கருணாகரன் தான் சரிகாவின் பெரியப்பாவிடம், “பொண்ணுக்கு ட்ரெய்னிங் மதுரையில் போட்டு இருக்காங்க., மதுரையில அவளுக்கு பாதுகாப்பா இருக்கிற மாதிரி ஒரு வீடு இருந்தா நல்லா இருக்கும்.,  டூட்டி டைம் மாறிட்டே இருக்கும்,இப்போதைக்கு பக்கத்துல ஏதோ பிஹெச் ட்ரைனிங் போட்டு இருக்காங்க.,  ரெண்டு மாசத்துக்கு அப்புறம்  பத்து மாசம் மதுரை ஜிஹெச் போற மாதிரி இருக்கும்., போயிட்டு வர்ற மாதிரி தூரம் இருந்துச்சுன்னா சரியா இருக்கும்”, என்று சொன்னார்.

     அவர்தான்,”நம்ம வீட்டுல  தங்கிக்கணும்னா தங்கிடட்டுமே”, என்றார்.

    “இல்ல அவ தனி வீடு வேணும் அப்படின்னு சொல்றா”, என்று சொன்னார்.

     “சரி பார்ப்போம், உங்களுக்கு விசாரிச்சிட்டு சொல்லுறேன்”,என்று சொல்லிவிட்டு போனை வைத்தனர்.

   இங்கு வீட்டில் அமைதியாக இருக்க., அங்கு வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் சேர்ந்து பேசத் தொடங்கினர்.

     “ஏன் அந்த புள்ள நம்ம வீட்டிலேயே இருக்கலாமே” என்று சரிகா அம்மா சொன்னார்.

     சரிகாவின் பாட்டி தான், ‘இவ இப்படி சொல்லக்கூடிய ஆளே இல்லையே, என்ன அதிசயமா சொல்லுதா., பொண்ண கட்டி கொடுத்து இருக்காங்கறதுக்காக சொல்லுறவ இல்லையே”, என்று யோசித்தவர் அமைதியாக இருந்தார்.

அப்போதுதான் சித்தார்த்தனின் அப்பா.,  “இல்லை அந்த பொண்ணு தனியா தான் வீடு வேணும்னு கேக்குதாம், அதனால அவங்க தனி வீடு தான் பார்க்க சொல்றாய்ங்க”, என்று சொல்லவும்,

      மூத்த மருமகளாக அன்று தான் முதன்முதலாக “அத்தை நான் ஒன்னு சொல்லட்டுமா”, என்று கேட்டவர்,  “அந்த கிழக்காலே இருக்க வீடுல மாடிய கெஸ்ட் ஹவுஸ் மாதிரி தானே வச்சிருக்கோம்., யாரும் வந்தா போனா தங்குற மாதிரி தானே யோசித்து இருக்கு., இப்போதைக்கு நம்ம வீடு கட்டி போட்டது கட்டி போட்ட மாதிரி தானே இருக்கு., ஒரு ரூம், கிச்சன் ஒரு பெட்ரூம் ன்னு மூன்று ரூம்தானே இருக்கு., அந்த பக்கம் யாரும் போவதில்லை அந்த கிழக்கால இருக்க வீட்ல வேணா அந்த பிள்ளை கிட்ட வந்து இருக்கான்னு கேப்போமா., பாதுகாப்புக்கு பக்கத்துல நம்ம இருப்போம்., தைரியமாவும் இருக்கும்., அவங்களும் தைரியமா இருப்பாங்க இல்ல”, என்று கேட்டார்.

       அமைதியாக யோசித்து இருந்த தாத்தா தான், “வெளிய கூட  படி இருக்கு, நம்ம வீட்டு வழியா போகலாம், ஆனா இந்த பையன் ரூம்மை பூட்டி பூட்டி வச்சுட்டு போயிருவானே., அவன் ரூம் வழியாக வாசலுக்கு போகும்”, என்று சொன்னார்.

  “இல்ல மாமா , அந்த சைடு ஒரு கிரில் இருக்குல்ல அதை திறந்து விடலாம்”,என்று சொல்ல.,

     “கேட்டுப் பார்ப்போமா, அந்த வீட்டுக்கு அந்த புள்ள சம்மதிச்சுச்சுன்னா பாப்போம்”, என்றார்.

