Advertisement

கதிரவன் கிழக்கில் வெளியே வரலாமா, வேண்டாமா என்று மேகங்களோடு சதிராடி கொண்டிருந்த, விடிந்ததும், விடியாத சோபையான காலைப்பொழுது அது.

ஐம்பது ஏக்கர் பரப்பரபளவில் பரந்து, விரிந்து எல்லா வகை மரங்களாலும், பூ செடிகளாலும் நிரம்பி இருந்த பண்ணையின் நடுவே கம்பீரமாய் சற்றே பெரிய மாடி வீடு ஒன்று இருந்தது.

அதன் உப்பரிகையில் சுற்றிலும் இருக்கும் பூக்களின் கலவையான சுகந்தத்தை ஆழ்ந்து உள்ளிழுத்து கொண்டும், ஒப்பில்லா உவகையுடன் தன் பண்ணையை கண்களில் நிரப்பி கொண்டும் நின்றிருந்தார் அம்மையப்பர்.

நகரங்களின் சத்தம், சச்சரவு இவற்றில் இருந்து முழுவதும் மாறுபட்ட இவ்விடம், அவருக்கு ஈடில்லா அமைதியையும், மகிழ்ச்சியையும் தந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.

நிற்க நேரமில்லாமல் பணத்தின் பின்னே ஓடி கொண்டிருந்த இளம் வயதிலேயே அம்மையப்பர், தன் முதுமையை இப்படி ஒரு பண்ணையில் தான் கழிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

இளவயது முழுக்க சம்பாதித்த பணத்தில், விருப்பபடி பண்ணையை தயார் செய்து, தொழிலை மகன், மருமகளிடம் ஒப்படைத்து விட்டு, மனைவியுடன் இங்கு வாசம் செய்ய வந்துவிட்டார்.

பண்ணை முழுக்க ஒரு முறை வட்டமிட்ட அவரின் கண்கள், இறுதியாக சற்று தள்ளி இருந்த, சிறிய வீட்டின் மீது நிலைத்தது.

அந்த வீட்டின் ஆட்கள் எழுந்து விட்டதற்கான அடையாளம் தெரிய, காலை நடைப்பயிற்சியை செய்ய எண்ணம் கொண்டவராக, கீழே இறங்கினார் அம்மையப்பர்.

அவரின் கால்கள் நேராக அந்த சிறிய வீட்டை நோக்கி செல்ல, வீட்டை நெருங்கும் நேரம், உள்ளிருந்து வெளியே வந்தார், அந்த பண்ணையை மேற்பார்வையிடும் சந்திரசேகர்.

அம்மையப்பரை புன்னகையுடன் பார்த்த சந்திரசேகர்,

“குட் மார்னிங் சார்”

என்று சொல்ல, அவரை சற்றே முறைத்த அம்மையப்பர்,

“நானும் எத்தனை தடவை சொல்றேன் சந்திரன், சார் சொல்லதீங்கன்னு, நீங்க கேட்கவே மாட்றிங்க, ரெண்டு பேருக்கும் சேம் ஏஜ் தானே, பெயரை சொல்லியே கூப்பிடுங்களேன்”

என்று தான் தினமும் பாடும் பல்லவியை இன்றும் பாட, சந்திரனிடம் இருந்து வழக்கம் போல, ஒரு புன்னகை மட்டுமே.

சந்திரனை பற்றி அறிந்திருந்த அம்மையப்பர் ஒரு பெருமூச்சை வெளியிட, இருவரும் சிறிது தூரம் நடக்க, அவர்களின் கண்களில் பட்டது மல்லிகை பந்தலும், அதன் அடியில் அமர்ந்திருந்த நறுமுகையும்.

சதை பிடிப்பே இல்லாமல் ஒடிசலான தேகத்துடன், அடர்த்தியான நீளமான முடியுடன், நிமிர்ந்து பத்மாசனத்தில் அமர்ந்து, மூச்சு பயிற்சி செய்து கொண்டிருந்த அவள், சந்திரசேகரின் அருமை புதல்வி.

தன்னை போல செடி, கொடிகளிடம் கொண்ட பற்றுதலால், தாவிரவியலில் முதுகலை படித்து, எப்போதும் வாடா புன்னகையுடனும், துருத்துருப்புடன் வளைய வரும், தன் செல்ல மகளை வாஞ்சையுடன், லேசான வருத்துடனும் வருடின சந்திரசேகரின் விழிகள்.

இந்த இளம்வயதில் அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் அவதிப்பட்டாலும், அதை புன்னகையுடனே எதிர்கொள்ளும் நறுமுகையை, அம்மையப்பர் கண்கள் பரிவுடன் வருடின.

இருவரும் மல்லிகை பந்தலை கடந்ததும், அம்மையப்பரிடம், சந்திரசேகர் பண்ணையை பற்றி பேச ஆரம்பித்தார்.

“நேத்து தேங்காய் லோட் அனுப்பினதுக்கு, அட்வான்ஸ் போக மீதி பணத்தை இன்னைக்கு தரேன்னு சொல்லி இருக்காங்க”

“ம்ம்ம்ம்”

“தெக்கால இருக்கிற மரத்துல எல்லாம் கொஞ்சம் பூச்சி புடிச்சி இருக்கு, இன்னைக்கு மதியானம் போல மருந்து அடிக்க ஆளை வர சொல்லி இருக்கு”

“ம்ம்ம்”

“வாழை குலையை எல்லாம் இன்னும் ஒரு ரெண்டு நாள் தள்ளி வெட்டுனா, விக்க சரியா இருக்கும், அதுக்கும் ஆளு எல்லாம் சொல்லி விட்டிருக்கு”

“ம்ம்ம்ம்”

அதன் பிறகு அம்மையப்பர் ஏதோ கேட்க, சந்திரசேகர் பதில் சொல்ல அவர்களின் பேச்சு நீள, இருவரும் காலை நடைப்பயிற்சியை முடித்து இருந்தனர்.

சந்திரன் அவரின் வீட்டை நோக்கி செல்ல திரும்ப, அவரை கூப்பிட்டு நிறுத்திய அம்மையப்பர்,

“சந்திரன் இன்னைக்கு எனக்கும் வெளிய போற வேலை இருக்கு, தேங்காய் காசு வசூல் பண்ணனும் சொன்னிங்க இல்ல, நீங்களும் வாங்க, ஒரேடியா வேலையை முடிச்சிட்டு வந்துடலாம்”

என்று சொல்ல, சந்திரசேகரோ,

“உங்களுக்கு எதுக்கு சார் கஷ்டம், நான் பைக்லயே போயிட்டு வந்துடுவேன்”

என்று மறுக்க, அவரை முறைத்த அம்மையப்பரோ,

“ஒரே இடத்துக்கு போறதுக்கு, எதுக்கு தனி தனியா போயி காசை வேஸ்ட் பண்ணணும், உங்களுக்கு என் கூட கார்ல வரது பிராப்ளம்ன்னா சொல்லுங்க, நான் உங்க கூட பைக்ல வரேன், மத்தவங்க மாதிரி, நான் பிகு எல்லாம் பண்ண மாட்டேன்பா”

என்று சொல்ல, இதற்கு மேல் எப்படி மறுக்க என்று தெரியாமல், சந்திரசேகர் தயக்கத்துடன்,

“சரி சார் கார்லையே போயிடலாம்”

என்று தன் சம்மதத்தை சொல்லி விட்டு, சென்றார்.

செல்லும் சந்திரசேகரை பார்த்து கொண்டிருந்த அம்மையப்பருக்கு, அவரை எப்படி அணுகுவது என்றே புரியவில்லை.

தொழில்முறையில் தனக்கு நண்பர்கள் என்ற பெயரில் நிறைய பேர் இருந்தாலும், உண்மையான நண்பர் என்று எல்லாம் அம்மையப்பருக்கு யாரும் இல்லை.

சந்திரசேகரின் குணம் அவரை பெரிதும் ஈர்க்க, அவரை தன் நண்பனாக்கி கொள்ள, இவரும் முயன்று கொண்டு தான் இருக்கிறார்.

ஆனால் சந்திரசேகரோ, தனக்கென ஒரு வட்டத்தை போட்டு கொண்டு, மற்றவர்களுடன் ஒரு இடைவெளியுடனே பழகுவதன் காரணம் மட்டும் புரியவில்லை அம்மையப்பருக்கு.

