நந்தினி கண்ணனுக்கு அழைக்கும் போது முக்கியமான டாக்குமெண்ட் ஒன்றை தயார் செய்வதில் மும்முரமாக இருந்தான். எனவே மனைவி வாட்ஸ்அப் செயலியில் அனுப்பி வைத்திருந்த லிங்கையும் பாத்திருக்கவில்லை.
கர்ப்பகால பிரச்சினைகளோடே பணிக்கு செல்லும் மனைவியின் உடல்நிலையை இப்போதெல்லாம் தினமும் ஓரிரு முறைகள் ஃபோன் செய்து விசாரித்து கொள்கிறான் கண்ணன். சிலநேரங்களில் அவனுடைய மனைவியும் அழைப்பதுண்டு.
எனவே நந்தினியின் அழைப்பை சாதாரண மனநிலையிலேயே கண்ணன் ஏற்று பேச, படபடவென்று பேசி முடித்திருந்தாள் அவன் மனைவி.
“எதுவும் முக்கியமான விஷயமா நந்து? டாக்குமெண்ட் ஒன்னு ரெடி பண்ணிட்டு இருக்குறேன், அதை முடிச்சிட்டு வீட்டுக்கு வரட்டுமா?” செய்து கொண்டிருந்த வேலையின் தொடர்பு விட்டுப்போகக்கூடாது என்ற மனநிலையில் இருந்தவனுக்கு, வில்லங்கம் ஃபோனேறி வந்திருப்பது தெரியவில்லை. எனவே மனைவியிடம் அனுமதி கேட்டு நின்றான் அந்த வழக்கறிஞன்.
“ம்ம்… விஷயம் பெருசு இல்லைன்னு சொல்ல முடியாது த்தான், நீங்க வேலையை முடிச்சிட்டே வாங்க, நான் வீட்டுக்கு கிளம்புறேன்.” நந்தினி சொல்ல, அதற்கு மேலும் வேலை செய்யும் மனநிலைமை இல்லாமல் போனது அவனுக்கு.
“சரி, நீ வீட்டுக்கு கிளம்பு, நானும் வந்துடுறேன்.” என்றவனுக்கு, அதன்பிறகு தான் மனைவி வீட்டுக்கு வரச்சொல்லும் அளவிற்கு அப்படி என்ன இருக்கிறது அந்த வீடியோவில் என்ற எண்ணம் வந்தது.
யோசனையோடு வீடியோவின் லிங்கை தொட, ஒரு ஆண்குரல் மட்டும் செய்தி வாசிப்பது போல பேசத் தொடங்கியது. பேச்சுத் தொடங்கிய உடனே விஷயம் தங்களைப் பற்றி என்பது புரியவும், புலன்கள் கூர்மையடைய கவனமாக கேட்கத் தொடங்கினான். மொத்தத்தையும் கேட்டு முடித்தவனுக்கு கோபத்தில் கழுத்தெலும்பு புடைத்தது.
சில நல்லபல வார்த்தைகளால் அந்த வீடியோவை பதிவேற்றியிருந்த நபரை வசைபாடியபடியே, யார் பார்த்து வைத்த வேலை அது என்பதை அறிந்து கொள்ளும் முயற்சியில் இறங்கினான். ஆனால் தகவல் எதையும் அறிந்துகொள்ள முடியவில்லை. அதோடு அந்த சேனலின் முதல் வீடியோவும் இதுதான்.
‘அப்படியென்றால் எங்களைப் பற்றி அவதூறு செய்தியைப் பரப்புவதற்காகவே இந்த சேனலைத் தொடங்கியிருக்கிறார்கள். அந்த அளவுக்கு எங்கள் மீது வெறுப்பு யாருக்கு இருக்க முடியும்?’ யோசித்தவனுக்கு இலவச பட்டா முறைகேடு வழக்கில் சிக்கியிருக்கும் அரசு அதிகாரிகள் தான் பளிச்சென்று ஞாபகத்துக்கு வந்தார்கள்.
