கண்ணாடி வள முன்னாடி விழ என் தேகம் மெலிஞ்சாச்சு
கல்யாண வரம் உன்னால பெறும் நன்னாள நெனச்சாச்சு
சின்ன வயசுப்புள்ள கன்னி மனசுக்குள்ள வண்ணக்கனவு வந்ததேன்
நிச்சயதார்த்த தேதி நெருங்கிக் கொண்டிருக்க பெண் வீட்டில் தான் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தது., பார்லரில் இருந்து வந்திருந்த பெண் மெஹந்தி வைத்துக் கொண்டிருந்தாள்.
அவளின் பாட்டி தான் “யாத்தா, பேத்தி பொண்ணே கொஞ்சம் உங்க அம்மைய கூப்பிடு”, என்று சொல்லவும்.,
அருகில் இருந்த பெரிய மருமகளும், மூன்றாவது மருமகளும், திரும்பி பார்க்க., சரிகாவின் அம்மாவானவர்., “என்னத்தே எப்பவும் போல என்னை கூப்பிட வேண்டியதுதானே., அது என்ன உங்க அம்மாவை கூப்பிடு ன்னு சரிகா ட்ட சொல்லுதேயே”, என்று கேட்டுக் கொண்டே வந்தார்.
இவரும், “காரணமாக தான் கூப்பிடுதேன், வீட்ல ஆம்பளைய யாரும் இல்ல தானே”, என்று பெரிய மருமகளை பார்த்து கேட்டார்.
அவரோ “இல்லத்தே எல்லாரும் வெளியே போயிருக்காங்க”, வீட்டுல நம்ம மட்டுதேன்”, என்று சொன்னார்.
“எல்லாரும் இங்கின உட்காருங்க”, என்று உட்கார வைத்தார்.
மெஹந்தி வைத்துக் கொண்டிருந்தவளோ இங்கே திரும்பிப் பார்த்தாள்.
“இங்கன என்ன பார்வ, உம்ம வேலைய பாரு”,என்ற பாட்டி,
“நீ இங்கன பாரு, உன்னை சொல்லுத்தேன் கேட்டுக்கோத்தா, நிச்சயம் நடந்து முடிஞ்ச உடனே, கல்யாண தேதி குறிக்கும் போது, மாப்பிள்ளை வீட்ல என்ன தேதி சொல்லுறாகளோ அது தோதா வருதா ன்னு பாரு.,
ஒருவேளை இவளுக்கு தோது பட்டு வராத நாளா இருந்தா மட்டும் நா பேசுதேன், மத்தபடி நீ அந்த தேதியில் வைப்போம், இந்த தேதியில் வைப்போம் ன்னுட்டு எதுவும் சொல்லிட்டு திரியக்கூடாது.,
ஆமா நீ ஏன் அன்னைக்கு அப்படி சொன்னே, நிச்சயதார்த்த தேதி அம்புட்டு வெரசா ஏன் சொன்னே, உன் மகளுக்கு தான் அவங்க குறித்த மூணு தேதியும் ஒத்துவர தேதி தான”, என்று சொன்னார்.
“அது அத்த”, என்று இழுக்கவும்.,
“நீ எனத்தையோ காரியம் நினைச்சு தான் சொல்லி இருக்கே ன்னு தெரியும்., நீ அன்னைக்கு அவ்வளவு வெரசா சொல்லும்போதே எனக்கு புரிஞ்சுச்சு., சரி நானும் கேட்க கூடாதேன்னுட்டு நினைச்சேன்., ஆனா அன்னைக்கு உங்க மாமா என்ன சொன்னாரு., நீ அவசரப்பட்டு தேதி சொன்ன, உடனே அவக வீட்ல அத்தினி பேர் முகம் மாறுச்சுனாரு., ஆனாலும் சரின்னு சொல்லிட்டு போனாங்க அப்படின்னு சொன்னாரு., இப்ப நீ எனக்கு சொல்லுதே அம்புட்டுதேன்”, என்று சொல்லவும்.,
சரிகாவும் அவள் அம்மாவை உத்துப் பார்த்தாள்.