பத்து வருடத்திற்கு முன்பு, இந்த பண்ணை விஷயமாக தான் சந்திரசேகரை முதல் முறை சந்தித்தார் அம்மையப்பர்.

இந்த மாதிரி பண்ணையை உருவாக்க, மண்ணின் தரம், அந்த மண்ணில் வளர கூடிய மரம், மற்றும் உரிமையாளரின் விருப்பத்திற்கு ஏற்றபடி செடிகளை பரிந்துரை செய்து, அவை ஒரு அளவுக்கு வளரும் வரை பார்த்து கொள்வது தான் சந்திரனின் வேலை.

எங்கு சென்றாலும் தன் பணத்திற்கு கிடைக்கும் மரியாதையை கண்டே பழகி இருந்த அம்மையப்பருக்கு, அனாவசிய பவ்யமோ, பணிவோ காட்டாமல், வெகு சாதாரணமாக உரையாடிய சந்திரசேகரின் மீது, தானாக ஒரு மரியாதை வந்தது.

செடிகளை பற்றிய அவரின் அறிவு, தான் எதிர்பார்த்த படியே பண்ணையை வடிவமைத்து கொடுத்தது என எல்லாம் சந்திரனின் மீதான அவரின் அபிப்ராயத்தை அதிகமாக்கியது.

அம்மையப்பர் தொடர்ந்து பண்ணையை சந்திரனின் பொறுப்பிலே விட பிரியப்பட, அதற்கு அவரை சம்மதிக்க வைக்கத்தான் இவர் தான் பெரிதும் போராட வேண்டியதாய் இருந்தது.

நல்ல சம்பளம், தங்க இடம் என எல்லா வசதியும் அம்மையப்பர் செய்து தர தயாராய் இருந்தும், சந்திரசேகர் முதலில் அதற்கு சம்மதிக்கவே இல்லை.

பின்னர் மகளுக்கு இந்த இடம் மிகவும் பிடித்துவிட, அடிக்கடி குடும்பத்தை விட்டு பிரியும் நிலையும் மாறும் என்பதால், மிகவும் யோசித்தே, வெகுவான தயக்கத்துடனே சந்திரசேகர் வேலையை ஏற்று கொண்டார்.

பழையவற்றை எல்லாம் அசைபோட்டப்படியே, அம்மையப்பர் தன் வீட்டிற்குள் சென்றார்.

அதேநேரம் தன் வீட்டிற்கு சென்ற சந்திரசேகரும், குளித்து தயாராகிய பின், வீட்டின் பின்புறம், வெகு கவனத்துடன் ஏதோ செய்து கொண்டிருந்தார்.

தானும் குளித்து முடித்து, உணவு உண்ண வந்து அமர்ந்த நறுமுகை, தந்தையின் கையில் குடிக்கொண்டிருந்த குவளையில் இருந்த பச்சை நிற திரவத்தை பார்த்ததும்,

“அப்பா”

என்று அடுத்து நடக்கவிருப்பதை நினைத்து அலற, அவளின் தலையை ஆதுரமாக வருடிய சந்திரசேகர்,

“இது ஓரிதழ் தாமரைடா, தெரிஞ்சவங்க கிட்ட சொல்லி வச்சி, ரொம்ப கஷ்டபட்டு வாங்கி, நிழலில் உலர்த்தி பொடி பண்ணதும்மா”

என்று தன் கையில் இருந்த வஸ்துவின் புராணத்தை விளக்கி சொன்னவர், பின்பு சிறிது கெஞ்சலுடன்,

“இந்த பொடியை காலையில, மாலைன்னு இரண்டு வேளை குடிச்சா உடல் வலுவாகும், என் செல்லம் இல்ல குடிச்சிடுமா”

என்று சொல்ல, இந்த உரையாடலை இருவருக்கும் உணவு எடுத்து வைத்தபடி கேட்டு கொண்டிருந்த நறுமுகையின் தயார் தேவி,

“அப்பா இவ்ளோ தூரம் சொல்றாங்க இல்ல, வாங்கி குடிடாமா”

என்று அவர் பங்குக்கு அவர் வெகு வாஞ்சையுடன் சொல்ல, இருவரின் முகத்தையும் பார்த்த நறுமுகை, ஒரு பெருமூச்சுடன் அதை வாங்கி, ஒரே மூச்சில் பருகினாள்.