‘கணவன் மனைவி இருவரையும் சேர்த்து கோர்த்து விட்டிருக்கிறார்கள் என்றால் கண்டிப்பாக அவர்களாகத் தான் இருக்க முடியும். ஒருவேளை அவர்களாக இல்லாமலும் இருக்கலாம். சாட்சியங்கள் எதுவும் இல்லாமல் யாரையும் நோக்கி நீதான் என்று விரலை நீட்டிவிட முடியாது.’
‘சரி, இப்போது எதற்காக வீட்டுக்கு அழைக்கிறாள் நந்தினி? ஒருவேளை என்மீது சந்தேகப்படுகிறாளோ?’ இப்படி யோசனைப்போக ஏமாற்றமாக உணர்ந்தான் கண்ணன்.
‘சீச்சீ… அப்படியெல்லாம் இருக்காது? என்னவென்று தெரியாமல் சகட்டுமேனிக்கு கற்பனை செய்யக்கூடாது.’ தறிகெட்டு ஓடிய மனதை அதட்டி நிறுத்தியவன், செய்துகொண்டிருந்த வேலையை அப்படியே விட்டுவிட்டு வீட்டுக்கு கிளம்பி விட்டான்.
கண்ணன் வீட்டுக்குள் நுழையும் போது ஹால் சோஃபாவில் சோர்வாக சாய்ந்து அமர்ந்திருந்தாள் நந்தினி.
“என்னாச்சு நந்து? டயர்டா இருக்கா? ஜூஸ் போட்டு தரேன், குடிக்கிறியா?” மனதிலிருந்த குழப்பங்கள் எல்லாவற்றையும் தூக்கி கடாசிவிட்டு, மனைவியின் நெற்றியை நீவி விட்டபடியே பரபரத்தான் கண்ணன்.
“ம்ம்… கொஞ்சம் உப்பும், சுகரும் சேர்த்து லெமன் ஜூஸ் போட்டுத்தர்றீங்களா த்தான்.” சோர்வாக வந்தது குரல்.
“இதோ வரேன்.” சமையலறைக்குள் சென்று மனைவி சொன்ன பக்குவத்தில் ஜூஸ் போட்டு எடுத்து வந்தவன்,
“முடியலைன்னா லீவ் போட்டுக்கலாம் இல்ல நந்து.” என்றபடியே மனைவியின் கையில் கொடுத்தான்.
புன்சிரிப்போடு வாங்கிக் கொண்டவள் ஆவலோடு குடிப்பதை, கைகட்டி அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தவன், மனைவி குடித்து முடித்து டம்ளரை நீட்டவும் வாங்கிக்கொண்டு, “இப்போ ஓகேயா நந்து, கொஞ்சம் படுத்து ரெஸ்ட் எடுத்துக்கிறியா?” என்று கேட்க, தலையசைத்து மறுத்தாள்.
“சரி, இப்போ சொல்லு. நானும் அந்த வீடியோவைப் பார்த்துட்டு தான் வரேன். என்னை சந்தேகப்படுறியா நீ? அதைப் பத்தி பேசத்தான் வீட்டுக்கு வரச் சொன்னியா?” முதலில் இந்த விஷயத்தை தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும் என்ற உந்துதலில் கேட்டுவிட்டான்.
“சேச்சே… என்ன பேசுறீங்க த்தான்? உங்களை சந்தேகப்படுறது என்னை நானே சந்தேகப்படுறதுக்கு சமம்.” பதறிப் போய் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து எழும்பிய நந்தினி, இதற்கு மேல் இப்படிப் பேசாதே என்பதுபோல தன்னுடைய விரல்களைக் கொண்டு கணவனின் வாயை மூடினாள்.
