அந்த நேரத்திலும் கூட தன்னோடு இருப்பவர்களின் நலனை உறுதி செய்து கொள்ளும் மனைவியை பெருமிதமாக பார்த்தான் கண்ணன். வீட்டுக்கு மூத்த பெண்ணாக பிறந்ததாலோ, இல்லை, பார்க்கும் வேலையின் காரணமாகவோ நந்தினியிடம் தலைமைப் பண்பு எப்போதும் அதிகமாகவே இருக்கும்.
குடும்பத்தில் கணவனின் குரலே ஓங்கியிருக்க வேண்டும் என்ற கட்டமைப்பில் வாழ்ந்துவிட்ட ஆண் சமூகத்திற்கு, நந்தினியைப் போன்ற ஆளுமை நிறைந்த பெண்களோடு வாழ்க்கையை பகிர்ந்து கொள்ளுவது கடினமாக இருக்கலாம்.
ஆனால் கண்ணனோ காதலிக்க ஆரம்பித்த காலத்திலிருந்து இதோ இப்போதுவரை மனைவியின் ஆளுமையை ரசிக்கிறான். அதற்காக மனைவியோடு கோபதாபங்களும், பிணக்குகளும் அவனுக்கு வராது என்று அர்த்தமில்லை.
அவனுக்கும் மனைவியோடு கோபங்களும் பிணக்குகளும் வரும். வந்தும் இருக்கிறது. ஆனால் அவையெல்லாம் மனைவியின் வார்த்தைகளை கொண்டேயன்றி, அவளின் ஆளுமையைக் கொண்டு அல்ல. அந்த கோபங்களையும் பிணக்குகளையும் கூட, மனைவி மீதான பெருங்காதலால் அவனால் எளிதாக கடந்துவர முடிந்தது. இனியும் கடப்பான்.
அன்றிரவு எல்லோரும் சேர்ந்து ரஞ்சனின் வீட்டுக்கு டின்னருக்கு சென்று வந்திருந்தார்கள். ஞாயிற்றுகிழமையும் ஊட்டியில் தங்கிவிட்டு திங்கள் கிழமை காலையில் தான் ஊருக்கு கிளம்பினார்கள்.
கிளம்பும் நேரம் டாணென்று ஆஜராகி விட்டான் சுரேந்தர். அவனை ரஞ்சனுக்கும் தெரிந்திருந்தது. இவ்வளவு ஏன்? தங்கள் பின்னால் ஊட்டிக்கு வந்துவிட்ட சுரேந்தருக்கு, ரஞ்சனின் ஹோட்டலில் தங்குவதற்கு இந்து ஏற்பாடும் செய்து கொடுத்துவிட்டாள். ஊட்டியை சுற்றிப் பார் என்று ரஞ்சன் தன்னுடைய பைக்கை அவனுக்கு கொடுத்திருந்தான்.
யாருடைய கண்களிலும் விழுந்து அனாவசியமான டென்ஷனை ஏற்படுத்தாமல் ஊட்டியை சுற்றிவந்தவன், இதோ இப்போது வந்து நிற்கிறான். இந்து, கௌரியின் பயணம் சுரேந்தரோடு தான். ரஞ்சன் பெற்றோரோடு சேர்ந்துவந்து எல்லோரையும் வழி அனுப்பி வைத்திருந்தான்.
அன்று பின்மாலைப் பொழுதில் ஊர் வந்து சேர்ந்திருந்தார்கள். மறுநாள் நந்தினி அளித்திருந்த புகார் சம்மந்தமான விசாரணைக்கு வரச்சொல்லி அவளுக்கு தகவல் வந்தது.
தகவலில் குறிப்பிட்ட நேரத்தில் அந்த விசாரணைக்குழு முன்னால் ஆஜராகி விட்டாள் நந்தினி. சில நிமிடங்கள் கழித்து அவளது உயரதிகாரியும் வர, விசாரணை ஆரம்பமானது.
