பாட்டி தான், “என்னம்மா செஞ்சு பார்த்தியா”, என்று கேட்டார்.
“ஆமா பாட்டி செய்தேன்”, என்று சொல்லிவிட்டு “கிளம்புறேன்”, என்று சொல்லி விட்டு எப்போதும் போல யாரிடமும் எதுவும் அதிகமாக பேசிக் கொள்ளாமல் காரில் ஏற போகும் போது தான்.,
சரிகாவின் அம்மா, “அம்மாடி கொஞ்சம் நில்லு”, என்றார்.
“சொல்லுங்க ஆன்ட்டி”, என்றாள்.
“சொல்றேன் தப்பா எடுத்துக்க கூடாதுமா”, என்று சொல்லவும்.,
அமைதியாக அவர்களை கூர்ந்து பார்த்தவள், “என்னது ஆன்ட்டி”, என்றாள்.
“இல்ல நீ அடுத்தவங்களுக்கு சமைப்பதற்கு. குறிப்பு சொல்றதோட நிப்பாட்டிக்கணும்., இதை சாப்பிடுங்க, அத சாப்பிடுங்க ன்னு நீ மருந்து சொல்ற இல்ல, அதோட நிறுத்திக்கணும், செஞ்சு கொண்டு போய் எல்லாம் கொடுக்காத, அப்புறம் நீ டாக்டர்ங்கிற கெத்து என்ன ஆகிறது, உன் நல்லதுக்கு தான் சொல்லுவேன்”, என்று சொன்னார்.
என் நல்லதுக்கா ஆன்ட்டி? சரிங்க ஆன்ட்டி? என்று சொல்லிவிட்டு கிளம்பினாள்.
அவள் குரலின் மாறுபாடு அங்கிருந்தவர்களை திரும்பிப் பார்க்க வைத்தது., ஆனால் அவள் முகத்தில் இருந்து எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை.
‘இந்த பிள்ளை இப்படி என்ன சொல்லிட்டு போகுது, குரல் ஏதோ வித்தியாசமா இருந்துச்சு இல்ல’, என்று யோசித்துக் கொண்டிருந்தனர்.
வீட்டில் உள்ளவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அவளோ எதுவும் சொல்லாமல் காரில் ஏறி கிளப்பிக் கொண்டு சென்றாள்.
சரிகாவின் அப்பா தான், “தேவையில்லாம எதுவும் பேசாத, அந்த பொண்ணு இங்க இருக்குங்கறதுக்காக, அதை செய்யாத, இதை செய்யாத ன்னு சொல்றதுக்கு உனக்கு ரைட்ஸ் கிடையாது புரிஞ்சதா, அந்த பொண்ணு இப்பவும் உனக்கு பதிலடி கொடுக்க முடியாமல் தான் ஒரு மாதிரி சொல்லிட்டு போகுது, அது பேசுற விதத்திலே புரியுது”, என்று சொல்லி கொண்டிருக்கும்போதே
இடையே புகுந்து பேச தொடங்கினார், சரிகாவின் அம்மா., “எனக்கு தெரியும் அந்த புள்ள அப்படியெல்லாம் பேசுற புள்ள கிடையாது., நம்ம பொண்ணு அங்க இருக்கா, நம்ம சொல்றது புரியாம இருக்குமா, நம்மள நம்பி தானே விட்டுட்டு போயிருக்காங்க”,என்று சொல்லவும்.
பாட்டியோ, “யோசிச்சு பேசுமா, நாம பொண்ண கட்டி கொடுத்தவங்க, இந்த பிள்ளையை நீ அதிகாரம் பண்ணி உன் பிள்ளை வாழ்க்கைல பிரச்சினை கிளப்பி விட்றாத”, என்று சொல்லவும்.,
“அவ நல்லதுக்கு தான சொன்னேன்”, என்று சொல்லவும்.,
“போபோ, இனிமேல் எதுவும் அந்த பிள்ளைட்ட பேசாத”, என்று சொல்லிவிட்டு சென்றார்.