      “கிழக்கால இருக்க மாடிய தான் கொடுக்கணுமா என்ன., கீழ் வீட்டை கொடுத்தா ஆவாதா”, என்று சரிகாவின் அம்மா பேச.,

      பாட்டிதான், “அடி கூறு கெட்டவளே, அந்த கிழக்காலே இருக்க வீட்டுல கீழே எப்படி கிடக்கு, அரிசி மூட்டை ,கடலை மூட்டை, எல்லாத்தையும் கொண்டு வந்து அங்கதான் அடுக்கி வைக்காக, அதிலேயே போய் அந்த புள்ளைய இருக்க சொன்னா, அரிசி மூட்டை இதெல்லாம் மேல தூக்கிட்டு போவாய்ங்களோ, என்ன கூறுகெட்ட தனமா பேசுற, மூத்தவளே நீ சொன்னது தான் சரி நம்ம மாடில இருக்காளா ன்னு கேட்போம், அவங்கள வர சொல்லுவோம் இந்த மாடி வீடு புடிச்சிருக்கு இதுல இருந்துகிடுதேன் ன்னு சொன்னான்னா, இதுல இருக்கட்டும் பாதுகாப்புக்கு நம்ம இருக்கோம், செய்ய முடிஞ்சவரைக்கும் அந்த புள்ள செஞ்சு சாப்பிட்டு செய்ய முடியாத அன்னிக்கு நம்ம வீட்ல இருந்து குடுத்து விடுவோம்”, என்று சொன்னார்.

“அத்தை சமைக்க வேண்டாம்னு சொல்லி பாருங்க, அதை மீறி சமைக்கணும்னு சொல்லுச்சுன்னா விட்ருங்க”, என்று சின்ன மருமகள் சொன்னாள்,

    “அதுவும் சரிதான் சின்னவளே” என்று சொல்லிவிட்டு நடுமருமகளை சற்று யோசனையோடு பார்த்தார். ‘இவ யாரையும் வீட்டிற்குள் சேர்க்க தயங்குபவள்’, அவர் முதலில் சொன்ன வார்த்தை தான் பாட்டிக்கு உறுத்தியது இருந்தாலும் கண்டுகொள்ளாமல் ‘சரி சரி அது அப்புறம் பார்ப்போம்’ என்று யோசித்து விட்டு,

    “இப்போ  ராத்திரி நேரத்துல போன் பண்ணி முடிவு சொல்ல வேண்டாம், காலையில நம்ம சொல்லுவோம்,  இப்படி எங்க வீட்டிலேயே  மாடியில் வீடு சும்மா கிடக்கு வேணா வந்து பாருங்க, உங்களுக்கு சரினா இங்க இருக்கட்டும், வாடகை எல்லாம் கிடையாது, நம்ம வீட்டுக்குள்ள அவ தனியா இருக்கணும்னு நினைக்கிறதால இருக்கட்டும்., துணைக்கு நாங்க இருக்கோம், ஒரே காம்பவுண்டுக்குள்ள இருக்கறதுனால பாதுகாப்புக்கு பாதுகாப்பும் ஆச்சு, உள்ள எப்போ வர்றா எப்ப போறா நம்மளும் பார்த்துக்கலாம்” என்று சொல்லி பேசி இருந்தனர்.

“காலையில சொல்லிருவோம்” என்று பாட்டி சொல்லிவிட்டு செல்ல

அனைவரும் அவரவர் அறை நோக்கி  சென்றனர்.

   அதுபோலவே காலையில் போன் செய்து அவர்கள் வீட்டினரிடம் பேசி இருந்தனர்.

அவர்களுக்கும் அந்த ஐடியா நல்லதாக தான் தோன்றியது, “சரி நாங்களும் அவ கிட்ட கேட்டு சொல்றோம்” என்று சொல்லியவர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.