அவரோ மெஹந்தி வைக்கும் பெண்ணை பார்க்க.,
“சொல்லுத்தா, சொல்லு உன்ன பத்தி எல்லாருக்கும் தெரியும்., அவ ஒன்னும் தெரியாதவன் வீட்டு பிள்ளையா உனக்கு., அறிஞ்சவன்வூட்டு பிள்ளையாக போய் தானே, உம்ம மவளுக்கு மருதாணி வைக்க வந்து இருக்கா., ரோசிக்காம சொல்லு”, என்று சொன்னார்.
கம்மி போன குரலில், “இல்ல அன்னைக்கு பேசிட்டு இருக்கும் போது, இந்த தேதி வசப்படுமா அப்படின்னு கேட்டாய்ங்களா., கேட்கும் போது மாப்பிள்ளை பையன் தான், தங்கச்சிக்கு பரீட்சை இருக்குன்னு சொன்னாரு., தங்கச்சி கிட்ட கேட்டுட்டு சொல்லுவோம் ன்னு சொன்னாரு”, என்று சொல்லவுமே,
பாட்டி, “ஓ அப்ப நீ அவன் தங்கச்சிக்கு எந்த தேதி தோதுப்படாதோ அந்த தேதியை சொல்லி இருக்க அப்படித்தானே”, என்று சொல்லவுமே,
தலையை குனிந்தார், சரிகாவின் அம்மா.
“இன்னொரு தடவை இந்த வேலையை செஞ்சிபோடாத, இந்த வீட்டில் பொம்பள புள்ள இல்ல, ஆனா மூணு மருமக்கமாறு வந்திருக்கிய மூணு பேரும் சரியாக எல்லாரும் ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக் கொடுத்து போறீங்க, நீ அப்படி இப்படி ன்னு இருந்தாலும் மத்த ரெண்டு பேரும் அமைதியா போறாங்கே, இந்த குடும்பத்தில் என் பயலுக மூணு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் ஒத்துமையா இருக்கான், அது கெடுத்துற கூடாது பாத்துக்கோ.,
அது மட்டும் இல்லாம அடுத்த வீட்டுல வாழப்போற பிள்ளைக்கு நல்ல புத்தியை சொல்லி அனுப்பனும்., ஒரே பையன், அந்தப் பிள்ளையும் ஒத்த பொம்பள புள்ளயா இருக்கு, நாளைக்கு எங்க போகும்., அவன் தங்கச்சிக்கு ஒத்து வர தேதியை அவன் பார்க்கக்கூடாது ன்னு நீ நினைக்கே, அப்போ உன் மனசுல என்ன நினப்பு இருக்கு”, என்றார்.
“இப்பவே தங்கச்சி தங்கச்சி ன்னு சொன்னா”, என்று சொல்லிக் கொண்டு இருக்கும்போதே,
“வாய மூடு இவ நடந்துக்கிற வகையில தான் இருக்கு., அவன் தங்கச்சி இவகிட்ட பாசமா இருக்குறதும், அவன் தங்கச்சி விட்டுக் கொடுத்து பேசுறதும், விட்டுக் கொடுக்காமல் பேசுறதும், உன் மகளுக்கு நீ நல்ல புத்தி சொல்லி அனுப்புவேன்னு எனக்கு நம்பிக்கை இல்லை”, என்றவர்.,
“உங்க ஆத்தா சொல்லுதான்னுட்டு அங்க போய் ஆடிடாத, வாழ்க்கை சீரழிஞ்சு போவும் ஞாபவம் வச்சுக்கோ., ஒரே தங்கச்சி விட்டுக் கொடுத்து போக கத்துக்கோ., அந்த புள்ள கல்யாணம் ஆகாத பிள்ளை., படிச்சிட்டு இருக்குற புள்ள., உன்ன விட அதிகமா படிச்சிருக்கா., நீ வெறும் டிகிரி தான் முடிச்சிருக்கே,
நீ டிகிரி முடித்ததற்கே உனக்கு இன்ஜினியர் மாப்பிள்ளை பார்த்து கட்டி வச்சிருக்கே, அவங்க வீட்ல ஒத்த பொம்பள புள்ள தானே , இங்கைய விட நல்ல வசதியான குடும்பம்., நல்ல போட்டு நல்ல செஞ்சி நல்ல மாப்பிள்ளையா பார்த்து தான் கட்டி குடுப்பாங்க இல்ல.,
“டாக்டரு படிக்குற புள்ள பெரிய படிப்பு படிச்சிட்டு இருக்காளாம், அப்படித்தான் அவங்க அப்பனாத்தா சொன்னாக, உங்க அம்ம பேச்ச கேட்டுகிட்டு ஆடுன, வாழ்க்கை சீரழிஞ்சு போகும் பாத்துக்கோ., உன் வாழ்க்கைய காப்பாத்திக்கிறது உன் கையில இருக்கு”, என்றார்.