பருகிய பானத்தின் சுவையில் நறுமுகையின் முகம் அஷ்டகோணலாக, அதை பார்த்த அவளின் பெற்றோரின் முகத்திலோ கவலை கோடுகள்.

அதை கவனித்த நறுமுகை, அந்த பானத்தின் சுவையை முகத்தில் காட்டாமல் இருக்க பெரும்பாடு பட்டப்படி,

“அப்பா இந்த ஓரிதழ் தாமரை பத்தி நான் கேள்வி தான் பட்டிருக்கிறேன், நேரில் பார்த்ததே இல்லை, அந்த செடியை என் கிட்ட காட்டமா, ஏன் பொடி பண்ணீங்க”

என்று அவரிடம் சண்டைக்கு தயாராக, தன் மகளின் எண்ணம் புரிய, ஆதுரமான புன்னகையை சூடி கொண்ட சந்திரசேகர்,

“நீ இப்படி கேட்பனு எனக்கு தெரியாதா, பின்னாடி ஒரு செடியை நட்டு வைச்சிருக்கிறேன், சாப்பிட்டு போய் பாருடா”

என்று சொல்ல, அதன் பிறகு பேச்சுகள் பொதுவாக நீள, அப்பாவும், பெண்ணும் உணவு உண்டு எழுந்தனர்.

எத்தனை முறை, எப்படி எப்படியோ அப்பாவும், பெண்ணும் சொல்லி பார்த்தும், தேவி இவர்களுடன் சேர்ந்து எப்போதுமே உண்ண மாட்டார்.

இருவருக்கும் அவரே பார்த்து பார்த்து பரிமாறி, அவர்கள் வயிறார உண்ட பிறகு, தான் உண்பது தான் தேவியின் வழக்கம்.

தன் காதல் மனைவியை இந்த விஷயத்தில் மாற்ற முடியாத சந்திரசேகர் தான், இந்த விஷயத்தில் மாற வேண்டியதாய் இருந்தது.

மனைவி உணவு உண்ணும் வரை அருகில் அமர்ந்து, அன்றைய தன் வேலைகளை பற்றி, அவரிடம் பேசி கொண்டிருந்தார் சந்திரசேகர்.

இது தினமும் நடப்பது தான் என்பதால், அங்கிருந்து மெதுவாக நழுவிய நறுமுகை, புது வரவை காண வீட்டிற்கு பின்னால் சென்றாள்.

இன்று போல, அடிக்கடி ஏதாவது புது, புது பெயரில் செடிகளை, நறுமுகையின் தேக அரோக்கியத்திற்காக கொணர்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார் அவளின் தந்தையார்.

அவை எல்லாம் அரிதான செடி வகைகள் என்பதால், அவற்றில் ஒரு செடியை நட்டு, அவற்றை பராமரிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தால் நறுமுகை.

உணவு உண்டு முடித்ததும், நறுமுகை வீட்டின் பின்னால் தான் இருக்கிறாள் என்பதை உறுதி செய்து கொண்ட தேவி, தன் கணவரின் பக்கம் திரும்பி அமர்ந்து,

“பாப்பா இப்படி கஷ்டபட நீங்க காரணம் இல்லைங்க, தயவுசெய்து உங்களை நீங்களே கஷ்டப்படுத்திக்காதீங்க”

என்று தன் சரிபாதியின் உள்ள கிடங்கையும், அதில் ஊரும் கவலை ஊற்றையும் அறிந்தவராக சொல்ல, ஒரு வருத்தமான புன்னகையை சிந்திய சந்திரசேகரோ,

“நான் காரணம் இல்லைன்னு எப்படி சொல்ற தேவி, நான் இன்னும் கொஞ்சம்…………”

என்று கமரிய குரலில் சொல்ல முடியாமல் தடுமாற, அவரின் கைகளை பிடித்து கொண்ட தேவி,

“நான் மறுபடியும் மறுபடியும் சொல்றேன், இது உங்க தப்பு இல்ல, அன்னைக்கு இருந்த சூழ்நிலை அப்படி”

என்று அவரை சமாதானப்படுத்த, மேற்கொண்டு இதைப் பற்றி விவாதித்து, மனைவிக்கு கவலையை கொடுக்க விரும்பாத அவர்,