எதுவும் சொல்லாமல் கிளம்பி சென்றவளுக்கு எரிச்சல்தான் வந்தது,
‘இந்த லேடிய என்ன செய்ய, அண்ணிக்கு அம்மாவா போயிருச்சுன்னு பார்த்தேன், இல்லாட்டி ஏதாவது பட்டுன்னு பேசிடுவேன்’ என்று நினைத்துக் கொண்டே காரை செலுத்திக் கொண்டிருந்தவளுக்கு
மனமோ, ‘இப்படியே போச்சு னா, என்றாவது ஒருநாள் நீ அந்த பெண்ணிடம் வெடித்து சிதற போகிறாய்’, என்று மட்டும் தோன்றி கொண்டே இருந்தது.
‘கோபம் தெறிக்கிற அன்னைக்கு தெறிச்சு விட்டுருவோம்’, என்று மட்டும் நினைத்துக் கொண்டாள்.
அன்று மாலை அவள் வீடு வரும் போது அவன் அங்கு இல்லை, இவள் எதுவும் கண்டு கொள்ளாமல் அறைக்கு சென்றவளுக்கு தான் மனம் கஷ்டமாக இருந்தது, ‘ஒரு வார்த்தை கூடவா பேசக்கூடாது’ என்று தோன்றியது.
‘ஏனோ அவனைத் தேடியது, நேற்று போல அவன் என்னை பார்க்காவிட்டாலும் பரவாயில்லை, நான் ஒரு முறை பார்த்துக் கொண்டால் நன்றாக இருக்கும்’, என்று தோன்ற.,
இவள் மனசாட்சியோ., ‘உனக்கு மான ரோசமே இல்லையா, உன்ன பாக்கவே பிடிக்காத மாதிரி திரும்பிட்டு போன ஒருத்தனை பாக்கணும் ன்னு துடிக்கிறியா’ என்றது.
‘இல்ல எனக்கு ஒன்னே ஒன்னு தான் கேட்கணும், ஏன் என்னை திரும்பி கூட பாக்கல, அந்த அளவுக்கு நான் வேண்டாதவளான்னு கேட்கணும்’, என்று சொல்லவும்.,
‘நீ தேவையில்லாத வேலை பார்க்காத’ என்று மனசாட்சி அவளிடம் கடிந்து கொண்டிருந்தது.
நாட்கள் அதன் போக்கில் செல்ல, மீண்டும் 15 நாள் கழித்து அவன் வந்திருப்பதை அறிந்தவளுக்கு., ‘ஒரே ஒரு வார்த்தை கேட்க வேண்டும்’ என்று மட்டும் தோன்றியது,
மனமோ, ‘பேசாம லவ் பண்றேன்னு சொல்லிறேன்’ என்று தோன்றியது.
‘நெஜமாவா’ என்று மனசை கேட்டுக் கொண்டவள், சரி பேசி பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டாள்.
அன்று இரவு உணவை முடித்துவிட்டு ஜன்னல் வழியாக வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு ஒரு யோசனை தோன்றியது.
‘சரி கீழே செல்வோம், பாட்டியிடம் சமையல் குறிப்பு கேட்பது போல கேட்டுவிட்டு இவன் அங்கு இருக்கிறானா என்று பார்த்துவிட்டு வருவோம்’, என்று நினைத்துக் கொண்டே தன் அறை கதவை சாத்தி விட்டு கீழே சென்றாள்.
இவள் நினைத்தது போல, பாட்டியும் தாத்தாவும்
ம் வெளியே வந்து பேசிக் கொண்டிருந்தனர்.
இவள்தான் பாட்டியிடம் போய் ஒரு சமையலைப் பற்றி கேட்டாள்.
பாட்டியும் சொல்லிக் கொடுத்து முடித்துவிட்டு, “ஆமா, இந்த குழம்பு எதுக்கு கேட்ட”, என்றார்.
“அன்று போல செஞ்சி கொடுக்க தான்”, என்றாள்.
“அன்னைக்கு செஞ்சு குடுத்தியா”, என்று கேட்டார்.
“ம்ம் நல்லா இருக்குன்னு சொன்னாங்க”, என்று சொன்னாள்.