“இல்ல பாட்டி, நான் அப்படி எல்லாம் கேட்க மாட்டேன்”, என்று சரிகா சொல்லவும்.
“நீ வாய மூடு, நீ இனிமேட்டுக்கு பேசின, உன் புருஷன்ட்டையும், உங்க மாமாட்டையும் சொல்லிடுவேன், அப்புறம் என்ன நடக்கும்னு முடிவு பண்ணிக்கோ., உன் மவ நல்ல வாழனும்னு நினைச்சின்னா வாயை மூடிக்கிட்டு இரு”, என்று சொன்னவர்,
“உன் வீட்டுக்கும் ஒரு மருமக வருவா சரியா., அவ வீட்டில இதே மாதிரி மருமகளோட அம்மா சொல்லிக் கொடுத்து அனுப்புனா, அப்போ உன் மவ இந்த வீட்டுக்கு நாள பின்ன வந்து போய் இருக்க முடியாது., அதை ஞாபகம் வச்சுக்கோ, அது மட்டும் இல்லாம இன்னும் இந்த வீட்டில் மூன்று பயல்வ இருக்கான்., மூத்தவனுக்கு கல்யாணம் முடிஞ்சு மூத்தவளா ஒரு மருமக வருவா., அவ என்ன சொல்லுவா இந்த வீட்டில் பொம்பள புள்ள வரக்கூடாதுன்னு சொன்னா நீ என்ன பண்ணுவ”,என்றார்.
“அது எப்படி சொல்ல முடியும்”, என்றார் சரிகா அம்மா.
“அதே மாதிரி தான், அது எப்படி நீ சொல்ல முடியும் அவுக வீட்டு பிள்ளை வரணுமா, வரக்கூடாதா ன்னு, அவக வீட்டுல அந்த பிள்ளைக்கு என்ன செய்யணும், எப்படி அந்த பிள்ளையை நடத்திக்கணும்னு அவுகளுக்கு தெரியும் சரியா., அவிய வீட்டு விஷயத்தில் நீ தலையிடக்கூடாது., உன் மவள நல்லபடியா கட்டி கொடுத்தோமா, அவ நல்லா இருக்காளா, அவ சந்தோசமா இருக்காளானுட்டு பாரு., அவளை அங்க யாரும் கொடுமை படுத்தினா சொல்லு., நானே என்னன்னு போய் கேப்பேன், அதை விட்டுட்டு நீ பேசக்கூடாது சரியா, கல்யாணம் ஆகாத பிள்ளையை வச்சிருக்க வீட்ல நீ அவசரப்பட்டு வார்த்தையை விடக்கூடாது., பரீட்சை இருக்குன்னு தானே சொன்னாங்க அதைக் கேட்டு நீ இந்த பேச்சு பேசி இருக்கேயே, எனக்கு இது முதலிலேயே தெரியாதே, தெரிந்திருந்தா நான் தேதியை மாத்துங்கன்னு சொல்லி இருப்பேனே”, என்று பாட்டி புலம்பவும்.,
சரிகா தான், “சரி பாட்டி விடுங்க, அம்மா ஏதோ தெரியாம பேசி இருப்பாங்க., இனிமேல் அந்த மாதிரி இல்லாத அளவுக்கு நான் பாத்துக்கிடுதேன் பாட்டி”, என்று சொன்னாள்.