கள்ளூர பார்க்கும் பார்வை 7 1 12398 கள்ளூர பார்க்கும் பார்வை 7 முதல் முறையாக இந்திரஜாவின் பார்வை பிரபாகரனுக்கு ஒப்பவில்லை. அவளின் நேர் பார்வை, அது சொல்லும் செய்தி, எதுவும் அவனுக்கு உவப்பாக இல்லை. இவள் அவன் மயங்கும் இந்திரஜா இல்லை. இவள் வேறு. கண்டுகொண்டான். ஆனால் ஏற்று கொள்ள தான் முடியவில்லை. “இந்து..” கேசவன் மகளை கூப்பிட்டார். மகள் பார்வையை அவர் பக்கம் திருப்ப, “மாப்பிள்ளை சொல்றது தான் என்னோட எண்ணமும், விஷயம் எந்தளவு பெருசுன்னு தெரியாம நாம உள்ள போறது எனக்கு சரியா படல..” என்றார். “ப்பா.. நான் ஜஸ்ட் அம்பிகா மேடம்க்கு அடையாளம் தான் காட்ட போறேன்..” இந்திரஜா அதையே சொல்ல, பிரபாகரன் தலை கோதி கொண்டான். “அதான் வேணாம்ன்னு சொல்லுது இல்லை, திரும்ப திரும்ப அதையே பேசாத இந்து..” மரகதம் மகளை அதட்டினார். “மரகதம்.. பொறு..” கேசவன் மனைவியை அமைதி படுத்தியவர், “இந்து.. இதெல்லாம் எடுத்தோம், கவுத்தோம்ன்னு செய்ற விஷயம் இல்லை, நம்ம பாதுகாப்பு சம்மந்தப்பட்டது.. யோசிச்சு தான் செய்யணும்..” என்றார் தந்தை பொறுமையாக. “ப்பா.. இது கேஸ் எல்லாம் கொடுத்து இல்லை, டிடெக்டிவ் வச்சு தான் பார்த்திட்டு இருக்காங்க, நானும் அவங்ககிட்ட தான் அடையாளம் காட்ட போறேன், நீங்க யோசிக்கிற அளவு இதுல ரிஸ்க் இருக்கும்ன்னு எனக்கு தோணல..” என்றாள் மகள். “அது தான் அங்க விஷயமே, அவங்க கேஸ் கொடுத்து போனா கூட லீகலா பார்த்துக்கலாம், டிடெக்டிவ் வச்சு பார்க்கிறது தான் உறுத்துது, நாமலும் அதுக்கு துணை போறது நமக்கு வினையாக முடியவும் வாய்ப்பிருக்கு..” என்றான் பிரபாகரன். “நீங்க லாயரா பேசுறீங்க, அவங்களுக்கு என்ன சூழ்நிலைன்னு நமக்கு தெரியாதே..?” என்றுவிட்டாள் இந்திரஜா. பிரபாகரனுக்கு அவள் வார்த்தைகள் முகத்தை இறுக வைத்தது. “இந்து.. என்ன இது..? அதான் அப்பாவும், மாப்பிள்ளையையும் இவ்வளவு சொல்றாங்க இல்லை, நீ என்ன சொன்னதையே சொல்லிட்டிருக்க, யாரோ ஒருத்தருக்காக எங்கிட்ட ஆர்கியூ பண்ணிட்டிருக்க.. அவங்க யாருன்னு கூட உனக்கு முழுசா தெரியாது..” மரகதம் கோவமாக பேச, இந்திரஜா யாரையும் பார்க்காமல் முகம் திருப்பி கொண்டாள். அவளின் கோவம் அதிலே தெரிய, பக்கத்தில் அமர்ந்திருந்த ஆவுடையப்பன் பேத்தியின் கையை தட்டி கொடுத்தார். “மாமா.. நான் பேசுறேன்..” என்ற பிரபாகரன், இந்திரஜாவுடன் வெளியே சிட் அவுட்டிற்கு வந்தான். “உட்காரு..” என்று சேரை காட்ட, “இல்லை பரவாயில்லை..” என்றாள் சுணக்கத்துடன் எங்கோ பார்த்து. அவளின் சுணக்கம் பிரபாகரனிடத்தில் சின்ன இளக்கத்தை கொடுக்க, “இப்போ எதுக்கு இவ்வளவு கோவம்..?” என்றான். “நான் மட்டும் தான் கோவப்படுறேனா..?” இந்திரஜா அவனை பார்த்து கேட்க, “அதுக்கு காரணம் யார்..?” அவளிடமே கேட்டான். “ஒருத்தருக்கு உதவி செய்ய நினைக்கிறது தப்பா..?” இந்திரஜா ஆற்றாமையுடன் கேட்க, “நமக்கு பாதகம் வராத வரைக்கும் தான் சரி தப்பு எல்லாம்..” என்றான் பிரபாகரன். “இதுல நமக்கு என்ன பாதகம் இருக்க போகுது..?” “இருக்க போய் தான் வேண்டாம்ன்னு சொல்றேன்.. இன்னொருத்தருக்கு நல்லது செய்ய நினைக்கிறது தப்பு இல்லை, ஆனா அந்த நல்லதுனால நமக்கோ, நம்மை சார்ந்தவங்களுக்கோ கெட்டது எதுவும் நடந்திட கூடாது..” “அப்படி நடக்குமா என்ன..?” இந்திரஜா சந்தேகமாக கேட்டாள். “இப்போ தான் எனக்கு ரொம்ப கோவம் வருது, ஆனா நீ நான் கோவப்பட்டா மூஞ்சை திருப்புவ.. என்னால பொறுமையா பேச முடியாதுன்னு பார்க்கிறேன்..” என்றான் பல்லை கடித்து. “என்னன்னு சொல்லுங்க..” இந்திரஜா சேரில் அமர்ந்தாள். “என்ன சொல்லணும்..? நீ முதல்ல உன்னை சுத்தி என்ன நடக்குதுன்னு கவனிச்சு பார்த்தியா..? இப்போ வரை நீ என்கிட்ட அம்பிகா மேடம் உன்னை பார்க்க வந்தது எனக்கு எப்படி தெரியும்ன்னு கேட்கல, யாரோ என்னை மிரட்டினாங்கன்னு நான் சொன்னதையும் என்னன்னு கவனத்துல எடுத்துக்கல..” என்றான் குற்ற சாட்டாக. இந்திரஜாவிற்கும் அப்போது தான் புரிய, தன் தவறை உணர்ந்து, “சாரி..” என்றாள். “ச்சு.. நீ என்கிட்ட சாரி கேட்கணும்ங்கிறதுக்காக இதை நான் சொல்லலை, சில விஷயங்கள் செய்ய முன்ன நல்லா யோசிச்சு, ஆராய்ஞ்சு தான் செய்ய முடியும்..” “புரியுது.. ஆனா எனக்கு இதுல ரிஸ்க் இருக்கும்ன்னு தோணல, அதான் அடையாளம் காட்டலாம்ன்னு நினைச்சேன்..” “நீயா எப்படி முடிவெடுப்ப இந்திரஜா..? அன்னைக்கு அந்த அம்பிகா மேடம் உன்னை பார்க்க வந்துட்டு போன கொஞ்ச நேரத்துல எனக்கு ஒருத்தன் போன் பண்ணி மிரட்டுறான், அந்த பொம்பிளைக்கு ஏதாவது ஹெல்ப் பண்ண நினைச்சா நம்ம பேமிலியை ஏதாவது பண்ணிடுவேன்னு வார்ன் பண்றான், புவனா மாப்பிள்ளை வேலை பார்க்கிற ஆபிஸ், அவர் வீட்டுக்கு போற நேரம், வழி எல்லாம் சரியா சொல்லி, அவரை பார்த்துகிறோம்ன்னு மிரட்டி வைக்கிறான்..” “அச்சோ..” கேட்ட இந்திரஜாவிற்கு கொஞ்சம் பக்கென்று தான் ஆனது. “இந்த விஷயத்தை இதுவரை நான் நம்ம பேரண்ட்ஸ்கிட்ட கூட சொல்லலை, நாம தான் அதுல தலையிட போறதில்லையே, தேவையில்லாம அவங்களை எதுக்கு கவலை பட வைக்கணும்ன்னு