மனைவியின் பதட்டமும் பதிலும் அத்தனை ஆசுவாசமாக இருந்தது கண்ணனுக்கு. என்றாலும், இந்த நிலைமையில் அவள் பதட்டமாக எழும்பியது இவனுக்கு பதட்டத்தைக் கொடுக்க, “சொன்னா போதாதா? இவ்வளவு வேகமா எழும்பணுமா?” அதட்டியபடியே மனைவியின் கையைப்பிடித்து சோஃபாவில் அமரவைத்தபடி, தானும் அமர்ந்தவன்,
“லவ் யூ ன்னு அன்னைக்கு நீ சொன்ன வார்த்தைக்கு கூட இவ்வளவு போதை இல்லை நந்து. இப்போ, இந்த வார்த்தையை நீ சொல்லிக் கேட்கும்போது அவ்வளவு போதையா, கர்வமா, நிறைவா இருக்கு எனக்கு.” மனைவியின் காதோரம் இதழொற்றியவன் அவள் கழுத்து வளைவில் ஆசுவாசமாக முகத்தைப் பதித்து இளைப்பாறினான்.
‘எனக்கு இந்த வீடியோவைப் பார்த்ததும் கட்டுப்படுத்த முடியாத கோபம். ஆள் மட்டும் கையில கெடைச்சா உண்டு இல்லைன்னு ஆக்கிடுவேன். ஆனா யார் பண்ணுன வேலைன்னு தெரியல. உங்ககிட்ட இதைப்பத்தி பேசினா மனசு ரிலாக்ஸ் ஆகும்னு தோணிச்சுது. ஆனா ஃபோன்ல பேச மனம் இல்ல. அதான் வீட்டுக்கு உங்களை வரச்சொன்னேன்.” என்றாள்.
உன்னை சந்தேகப்படுவது என்னை நானே சந்தேகப்படுவதற்கு சமம் என்கிறாள் மனைவி. போதாததற்கு, உன்னிடம் என் மனச்சுமையை பகிர்ந்து கொண்டால் பாரம் குறையும் என்கிறாள். அன்புகொண்ட நெஞ்சம் தன் துணையிடம் எதிர்பார்ப்பது இந்த நம்பிக்கையைத் தானே. கண்ணனின் மனம் பூரித்துப்போக, மனைவியின் தோள்பட்டையில் அழுத்தமாக ஒரு முத்தத்தை பதித்து விலகினான்.
உண்மையில் அந்த யூடியூப் செய்தி நந்தினியை பேரதிர்ச்சிக்கு தான் உள்ளாக்கியிருந்தது. தன்னைப் பற்றி அநாவசியமான பேச்சுக்கள் வந்துவிடக் கூடாது என்பதில் மிகுந்த கவனமாக இருப்பவளுக்கு, முதன்முதலாக ஒரு குற்றச்சாட்டு பொதுவெளியில், அதுவும் கணவன் மூலம் லஞ்சம் வாங்கியதாக கூறப்பட, அவளால் அதை ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை. இவ்வளவு ஏன்? இந்த செய்தியைக் கேட்பவர்கள் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று அசிங்கமாகக்கூட இருந்தது.
ஆனால் வினாடி நேரம் கூட கணவன் இதை செய்திருப்பானோ என்ற எண்ணம் மட்டும் வரவே இல்லை. பதிலுக்கு, கணவனோடு இந்த விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தான்.
இப்போதோ ஆரம்பகட்ட அதிர்ச்சி விலகி முற்றிலும் தெளிந்திருந்தவளுக்கு சரியான முறையில் யோசிக்க முடிந்தது. தான் வாழ்வதற்காக அடுத்தவர்களை பலி கொடுக்க கூட தயங்காத உலகம் இது. அப்படிப்பட்ட உலகத்தில் எங்களுடைய நேர்மை எப்படியானது என்று எங்களுக்கு மட்டும் தெரிந்தால் போதும். ஒவ்வொருவரிடமும் சென்று எங்களை நிரூபிக்க வேண்டிய தேவையில்லை. மற்றபடி மனசாட்சிக்கு விரோதமில்லாமல் நடந்து கொள்ள வேண்டும், அவ்வளவு தான். இப்படி நினைத்துக் கொண்டவள், அதைக் கணவனிடமும் பகிர்ந்து கொண்டாள்.
