அந்த முன்மாலைப் பொழுதில் நெல்லை மாநகரகாவல் கண்காணிப்பாளர் அலுவலகம் பரபரப்பாக இருந்தது. காரணம், ஒரு ஆள்கடத்தல் புகாரில் நாங்கள் தான் குற்றவாளிகள் என்று மூன்று நபர்கள் தாங்களாகவே வந்து சரணடைந்திருந்தது தான். இதில் சிறப்பு என்னவென்றால் இன்று காலையில் தான் அந்த வழக்கு பதிவாகியிருந்தது.
ஆமாம்… எங்கள் மகனைக் காணவில்லை கண்டுபிடித்து தாருங்கள் என்று காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காலையில் பதறியபடி வந்து நின்றார்கள் ஒரு கணவனும் மனைவியும். மகன் என்றால் சிறுவன் அல்ல, ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் இருபத்திஆறு வயது இளைஞன்.
நண்பர்களோடு வார இறுதியைக் கொண்டாடச் சென்றவன் இன்னமும் வீடு திரும்பியிருக்கவில்லை. அவனோடு சென்ற நண்பர்கள் வீடு திரும்பி விட்டார்கள். அவர்களிடம் மகனைப் பற்றி விசாரித்தால் எங்களோடு அவனும் வீட்டுக்கு கிளம்பி வந்துவிட்டானே என்கிறார்கள். ஆனால் இன்னமும் எங்கள் மகன் வீடுவந்து சேரவில்லை. அலைபேசியிலும் அவனைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. எங்கள் பிள்ளையை கண்டுபிடித்து தாருங்கள். இதுதான் அந்த பெற்றோர்கள் அளித்த புகார்.
புகாரைப் பெற்றுக்கொண்ட நந்தினி, அந்த பெற்றோரிடம் அவர்களுடைய மகனைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தாள். அந்த இளைஞன் வேலை பார்க்கும் இடம், அவனுடைய நண்பர்கள், பழக்கவழக்கங்கள் என்று விசாரிக்கத் தொடங்கிய நந்தினி, உங்களுக்கு ஏதாவது முன்விரோதம் இருக்கிறதா என்று கேட்க, இல்லை என்று வேகமாக தலையை ஆட்டினார்கள்.
“அப்போ… அவங்க… அவங்க தான் நம்ம பிள்ளையை ஏதாவது செய்திருப்பாங்களா? அந்த பொண்ணை விட்டு விலகிட்டா ஒன்னும் செய்ய மாட்டோம்னு சொன்னாங்களே…” இருக்குமிடம் மறந்து கணவனிடம் புலம்பினார் அந்த தாய். அதைத் தொடர்ந்து தகப்பன் முகத்திலும் குழப்ப ரேகைகள்.
வழக்கில் ஒரு பிடி கிடைக்க, “என்ன நடந்தது? மறைக்காம சொல்லுங்க…” என்றாள் நந்தினி. நந்தினியின் கேள்வியில் அந்த இளைஞனின் காதல் பக்கம் திறக்கப்பட்டது.
தன்னோடு வேலைப் பார்த்த பெண்ணோடு அந்த இளைஞனுக்கு காதல். வழக்கம் போல ஜாதி அந்த காதலுக்கு குறுக்காக வந்து நின்றது. அதுவும் பையனைவிட பெண் உயர்ந்த ஜாதியாக இருக்க, அந்த பையன் தாக்கப்பட்டான். வீடு புகுந்து மிரட்டப்பட்டார்கள் அவனுடைய பெற்றோர்கள்.
இது எல்லாவற்றையும் செய்தது அந்த பெண்ணுடைய பெற்றோரின் சார்பில் அவர்கள் சமுதாயத்தைச் சேர்ந்த பெரிய மனிதர் ஒருவரின் அடியாட்கள் தான்.