“பாவம் பாட்டி, வாமிட்டிங் ஜாஸ்தி, அந்த பொண்ணு சாப்டா கூட மாட்டேங்குது, ஏதாவது வாய்க்கு நல்லா இருந்தா அட்லீஸ்ட் சாப்பாடு கொஞ்சம் உள்ள போகும் இல்ல, வயித்துக்குள் இருக்கிற பேபி செல்பிஷ் தெரியுமா., அதுக்கு தேவையான ஃபுட் எல்லாம் அம்மா கிட்ட இருந்து எடுத்துக்கும், ஆனால் அவங்க எவ்வளவு பாவம், அதனால தான் பாட்டி”, என்று சிரித்தபடி சொன்னாள்.
பாட்டியோ, “இதுல என்னமா இருக்கு, ஏன்மா அவங்க வீட்ல பெரியவங்க இல்லையா”, என்று கேட்டார்.
“அது அவங்க கல்யாணம் முடிஞ்சு கொஞ்ச நாள்ல பிரச்சனை ஆயிடுச்சு போல, தனியா தான் இருக்காங்க யார் செஞ்சு கொடுப்பாங்க ன்னு தெரியாது, பாவம் சில விஷயங்கள் நாம கேட்கலாம், அது மட்டும் இல்லாம ஒரு பேஷன்ட் என்னை நம்பி சொல்ற சில விஷயங்களை நான் சொல்ல முடியாது இல்ல பாட்டி”, என்று சொல்லவும்.
“அது சரிதான் மா, சரிதாமா” என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
இவளுக்கோ அவனை பார்க்கும் வாய்ப்பு கிடைக்காததால் மெதுவாக மாடி ஏறி வந்தவளுக்கு., அவன் மொட்டை மாடியில் நின்று கொண்டிருப்பதை பார்த்தவுடன், ‘தன்னறைக்கு செல்வோமா இல்லை, பேசுவோமா’, என்று சுற்றி மட்டும் பார்த்தாள்.
யாரும் இருப்பது போல தெரியவில்லை, என்றவுடன் மெதுவாக சென்று தொண்டையை கனைத்தாள்.
திரும்பி பார்த்த அவனிடம் “ஹாய், என்ன போன தடவை வந்திருக்கும் போது என்னை பார்த்தும் பார்க்காத மாதிரி போனீங்க., என்கூட பேச கூடாதுன்னு எதுவும் உறுதிமொழி எடுத்து இருக்கீங்களா”, என்றாள்.
அவனோ, “நீங்க ட்ரைனிங் வந்து இருக்கீங்க, எங்க வீட்ல தங்கி இருக்கீங்க, உங்க பேரன்ட்ஸ் இங்க எங்க வீட்ல உள்ளவங்களை நம்பி விட்டு இருக்காங்க, இல்லனா வேற வீடு கூட பார்த்திருப்பாங்க இல்ல, நீங்க வெளியே வேற வீட்ல இருந்தீங்கன்னா, எங்க ஃபேமிலிக்கு உங்களுக்கும் சம்பந்தம் கிடையாதுங்க, இங்க இருக்கும் போது உங்களோட பாதுகாப்புக்கு எந்த பங்கமும் வந்து விடக்கூடாது, அது மட்டும் இல்லாம நாளைக்கு ஒரு சின்ன விஷயம் னா, எங்க வீட்டில் உள்ள அத்தனை பேரையும் குறை சொல்ற மாதிரி ஆயிரும்,
நீங்க இன்னைக்கு ஹாய் சொன்னீங்க, நானும் உங்கிட்ட பேசிட்டேன் அவ்வளவுதாங்க”, என்று சொன்னான்.
சற்று நேரம் அவனைப் பார்த்து இருந்தவள், “நான் உங்களை எப்படி கூப்பிடனும்”, என்றாள்.
அவனோ, ‘நான் என்ன சொல்லிட்டு இருக்கேன், இது என்ன கேக்குது’, என்று தான் யோசனையோடு அவளை நிமிர்ந்து பார்த்தான்.