ஒரு பதட்டத்தோடே வீட்டுக்கு வந்தவனுக்கு மனைவியின் இந்த பக்குவமான அணுகுமுறை ஆச்சர்யமாகத்தான் இருந்தது. என்றாலும் மனைவியின் நேர்மையைக் கேள்விக்குரியதாக ஆக்கிய அந்த நபரை விட்டுவிட மனமில்லாதவனாக,
“அப்போ அந்த வீடியோவை அப்லோட் செய்தவனை கண்டுபிடிக்க வேண்டாம்னு சொல்லுறியா? அந்த ஆளைக் கண்டுபிடிச்சி நாலு மிதி மிதிச்சா தான் என் கோபம் அடங்கும்.” என்றான் பற்களைக் கடித்தபடி. கணவனின் கோபத்தில் மெல்லச் சிரித்தவள்,
“நான் ஏற்கனவே வீடியோவை சைபர் க்ரைம் டிப்பார்ட்மெண்ட் க்கு அனுப்பி ஆளை ட்ரேஸ்அவுட் பண்ணச் சொல்லிட்டு தான் வரேன். கண்டுபிடிச்சா ஓகே தான். அதுக்காக நம்ம முழுநேரத்தையும் இதுலயே செலவழிக்கணும்னு அவசியம் கிடையாது. இன்னைக்கு ஒருத்தன் வீடியோ போட்டுருக்கான். இதைப்பார்த்து புற்றீசலா பலபேர் கிளம்பலாம். அவனுங்க ஒவ்வொருத்தர் பின்னாடியும் அலையுறதுக்கு எனக்கு நேரம் இல்லை. அதைவிட உருப்படியான வேலைகள் ஆயிரம் இருக்கு எனக்கு. அந்த சூரியனைப் பாத்து எதுவோ குலைச்ச மாதிரின்னு நினைச்சிட்டு கேஷுவலா இதைக் கடந்து போவோம்.” தோள்களை அலட்சியமாக குலுக்கியபடி, இலகுவாகச் சொன்னாள்.
“ம்ம்.. அதுவும் சரிதான். ஆனா சூரியனைப் பார்த்து இல்ல, அம்புலியைப் பார்த்து எதுவோ குலைச்ச மாதிரி…” ஏதோ தமிழ் இலக்கியத்தை கரைத்து குடித்தவன் போல மனைவியின் நிலா முகத்தை ஒற்றை விரலால் அளந்தபடியேச் சொன்னான் கண்ணன்.
“அம்புலியா? ஏன், சூரியனோட பெண்களை ஒப்பிட்டா உங்க ஆண் இனத்தால ஒத்துக்க முடியாதா? காலங்காலமா பொண்ணுங்களை நிலவோடு ஒப்பிடுற அந்த பாடாவதி கற்பனை தான் உங்களை மாதிரி ஆண்களுக்கு பிடிக்குமா?” நடந்த நிகழ்விலிருந்து வெளியே வந்திருந்தவள் வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு தயாரானாள்.
“அதானே… பொண்ணுங்களை சூரியன் கூட கம்பேர் பண்ணக்கூடாதா என்ன?” சட்டென்று கண்ணன் சுதாரித்துக் கொள்ள,
“ஹஹ…நீங்க லாயர் தானே, இந்த டாபிக்கை பத்தி கொஞ்சம் ஆர்கியூ பண்ணலாம், வாங்க த்தான்.” வாங்க பழகலாம் என்ற ரீதியில் நந்தினி கணவனை அழைத்தாள்.
“குடும்பம் ங்குற கோர்ட்டுல நோ ஆர்கியூமெண்ட்ஸ், ஒன்லி ஜட்ஜ்மெண்ட் மட்டும் தான். அதுவும் மனைவியே நீதிபதியா இருந்தா சலசலப்பில்லாம குடும்ப வண்டி ஓடும். என்னோட குடும்ப வண்டி நல்லபடியா ஓடினா போதும். என்னை ஆளைவிடு.” உஷாராக சொன்னான் கண்ணன்.
