அணிவகுத்த வேலைகளால் நறுமுகையால், தூக்கத்தை அழுது கூட ஆற்றி கொள்ள முடியவில்லை.

சந்திரசேகர் உறவுகள் என்று யாருமே வராத போதும், அவரை தெரிந்தவர்கள், நண்பர்கள், உடன் வேலை பார்த்தவர்கள் என்று பலரும் அவரின் இறுதி சடங்கில் கலந்துகொண்டு, அவருக்கு மரியாதை செலுத்தினர்.

யார், யாரோ வந்து தேவியிடம் என்னவெல்லாமோ சொல்லி அழுதும், அவரோ, வீட்டில் கிடத்தி வைக்கப்பட்டிருந்த கணவரின் முகத்தையே வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தார்.

எல்லாம் முடிந்து, வந்திருந்தவர்கள் எல்லாம் சென்ற பிறகு, தாயும், மகளும் வீட்டில் தனிமையில் இருக்க, அப்போது தான், நறுமுகைக்கு தாயின் நிலை வெகுவாக உறுத்த, அவரை நெருங்கி,

“அம்மா”

என்று அழைக்க, அவரோ அவளின் அழைப்புக்கு எந்த எதிர்வினையும் காட்டாமல், அப்படியே அமர்ந்து இருந்தார்.

தேவியின் தோளில் கைவைத்த நறுமுகை,

“அம்மா இங்க பாரும்மா, அம்மா, அ…ம்…மா”

என்று அழைக்க, அவரின் நிலையிலோ இப்போதும் எந்த மாற்றமும் இல்லை.

கண்கள் சந்திரசேகரின் புகைப்படத்தில் நிலைத்தது நிலைத்தபடி இருக்க, அப்படியே சிலையென அமர்ந்து இருந்தார் தேவி.

நடந்து முடிந்த நிகழ்விலே துவண்டு போய் இருந்த நறுமுகைக்கு, தாயின் நிலை ஏகத்துக்கும் பயத்தை விதைக்க, அவரை கட்டி கொண்டு அழுதவள்,

“அம்மா இப்படி இருக்காதம்மா, எ…ன…க்…கு, எனக்கு பயமா இருக்கு, அம்மா, அம்மா”

என, தங்கள் ஒரே செல்ல மகளின் அழுகை கூட தேவியின் செவியை எட்டாதது தான் பரிதாபம்.

தன் கணவரின் இறப்போடு உலகமே நின்று விட்டது போல, கல்லென அப்படியே இறுகி போய் அமர்ந்து இருந்தார் தேவி.

தந்தையின் இழப்பை ஏற்க முடியாத நறுமுகை, தாயையேனும் தன்னோடு தக்க வைத்து கொள்ள, அவளால் ஆன மட்டும் முயற்சி செய்தாள்.

தேவியை மனநல மருத்துவரிடம் காட்ட, அவர்கள் ஏதோ ஏதோ புரியாத பெயரில் ஒரு நோயை சொல்லி, மருந்து, மாத்திரை என்று கொடுத்தார்கள்.

தெரிந்தவர்கள், அறிந்தவரகளோ சித்த பிரம்மை என்றார்கள்.

அம்மாவை குளிக்க வைத்து, உணவு புகட்டி, மருந்து கொடுத்து என சேயை போல கவனித்து கொண்டால் நறுமுகை.

இந்த அடுத்தடுத்து நிகழ்வுகளால் நறுமுகையின் உடல்நிலையும் சீர்கெட, முன்னினும் மெலிந்து, பார்க்கவே வெகு பரிதாபமாக இருந்தாள் நறுமுகை.

நறுமுகை என்ன முயற்சி செய்தும், கணவன் இல்லா இப்பூலகில் வாழ விருப்பம் இல்லாத தேவி, அடுத்த ஒரு மாதத்திலேயே கணவரின் அடியை பின்பற்றி, வானுலகுக்கு தானும் சென்று விட்டார்.

ஒரு இழப்பில் மீண்டு வருவதற்குள் அடுத்த இழப்பு. முற்றிலும் உடைந்து தான் போய் விட்டாள் நறுமுகை.

ஆற்றுவார், தேற்றுவார் இன்றி, இரவு பகலாக அழுது கரைந்து, தன் துக்கத்தை ஆற்றி கொள்ள முயன்றாள் நறுமுகை.

இந்த பரந்த உலகில் நறுமுகை தனியாளாகி, முழுதாக மூன்று மாதங்கள் முடிந்தது.