நந்தினி தன் புகாரில் சொல்லியிருந்த அத்தனை குற்றச்சாட்டுகளையும் தன்னுடைய சாதூர்யமான பதில்களால் ஒன்றுமே இல்லை என்று ஆக்கினார் அந்த அதிகாரி.
அவள் அதை எதிர்த்து விளக்கம் கொடுக்க முற்பட்டால், அதற்கு அனுமதிக்காமல் அவளை அமைதி காக்கச் சொன்னார்கள் விசாரணைக் குழுவைச் சேர்ந்தவர்கள்.
இவ்வளவு ஏன்? உங்க வயசு அவரோட எக்ஸ்பீரியன்ஸ், நம்ம துறைக்குள்ளேயே ஒருவருக்கொருவர் அடிச்சிகிட்டா நல்லாவா இருக்கு? கொஞ்சம் பொறுமையா போங்க மேடம் என்று இவளுக்கே அறிவுரை சொன்னார்கள்.
தான் நினைத்தது என்ன, இங்கே நடப்பது என்ன என்று நந்தினி மலைத்து தான் போனாள்.
போனால் போகிறது என்பது போல மறுநாளிலிருந்து அவளைப் பணியில் சேரச்சொல்ல, “இல்ல, நான் பத்து நாள் கழிச்சே வேலையில் சேர்ந்துக்கிறேன்.” என்றுவிட்டு வந்து விட்டாள். அவளுடைய கோபத்தை அப்படித்தான் காட்டமுடிந்தது அவளால்.
கடைசியில், யாருக்காக ஓடவேண்டும், எதற்காக ஓடவேண்டும் என்ற மனநிலையை அவளுக்கே வரவைத்து விட்டார்கள்.
வீட்டுக்கு வந்தவள் விஷயத்தை கணவனிடம் சொல்ல, “இதுதான் நம்ம நாட்டோட சாபக்கேடு. இங்க பதவியும் பணமும் இருக்கிறவங்களோட கை தான் ஓங்கியிருக்கும். ஒரு நல்ல பொசிஷன்ல இருக்கிற உனக்கே இப்பிடின்னா, சாமான்ய மக்களோட நிலமை என்னன்னு யோசிச்சு பாரு.” என்றவன்,
“என்ன சொன்னாலும் கேட்டுட்டு தலையாட்டிட்டு போற ஆள் நீ இல்லைன்னு இப்போ அவங்களுக்கு புரிஞ்சிருக்கும். இனிமே உன்னை அவங்க இஷ்டம் போல ஆட்டிவைக்க முயற்சி செய்ய மாட்டாங்க. விடு, இன்னும் காலம் எவ்வளவோ நீண்டு கிடக்குது. பாத்துக்கலாம்.” மனைவிக்கு வார்த்தைகளால் ஆறுதல் சொன்னான்.
மீதமிருந்த நாட்களையும் உபயோகமாக கழித்ததில் மனம் தெளிந்திருந்தது நந்தினிக்கு. யார் எப்படி இருந்தால் என்ன, நான் எப்போதும் போல நேர்மையாக என் பணியில் இருக்க வேண்டும். உறுதி எடுத்துக்கொண்டாள்.
நந்தினி மறுபடியும் வேலைக்கு சேர்ந்திருந்த சிலநாட்களிலேயே வேறு ஜோனலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார் அவளது உயரதிகாரி.
விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்ட மனநிலையில் இருந்த நந்தினிக்கு அவருடைய இடமாற்றம் எந்த ஒரு உணர்வையும் அவளிடம் பிரதிபலிக்கவில்லை.
இடைப்பட்ட நாட்களில் கணவன் மனைவிக்குள் கூடுதலாகவே புரிதல் வந்திருக்க, அவர்கள் வாழ்க்கை பழையபடி உற்சாகமாக நகர்ந்தது.