தான், ஆனா இங்க நீ அடையாளம் காட்ட போறேன்னு கிளம்பி நிக்கிற..” பிரபாகரன் சொல்ல, “எனக்கு ஆதி பத்தி கொஞ்சம் தெரிஞ்சது, அதான் சொன்னா அம்பிகா மேடம்க்கு ரொம்ப உதவியா இருக்கும் நினைச்சேன்..” என்றாள் இந்திரஜா. “என்ன தெரிஞ்சது..?” பிரபாகரன் கண்கள் சுருங்க கேட்டான். “ஆதித்யன் ஒரு பைக் ரேசர்ன்னு..” என்றாள். “என்ன..?” பிரபாகரனுக்குமே இது புதிய செய்தி. அவன் நண்பர்கள் பற்றி தான் எதாவது இருக்கும் என்று நினைத்தால், இது வேறு எங்கோ செல்கிறதே..? “கிங் நிஞ்சாங்கிற பேர்ல் இன்ஸ்டால இருக்கான், என்னோட ஸ்டூடண்ட்ஸ் மூலமா தான் எனக்கு அவனை தெரிஞ்சது, அவன் கழுத்துல இருக்கிற டேட்டூ தான் எனக்கு அவனை அடையாளம் காட்டுச்சு..” என்று எல்லாம் சொல்ல, பிரபாகரன் அவள் சொன்னவற்றை கிரகிக்க ஆரம்பித்தான். “நீங்களே யோசிச்சு பாருங்க, எங்கோ இருக்கிற எனக்கு ஏன் ஆதி பத்தி இவ்வளவு டீடையில்ஸ் தெரிய வரணும்..? இத்தனைக்கும் அவன் ஆக்சிடென்ட் அப்போ எனக்கு அவன் யாருன்னு கூட தெரியாது, ஆனா இப்போ..? நானா எதையும் தேடி ஓடல, எனக்கா தெரிய வரும் போது சொல்லாம மறைக்கிறது நியாயமா படல..” என்றாள் வருத்தத்துடன். பிரபாகரன் சில நொடி அமைதியாக எல்லாம் மனதுக்குள் ஓட்டி பார்த்தவன், ஆதியின் இன்ஸ்ட்டா பேஜ் எடுத்து பார்த்தான். “அம்பிகா மேடம்க்கு ஆதி பைக் ரேசர்ன்னு தெரியாம இருக்குமா..?” மொபைல் பார்த்து கொண்டே கேட்க, “அவங்களுக்கு தெரியல, அன்னைக்கு என்கிட்ட பேசும் போது, ஆதி என்னோட காதலை உங்களுக்கு ஒரு நாள் காட்டுறேன்னு சொன்னான், யாருன்னு காட்டாமலே போயிட்டான்னு தான் அழுதாங்க..” என்றாள். “அப்படியே இருந்தாலும் அவங்க பேமிலல ஒருத்தருக்கு கூடாவது இது தெரியாம இருக்கும், இந்த பைக் விலை என்ன தெரியுமா..? அரை கோடி, இருபத்தி இரண்டு வயசு பையனால வாங்க கூடிய பைக் இல்லை அது..” என்றான் போனை அவள் முன் நீட்டி. “நானும் இதை யோசிச்சேன், அவங்க அப்பா ஏதும் வாங்கி கொடுத்திருப்பாங்கன்னு..” “இந்த அஸம்ப்ஷனே வேண்டாம் இந்திரஜா, அம்பிகா மேடம் வீட்லே அவங்களுக்கு யாரும் உதவ தயாரா இல்லை, இன்னும் சொல்ல போனால் அவங்களோட எதிரி அவங்க வீட்லே இருக்க கூட வாய்ப்பிருக்கு, பெட்டர் நாம ஒதுங்கிக்கிறது தான் நல்லது..” என்றான் முடிவாக. “கொஞ்சம் யோசிச்சு பாருங்க.. ஒரு அம்மா இந்த தகவலுக்காக தான் தேடி அலைஞ்சிட்டு இருக்காங்க, நாம எல்லாம் தெரிஞ்சும் அமைதியா இருக்கிறது கில்ட்டா இருக்கு..” என்றாள் இந்திரஜா. “நிச்சயம் கில்ட் இருக்கும், அதுக்காக