“இப்பிடி ஜகா வாங்கினா எப்பிடி த்தான்? எனக்கும் நேரம் போக வேணாமா?” கொஞ்சலாக நந்தினி கண்களைச் சுருக்க,
“நேரம் தானே போகணும் உனக்கு? அதுக்கு நான் கேரெண்டி, வா.” முகம் புன்னகையில் மிளிர, தன்னிரு கைகளில் பூவைப் போல மனைவியை அள்ளிக் கொண்டான் கமலகண்ணன்.
ஆறு வருடங்களுக்கு பிறகு…
தட்… தட்… தட்…
அந்த மெல்லிய இருளில் பூட்ஸ் ஒலி அதிர தனக்கு முன்னே நிழலுருவமாக ஓடிக்கொண்டிருந்த குற்றவாளி ஒருவனை துரத்திக்கொண்டிருந்தாள் நந்தினி. அவள் பின்னால் இன்னும் சில காவலர்களும் ஓடிவந்து கொண்டிருந்தார்கள். நந்தினியின் கையில் அரசாங்கம் கொடுத்திருந்த துப்பாக்கி இருந்தது.
“வேண்டாம் மேடம், நீங்க ரொம்ப தப்பு பண்ணுறீங்க.” ஓடிக்கொண்டிருந்தவன் எதிர்பாராத விதமாக கால் இடறி கீழே விழ, கைகளை உயர்த்தியபடியே பதட்டமான குரலில் சொன்னான். கண்களில் உயிர்ப்பயம் அப்பட்டமாக தெரிந்தது.
“ம்ஹூம்… சாத்தான் வேதம் ஓதுது.” அலட்சியமாக முணுமுணுத்த நந்தினியின் கையிலிருந்த துப்பாக்கி சத்தமாக பேசியது. அவனுடைய வலது கணுக்காலில் முதல் தோட்டாவை இறக்கியிருந்த நந்தினி, அடுத்ததாக அவனுடைய நெற்றிப்பொட்டை குறி தவறாமல் துளைத்திருந்தாள்.
மறுநாள் காலையில் அந்த செய்தியில் தான் ஈரோடு மாவட்டமே கண் விழித்தது.
‘கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஆள்கடத்தல், என்று தன்னுடைய செயல்களால் ஈரோடு மாவட்டத்தையே கதிகலங்க வைத்தவன் தான் இந்த ராகேஷ். சமீபத்தில் ஒரு இளம்பெண்ணை கடத்திய வழக்கில் சிக்கி விசாரணைக்காக ஜெயிலில் இருந்தவன், அங்கிருந்து தப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது எதிர்பாராமல் எஸ்பி நத்தினியிடம் மாட்டிக் கொண்டான். அவனைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட எஸ்பியை தாக்கிக்கொண்டு அவன் தப்பிக்க முயற்சி செய்ய, வேறுவழியில்லாமல் அவனை சுட்டுப் பிடிக்கும் முயற்சியில் எஸ்பி ஈடுபட்டதில் எதிர்பாராத விதமாக ராகேஷ் உயிரிழந்தான்.’
செய்தித்தாள்களும் தொலைகாட்சி சேனல்களும் போட்டிபோட்டுக்கொண்டு செய்தியைப் பரப்பிக்கொண்டிருந்தன. சமூக வலைத்தளமும் தன் பங்குங்கு செய்தியைப் பரப்ப, நந்தினிக்கு பொதுமக்களிடமிருந்து பாராட்டுகளும், மனித உரிமை கமிஷன் மற்றும் சமூக ஆர்வலர்களிடமிருந்து கண்டனங்களும் குவிந்த வண்ணம் இருந்தன.
ஆமாம்… கடந்த இரண்டு வருடங்களாக நந்தினி தான் ஈரோடு மாவட்டத்தின் எஸ்பி. இந்த ஆறு வருடங்களில் மூன்று பணி இடமாற்றம்.