“ஹ்ம்மம்ம்”

என்று மனைவியின் பேச்சை ஏற்றுக்கொண்டவர் போல பாவனை செய்து விட்டு,

“சரிம்மா நான் கிளப்புறேன், சொன்னேன் இல்ல இன்னைக்கு வெளிய வேலை இருக்கு, சார் கூட கார்ல தான் போறேன்”

என்றவர், வீட்டின் பின்புறம் புதுவரவை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த மகளிடம் கிளம்புவதாக சொல்லிவிட்டு, மீண்டும் மனைவியிடம் வந்தவர்,

“ரெண்டு பேரும் பத்திரமா இருங்க, எதாவதுன்னா உடனே எனக்கு போன் பண்ணு, சரியா”

என்று சொன்னவர், அன்றாட தன் வழக்கம் போல, தன் மனைவியை கண்களில் நிரப்பி கொண்டு, மெலிதான தலையாட்டலுடன் அவரிடம் விடைபெற்றார்.

தன் ஓவிய புத்தகத்தை எடுக்க உள்ளே வந்த நறுமுகையின் கண்களில் இந்த காட்சி பட்டது.

அவளின் பெற்றோர் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் என்பது, அவள் அறிந்த ஒன்று தான்.

அதுவும் அப்பாவின் பக்கத்தில் பயங்கரமான எதிர்ப்பு இருக்க, இருவரும் வீட்டை விட்டு வெளியேறி விட்டார்களாம்.

இதை எல்லாம் அம்மாவை துருவி அவள் தெரிந்து கொண்டவை. இத்தனை வருடங்களில் இருவரும் சண்டையிட்டே அவள் பார்த்தது இல்லை.

எப்போதும் வாடா புன்னகையுடன் வளம் வரும் தந்தை, அவரின் முகம் பார்த்து நடக்கும் தாய் என, ஏனோ அவர்கள் காதலும், புரிதலும் நித்தமும் வளருவது போல தோன்றும் அவளுக்கு.

முப்பொழுதும் மாறாத பெற்றோரின் காதல், என்றும் போல இன்றும் முகத்தில் புன்னகையை தோற்றுவிக்க, இளம்நகையுடனே தன் அறைக்கு சென்று விட்டாள்.

சந்திரசேகர் கிளம்பியதும், தேவி மீதம் இருந்த வீட்டு வேலைகளில் முழ்க, நறுமுகையோ புதிய செடியை, தன் ஓவிய புத்தகத்தில் தீட்டுவதில் மும்பரமாக இருந்தாள்.

அப்போது வீட்டில் இருக்கும் கைபேசி ஓசை எழுப்ப, தேவி,

“ஹெலோ”

என்று சொல்லவும், அந்த பக்கம் சொன்ன செய்தியில், வேரற்ற மரம் போல, அப்படியே தரையில் சரிந்தார்.

ஏதோ விழும் சத்தத்தில், பின்னால் இருந்து ஓடி வந்த நறுமுகைக்கு, ஒரு நிமிடம் ஒன்றுமே புரியவில்லை.

மயங்கி கிடக்கும் தாயையும், அவரின் கையில் அலறி கொண்டிருந்த கைபேசியையும் மாறி, மாறி பார்த்தவளுக்கு, உடல் எல்லாம் ஏனோ சில்லிட்டது.

சமையலறைக்கு சென்று தண்ணீர் கொணர்ந்து வந்தவள், தாயின் தலையை மடியில் வைத்து, அவரின் முகத்தில் தண்ணீரை தெளித்து,

“அம்மா, அம்மா என்ன ஆச்சும்மா, கண்ணை திறமா”

என்று அவரை உளுக்கியவள், அவரின் கன்னத்திலும் தட்டினாள்.

எதற்கும் அவரிடம் எந்த அசைவும் இல்லாமல் போக, தொடர்ந்து அலறிய கைப்பேசி வேறு பயத்தை கூட்ட, நடுங்கிய கையால் கைபேசியை எடுத்து அழைப்பு ஏற்றால் நறுமுகை, அது தர காத்திருக்கும் அதிர்ச்சியை பற்றி அறியாமல்.

Advertisement