ஊட்டிக்கு சென்றுவந்து ஒருமாத காலம் ஆகியிருந்தது. அன்று காலையில் கண் விழிக்கும் போதே தலையை தூக்கவிடாமல் கிர்ரென்று சுற்றியது நந்தினிக்கு.
பதட்டத்தில் அருகே படுத்திருந்த கணவனின் மார்பிலேயே படுத்துக்கொண்டு நந்தினி விஷயத்தைச் சொல்ல, உற்சாகமாகிப் போனான் கண்ணன்.
“நான் தலையை தூக்க முடியலைன்னு சொல்லுறேன், நீங்க பல்லக் காட்டுறீங்க த்தான்.” இயலாமையால் சிடுசிடுத்தாள் நந்தினி.
“அடியேய் என் மக்கு பொண்டாட்டி, நமக்கு ப்ரொமோஷன் கிடைக்கப் போகுது டி.” மனைவியின் மூக்கைப் பிடித்து செல்லமாக ஆட்டியபடியே கண்ணன் சொல்ல,
“ப்ரொமோஷனா…” வாய்விட்டு சொல்லிய நந்தினிக்கும் விஷயம் புரிந்துவிட்டது. சட்டென்று எழும்பி அமர்ந்தவள், “அப்பிடியா த்தான்.” என்றாள் விழிகளை ஆர்வமாக விரித்து.
“நீதான் சொல்லணும், எங்கிட்ட கேட்டா…” என்றவன், “மெடிக்கல் கிட் வாங்கிட்டு வரட்டுமா?” என்று பரபரத்தான்.
“ம்ம்… இவ்வளவு சீக்கிரம் மெடிக்கல் திறந்திருக்குமா?”
“நாம வாக்கிங் போகும்போது அந்த கார்னர்ல ஒரு மெடிக்கல் ஷாப் திறந்துருக்குமே, பாத்துட்டு வந்துடுறேன்.” சட்டையை எடுத்து போட்டுக்கொண்டு ஓடினான்.
அடுத்த பத்தாவது நிமிடம் அவன் வாங்கப் போன சாதனத்தோடு வந்து நின்றிருந்தான். அதில் சொல்லியிருப்பது போல பரிசோதனை செய்து பார்த்ததில், நந்தினியின் கர்ப்பம் உறுதியாகியிருந்தது.
மனதிற்குள் நிரம்பவே எதிர்பார்த்திருப்பான் போல, மனைவியைக் கொண்டாடித் தீர்த்தான் கண்ணன்.
“ஏன் நந்து? பையன் பிறந்தா கஷ்டமா இருக்குமா உனக்கு?” திடீரென்று கண்ணன் கேட்க, நந்தினியிடம் பொருள் விளங்காச் சிரிப்பு.
“இந்த கேள்வியை உங்கிட்ட நான் கேட்டுருக்க கூடாது தான், சாரி நந்து.” தன் கேள்வியின் அபத்தம் புரிந்து உடனே மன்னிப்பையும் கேட்டான்.
“உங்க மனசுக்குள்ளயே வச்சிக்காம, நேரடியா எங்கிட்ட கேட்டுட்டீங்களே, அதுக்கே உங்களைப் பாராட்டணும்.” என்றவள்,
“எந்த பிள்ளையா இருந்தாலும் உங்க துணையோட நேர்மையான, ஒழுக்கமான பிள்ளையா வளத்துருவோம் ங்குற நம்பிக்கை எனக்கு இருக்கு தான்.” மனதில் பட்டதை மறைக்காமல் சொன்னாள்.
இன்னும் என்னெவெல்லாமோ பேசி கருவில் இருக்கும் தங்கள் குழந்தையோடு கற்பனை உலகில் சிறிதுநேரம் சஞ்சரித்தவர்கள், விஷயத்தை தங்கள் வீட்டுப் பெரியவர்களிடம் சொல்ல தயாரானார்கள்.