இந்த மூன்று மாதத்தில் அவளின் வாழ்வியல் முறைகளில் பெரும் மாற்றம்.

அம்மையப்பரின் மனைவி, கணவர் வாழ ஆசைப்பட்ட இடத்தில், அவரின் நினைவுகளுடன் வசிக்க ஆசைப்பட்டு, நகரத்திற்கு தன்னுடன் வருமாறு அழைத்த மகனிடம், அங்கு வர மறுத்துவிட்டார்.

தாயின் மனநிலையை புரிந்து கொண்ட ராஜனும், நறுமுகையை தாயிக்கு துணையாய் பெரிய வீட்டிலேயே ஒரு அறையில் தங்க சொல்லி விட்டார்.

அதோடு அவளின் தந்தையின் வேலையையே இவளுக்கும் கொடுத்துவிட, தங்கும் இடத்திற்கும், மூன்று வேளை உணவுக்கும் பங்கம் இல்லாமல் போனது நறுமுகைக்கு.

ஆனால் சந்திரசேகரை போல, நறுமுகை வெளியில் பணம் வசூலிக்க செல்ல முடியாது என்பதால், வெளி வேலைகளுக்காக மோகன் என்ற ஒருவரை நியமித்தார் ராஜன்.

அதோடு பெண்கள் மட்டும் தனியாக இருப்பதால், துணைக்கு என்று மோகனின் குடும்பத்தை, முன்பு நறுமுகை குடும்பம் இருந்த வீட்டிலேயே தங்க வைத்தார்.

தங்களிடம் இத்தனை வருடமாக வேலைப்பார்த்தவரும், அப்பாவின் நண்பருமான சந்திரசேகரின் மகளான நறுமுகைக்கு, தங்களால் முடிந்த அனைத்து உதவியையும் செய்தார் ராஜன்.

பெரிய வீட்டில் சமையலுக்கு ஆள் இருக்க, காலையில் பெரியவீட்டு அம்மாவுடன் உண்டு பண்ணைக்கு சென்றால், மதிய உணவை அங்கேயே உண்டு விடுவாள் நறுமுகை.

தந்தையின் பின்னாலே தான் வால் பிடித்து கொண்டு சுற்றிய பண்ணையில், அவரின் பணியை தான் பார்ப்பதில் ஒருவகை நிம்மதி அவளுக்கு.

அவ்வப்போது பெற்றோரின் நினைவு தரும் வலிக்கு மருந்தாக, தன் பிரியமான மல்லிகை பந்தலை நாடி செல்வாள் நறுமுகை.

அன்று ஒரு நாள் அங்கு அமர்ந்து இருக்கும் போது, தன்னிடம் பேசிய மோகனின் பார்வையே இவளை கூச செய்ய, அங்கு செல்வதையே நிறுத்தி விட்டாள்.

மோகனை பற்றி ராஜனிடம் சொல்லாமா என்று நறுமுகை யோசிக்க, அதற்கு அவசியமே இல்லை என்பது போல, அதற்கு பின்னான நாட்களில் மோகன் வெகு பவ்யமாக, கண்ணியதுடன் நடந்து கொண்டான்.

ஒருவேளை தான் தான் அவனை தவறாக எண்ணி விட்டோமோ, என்றே தோன்றி விட்டது நறுமுகைக்கு.

ஆனாலும் ஏதோ ஒரு எச்சரிக்கை உணர்வின் பெயரில், அதன்பின்னர் அவளின் பொழுதுகள் எல்லாம் பகலில் பண்ணையிலும், மாலையில் அவளின் அறையில் மட்டும் தான் கழிந்தது.

சில நேரம் பெற்றோடு கழித்த இனிமையான நினைவுகளை அசைப்போட்டபடி இருப்பாள்.

சில நேரம் ‘இது எல்லாம் வெறும் கனவாக இருக்காதா’ என்று உண்மையை ஏற்று கொள்ள முடியாமல் ஏங்குவாள்.

சில சமயம், மகிழ்ச்சியான தன் வாழ்க்கை, இப்படி யாரோ மந்திரம் போட்டது போல, சட்டென்று தலைகீழாக மாறி போனதை நினைத்து துக்கத்தில் கரைவாள்.

இப்படிப்பட்ட எல்லா பொழுதுகளிலும் அவளின் கை, அவளின் கழுத்தில் கிடக்கும் சங்கிலியிலும், அதில் கோர்த்து இருந்த மோதிரத்திலுமே இருக்கும்.