கடைசியில் அந்த பெரிய மனிதர் முன்னால் அந்த இளைஞனை குடும்பத்தோடு அடிமைகள் போல கொண்டுவந்து நிறுத்தவும் செய்தார்கள். அவர் முன்னிலையில் இதற்குமேல் அந்த பெண்ணோடு எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள மாட்டேன் என்று அந்த பையனைக் கட்டாயப்படுத்தி எழுதியும் வாங்கிக் கொண்டார்கள்.
“இந்த மரியாதையோட இருந்துக்கணும், இதுக்கு மேல எங்க பொண்ணு பின்னாடி வந்தா, சங்க அறுத்துடுவோம்.” கூடுதலாக அந்த பெரிய மனிதரின் மிரட்டலோடு தான் பையன் வீட்டினர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.
எல்லாம் நடந்து ஆறுமாதங்கள் இருக்கும். அந்த பெண்ணும் அதற்குபிறகு வேலைக்கு வரவில்லை. எங்கள் பையனும் அந்த பெண்ணை மறந்துவிட்டான் என்றார்கள் அந்த பெற்றோர்கள்.
அவர்களுடைய பேச்சில் தலையிடாமல் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த நந்தினி, “யாரு அந்த பெரிய மனுஷன்?” என்று கேட்க,
“வைரவ மூர்த்தி.” கொஞ்சம் பயத்தோடு தான் உச்சரித்தார்கள் அந்த பெயரை.
வைரவ மூர்த்தி… பணியில் சேர்ந்திருந்த இந்த ஒருமாத காலத்திற்குள் நந்தினிக்கும் இந்த பெயர் அறிமுகமாகியிருந்தது.
சமீபத்தில் நடந்த அலுவலக கூட்டத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் தீர்க்கப்பட வேண்டிய சட்ட ஒழுங்கு பிரச்சினைகளைப் பற்றி அலசி ஆராயப்பட்டது. அப்போது சொல்லப்பட்ட முக்கியமான பிரச்சனை கட்டபஞ்சாயத்து. அதில் ஸ்திரமாக காலூன்றி நிற்கும் மனிதர் தான் இந்த வைரவ மூர்த்தி.
வைரவ மூர்த்தியின் தகப்பனார் காலத்திலிருந்தே கட்டப்பஞ்சாயத்து செய்யும் பழக்கம் அவர்களிடம் இருந்திருக்கிறது. பொருளாதார நிலையில் மிகஉயர்ந்த குடும்பம். அதனால் சுற்றுவட்டாரத்தில் இருந்த ஏழைபாழைகள் தங்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் அந்த வீட்டை நோக்கியே சென்றிருக்கிறார்கள். அந்த மனிதரும் தன்னால் முடிந்த நியாயத்தை மக்களுக்கு சொல்ல, அதற்கு மக்கள் மரியாதையாக கட்டும்பட்டிருக்கிறார்கள்.
அதே பழக்கம் வைரவ மூர்த்தியின் காலத்திலும் தொடர்ந்தது. இப்போது சுற்றுவட்டார மக்கள் என்ற நிலை மாறி அவருடைய சமுதாய மக்களுக்கு அவருடைய பேச்சு வேதவாக்கு என்ற அளவில் சுருங்கிப்போயிருந்தது. ஆனாலும் சட்டத்துக்கு புறம்பாக, அடிதடி செய்து, மிரட்டி என்றேனும் தங்கள் காரியங்களை சாதித்துக்கொள்ள வேண்டும் என்ற மனநிலையில் இருக்கும் மக்கள் இப்போதும் வைரவ மூர்த்தியிடம் வரத்தான் செய்தார்கள்.
அப்படிப்பட்ட வைரவ மூர்த்தி தங்களுடைய சமுதாயத்தின் மீது அபரிமிதமான பற்று உடைய நபர். தங்களுடைய சமுதாயத்தைச் சேர்ந்த பிள்ளைகளின் காதல், கல்யாணம் எதுவாக இருந்தாலும் தங்கள் சமுதாயத்தைத் தாண்டி செல்லுவதை அனுமதிக்காதவர். அப்படி எதுவும் அவரை மீறி நடந்து விட்டால் கூட, எந்த எல்லைக்கு சென்றேனும் அதை தடுத்துவிடுவார்.