முதலில் தனது அம்மாவுக்கு ஃபோன் செய்து நந்தினி விஷயத்தைச் சொல்ல, கேட்டுக்கொண்டவர், “அனியும், பூங்கோதையும் கூட கர்ப்பமாம், அனிதா இப்போதான் ஃபோன் பண்ணிச் சொன்னா, அத்தைக்கு சொல்லிட்டு உனக்கு சொல்லணும்னு சொன்னா.” என்றார் உற்சாகமான குரலில்.
“அப்பிடியா! ரொம்ப சந்தோஷம் ம்மா.” முகமெல்லாம் சந்தோஷம் பொங்கி வழிய அழைப்பைத் துண்டித்தவள், விஷயத்தை கணவனிடம் சொல்ல வெடித்து சிரித்தான் கண்ணன்.
“அந்த ஒருநாள் ஊட்டி ட்ரிப், எல்லாருடைய வாழ்க்கையிலும் விளக்கேத்தி வச்சிடிச்சி போலயே.” சொல்லியபடியே குலுங்கிச் சிரித்த கணவனின் தோளில் அடித்தாலும், நந்தினியின் இதழ்களில் வெட்கப்புன்னகையே.
சும்மாவே மனைவியை தாங்குவான் கண்ணன். இப்போது தங்கள் குழந்தையை தாங்கி நிற்பவளை விட்டுவிடுவானா என்ன?
கணவனின் அனுசரணையான கவனிப்பில் காலைநேர உடல் உபாதைகளை அழகாகவே சமாளித்து வேலைக்கு சென்றுவந்து கொண்டிருந்தாள் நந்தினி.
என்றாலும், முன்புபோல ரோந்து பணிகளுக்கு செல்வதில்லை. அலுவலகத்தில் அமர்ந்து வேலைகளை கவனிக்கிறாள். எல்லாம் அவளுடைய மருத்துவரின் ஆலோசனையின் பெயரில் தான். மூன்று மாதங்களுக்கு இப்படியே தொடர வேண்டும் என்று முடிவு செய்திருந்தாள்.
அன்றும் அப்படித்தான் அலுவலகத்தில் அமர்ந்திருக்கும் போது தங்கை அனிதாவிடமிருந்து அழைப்பு வந்தது. அலுவலக நேரத்தில் அழைக்காத தங்கை அழைக்கவும் கொஞ்சம் யோசனையோடு தான் அழைப்பை ஏற்றாள் நந்தினி.
“அக்கா…” பதட்டத்தோடே தொடங்கினாள் அனிதா.
“என்னாச்சு அனி. விஷயத்தை சுருக்கமா மொதல்ல சொல்லு.” தங்கையிடமிருந்து பதட்டம் தொற்றிக்கொள்ள அவசரப்படுத்தினாள் நந்தினி.
“க்கா… ஜெகனோட அப்பாவுக்கு ஆக்ஸிடென்ட் ஆகிடிச்சாம். இப்போதான் தகவல் வந்தது. அடி கொஞ்சம் அதிகம் தான் போல. அத்தையைக் கூட்டிட்டு ஜெகன் ஹாஸ்பிடல் போயிருக்காப்ல.” வேகமாக சொல்லி முடித்த அனிதாவின் குரலில் சின்ன பதட்டம் இருக்கத்தான் செய்தது.
கேட்டுக் கொண்டிருந்தவளுக்கோ பெரிதாக வருத்தம் எதுவுமில்லை. சட்டம் தண்டிக்காதவரை இந்த பிரபஞ்சம் தண்டித்துவிட்டது என்ற எண்ணம் தான்.
உண்மையில், வைரவமூர்த்திக்கு எதிரான சாட்சியங்களை இரகசியமாக திரட்ட முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறாள் நந்தினி.
வைரவ மூர்த்தியும் அப்படித்தான், எப்படியாவது இவர்களுக்கு வலிக்கச் செய்துவிட வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருந்தார். சட்டம் அவரது கைகளை பலமாகவே கட்டிப்போட்டுவிட, வில்லங்கம் எனத் தெரிந்துமே ராஜவேலுவின் வீட்டை வாங்கினார்.