பணி புரிந்த எல்லா இடங்களையும் விட இங்கே ஒத்த அலைவரிசையுடைய சக அலுவலர்கள் பணியில் இருக்க, பெரிய அழுத்தம் எதுவுமின்றி நந்தினியால் வேலைசெய்ய முடிகிறது. அதுவும் அவர்களது டிஐஜியாக நேர்மைக்கும் அதிரடிக்கும் பெயர்போன ‘சேனாதிபதி ஐபிஎஸ்’ இருக்க, சமூகத்திற்கு தேவையில்லாத களைகளை அடியோடு அகற்றும் பணியில் புகுந்து விளையாடுகிறாள் நந்தினி.
மாவட்டத்தில் அயோக்கியர்களும் ரௌடிகளும் நந்தினியின் பெயரைக் கேட்டாலே அலருகிறார்கள். மொத்தத்தில், தப்பு செய்பவர்களுக்கு சிம்ம சொப்பனம் தான் நந்தினி ஐபிஎஸ்.
என்னதான் நாம் நேர்மையாகவும் துடிப்பாகவும் பணியில் இருக்க விரும்பினாலும், ஒத்த அலைவரிசை உடைய அதிகாரிகள் இல்லை என்றால் தேவையில்லாத மனக்கசப்புகள் ஏற்படும் என்பதை அனுபவப்பூர்வமாக அவளுக்கு உணர்த்திய இடம் நெல்லைச் சீமை.
அதேநேரம், காலம் தாழ்த்தி என்றாலும் உண்மை ஜெயித்தே தீரும் என்பதை அனுபவப்பூர்வமாக அவள் உணர்ந்த இடமும் அதே நெல்லைச் சீமை தான்.
ஆமாம்… நந்தினியின் புகாரில் கழுவுகிற நீரில் நழுவுகிற மீனாக தப்பித்துக்கொண்ட அவரது உயரதிகாரி தானாகவே இலவசபட்டா முறைகேடு வழக்கில் சிக்கிக்கொண்டார்.
இலவசபட்டா முறைகேட்டில் தொடர்புடைய அரசாங்க அதிகாரிகள் மீது கலெக்டரின் பரிந்துரையின் பெயரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளும்போது, சங்கிலித்தொடராக அந்த அதிகாரியின் பெயரும் வழக்கில் சிக்கிக்கொண்டது.
இதோ இரண்டு மாதங்களுக்கு முன்னர்தான் அந்த வழக்கு முடிவுக்கும் வந்திருந்தது. வழக்கில் சம்மந்தப்பட்டிருந்த நான்கு அரசாங்க அதிகாரிகளையும் பணியிலிருந்து நீக்கி, அபராதமும் சில வருடங்கள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டிருந்தது. அதோடு அந்த பினாமிக்கு சொந்தமாக்கி இருந்த நிலத்தையும் அரசாங்கம் கையகப்படுத்தி, பட்டா இல்லாத மக்களுக்கு பட்டாவையும் வழங்கியிருந்தது.
ஆக, காலம் தாழ்த்தி என்றாலும் உண்மை ஜெயித்திருந்ததில் நந்தினிக்கு மிகுந்த மனநிறைவு.
டிஐஜி அலுவலகத்தில் இருந்தாள் நந்தினி. அவள் நெற்றியிலும் வலதுகை மணிக்கட்டிலும் பெருக்கற்குறியில் பிளாஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. நடந்த நிகழ்வைப் பற்றி தன்னுடைய மேலதிகாரி சேனாதிபதிக்கு அறிக்கை சமர்ப்பித்தவள், “நாளைக்கு எங்க வீடு கிரகப்பிரவேசம் சர், நான் ஊருக்கு கிளம்பணும்.” என்றும் சொல்ல,
“நான் இங்க பாத்துக்குறேன், பிரஸ் மீட்டை மட்டும் அட்டண்ட் பண்ணிட்டு நீங்க கிளம்புங்க மேடம்.” புன்னகையோடு சொன்னான் சேனாதிபதி. அந்த புன்னகையில் ஓராயிரம் அர்த்தங்கள் புதைந்திருந்தது.
சேனாதிபதியோடு சேர்ந்து பத்திரிக்கையாளர் சந்திப்பு ஏற்பாடு செய்திருந்த இடத்திற்கு வந்தாள் நந்தினி.