நமக்கு சேப் இல்லாத விஷயத்தை செய்ய முடியாது தானே, எப்படியும் அம்பிகா மேடம் டிடெக்டிவ் வச்சு விசாரிச்சுட்டு தானே இருக்காங்க, இன்னைக்கு இல்லனாலும் கொஞ்ச நாள் கழிச்சாவது நிச்சயம் கண்டுபிடிச்சிடுவாங்க, ஆதி சோஷியல் மீடியா, அவன் போன், அவன் ப்ரண்ட்ஸ் எல்லாம் அலசி ஆராய்ஞ்சாலே போதும், ஈஸியா யார் அந்த கல்ப்ரிட்ன்னு கண்டுபிடிச்சிடலாம்..” என்றான். இந்திரஜாவிற்கு அவன் சொல்வது புரிந்தது. ஆனால் மனதின் உறுத்தல் அடங்கவில்லை. கை விரல்களை பார்த்து கொண்டிருந்தாள். பிரபாகரன் அவளை புரிந்து அவளின் இரு பக்க சேர் கைப்பிடியில் கையூன்றி குனிந்தான். அவன் நெற்றி அவள் நெற்றிக்கு அருகில் இருக்க, மூச்சு காற்று அவளை சீண்டி சென்றது. அப்போது தான் குளித்து வந்திருப்பான் போல. இதமான வாசத்துடன் அவள் முகம் பார்த்திருக்க, இந்திரஜா அவன் நெருக்கத்தில் தடுமாறி அவனை பார்த்தாள். “இப்படி பார்க்காத.. எனக்கு பிடிக்கவே இல்லை. வந்ததுல இருந்து உன்னோட பேச்சை விட உன்னோட இந்த பார்வை தான் எனக்கு அதிக கோவத்தை கொடுத்துச்சு, எப்போவும் என்னை பார்க்கிற மாதிரி பாரு..” என்றான் செல்ல மிரட்டலாக. இந்திரஜாவோ பின்னால் சாய்ந்து இருவருக்குமான இடைவெளியை கூட்டினாள். பிரபாகரன் புருவம் தூக்கி நிமிர்ந்து நின்றவன், “ரொம்ப அப்செட்டா இருக்க போல..” என்றான். இந்திரஜா பதில் சொல்லாமல் அமைதியாக இருக்க, “நான் சொல்றது உனக்கு சுயநலமா இருக்கலாம், அது தான் உண்மையும் கூட, நாம நினைக்கிறதை செய்ய நாம தனி இல்லையே, நம்மை சுத்தி நம்ம பேரண்ட்ஸ், தாத்தா, தங்கச்சிங்க குடும்பம்ன்னு நிறைய பேர் இருக்காங்க.. அவங்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உனக்கும், எனக்கும் இருக்கு, நாமே அவங்களை இக்கட்டுல மாட்டி வைக்க கூடாது தானே..?” “அப்போ யாருக்கு என்ன நடந்தாலும் கண்டுக்காம இருக்கணும் அப்படி தானே..? ஒரு லாயரா உங்ககிட்ட இருந்து இதை நான் எதிர்பார்க்கலை..” இந்திரஜா சொல்ல, பிரபாகரன் மெலிதாக சிரித்தவன், “லாயரா இருந்தாலும் நானும் மனுஷன் தானே, நீ முதல் முறை இப்படி ஒரு விஷயம் பார்க்கவும் ஏத்துக்க முடியல, ஏதாவது செய்ய நினைக்கிற, ஆனா எனக்கு அப்படி இல்லை, நிறைய பார்த்துட்டேன், கடந்தும் வந்துட்டேன், என்ன செய்ய சொல்ற..? இங்க யாரும் பிடிச்சோ, வேணும்ன்னோ தவறுகளை கண்டுக்காம தள்ளி நிக்கிறதில்லை, அவன் சூழ்நிலை அப்படி, அவனுக்கு பின்னாடி இருக்கிற குடும்பம் அவனை அப்படி இருக்க வைக்கும்..”