குடியிருக்கும் வீடு, எப்படியாவது தன் காலில் வந்து விழுவார்கள். அவர்களை ஆட்டம் காண்பிக்கலாம் என்ற நினைப்பு. ஆனால் அவர் நினைத்தது எதுவுமே நடக்கவில்லை. அதுவும் அவர் பெரிதும் எதிர்பார்த்த நந்தினி அந்த பக்கமாக திரும்பி கூட பார்க்கவில்லை.
இப்போதோ அனிதாவும், பூங்கோதையும் குழந்தை உண்டாகியிருப்பது தெரிய வரவும், வெறியேறிவிட்டது மனிதருக்கு. சட்டத்தை கண்டு பயந்தது எல்லாம் போதும், கண்டிப்பாக பெரிதாக ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்று அவர் முடிவெடுத்திருந்த நேரத்தில் தான் இந்த விபத்து. ஒருவேளை பிழைத்தாலும், அவரால் பழையபடி எழும்பி நடமாட முடியுமா என்பது சந்தேகம் தான். அந்த அளவிற்கு விபத்து பெரியது.
மனிதர்களுடைய தவறுகளுக்கு சாட்சியாக நிற்கும் காலம், எல்லாவற்றுக்கும் தவறாமல் பதில் சொல்லும் என்பது உண்மை தான் போல.
பதட்டம் வேண்டாம், அமைதியாக இரு என்று தங்கைக்கு சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்த நந்தினியின் அலைபேசியில், யூடியூப் சேனல் நோட்டிஃபிகேஷன் ஒன்று வந்து விழுந்தது.
‘ஒருவேளை இந்த விபத்து குறித்த செய்தி எதுவாகவும் இருக்குமோ?’ ஆர்வமாக அந்த பக்கத்தை திறந்தவளின் முகம், ‘நெல்லையில் ஐபிஎஸ் மனைவிக்காக லஞ்சம் வாங்கும் வக்கீல் கணவன்.’ என்ற தலைப்பைக் கண்டு யோசனையாக சுருங்கியது.
‘நெல்லை ஐபிஎஸ்ஸா? அப்படியென்றால்…” வேகமாக அந்த வீடியோவின் சுட்டியை அழுத்தியவளின் முகம், அதில் சொல்லப்பட்ட விஷயத்தில் சூடாகிப் போனது.
‘மக்களிடையே தன்னை லஞ்சம் வாங்காத நியாயவாதியாக காட்டிக்கொள்ளும் நெல்லையின் எஸ்பி நந்தினிக்காக, லஞ்சம் பெற்றுக்கொள்கிறார் அவரது லாயர் கணவர்.’ இதுதான் அந்த செய்தியின் சாராம்சம்.
கேட்ட செய்தியில் தாறுமாறாக கோபம் எகிறியது நந்தினிக்கு. கோபத்தில் ஓங்கி மேஜையில் குத்தியவள், நாற்காலியிலிருந்து எழும்பி அறைக்குள் அங்குமிங்கும் நடந்தாள்.
என்ன செய்தாலும் தலைக்குள் சிறுநண்டாக அந்த விஷயமே பிராண்டியது. நாற்காலியில் கண்களை மூடி சிறிது நேரம் அமர்ந்திருந்தவள், கணவனுக்கு அந்த வீடியோவின் சுட்டியை வாட்ஸ்அப் செயலியில் அனுப்பி வைத்தாள்.
அதன்பிறகு, கணவனுக்கு ஃபோன் செய்தவள், “அத்தான், நான் ஒரு லிங் அனுப்பி வச்சிருக்கேன். அந்த வீடியோவை ஏற்கனவே பாத்துட்டீங்களா? பார்க்கலைன்னா பாத்துட்டு வீட்டுக்கு கிளம்பி வாங்க, எனக்கு அதைப்பத்தி உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்றாள்…