   அதற்கு முன்பே சரிகாவின் அம்மா சரிகாவிடம் சொல்லி இருக்க, சரிகாவோ “அங்க பாட்டி தாத்தா என்ன முடிவு பண்றாங்களோ, அதுபடியே இருக்கட்டும், நீங்க தேவையில்லாம பேசாதீங்கம்மா,  நான் இங்கேயே அண்ணி கிட்ட  உங்களுக்கு ஓகேன்னா நம்ம வீட்ல கூட தங்கிக்கலாம் ன்னு சொன்னதுக்கு, இல்ல இல்ல எனக்கு சரி வராது ன்னு சொல்லிட்டாங்க., அவங்களுக்கு மற்றவங்க இடத்துல தங்குவதெல்லாம் பிடிக்காது போல, இங்கேயே நிறைய ரூல்ஸ் தான் வச்சிருப்பாங்க., அதுக்கு தகுந்தாப்ல தான் அத்தை இருப்பாங்க, பாட்டியும் பண்ணுவாங்க., மத்தவங்க எல்லாம் சாதாரணமா இருந்தாலும், அவங்க சில விஷயங்கள் இப்படித்தான் இருப்பேங்கிற மாதிரி இருக்குறவங்க கிட்ட நீங்க எதுவும் பேசி தொலைச்சுராதீங்க மா., பாட்டி தாத்தா பெரியப்பா அப்பா எல்லாரும் சேர்ந்து முடிவு பண்ணுவாங்க, அவசரப்பட்டு வார்த்தையை விட்டு தாத்தா  பாட்டி ட்ட திட்டு வாங்கிட்டு இருக்காதீங்க, நீங்க அடிக்கடி இந்த வேலையை தான் பாக்குறீங்க”, என்று சொல்லி தனியாக தன் தாய்க்கு அறிவுரையை வழங்கி இருந்தாள்.

   அதுபோல இவர்கள் வீட்டில் உள்ளவர்கள் ஒரு முடிவுக்கு வந்திருக்க, ஏற்கனவே அதிகாலையில் எழுந்து ஒரு டெலிவரி கேஸ் ஹாஸ்பிடலுக்கு சென்றிருந்தவள் போன் செய்து தான் வருவதற்கு தாமதமாகும் என்று சொல்லி இருந்ததால்,  “சரி அவ வரட்டும் பேசிக்கலாம்., இன்னைக்கு டூட்டி கிடையாதுன்னு தானே சொன்னா” என்று பாட்டி கேட்டார்.

    அவள் அம்மா தான், “இல்ல காலைல ஏதோ டெலிவரி கேஸ் ன்னு போன் வந்துச்சு போய் இருக்கா, இப்ப தான தனியா பார்க்க ஆரம்பிச்சிருக்கா, போகட்டும்”, என்று சொல்லவும்,

   “அதுவும் சரிதான் டாக்டருக்கு படிக்க வச்சா இப்படித்தான்”, என்று சொன்னார் பாட்டி,

   அவள் அண்ணன் தான், “ஏம்மா  அதிகாலையில் தனியா போனாளா, எழுப்பியிருக்க வேண்டியது தானே”, என்றான்.

     “நானும் கேட்டேன் அப்பாவை எழுப்பவா இல்ல அண்ணாவை எழுப்பவா ன்னு கேட்டேன், ஒருத்தரையும் எழுப்ப வேண்டாம் எனக்கு போய்க்க தெரியும்னு போயிட்டா., என்ன செய்ய”, என்று சொன்னார்.

    “வரவர செல்லம் ஜாஸ்திமா அவளுக்கு”, என்று சொல்லிவிட்டு அவன் கிளம்ப தொடங்கி இருந்தான்.

    கிட்டதட்ட 11 மணிக்கு மேலே வந்தவள் குளித்து சாப்பிட அமரும் போது தான் வீட்டில் உள்ளவர்கள் தங்களது பேச்சைப் பற்றியும் வீடு பற்றியும் சொன்னார்கள்.

    யோசனையோடு அமர்ந்து இட்லியை சாம்பாரில் முக்கிய முக்கி விளையாடிக் கொண்டிருந்தாள்.

பாட்டி தான், “ஏம்மா அந்த இட்லியை எவ்வளவு நேரமா சாம்பார்ல குளிப்பாட்டுவ, வாயில போடு” என்று சொல்லவும்,

     அவள்  அம்மாவோ “ரொம்ப யோசிக்காமல் சாப்பிடு” என்று சொல்லி  அங்கே அமர்ந்தார்.

   தள்ளி அமர்ந்திருந்தாலும் சரிகாவும் இவளை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

    ‘யோசிக்கிறாங்களோ, நம்ம வீட்ல இருக்க பிடிக்கலையோ’, என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே,

    அனாமிகா தான், அவளை திரும்பி பார்த்து “அண்ணி” என்று அழைத்தாள்.

      “சொல்லுங்க அண்ணி” என்று கேட்கவும் ,

     “இல்ல மதுரையில் அந்த மாடி வீடுன்னு சொல்றாங்க இல்ல, அது எப்படி இருக்கும்”, என்று கேட்டாள் .