நெற்றியில் சந்தனம், வலது கை மோதிர விரலில் இருக்கும் பச்சைகல் மோதிரம், வாடா புன்னகை, இது தான் அப்பா என்றவுடன் அவளுக்கு நினைவுக்கு வருவது.

தந்தையின் நினைவாக அந்த மோதிரத்தை அவள் அணிய பிரியப்பட, அவளின் எல்லா விரலுக்கும் அது பெரிதாக இருக்க, சங்கிலியில் கோர்த்து கொண்டாள்.

நோய்வாய்ப்பட்டு அவதிப்படும் போது, கை தானாக சங்கிலியை இருக்கி பிடிக்க, மனம் தானாய் தாய் மடி தேடும்.

ஆனால் கணவர் மேல் கொண்ட காதல் தான் பெரிதென்று, மகளை பற்றி கிஞ்சித்தும் யோசிக்காமல், இப்பொல்லா உலகில் தன்னை தனியே விட்டு சென்ற, தாயின் மீது கோபமும் பெருகும்.

அதேநேரம் அந்த ஒரு மாதமும் அவர் இருந்த நிலையை நினைத்து பார்க்கும் போது, கண்களில் கண்ணீர் பெருகும்.

இப்படியாக நறுமுகை நிதர்சனத்தை ஏற்று கொண்டு, பெற்றோரின் நினைவுகளோடு, தன் அன்றாட வாழ்க்கையை வாழ தொடங்கி இருந்தாள்.

அன்று மோகனின் மனைவி, அவர்களின் இரு பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு அவரின் தாய் வீட்டுக்கு சென்று இருந்தார்.

வர வேண்டிய பணத்தை வசூல் செய்ய சென்ற, மோகன் பொழுது சாய்ந்தும் வந்த பாடில்லை.

அன்று மாலை கருமேகம் திரண்டு பெரு மழைக்கு தயாராக, அதன் காரணமாக பண்ணை வேலையாட்கள் சீக்கிரமே கிளம்பி விட்டனர்.

சிறிது நேரத்தில் எல்லாம் வானமே பொத்து கொண்டது போல மழை கொட்ட, பண்ணையில் இருக்கும் செம்மண் எல்லாம் கரைந்து, சேறும் சகத்தியுமாய் மாற, அங்கு அங்கு தண்ணீர் வேறு தேங்கி நின்றது.

மழையின் காரணமாக ஏற்பட்ட குளிர் காற்றினால், பெரியவீட்டம்மாக்கு மூச்சு திணறல் ஏற்பட, அவர் அதற்கு மாத்திரை எடுத்து கொண்டு சீக்கிரமே உறங்க சென்று விட்டார்.

இன்று வர வேண்டிய தொகை பெரிது என்பதால், மோகனின் வரவை கொஞ்ச நேரம் எதிர்பார்த்திருந்தாள் நறுமுகை.

ராஜனுக்கு தான் அன்றைய கணக்கை சொல்ல வேண்டுமே, என்ற கவலை அவளுக்கு.

ஏழு மணியை தாண்டியும் மோகன் வராமல் இருக்க, உள்ளதை உள்ளப்படி ராஜனிடம் சொல்லிவிட்டாள் நறுமுகை.

நேரம் ஒன்பதை நெருங்கவும், நறுமுகையும் இரவு உடைக்கு மாறி, உறங்க ஆயுத்தமாக, வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது.

பண்ணையில் இரவில் காவலுக்கு வாயிற் காவலாளியும், அதுப்போக இரண்டு வேட்டை நாய்களையும் அவிழ்த்து விடுவது வழக்கம்.

நிட்சயம் வெளியாட்களால் இந்நேரத்திற்கு உள்ளே வர முடியாது.

ஆக வந்து இருப்பது மோகனாக தான் இருக்க வேண்டும் என்பதில் நறுமுகைக்கு ஐயமில்லை.

பணத்தை கொடுத்தவர்கள், இவளுக்கு சற்று முன்பு அழைத்து, பணத்தை கொடுத்து விட்டதாக வேறு சொல்லி இருந்தனர்.

அவ்வளவு பெரிய தொகையை, அவனிடமே வாங்காமல் விட்டு, நாளைக்கு வேறு எதுவும் பிரச்சனை என்றால், என்ன செய்வது என்று பெரும் யோசனையாய் இருந்தது அவளுக்கு.

அதேசமயம் இந்நேரத்தில் மோகனுக்கு கதவை திறப்பதா, வேண்டாமா என்ற ஐயமும் பெரிதாக எழுந்தது நறுமுகைக்கு.

Advertisement