சுற்றுவட்டாரத்தில் அவரால் பாதிக்கப்பட்ட நபர்கள் ஏராளம். என்றாலும் அவர்மீது உள்ள பயத்தின் காரணமாக அவரைப்பற்றி யாரும் புகார் கொடுக்க துணியாததால், இப்போது வரைக்கும் போலீஸாரால் நெருங்க முடியாதவராகத்தான் இருக்கிறார்.
இப்போதோ இந்த பெற்றோர்கள் அவரை நோக்கி சந்தேகத்தின் பெயரில் விரலை நீட்ட, “அவர் மேல கம்ப்ளைண்ட் குடுங்க, அவரைத் தூக்கிட்டு வந்து விசாரணை செய்தா, உங்க மகனைப்பத்தி தெரிஞ்சிடும்” என்று சொன்னாள் நந்தினி.
தங்களுடைய மகனுக்கு முன்னால் வைரவ மூர்த்தி குறித்த பயம் பின்னுக்குச் சென்றுவிட, நந்தினி சொன்னதை தயங்காமல் செய்தார்கள்.
அந்தநேரம் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு, தோட்டத்து வீடு ஒன்றில் இளைஞன் ஒருவன் பயங்கரமான முறையில் காயம்பட்டு அடைபட்டு கிடப்பதாக தகவலும், அந்த இளைஞனின் புகைப்படமும் வந்து சேர்ந்தது.
புகைப்படம் அந்த பெற்றோர்களிடம் காட்டப்பட, தங்களுடைய மகன் தான் என்று அலறினார்கள். அந்த அளவிற்கு காயம்பட்டிருந்தான் அந்த இளைஞன்.
சற்றும் தாமதிக்காமல் கிடைத்த தகவலைப் பிடித்துக்கொண்டு சம்பவ இடத்திற்கு சென்ற காவலர்கள் குழு, இளைஞனை மீட்டிருந்தார்கள். வேறு யாரும் அங்கே இல்லை. போலீஸார் வருவது தெரிந்தோ என்னவோ தப்பித்திருந்தார்கள். புகைப்படத்தில் கண்டது போல உடம்பெங்கும் காயங்கள் அதிகம் தான் அந்த இளைஞனுக்கு. எனவே விசாரணைக்கு உட்படுத்தாமல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.
அந்த இளைஞன் கண்டுபிடிக்கப்பட்டது வைரவ மூர்த்தியின் தோட்ட வீட்டில் தான். எனவே அவரிடம் விசாரணை செய்ய முடிவெடுத்து நந்தினி, தன்னுடைய சக அலுவலர்களோடு கிளம்பிய நேரம், அந்த இளைஞனைக் கடத்தியது நாங்கள் தான் என்று சரணடைந்தார்கள் மூன்று நபர்கள்.
எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று பட்டவர்த்தனமாக தெரிவித்தது போல இருந்தது அந்த செயல். அவளுடைய பணிக்காலத்தில் இப்படி எத்தனைக் கண்டிருப்பாள்.
நாங்கள் தான் தவறை செய்தோம் என்று குற்றவாளிகளே ஒப்புக்கொண்டு சரணடையவும் செய்தாயிற்று. இதற்கு மேல் இந்த கேஸ் விஷயமாக சுட்டு விரலைக்கூட அந்த வைரவமூர்த்தியை நோக்கி அசைக்க முடியாது என்ற பேருண்மை முகத்தில் அறைய, கொஞ்சம் கடுப்போடுதான் சரணடைந்தவர்களிடம் விசாரணையில் இறங்கினாள் நந்தினி.